கட்டலோனியாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? தொடர் 1 - க.இரா.தமிழரசன் 

கட்டலோனியாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? தொடர் 1 - க.இரா.தமிழரசன் 

கட்டலோனியாவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன ? தொடர் 1 – க.இரா.தமிழரசன் 

//
Comment0
Spread the love

உலகெங்கிலும் ஒவ்வொரு தேசிய இனங்களும் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன.தனக்கென தனி அரசுகளை அமைத்துக் கொள்ளும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி ஸ்பெயினிலிருந்து பிரிந்து கட்டலோனியா தேசமும் தனிநாடாக தன்னை 27.10.2017 அன்று பிரகடனபடுத்திக் கொண்டது.

ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக இருந்து வந்த கட்டலோனியாவில் தனிநாடு கோரி அக்டோபர் 1 இல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கட்ட லோனியா ஸ்பெயின் நாட்டுடன் இணைந்து இருப்பதா..?
அல்லது தனிநாடாக பிரிந்து செல்வதா..?
என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பு நடத்தப் போவதாக கட்டலோனியா அறிவித்தவுடன் வாக்கெடுப்பு நடத்துவதே சட்டவிரோதமானது என்று ஸ்பெயின் அரசும், ஸ்பெயின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கோரி நீதிமன்றமும் இந்த வாக்கெடுப்பைத் தடை செய்தனர்னாலும் கட்டலோனிய அரசு தடையை மீறி வாக்கெடுப்பை நடத்தியது.இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்பெயின் அரசாங்கம் வாக்கெடுப்பு நடக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான காவலர்களை அனுப்பி கட்டலோனிய மக்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தியது. அதையும் மீறி அந்த வாக்கெடுப்பை கட்டலோனிய அரசாங்கம் வெற்றிகரமாக நடத்தி முடித்தது.அந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்தவர்கள் 90 விழுக்காடு மக்கள் தனி நாடாக பிரிந்து செல்வதே சரி என்று வாக்களித்தனர்.

இதனடிப்படையில் கட்டலோனியாவின் பிரதமர் கார்லஸ் ப்யூஜ்மண்ட், ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா பிரிந்து தனிநாடாக உதயம் ஆகிவிட்டதாகவும்,அதை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமென்றும் 27.10.2017 அன்று கோரிக்கை விடுத்துள்ளாளார் .உலக அரங்கில் புதிதாக தோற்றம் கொண்டுள்ள கட்டலோனியாவை ஸ்பெயின் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை,சர்வதேச நாடுகளும் இது ஸ்பெயினின் உள்நாட்டுப் பிரச்சனை,இதில் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “தனிநாடு கோரி” வாக்கெடுப்பு நடத்தியதற்கே கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.இப்படியான சூழ்நிலையில் கட்டலோனியா குறித்தும், அந்நாட்டின் அறிவிப்பு குறித்தும் இந்தியாவின் கீழ் அடிமையாக இருக்கிற தமிழகம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கட்டலோனியா மாகாணம் அமைந்துள்ளது. கட்டலோனியாவில் பெரும்பகுதி மக்கள் பேசக்கூடிய மொழியாக கட்டலான் மொழியும், சிறுபான்மையினராக ஸ்பெயின் மொழி, ஆக்சிடான் மொழி பேச்க்கூடியவர்களும் வசிக்கிறார்கள்.

ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின்.ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது.இந்தியாவைப் போலவே ஸ்பெயின் நாடும் பல மொழியினங்களை கொண்ட ஒரு நாடு. எசுபேனா என்று அழைக்கப்படுகிற மொழியை பேசக்கூடிய மக்களை பெரும்பான்மையாகவும் பாஸ்க், கேட்டலான்,கேலிச்சியன், ஆக்சிடன் போன்ற தேசிய மொழி பேசக் கூடிய மக்களும், இனவியன், கேன்டப்ரியர் போன்ற சிறிய மொழி குடும்ப மக்களும் ஸ்பெயினில் வசிக்கிறார்கள்.

ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக கட்டலோனியா திகழ்கிறது.தனக்கென தனி அரசியலமைப்பு சபை,தனி நாடாளுமன்றம்,தனி தேசிய கீதம், தனிக்கொடி மற்றும் தனித்த அரச முத்திரை கொண்டுள்ளது..பார்சிலோனியா இதன் தலைநகரமாகவும் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்குகிறது.

கட்ட லோனியாவின் தொழில் வளர்ச்சி :

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கைத்தொழில் வளர்ச்சி ஏற்பட்டு தொழில் நகரங்களாக கட்லோனியாவின் பல நகரங்கள் உருவாகின.8 மணி நேர வேலை நேரக் கோரிக்கையை ஸ்பெயின் நாட்டில் போராடி பெற்ற முதலாவது நகரம் கட்டலோனியாவின் தலைநகரமாக விளங்கக் கூடிய பார்சிலோனா தான்.ஆண்டுக்கு 613 மில்லியன் டாலர் வரவுசெலவு கணக்குடன் உலகின் இரண்டாவது பணக்கார கால்பந்து கழகமாகவும் பார்சிலோனா கால்பந்து கழகம் உள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 25 விழுக்காடு கேட்டலோனியாவிலிருந்து தான் செல்கிறது.ஸ்பெயின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19 விழுக்காடு கேட்டலோனியாவில் உற்பத்தியாகிறது.மொத்த அந்நிய முதலீட்டில் 20 விழுக்காடு கட்டலோனியாவில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியும்,இயற்கை வளம் கொண்டதாகவும், ஸ்பெயின் அரசாங்கத்திற்கு அதிக வரி வருமானம் தரக்கூடியதாகவும் கட்டலோனியா இருப்பதால் தான்,ஸ்பெயின் கட்டலோனியாவை தன் “அடிமை நாடாக “வைத்திருக்க விரும்புகிறது.

கட்டலோனியாவின் வரலாறு :

உலகெங்கிலுமுள்ள ஒவ்வொரு தேசிய இனமும் பல்வேறு பேரரசுகளால் அடிமைப்படுத்தப்பட்டும் போர்களால் சிதையுண்டும், பல்வேறு அரசுகளுக்கு கைமாறியுமே வந்துள்ளன.அப்படி கட்டலோன் மக்கள் வாழும் பகுதி ஆரம்பத்தில் ரோமானிய பேரரசின் கீழ் இருந்தது வந்தது.அதன்பின் பிரெஞ்சு நாட்டு மன்னர்களை கொண்ட விஸ்கோதிக் பேரரசின் கீழ் வந்தது.அதன்பின் கி.பி 760 ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்க அரபு பேரரசின் கீழ் வந்தது.கி.பி 760 முதல் கிபி 801 ஆம் ஆண்டுவரை ரவுசலின் பேரரசின் கீழ் வந்தது. இப்படி பல்வேறு பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்தது.1716 ஆம் ஆண்டு முழுமையாக ஸ்பெயினின் காலனி நாடாக மாறியது.இந்த அடிமை நிலை 1930 வரை நீடித்தது.

1931-ஆம் ஆண்டு இரண்டாவது அன்னிய ஸ்பானிய குடியரசின் கீழ் ஸ்பெயினில் முதலாவது சுயாட்சி பிரதேசமாக கட்டலோனியா அறிவிக்கப்பட்டது.பிறகு ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரினால் கொடுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் காரணமாக 1939 இல் சர்வதிகாரி பிரான்சில்வா பிராஸ்கோ ஆட்சியை பிடித்தார்.

பிராஸ்கோவின் ஆட்சியில் கட்டலோனியர்களின்அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. பிராஸ்கோவின் ஆட்சியில், ஸ்பானிய பெருந்தேசிய இன ஒடுக்குமுறை கட்டேேலானியா உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்கள் மீது செலுத்தப்பட்டது. அதில் அதிகம் பாதிக்கப்பட்டது கட்டலோனிய தேசிய இனம்தான்.

கட்ட லோனியாவின் தன்னாட்சி அதிகாரம் மறுக்கப்பட்டதோடு, பொது இடங்களில் கூட கட்டலோன் மொழியை பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. கட்டலோன் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டன.குழந்தைகளின் பெயர்கள்கூட இஸ்பானிய மொழியில்தான் வைக்க வேண்டும் என்னும் சட்டம் இயற்றப்பட்டது.கட்டலோன் மக்களின் பாரம்பரிய திருவிழாக்கள்,விளையாட்டுகள் தடை செய்யப்பட்டன. இந்த நிலை சர்வாதிகாரி பிராய்கோவின் மறைவு வரை தொடர்ந்தது.

பிராய்கோவின் மறைவோடு சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. குடியாட்சி மலர்ந்தது. இதன் விளைவாக 1978 ஆம் ஆண்டு ஸ்பெயின் அரசியல் சட்டம் இயற்றப்பட்டு ,17 தன்னாட்சி சமூகங்களையும்,இரண்டு தன்னாட்சி நகரங்களும் உருவாக்கப்பட்டது. ஸ்பெயினுக்கு அரசு மதம் என்று எதுவும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.இதனடிப்படையில் கட்டலோன் மீண்டும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றது. தனக்கென தனியான பாராளுமன்றத்தை பெற்று, 1980 இல் நடைபெற்ற தேர்தலில் 135 பேர் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.இந்த தன்னாட்சி அதிகாரத்தின்படி காவல்துறை,கல்வி,சுகாதாரம் மற்றும் பொதுநலன் ஆகியவற்றை கட்டலோனிய தன்னாட்சி பெற்றது.தனக்கென கொடி,தனி தேசிய கீதம்,தனி முத்திரைகளோடு இயங்கி வந்தது.

கட்டலோனியா மக்களின் போரட்ட வரலாறு :

கட்டலோனிய மக்கள் தங்கள் மீதான ஒடுக்குகுமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்துள்ளனர். தங்களது வளமான மொழியையும் தொன்மையான பண்பாட்டையும் காக்கும் பொருட்டு தங்கள் இன்னுயிர் ஈந்துள்ளனர். ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த காலத்தில் 1913 ஆம் ஆண்டிலேயே நான்கு கட்டலோனியா மாநிலங்கள் இணைந்து தமக்கென பொது நல அவையத்தை அமைத்துக் கொண்டன.

1922 ஆம் ஆண்டில் கட்டலோனிய விடுதலை இயக்கம் தோன்றுகிறது. ஸ்பெயின் ராணுவத்தில் பணியாற்றிய பிரான்சிஸ் மாசி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஸ்பானிய அரசிடமிருந்து விடுதலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கியது.பின்னாட்களில் பல இயக்கங்கள் சேர்ந்து கட்டலோனியா குடியரசு இயக்கத்தை உருவாக்கிக் கொண்டன.

1930 ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த இயக்கம் பங்கெடுத்து பெரு வெற்றி பெற்றது.தனிநாடு கேட்டு வந்த இந்த இயக்கம் ஸ்பெயின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தன்னாட்சி பெற்ற கட்டலோனிய குடியரசு அமைத்துக் கொண்டது.

சர்வதிகார ஆட்சி அமைந்த பின்பு தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டதையும் 1980 ம் ஆண்டு மீண்டும் தன்னாட்சி அதிகாரம் மீட்டுப்பெறப்பட்டத்தையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

1980 ம் ஆண்டில் அமைக்கப் பெற்ற நாடாளுமன்றம் ஸ்பெயின் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. கேட்டலோனியா மக்களின் சமூக, அரசியல் பொருளாதாரத் திட்டங்களை தாங்கள் நினைத்தது போல் நிறைைவேற்றிக் கொள்ள முடியவில்லை.இதனால் கட்டலோனியா மக்கள் வீரியமிக்க போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். இதனால் ஸ்பெயின் அரசு ‘தேசத்தகுதி’ கொண்ட தன்னாட்சி உரிமை கொடுக்கப்படும் என்று அறிவித்தது.

அந்த அறிவிப்பு வெளியான உடன் ஸ்பெயின் உயர்நீதிமன்றம் ‘தேசத்தகுதி’ கொண்ட தன்னாட்சி உரிமை என்பது அரசிலமைப்புக்கு புறம்பானது என்று கூறி இதனைத் தடை செய்தது.

கட்டலோனிய தனி நாட்டு கோரிக்கைக்கு ஏன் சென்றது.?

2008 ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி ஐரோப்பிய யூனியனைக் கடுமையாகப் பாதித்தது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் கடன்களால் திணறின. அயர்லாந்து,போர்ச்சுக்கல், கிரீஸ் நாடுகள் திவாலாகிப் போயின . கிரிஸ் நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராாஸ் ஐரோப்பிய நாட்டு நிதி அவையத்தின் மூலம் கடன் பெற்றுத் தான் நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறார். அந்நாடுகளை தொடர்ந்து இத்தாலியும் ஸ்பெயினும் கடன் நெருக்கடியில் சிக்கின.

ஸ்பெயினை பொருளாதார நெருக்கடி கடுமையாகத் தாக்கியதன் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. வறுமையும் தாண்டவமாடியது. 55 விழுக்காடு இளைஞர்கள் வேலையில்லாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். 22 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டு நுழைவாயிலிலும், 25 விழுக்காடு மக்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஓய்வுதியம் குறைக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் நலத் திட்டங்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டுவிட்டன மக்கள் நல மேம்பாட்டு நிதிகள் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டன.. வரி உயர்த்தப்பட்டுள்ளது.இப்படியாக
ஸ்பெயின் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் ஸ்பெயினுக்கு கட்டலோனியா முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்பெயினுக்கு கிடைக்கும் பொருளாதரத்தில் 25 விழுக்காடு கட்டலோனியாவில் இருந்துதான் கிடைக்கிறது.ஆனால் வரி குறைவாக செலுத்தும் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு தான் கட்டலோனியாவிற்கும் கிடைக்கிறது.எனவே கட்டலோனியாவும் நெருக்கடியை சந்திக்ககத் தொடங்கியது

ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேறியது கூட கட்டலோனியாவிற்கும் ஒரு உந்துதலைக் கொடுத்தது.ஐரோப்பா யூனியனில் நீடித்தால் நாமும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்த பிரிட்டன் பிரிக்சிட் தேர்தல் நடத்தி வெளியேறியது போல ஸ்பெயினிலிருந்து நாமும் விலகிக் கொண்டால் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கட்டலோனியா நினைத்தது. இதனால் தான் பொருளாதார நெருக்கடி தொடங்கிய 2008 க்கு பிறகு கட்டலோனியா மக்கள் தனி நாட்டுக் கோரிக்கையை வலுவாக முன் வைத்து போராடத் தொடங்கினர். .

2009 ஆண்டு முதல் 2011 வரை பல லட்சக்கணக்காண மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர் 2010 ஜூலை 10ஆம் தேதி பார்சிலோனா நகரத்தில் கட்டலோனிய கலாச்சார அமைப்பு நடத்திய பேரணியில் 10 லட்சம் மக்கள் பங்கெடுத்து கொண்டனர்.

. 2014இல் இப்போது நடந்தது போலவே தேர்தல் நடத்தப்பட்டது.அந்த தேர்தலில் 81 விழுக்காடு மக்கள் கட்டலோனியா விடுதலையை ஆதரித்தனர். ஆனால் 35 விழுக்காடு மக்கள் மட்டுமே ஆதரித்தாகக் கூறி இந்த வாக்கெடுப்பை ஸ்பெயின் நிராகரித்தது.இதனால் ஸ்பெயின் மீதான கோபம் கட்டலோனியா மக்களுக்கு அதிகரித்தது. அது தற்போது அக்டோபர் 1ந் தேதி தேர்தலில் வந்து முடிந்துள்ளது.

Leave a Reply