பா.ஜ.க-வும் அடையாள அரசியலும்- தா.பிரகாஷ்

//
Comment0

”தேசம், சாதி, மதம், இனம், மொழி, பண்பாடு, பாலினம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களைத் திரட்டி நடத்தும் அரசியலே அடையாள அரசியல்” என்கிறார் மார்க்சிய ஆய்வாளர் முத்துமோகன்.

முதலாவதாக, ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் எழுச்சி, அடையாள அரசியலாகப் பார்க்கப்பட்டாலும் கூட அதை மரபான மார்க்சிய பார்வையிலிருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. ஒடுக்கப்படும் மக்களின் அடையாள அரசியல் ஒரு ஜனநாயக நிகழ்வு, அது ஒரு மக்கள் அரசியல். இந்த அடையாள அரசியல் தேக்கம் அடையாமல் அடுத்த கட்ட நகர்விற்குப் பயணிக்கும் போது சமூக விடுதலைக்கும் வர்க்க ஒற்றுமைக்கும் வழிவகைச் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இரண்டாவதாக, ஆதிக்க அல்லது ஆளும் வர்க்கம் மேற்குறிப்பிட்ட அடையாளங்களை முன்வைத்து மக்களை மேலும் பிளவுபடுத்த நினைக்கிற அடையாள அரசியலே மிக ஆபத்தானது. இது ஜனநாயகத்திற்கு நேர் எதிரானது, பாசிசத் தன்மைகொண்டது. அடையாள அரசியலில் பல முரண்பாடுகள், சிக்கல்கள் இருப்பினும் யார் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதே பொறுத்தே அடையாள அரசியலின் சாதக பாதகம் அடங்கியுள்ளது.

அந்தவகையில், இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அடையாள அரசியலே பாஜக-வின் அடிநாதம். மாநில உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், விவசாயம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட மக்களின் வாழ்வியல் சார் உரிமைகளை நிலைநிறுத்தவோ, மீட்டெடுக்கவோ அல்லது போராடிப் பெறவோ முன்வராத ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட சங்பரிவாரங்கள், தங்களின் வளர்ச்சிக்காகத் தேசியவாதம், மதவாதம், சாதியவாதம் ஆகிய மூன்று அடையாளங்களை முன்னிறுத்தியே தனது அரசியல் செயல்பாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.

தேசியவாதம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தையொட்டி வலுப்பெற்ற தேசம் – தேசியம் – தேசியவாதம் என்ற கருத்தாக்கம், இந்தியத் தொழில் துறையைக் கையில் வைத்திருந்த டாட்டா, ஜெயின்கள், சிங்கானியா, தாபர்கள் போன்ற மார்வார்களின் வியாபார நலன்களுக்காகவே காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்களால் வலுவாக வளர்த்தெடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தேசியவாதத்தை கையிலெடுத்தபோதே அது இந்து தேசியவாதமாக மாற்றம் பெறுகிறது. ஆட்சி அதிகாரத்தில் பாஜக இல்லையென்றாலும் கூட அது இந்து தேசிய அடையாளத்தை வளர்த்தெடுக்கத் தவறியதில்லை.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்துத்துவ தேசியத்தை வளர்த்தெடுக்கும் விதமாகத்தான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) உள்ளிட்ட சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்திருக்கிறது. மேலும், மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவதும் இந்து பெரும்பான்மைவாதத்தை உறுதிச் செய்யத்தான்.

அதேபோல், ஒரே நாடு ஒரே சட்டம், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே மதம், ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், ஒரே நாடு ஒரே தேர்வு, ஒரே நாடு ஒரே சந்தை உள்ளிட்ட திட்டங்கள் ஒட்டுமொத்த சிவில் சமூகத்தையும் இந்து தேசியம் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வருவதற்கான செயல்திட்டங்களேயாகும். மத்திய பாஜக அரசின் கடந்த ஆறாண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு என இவை யாவற்றையும் விட இந்து தேசியவாதத்தைக் கட்டமைப்பதுதான் அவர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற மாநிலங்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சிந்தனையாளர்கள் தேச ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்களாகவோ, பிரிவினைவாதிகளாகவோத் தான் இந்து தேசியவாதிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

மதவாதம்

இந்தியா ஒருபோதும் மதச்சார்பற்ற நாடாக இருக்கக் கூடாது என்பது தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட சங்பரிவாரங்களின் நோக்கம். அதனால் தான், ஜனநாயக இந்தியாவை ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றவேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துப் பெரும்பான்மைவாதத்திற்கு மற்ற மதவழி சிறுபான்மையோர் (குறிப்பாக இஸ்லாமியர்கள்) அடங்கி நடக்கும் வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.

இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானையும் எதிரிகளாக முன்வைத்தே தனது இந்துத்துவ அடையாள அரசிலை வளர்த்தெடுத்து வந்துள்ளது பாஜக. கர்வாப்ஸியை ஊக்கப்படுத்து, முத்தலாக் சட்ட மசோதாவை இயற்றுவது, கும்பல் கொலைகளைத் தூண்டுவது, குஜராத் படுகொலையை ஒட்டுமொத்த இந்தியாவிற்கான மாடலாக அறிவிப்பது என பாஜகவின் மதவாத பட்டியல் நீள்கிறது.

தேசியளவில் பாஜகவின் இந்துத்துவ அடையாள அரசியல் சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கியிருந்தாலும், தமிழகத்தில் 1980 தொடங்கியது எனலாம். 1981-ல் நடைபெற்ற மீனாட்சிபுரம் மதமாற்றம் அதற்கடுத்தாண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் தொடங்கி இன்று வரை நடைபெற்றுவரும் பல்வேறு மதம் தொடர்பான மோதல்களுக்கும் கலவரங்களுக்கும் பாஜகவும் அதன் இணை கூட்டாளிகளுமே காரணமாக இருந்துள்ளனர்.

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு வாய்திறக்காத தமிழக பாஜக மத அடையாளங்களை முன்னிறுத்தி தமிழகத்தின் தனித்தன்மையைச் சிதைக்கப் பார்க்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கீழடி அகழாய்வுப் பணிகளை முடக்க நினைப்பது, முருக வழிபாட்டைத் தனதாக்கத் துடிப்பது, விநாயகர் சதுர்த்தி விழாவைப் பரவலாக நினைப்பதெல்லாம்.

அதேபோல், ஆண்டாள் விவகாரம், கந்தசஷ்டி கவசம், மனுஷ்மிருதி, வெற்றிவேல் யாத்திரை உள்ளிட்ட இந்து மதவழி அடையாளங்களை முன்னிறுத்தி தமிழக பாஜக மேற்கொள்ளும் இந்துமத அடையாள அரசியல் நிச்சயம் செல்லுபடியாகாது. வைதிகத்திற்கு எதிரான தமிழகத்தின் அவைதிக மரபும், பகுத்தறிவு அரசியலும் பாஜகவின் மத அடையாள அரசியலை பண்பாட்டளவில் அனுமதிக்காது என்றே தோன்றுகிறது.

சாதியவாதம்

”இந்தியாவின் பண்பு பிரிந்து நிற்பது; இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் கனடாவின் பண்பு ஒன்றுபட்டிருப்பது”என்பார் டாக்டர் அம்பேத்கர். இந்தியாவின் எல்லா சீரழிவுகளுக்கும் மூலக் காரணியாக இருப்பது சாதி. பாஜக அமைக்கும் நினைக்கும் ’இந்து ராஷ்டிரம்’ நிச்சம் சாதி ஏற்றத்தாழ்வுகள் கொண்டவைதான். ஆட்சி, அதிகாரம் தாண்டி வர்ண தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவாரங்களின் நோக்கம்.

தமிழகத்தின் மேற்குப் பகுதி கவுண்டர்களையும் தெற்குப் பகுதி நாடார்களையும் சாதிய பெருமிதங்களுடன் முதலில் அணிதிரட்டத் தொடங்கிய பாஜக, அதனைத் தொடர்ந்து பல்வேறு இடைநிலை சாதிகளையும் அதே முறையிலேயே அணிதிரட்டிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றம் தொடர்பான மாநாட்டிற்கு அமித் ஷா வருகைதந்தது, அதனைத் தொடர்ந்து பட்டியல் சாதியில் இருக்கும் அருந்ததியரிலிருந்து பாஜக தலைவராக ஒருவரை நியமிப்பது எல்லாம் நடந்தேறுகிறது. அம்பேத்கர் சொன்ன பிரிந்து நிற்கும் பண்பைத்தான் பாஜக வெற்றிகரமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் இந்த உத்தியை மிகத் தந்திரமாகக் கையாண்ட பாஜக, தமிழகத்திலும் அதே உத்தியை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.

பாஜகவின் அடையாள அரசியலும் திக்கு தெரியாமல் நிற்கும் எதிர்க் கட்சிகளும்

‌பாஜகவின் குறுகிய மற்றும் நீண்டகால செயல்திட்டங்களை எதிர்க் கொள்ளும் அளவிற்கான கொள்கைப் பிடிப்பை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகளோ மாநிலக் கட்சிகளோ பெற்றிருக்கவில்லை. மதவாதத்திற்கு நேர் எதிரான கொள்கையை வளர்த்தெடுத்திருக்க வேண்டிய கட்சிகள் இந்து அடையாள அரசியலுக்குள் சிக்குண்டு கிடக்கின்றன. மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய கோட்பாடுகள் எவ்வித சமரசமுமின்றி வளர்த்தெடுக்க படும் போதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட சங்பரிவாரங்களின் இந்து ராஷ்டிரம் உடைத்தெறியப்படும்.

தா.பிரகாஷ்.