அமெரிக்க ஜனநாயகத்தின் பரிதாபத்திற்குரிய நிலை- நாகேஸ்வரி அண்ணாமலை.

//
Comment0

ட்ரம்ப் போட்ட ஆட்டமெல்லாம் 2021 ஜனவரி 6-ஆம் தேதியோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் இப்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு கீழவை உறுப்பினர் இன்னொரு வழக்கைத் தொடர்ந்திருக்கிறார். இதுவரை ட்ரம்ப் போட்ட மொத்த 60 வழக்குகளில் ஒன்றைத் தவிர எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் கடைசியாக இன்னொரு முறை முயன்று பார்க்கலாம் என்று நினைத்துவிட்டார் போலும். வெட்கக்கேடு.

ஜனநாயகத்திற்குப் பெயர்போன அமெரிக்காவில் இப்படி நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது என்னால் நம்பவே முடியவில்லை. எல்லா வழக்குகளையும்போல் இதற்கும் எந்த பலமும் இல்லை. இருந்தாலும் ஏன் ட்ரம்ப்பும் அவருடைய ஆதரவாளர்களும் இப்படி ஒரு ஆட்டம் ஆடுகிறார்கள் என்று தெரியவில்லை.

2021 ஜனவரி 6-ஆம் தேதி பாராளுமன்ற இரண்டு அவைகளும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் electoral college கொடுத்த எண்ணிக்கையை இன்னொரு முறை சரிபார்த்து கடைசியாக யார் வென்றார் என்று அறிவிப்பார்கள். இது பெயருக்குச் செய்யப்படும் (formality) காரியம்தான். இதுவரை எந்தத் தேர்தலிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் electoral college எடுக்கும் முடிவை ஒப்புக்கொள்ளாமல் இருந்ததில்லை. இந்த முறை ட்ரம்ப் எப்படியாவது மறுபடி தான் ஜனாதிபதி ஆகிவிட வேண்டும் என்று வெறிபிடித்து அலைவதால் ஒரு கீழவை உறுப்பினரைக் கடைசியாக ஒரு வழக்குப் போடும்படி தூண்டியிருக்கிறார். (இன்னும் தான்தான் வெற்றிபெற்றதாகவும் தன்னுடைய இந்த வெற்றி தன்னிடமிருந்து திருடப்பட்டிருப்பதாகவும் புலம்பிக்கொண்டிருக்கிறார்.) இருந்தாலும், குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு புத்தி எங்கே போயிற்று? இரண்டு அவைப் பாராளுமன்ற உறுப்பினர்களும் electoral colleges கொடுத்த எண்ணிக்கையை ஒப்புக்கொண்ட பிறகு துணைஜனாதிபதி அதை உறுதிசெய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கீழவை உறுப்பினர் தொடர்ந்திருக்கும் வழக்குப்படி துணைஜனாதிபதி இதுவரை ஏற்கப்பட்ட சில முடிவுகளை புறக்கணித்துவிட்டு, ‘இதுவரை எடுத்த முடிவுகள் எல்லாம் சரியானவை அல்ல. இப்போது நான் எடுக்கும் முடிவுதான் சரியான முடிவு. ட்ரம்ப்தான் தேர்தலில் வென்றார்’ என்று கூற வேண்டுமாம். எப்படிப்பட்ட அபத்தம்! சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில்கூட இம்மாதிரி அபத்தங்கள் நடப்பதில்லை. அமெரிக்காவில் இப்படி நடக்கிறதென்றால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. மழை நின்றாலும் தூறல் நிற்காத மாதிரி நவம்பரில் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் ட்ரம்ப் கொடுக்கும் இடையூறுகள் நின்றபாடில்லை. இந்த வழக்கு வெற்றிபெறுவதற்கு 0.000001% வாய்ப்புகூட இல்லை. இந்த ட்ரம்ப் ஏன் அரசு பணத்தையும் மற்றவர்களின் பணத்தையும் நீதிமன்றங்களின் நேரத்தையும் வீணடிக்கிறார் என்று தெரியவில்லை. இந்தக் குற்றங்களுக்காகவே இவரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும்.
ஜனவரி 6 அன்று தன்னுடைய ஆதரவாளர்களை வன்முறையில் ஈடுபடும்படி ட்ரம்ப் தூண்டலாம் என்றும் கூறுகிறார்கள். அவர் அதையும் செய்வார் என்பதை மறுப்பதற்கில்லை.

அமெரிக்காவின் நிலை இப்படி மாறியிருப்பது வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கிறது.

Leave a Reply