ஆதிச்சநல்லூரும் தமிழர் தொன்மையும்!- விக்கி கண்ணன்.

//
Comment0

தமிழர் நாகரீகத்தினை பறைசாற்றி வரும் அகழ்வாய்வுகளில் கொற்கை (கிமு 800), கீழடி (கிமு 580),பொருந்தல் (கிமு 490), கொடுமணல் (கிமு 400) போன்றவை முக்கியமான தொல்லியல் களங்களாக அமைந்துள்ளன. இவைகளை காட்டிலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த களம் தான் ஆதிச்சநல்லூர்.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களமானது தமிழின வரலாற்று மீட்சியை அறிவியல் ரீதியில் கொண்டு செல்லப்போகும் ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றால் அது மிகையல்ல.

பொதுவாக வட இந்தியாவிற்கு தாமிரக்காலம், வெண்கல காலம் போன்றவை உண்டு. ஆனால் தென்னிந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு இரும்பு காலம் தவிர்த்து பிற உலோக காலமானது கிடையாது என்பர். ஆனால் சிந்துவெளியில் தாமிரம்/வெண்கலம் இரண்டுமே உண்டு. சிந்துவெளி வீழ்ந்த பின்னர் அங்கிருந்த மக்கள் தென்னிந்தியா, கங்கை சமவெளி, தென்கிழக்காசிய என பரவலாக புலம்பெயர்ந்ததாக தான் இதுவரையான ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. அதற்கு ஏற்ப ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டையோடுகள் மத்திய தரைக்கடல், மத்திய கிழக்கு, தெற்காசிய மற்றும் கிழக்காசிய இனக்குழுக்களை சேர்ந்தவை என மானுடவியல் ஆய்வு முடிவில் திரு இராகவன் அவர்கள் கூறியுள்ளார். ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டையோடுகளும், அரியானா மாநிலம் இராக்கிகடியில் கிடைத்த எலும்புக்கூடும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தை (கிமு 2300-2500) சேர்ந்தவை. அதாவது சிந்துவெளி Matured phase இல் இருந்தபோதே கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்துவெளியில் கிடைக்கும் தாமிரமும் வெண்கலமும் ஆதிச்சநல்லூரிலும் கிடைத்திருக்கின்றன என்பது வியத்தகு செய்தி. ஆதிச்சநல்லூரில் 2004-05 ஆண்டில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்த உலோகங்களை மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் இராஜ் கிஷோர் தலைமையில் Thermo Luminescence & Optically stimulated luminescence முறையில் காலத்தை கண்டறிந்து வெளியிட்டுள்ள முடிவுகள் மறுமொழியில் உள்ளன. அதில் சீரியல் எண் 4ல் , Urn no 10 ல் கிடைத்த தாமிர உலோகங்கள் அனைத்தும் கிமு 1400+-700 (3400BP) காலத்தை சேர்ந்தவையாக அறியப்பட்டிருக்கின்றன. தென்னிந்தியாவில் வேறெங்கும் கிடைக்காத தாமிரம் ஆதிச்சநல்லூரில் கிடைத்திருக்கிறது. அது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதோடு தங்கத்தால் செய்யப்பட்ட நெத்தி பட்டயம், வெண்கல உலோகங்கள் போன்றவற்றுடன் தாய்தெய்வ உருவங்கள் உலோகத்திலும் பானை ஓட்டிலும் கிடைத்திருக்கின்றன. கிமு 1500க்கு முன்பிருந்தே தாமிர உருக்கு ஆலைகள் இங்கு இருந்திருக்க வேண்டும் எனும் பேராசிரியர் இராஜ் கிஷோரின் கருத்தை அசோகன் கல்வெட்டுடனும், வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகளில் இருந்தும் தொடர்புபடுத்தி பார்த்தால் ஒரு விடயம் புலனாகிறது. அதாவது பாண்டிய நாட்டின் தெற்கு பகுதியை தாமிரபரணி/ தாமிரபாணி என அசோகனும், வெளிநாட்டு பயணிகளும் குறித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ளது இந்த ஆதிச்சநல்லூர்.

சிந்துவெளிக்கு பிறகு இத்தனை பெரிய தாமிர உருக்கு ஆலைகள் ஆதிச்சநல்லூரில் மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்கிறது அறிவியல். ஆனால் இன்றும் ஆதிச்சநல்லூர் ஆசியாவின் மிகப்பெரிய சுடுகாடு தான் என்கிறது தொல்லியல். இன்னும் வாழ்விடப்பகுதிகள் கண்டெடுக்கப்படவில்லை, ஆனால் இத்தனை பெரிய burial site கிடைத்திருக்கும்போது நிச்சயமாக வாழ்வியல் பகுதியும் கிடைக்கவேண்டும் என்கிறார் திரு அமர்நாத் இராமகிருஷ்ணன். 10% பகுதியில் மட்டுமே இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் ஆதிச்சநல்லூரை ஆய்வு செய்த தொல்லியலாளர்கள். இன்னும் முழுமையாக ஆய்வுகள் அரசியல் கலப்பின்றி நடந்தால் தமிழின வரலாற்று புரட்சியை நடத்திக்காட்ட காத்திருக்கின்றன ஆதிச்சநல்லூர் தாழிகள். ஏற்கனவே தாழிக்கு உட்பகுதியில் தமிழி கிடைத்திருப்பதாகவும் ஒரு தகவல் சர்ச்சைக்குரிய வகையில் உள்ளன.

கீழடியை விடவும் பன்மடங்கு தமிழர்களால் கவனிக்கப்பட வேண்டிய தொல்லியல் களம் ஆதிச்சநல்லூர்.

விக்கி கண்ணன்.