இந்தி திணிப்பு எதிர்ப்பும் சைவப் பெரியார்களும் – 2….முருகவேல் ஜெயச்சந்திரன்.

//
Comment0

சம்ஸ்கிருதம் என்ற வடமொழி வேறு துர்கிருதமான இந்தி வேறு. (அம்மொழி பல மொழிகளை சிதைத்தும் / அழித்தும் எழுந்ததால் அது எம்மைப் பொருத்தவரை துர்கிருதமே). சிலர் வடமொழியையும் இந்தியையும் ஒன்று போல் சித்தரிக்கவும், இந்தி திணிப்பு எதிர்ப்பை – இந்தி எதிர்ப்பு என்று சித்தரிக்கவும், இந்தியை ஏற்காதவரை வடமொழியை ஏற்காதவரென சித்தரிக்கவும் முயல்வர். இவர்கள் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் இல்லை – இவர்கள் அடிப்படை நேர்மையும் தகுதியுமற்றவர்கள். நிற்க.

வடமொழியை ஏற்றுப்போற்றிய சைவ சித்தாந்த ஞானபானுவான பாம்பன் சுவாமிகள், இந்தியை ஏற்கவில்லை.

பாம்பன் குமரகுருதாச சிவாமிகள் – முருகப்பெருமானிடமே உபதேசம் பெற்று, தமிழும் வடமொழியும் கரைகண்ட ஞானக்கடல். சுவாமிகள் பிறப்பின் அடிப்படையில் கூறப்படும் வர்ணாசிரமத்தையும், சாதித்துவத்தையும் கண்டித்தவர். சைவர்கள் வடமொழியையும், வேத ஆகமங்களையும் கற்கவேண்டிய அவசியத்தை பல முறை தம் நூல்களில் அழுத்தம் திருத்தமாகப் பதிவிட்டவர். வடமொழியும் தமிழும் இறைவனாலேயே கற்பிக்கப்பட்டவை – ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியதன்று வென்றும், இவ்விரு மொழிகளும் தனித்தனியே இயங்கக்கூடியவை என்பதும் இம்மொழிகளில் உயர்வு தாழ்வு கூறக்கூடாது என்பதும் இவ்விரு மொழிகளும் நம் சொந்த மொழிகள் என்பதும், இவ்விரு மொழிகளும் நம் இரண்டு கண்கள் என்பதும், இரு மொழிகளின் பயனறிந்தவர்களே இரு கண்களின் பார்வை பெற்றவர்களென்பதும், ஒரு மொழிப்பயனறிந்தவர்கள் ஒரு கண் பார்வை மட்டுமே பெற்றவர்கள் என்பதும் சுவாமிகள் கொள்கை.

அதே சமயம் , சிலர் நினைப்பது போல், சுவாமிகள் வடமொழி மோகம் கொண்டவர் அல்லர். தமிழைக் காட்டிலும் வடமொழி சிறப்பு என்று நிறுவ முயல்வோரை நோக்கி, அவர், காசியாத்திரையில்

வடமொழியைத் தேர்ந்தோர் வடமொழி தாய் என்னிற்
திடமொழியாம் தென்தமிழ்மொழியைத் தேர்ந்தோர் – புடவிதனில்
அத்தென் மொழி தந்தையாம் எனலுங் கூடுமெனல்
சுத்தனை ஏத்தென் துணிபு

அதாவது, வடமொழி வல்லுநர் வடமொழியே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறுவாராயின் அழிவில்லாத இனிய மொழியாம் தமிழ் மொழி வல்லுநர் இவ்வுலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தமிழே தந்தையாகும் என்று கூறுதலும் ஒவ்வும் என்பது இறைவனையே புகழும் எனது முடிவு என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறார். ஒன்றிலில் ஒன்று வந்தது என்பாரை மறுத்து “ எப்போது தென்னாடு எனும் ஒன்று உண்டாயினதோ அப்போதே அம்மொழியு மாயதென்றன் “ என்றும் இது முப்போதும் அறிந்த ஞானிகள் முடிவு என்கிறார். தமிழை “தேன்போற் கிடைத்த தெய்வத் தமிழே” என்கிறார். தமிழை நீச மொழி – அதைக் கேட்டால் தீட்டு என்று கூறுவோரை கண்டித்து, அவர் ,

தென்மொழியைக் கேட்டலுமோர் தீட்டென்னும் பார்ப்பார்கட்
கென்வழி தான் கைகூட மிவ்வுலகி – னன்மொழிதேர்
சம்பந்த ராது முத்தர் சாரா வகங்கார
வெம்பந்தந் தானே மிகும்
என்று அவர்கள் ஆணவமான கொடிய பாசம் பிணிக்க பிறப்பிறப்புகளில் உழல்வார்கள் என்கிறார்.

சுவாமிகள் வடமொழி விரவிய செய்யுள்களை மட்டும் பாடவில்லை. வடமொழியின்றி தமிழ் தனித்து நில்லாது என்போர் அறிந்து திருந்த “இச்சொற்களுள்ளும் (வடமொழியில் தோன்றி தமிழில் மருவிய சொற்கள்) இவையிற்றிற்கு வேறான வடசொற்களுள்ளும் ஒன்றேனும் புகாமலே “சேந்தன் செந்தமிழ்” எனுமிந் நூலென்னாலமைக்கப்படுவதாயிற்று. இவ்வாறு பல சொற்கள் நீங்குழியுந்தமிழ்ச் செய்யுள் தன்மொழியானே நடைபெறூஉ மெனும் ஆற்றலுமிதனால் வெளிப்பட்டது” என்றும் “முருகப்பிரானெனுஞ் சேந்தன் மீது பாடுந் தூயதமிழாம் இச்செந்தமிழில் , அந்த பிரான் பெயராக வட நூலுழை வரூஉம் “ ஒரு பெயரும் புகவில்லை என்பார். நிற்க.

இந்த நிலவுலகம் எங்கும் சைவம் தலைப்பட தமிழ்வேதம் வியாபித்தல் அவசியம் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். சுவாமிகள் திருப்பாவிற்கு இயற்றிய நூன்முகத்தில் இவ்வாறு கூறுகிறார் “ பாஷைகள் பதினெட்டு என்று பண்டைப் பரதகண்ட சாத்திரங்கள் பகர்ந்தவாறு கடந்து எத்தனையோ பாஷைகள் இஞ்ஞான்று காணப்படல், காலம் தோறும் கன்ம தன்மங்கள் வேறுபடும் என்பதைக் காட்டுகின்றது என்பதூஉம், அவ்வேறுபாட்டிற்கு இயையப் பன்முகத்தாலும் தமிழ் பல்கும் வழியினைத் தேடல் வேண்டும் என்பதூஉம், அப்பல்கல் இன்மையால் வடநாட்டிலும் மற்றை நாட்டிலும் தமிழ்வேதப் பெருமையினையும், ஆக்கிய அருளாளர் பெருமையினையும் அறியாக் குறையானது, வடமொழி பிறமொழி என்பவற்றின் கண்ணவேயே விருப்பத்தையும், பிறமத வேட்கையையும் பெரு மயக்கத்தையும் பெருக்குகின்றது என்பதையும், தமிழ் நலன் இற்றென அறியாது இந்தி முதலிய வேறு பாஷைகளை இந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை ஆதரித்தல் தமிழர்கள் தன்மை யன்று என்பதூஉம், தலைவனது அருளற்புதமும், கண்டு கூறும் உண்மையும் உட்கொண்டிலகு தமிழ்வேதம் இனிது வியாபிக்கின், இந்நிலவுலகம் எங்கனும் சைவசமயமே தலைப்படும் என்பதூஉம், அஞ்ஞான்று , ஆன்மலாப அவா உடையார் அனைவரும் இவ்வுலகினை நேடாதிருக்க நியாயமின்று என்பதூஉம் இங்ஙனம் கொளக்கிடப்பனவாம்” என்கிறார் ( அவர் எழுதிய இந்த பகுதியை எடுத்துக்காட்டி திரு.விக்கி கண்ணன் பதிவிட்டது மறுமொழியில் ).

இதனால் பெறப்படுவது

  1. தமிழ் வேதம் பரவுவதே சைவசமயம் இவ்வுலகில் சைவசமயம் தலைப்பட வழி
  2. இந்தி முதலிய வேறு பாஷைகளை இந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை ஆதரித்தல் தமிழர்கள் தன்மையன்று – என்பதால்,
    அ) இந்தி முதலிய மொழிகளை இந்த தமிழ் நாட்டில் விருத்தி செய்ய முனைவது வடநாட்டனிரது சுய நலத்தின் பொருட்டே என்றும்
    ஆ) அதை ஆதரித்து அலைபவர்கள் தமிழர் என்று கூறுவதற்கில்லை.
    என்பன சுவாமிகளின் தெளிவான கருத்து என்பது.

சைவமும் தமிழும் வளர்ப்பதில், அவருக்கு 1920 இல் இருந்த தெளிவும் தொலை நோக்கும் வியக்கவைக்கின்றது. இக்கால மூடர்களோ, சுவாமிகளையே திராவிட – மிஷனரிகளின் கைக்கூலி , முத்தனாதன் என்று வசைபாடினாலும் வியப்பதற்கில்லை. அத்தகைய மூடர்களை அடையாளம் கண்டுகொள்வது அவசியம்.

முருகவேல் ஜெயச்சந்திரன்.