இந்தி திணிப்பு எதிர்ப்பும் தமிழக சைவப் பெரியார்களும்-1… முருகவேல் ஜெயச்சந்திரன்.

//
Comment0

“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் ” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகிறார். அந்த ஞானசம்பந்தர் திருவடிகள் பட்ட மண் இந்த மண். இந்த மண்ணில் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்றவுடன் உடனே சிலர் “கால்டுவெல் – திராவிட – மிஷனரி சதி” – “தேர்தலை கருதி செய்யப்படும் எதிர்ப்பு” என்று கொக்கரிக்கிறார்கள். இவர்கள் இரண்டு வகையினர் ஒன்று தமிழக – தமிழ் வரலாறு – அதிலும் குறிப்பாக இந்தி திணிப்பை எதிர்த்த சைவப்பெரியார்கள் பற்றி அறியாதவர்கள்.
இன்னொன்று – மனு கூறிய பிரம்மாவர்த்த தேசம், ரிஷி தேசம், மத்திய தேசம் மற்றும் ஆரியவர்தம் ஆகிய தேசங்களில் இருந்தோ கௌட தேசத்திலிருந்தோ தமிழகத்தில் பிழைப்புத்தேடி குடியேறி / குடியேற்றப்பட்டு – இங்கு சில நூற்றாண்டுகள் வாழ்ந்தும் உண்ட வீட்டிற்கு குந்தகம் விளைவிக்கத் தயங்காத சிற்றினத்தவர்களும், அவர்களை அண்டிப்பிழைக்கும் அற்பர்களும். இதில் இரண்டாவது வகையினரை அடையாளம் கண்டு அவரோடு இணங்காதிருப்பது அறிவுடையோர் செயல். இந்த பதிவு முதல் வகையினருக்கு.
திருக்கோவலூராதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் என்னும் ஞானியார் சுவாமிகள் – தமிழ், வடமொழி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறந்து விளங்கிய பல்கலைக்குரிசில் .
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்நரைத்தார் இறந்தா ரென்று நானிலத்தில் சொல்லாய்க்
காலம் கழிக்கும் பலர் வாழும் இம்மண் உலகில், தாம் வாழ்ந்த காலத்தில் சைவத்திற்கும் தமிழுக்கும் அருந்தொண்டாற்றிய அருளாளர்.

  • 1900 இல் இவரை பாண்டித்துரை தேவர் சந்தித்தப் போது இவர் தமிழுக்கு மீண்டும் சங்கம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த, 1901 இல் தமிழ் சங்கம் அமைக்கப்பட்டது.
  • 1907 சைவ சித்தாந்த சமாஜத்ததை முன்னின்று தோற்றுவித்தார்.
    ஞானியாரடிகள் வழிகாட்டுதலில் பக்த பால சமாசம் (மணப்பூண்டி), கம்பர் கானமிர்த சங்கம் (திருவெண்ணெய் நல்லூர்), வாகீச பக்த சனசபை (நெல்லிக்குப்பம்), கலைமகள் கழகம் (புதுச்சேரி), புதுவை செந்தமிழ்ப் பிரகாச சபை, ஞானியார் சங்கம் (காஞ்சிபுரம்), சன்மார்க்க சபை (கடலூர்), சைவ சித்தாந்த சபை (உத்திர மேரூர்), சக்தி விலாச சபை (திருவண்ணாமலை) ஆகியவை உருவாக்கப்பட்ட அமைப்புகளாகும். ஞானியாரடிகள் நூல் வெளியீட்டுப் பணியிலும் ஈடுபட்டார். திருப்பாதிரிப்புலியூர் புராணம், திருப்பாதிரிப்புலியூர் தோத்திரக் கொத்து, அற்புதத் திருவந்தாதி, ஞானதேசிக மாலை, அவிநாசி நாதர் தோத்திரக் கொத்து, கந்தர்சட்டி சொற்பொழிவு ஆகிய நூல்களை வெளிக் கொணர்ந்தார்.

1938-இல் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டது. அப்போது பாவலர் எம்.என். முத்துக்குமார சுவாமி என்பவர் இந்தியால் தமிழுக்கு இன்னல் உண்டா? இல்லையா? என்பதைத் தெரிவிக்குமாறு ஞானியாரடிகளுக்கு கடிதம் எழுதினார். நிகழ்வு ஒன்றில் அதற்குப் பின்வருமாறு ஞானியார் சுவாமிகள் வருத்தத்தோடு விடையிறுத்துப் பேசினார்:
“நமது தமிழர்களிடையே சிறந்த குணமொன்றுண்டு. அதாவது உடனிருப்பவர்களை மறந்துவிட்டு விருந்தினராக வருபவர்களை வரவேற்கும் மனப்பான்மையே! ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் புகுந்தது. இதை நன்கு வரவேற்றோம். அதன்பால் நம்பிக்கை வைத்தோம். சில நூற்றாண்டுகட்கு முன்னர் ஆங்கிலம் வந்தது. இருங்கள், இருங்கள் என்றோம். நன்கு உபசரித்தோம். நாம் பிரதிபலன் என்ன கண்டோம்? அவ்விரு பாஷைகளும் தமிழை நாளடைவில் ஜீரணம் செய்து வருகின்றன. இப்போது இந்தி பாஷையும் வருகின்றதாம். அதுவும் கட்டாயமாக வரப்போகின்றதாம். வரட்டும், இருக்கட்டும், இந்தியால் தமிழ் அழியட்டும், ஒழியட்டும்! தமிழன்பர்கள் அதற்குடந்தையாக இருக்கட்டும் என்பதை வருத்தத்துடன் கூறுகிறேன். உள்ள பாஷையை சரிவரக் கவனியாது மற்ற பாஷைகளை ஆதரிப்பதன் பலனை நன்கு கண்டு விட்டோம். பிற பாஷைகள் உயர்வுடைய தெனினும் எங்கள் முருகனருளிய முத்தமிழுக் கீடாகாது என்று மட்டும் இது சமயம் கூறி நிறுத்திக் கொள்கிறேன்”

மேலும், இந்தி எதிர்ப்புக் கண்டன அறிக்கையையும் வெளியிட்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தார். அவருடைய அறிக்கை பல இடங்களில் , பல சுவர்களில் அவரின் மாணாக்கர் சுந்தர சண்முகனார் என்பவரால் ஒட்டப்பட்டது.

ஞானியார் சுவாமிகள் பற்றி இன்னொரு செய்தி – 1932 இல் அவருக்கு ஏற்பட்ட எலும்பு முறிவை மிகவும் முயன்றும் பொருந்துவிக்க இயலாது மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், திருக்கோவலூர் ஆதீனத்தை தோற்றுவித்த ஆறுமுக சிவாச்சாரிய சுவாமிகள் மேல் “குருதுதி” எனப் பல பாடல்களை ஞானியார் சுவாமிகள் பாடினார். அந்த குருவின் அருளால் முறிந்த எலும்பு விரைவில் கூடப்பெற்று நலம் எய்தினார்.

கதியெனக்குன் காற்கமலம் காண்பார் வியக்கும்
மதியெனக்குன் வாய்வருநல் வாய்மை – பதியெனக்கு
நீயன்றி வேறுண்டோ நேரில் குருபரனே
தாயன்றிச் சேய்க்குயார் சாற்று

என்பது அப்பாடல்களில் ஒன்று.

இதேப்போல் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆறுமுகனாம் குமாரபரமேசுவரனின் திருவருளால் குணம் அடைந்த இன்னொருவர் – வடமொழியிலும் தமிழிலும் கரைக்கண்டு சைவ சித்தாந்த ஞானபானுவாய் மிளிர்ந்த பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். அவரும் இந்தியை எதிர்த்தார். அவரைப் பற்றியும் விரைவில் பார்ப்போம்.

இத்தகைய சைவப் பெரியார்களுக்கு இல்லாத அறிவும் தெளிவும் தொலை நோக்கும், தமக்குப் படைத்ததாய் நினைத்துக்கொண்டு பேசும் இக்கால அறிவுஜீவிகளே இன்று உணவுக்கு விழைந்து இந்தி திணிப்புக்கு இரத்தினக்கம்பளம் விரிக்க முண்டி அடித்துக்கொண்டு ஒடுபவர்கள். “திராவிட – மிஷனரி” என்று பூச்சாண்டி காட்டி , இந்தி ஏகாதிபத்தியத்திற்கு உழைக்கும் இத்தகையோரை இனம் கண்டு கொள்ள இது நல்ல வேளை.

முருகவேல் ஜெயச்சந்திரன்.