இந்தி திணிப்பும், மாநில உரிமைகள் பறிப்பும்- வளவன்.

//
Comment0

இந்தியா என்பது ஒன்றியங்களின் கூட்டமைப்பு (Union of States)  என்பது அரசியலமைப்பின் முகப்பு அறிவிக்கின்ற ஒரு செய்தி. அரசியலமைப்பு, மத்தியில் அமைகிற அரசுக்கு கூடுதல் அதிகாரத்தை இயல்பிலேயே அளித்ததன் விளைவாக மத்திய, மாநில அரசுகளின் முரண் மற்றும் உரசல்களின் போது மத்திய அரசு எதேச்சாதிகாரமாக செயல்படுவதனை இயல்பாக பார்க்க முடிகிறது. அரைக் கூட்டாட்சி (quasi-federal) முறையினதாக நம் அரசியலமைப்பு அமைந்தது என்பதனால் மத்திய அரசுகள் பெரியண்ணன் மனப்பான்மையோடு இயங்குவதுதான் நடைமுறையாகி நிற்கிறது. அரைக் கூட்டாட்சியை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்திடச் செய்து முழு அதிகாரம் பொருந்திய அமைப்பாக மத்திய அரசினை ஆக்கும் வேலையை சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அரசு தொடங்கி இன்றைய அரசு வரை செய்வதனைக் காணலாம்.

அரை நூற்றாண்டைக் கடந்து ” மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி ” எனும் குரல் இன்றைக்கும் உயிர்த்து, உரத்துச் சொல்ல வேண்டிய தேவைகள் நமக்கு ஏற்படுகின்றன. மத்தியில் கூட்டாட்சி இருக்கும் வரை, ஓரளவிற்கு பட்டும் படாமல் நிதானமாக மாநில உரிமைகளை பறித்தல் நடக்கும். அதே சமயம், மத்தியில் தனிப் பெரும்பான்மை வரும் பட்சத்தில் அவர்கள் சுயாட்சி செலுத்தி, தான்தோன்றித்தனமாக, கேட்பாரில்லை எனும் தன்மையில் வெளிப்படையாக, அதிரடியாக மாநில உரிமை பறிப்பு என்பது நிகழ்த்துவர். கடந்த இரண்டு மக்களவையிலும் தனிப் பெரும்பான்மை பெற்றவர்கள் எல்லா மாநிலங்களுக்குள்ளும் நுழைந்து ஆதிக்கம், அதிகாரம் செலுத்த முனைதலே இதற்கு சாட்சி.

மிக முக்கியமான ஒரு அதிகார குவியமாக பார்க்க வேண்டியது, மத்திய அரசு எந்த மாநிலத்தையும் எளிதில் ‘கபளீகரம்’ செய்து அதை மாநிலமே இல்லை என்று ஆக்கலாம் (எல்லை வரையறை, மாநில பிரிப்பு, சேர்ப்பு, நீக்கம் தொடர்பான சட்டங்கள்). இதற்கு முன்னாள் மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர் சமகால சான்று.

கூட்டாட்சியை நசிப்பினையும், மாநில உரிமைப் பறிப்பினைப் பற்றியும் ஏன் இப்போது பேச வேண்டும்? எப்போது ஒரு மாநில அரசு (தமிழகம்) , ஏக மனதாக ஒரு தீர்மானம் (நீட் தேர்வுக்கெதிராக) நிறைவேற்றி அனுப்பிய கடிதம், மத்திய அலுவலகத்தில் சிற்றுண்டி வைத்து, பலகாரத்திலிருந்து எண்ணெய் எடுக்கும் காகிதமாக மாறியதோ, அதனை அறியாமல், பதிலுக்காக அம்மாநில அரசு தொடர்ந்து காத்திருக்கும் நிலையை இந்தியா கண்டதோ, இனியும் தாமதித்தல் மிகக் கொடிய விளைவுகளைத் தரும் என்பது குறிப்பு.இதுவே தாமதம் தான், இன்னும் தாமதித்தலை தவிர்க்க வேண்டும் என்பது செய்தி.

கல்வி.

இதனை நான் எழுதுகிற இந்த நாளில் (07-09-20) இரண்டு சம்பவங்கள்  நிகழ்கின்றன. தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தாய்வுக் கூட்டம் குடியரசு தலைவர், பிரதமர் தலைமையில் ஆளுநர்கள் பங்கேற்க நடக்கிறது. இங்கே கேள்வி, மாநிலத்தின் கல்வித் துறையில் ஆளுநர்கள் என்ன பொறுப்பு வகிக்கிறார்கள்  என்று அவர்களின் கருத்து அறிதல் அவசியமாகிறது ? கல்வித்துறையின் நேரடி பங்குதாரர்களான பெற்றோர் ஆசிரியர் சார்பாக இயலாவிட்டாலும், தலைமை அல்லது துறைச் செயலாளர்களேனும் பங்கு பெறுதல் ஓரளவுக்கு நியாயம் எனலாம். வேடிக்கை என்னவென்றால் பங்குபெறும் ஆளுநர்களும், துணைவேந்தர்களும் நியமிக்கப் பட்டவர்கள்; கருத்து கேட்கிற குடியரசு தலைவர் ( பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் வழிகாடிடுதலின் படி ) நியமித்த ஆளுநர்கள், அந்த ஆளுநர்கள் நியமித்த துணைவேந்தர்கள் எல்லாம் முறைப்படுத்தினால் மத்திய ஆளுகைக்குட்பட்ட முதல் மற்றும் இரண்டாம் நிலைப்  பணியாளர்கள். பதவியில் நீடிக்க விரும்பும் பணியாளர்கள் தங்களை நியமித்தத் தலைமைக்கு எதிராக நிச்சயம் ஒரு கருத்தும் சொல்லப் போவதில்லை. இது ஒருநாள் செய்தி, அவ்வளவே. இரண்டாவது சம்பவம், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன்,இன்று (07-09-20) மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடருமென கடிதம் எழுதியுள்ளார். நியாயப்படி, இன்றைக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொண்டு ‘இருமொழிக் கொள்கை’ தான் என அழுத்தமாக பேச வேண்டியவர் ஆளுநர் அல்ல, அமைச்சர் தான். ஆனால் தன்னிடமிருந்து  மாற்று நிலைப்பாடு உள்ளவர்களினை பேச விடாமல் இருப்பதற்கான தயாரிப்பாகவே நாம் இதில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர்கள் தவிர்க்கப் பட்டதனைக் காணலாம். இது மாநில உரிமை மறுப்பு எனல் சரியான பதமெனக் கொள்க.  மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியைக் காட்டிலும் தாங்களே நியமித்தவர்களிடம் கருத்து கேட்பது என்பது மாநில இறையாண்மை, ஜனநாயகத்துக்கு எதிரானது.

இதே கல்வித் துறையில் மற்ற அண்மைக் கால நிகழ்வுகளாக இரண்டு தீர்ப்புகள். 31/08/20 அன்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உறுதி செய்த ‘மருத்துவ உயர்படிப்பில்  அரசு மருத்துவ மாணவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க மாநில (தமிழக) அரசுக்கு அதிகாரம் உள்ளது; இதனைத் தடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை’ எனும் தீர்ப்பு ஒரு ஆறுதல். அரசியல் சாசனம் தெளிவுற வரையறுத்தவற்றையே வழக்குகளினால் இடர் தந்து தடுத்தல் என்பது மத்திய நிர்வாகங்களின் தொடர்பணி என்க.

இரண்டாவது, 27/07/20 அன்று, “முதுநிலை மருத்துவப் படிப்பில், மத்திய தொகுப்பு இடங்களில் மாநில இட ஒதுக்கீடு செல்லும் என்றும், அதற்காக விரைவாக சட்டம் இயற்ற வேண்டும்; மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து மூன்று மாதங்களில் முடிவை அறிவிக்க வேண்டும்” என்று ஓ.பி.சி யினருக்கான 50% இட ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. 2006 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை, மாநில கல்வி நிறுவனங்களுக்குள் இருக்கும் இடங்களுக்குள் திணித்த முயற்சிக்கு எதிரான அறை இது.  மத்திய தொகுப்பு (CENTRAL POOL SEATS) என்பது அடிப்படையில் உபரி இடங்களை, உயர்கல்வி கட்டமைப்புகள் பெரிதாக இல்லாத மாநிலங்களோடு பகிர்வதற்கான ஏற்பாடே அன்றி வேறில்லை. இதில் மத்திய அரசு இணைப்பு (Mediate) செய்யலாமன்றி  அதிகாரம் செலுத்தி முடிவு செய்தல் (Authoritative Decision Making) என்பதே நேர்மையற்ற ஒரு அணுகுமுறை; மாநில உரிமைகளுக்கு எதிரான சவால் என்க.

சுற்றுசூழல்:

விக்ரம் தோங்கட் என்பவர் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் 30/06/20 அன்று எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-னை மொழிபெயர்த்து வெளியிட உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தனது சீராய்வு மனுவின் விசாரணையில், 04/08/20 அன்று மத்திய சுற்றுசூழல் அமைச்சகம், “சட்ட வரைவுகளை ஆங்கிலம், இந்தி தவிர்த்த பிற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டிய கட்டாயமில்லை; சட்டம் அப்படி ஒரு வழிகாட்டுதலை செய்யவில்லை” என வாதிட்டுள்ளனர்.

இதற்கிடையில், கர்நாடக உயர்நீதிமன்றம், இன்று (07/09/20) மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்து சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை மீதான இறுதி முடிவு குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு மறு உத்தரவு வரும் வரை  இடைக்காலத் தடையை நீட்டித்துள்ளது. (வழக்கு EIA வரைவு மாநிலத்தின் மொழியான கன்னட மொழியில் இல்லை என்பதற்காக தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது).

இவற்றோடு, இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா என ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்கப்பட்ட சர்ச்சையும், ‘ஆயுஷ்’  அமைச்சக செயலாளர், தேசிய மருத்துவ வல்லுநர்கள் கருத்தரங்கில்  இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று அதிகாரம் செய்த சர்ச்சையும் நமக்கு ஆளுபவர்களின் மொழி சமத்துவம் பேணா தன்மைக்கான சமகால  சாட்சிகள்.
இந்த இடத்தில் புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் வகுப்பறைக் கல்வி எனவும், பிற மொழிகள் படிக்க விரும்பினால் இணைய வழியில் படிக்கட்டும் எனவும் அலட்சியமாக வரைவிருந்ததையும் நினைவு கூர்க.

மின்சாரம்:
2003 ம் ஆண்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற பெயரில், ஒரு தன்னாட்சி அமைப்பு அமைக்கப்பட்டு, மின்சார கட்டண உயர்வினை, மாநில அரசின் அனுமதி இல்லாமல் அந்த ஆணையமே செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை வந்தது. பின்னர், மின்சார பகிர்வு மண்டல அளவில் ஒற்றை சாளர முறைக்குக் கொண்டு வரப்பட்டு, உற்பத்தி ஆனதும் நேரடி விநியோகம் இல்லாமல் ஒன்று சேர்க்கப்பட்டு, பின் மாநிலங்களுக்கான பகிர்வு வழங்கப்படும் என்றானது. இதனாலும் ஒரு ஆட்சி மாற்றம் வந்ததும், பின் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்கினை (என்.எல்.சி), மாநில (தமிழக) அரசே வாங்கியதும், மின் மிகை மாநிலம் என்கிற நிலையை நோக்கி நகர்ந்ததும் அண்மைக் கால நிகழ்வுகள்.

இப்போது, மின்சார சட்டத் திருத்தம் மூலமாக, விலை நிர்ணயிக்கும் ஒழுங்குமுறை ஆணையம், மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும்; அதன் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசே தெரிவு செய்யும்; மின்சாரத்திற்கான மானியத்தை பணமாக கொடுத்தல் என்பது பெரும் பணி. அதில் உள்ள சிக்கல், ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு அளவினதாக பயன்பாடு இருக்கும் எனும் பொழுது அதற்குரியதாக மாநில அரசு செலுத்த வேண்டிய மானியத் தொகை விகிதமும் வேறுபடும் ; விவசாயிகள், நெசவாளிகளுக்கான மின்கட்டணம் விளை பொருள், உற்பத்தி பொருள் விற்றாலும், விற்காவிட்டாலும் கட்டியே தீர வேண்டும் என்கிற நிர்பந்தம் வரும். கட்டிய கட்டணத்துக்கான மானியம் வரும் வரை புதிய உற்பத்தியை தொடங்காமல், பணத்திற்காக காத்திருக்க வேண்டிய அவலம் உண்டாகும்; இது கொரோனா தளர்வினால் அரை ஆண்டு கழித்து திறக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களையும் பாதித்து முடக்கும் தன்மையுடையது எனல் சரி.

நதி நீர் பங்கீடு:
காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு வாய்க்கால் தகராறுகள் பேசு பொருட்களாகவே ஒரு முக்கால் நூற்றாண்டைக் கடந்து விட்டோம். நதி நீர் பங்கீட்டுக்கான ஆணையம் அமைத்ததற்கான சட்டப் போராட்டங்கள் தொடங்கி, நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட வரை ஒரு நெடும் நுட்ப அரசியல்களை எதிர் கொண்டு நம் உரிமைகளை போராடி போராடி சட்டத்தின் துணையுடன் ஒவ்வொரு முறையும் நாம் பெற சிரமப்படுவதனை கண்டு, இனி இந்த அலைச்சல் வேண்டாமென ஒரு புதிய (உண்மையில் புளித்து போன பழைய) மசோதாவின் வரைவோடு வந்திருக்கிறது மத்திய அரசு.
இதன்படி ஒரு மாநிலத்தின் அணை அடுத்த மாநிலத்தில் இருந்தால், அதன் மீதான உரிமை பறிக்கப்பட்டு, அணை அமைந்துள்ள மாநிலத்திற்கே அதன் பராமரிப்பு உரிமை போய் சேரும். மேலும், அந்தந்த மாநிலங்களுக்குள் இருக்கும் அணைகளுக்கான அதிகாரமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் படும். இதன்படி முல்லைப் பெரியாறு அணை மீதான தமிழக உரிமை பறிக்கப்படும். மேலும் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய மற்ற மூன்று அணைகளின் பராமரிப்பும் கேரளத்திற்கு போய் சேரும்.
மேலும், இந்த வரைவு, மாநில நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தினை ‘தேசிய அணை பாதுகாப்பு நிறுவனம்’ எனும் அமைப்புக்கு அளிப்பதன் மூலம் மாநில அதிகார வரம்புக்குள் நுழைவதற்கான துரித நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இதற்கு நடுவிலான ‘அரசிதழ்’ (கெசட்) அறிவிப்பு இன்னும் அதீத தலையீடாக உள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் எனும் தன்னாட்சி அமைப்பு , மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்குள் கொண்டு  செல்லப்படும் என்பது வெறும் நிர்வாக ஒழுங்குமுறை என்று கடந்து விட முடியாததாக இருக்கிறது.

வரி வருவாய்:
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) நாடு முழுமைக்குமென அமலான பிறகு, நாடு முழுக்க மொத்த வரியும் மத்திய அரசினால் வாங்கப்பட்டு, பின் அதிலிருந்து மாநிலங்களுக்கான பங்கீடு என்பதிலேயே நமக்கு முரண் உள்ளபடியே உண்மைதானாயினும், அப்படி தரப்படும் அந்த தொகையையும் தவணைகளில் தந்து, மாநில அரசுகள் நிலுவைத் தொகைக்காக தொடர்ந்து ஒரு நூறு கடிதங்களும், ஒரு ஆயிரம் கோரிக்கை மடல்களும் வரைந்து வரைந்து கையேந்த வேண்டியுள்ளது. இந்த இடத்தில் நாம் கேட்பது கூடுதல் நிதி அல்ல. நமக்கு தருவதாய், அவர்கள் சொன்னதன்படி, நியாயமாய் வந்து சேர வேண்டிய பங்குத் தொகை. பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் இப்படி குறிப்பிடுகிறார். ” அவசர நிலை பிரகடனம் என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள மத்திய அரசுக்கான மிக ஆபத்தான அதிகாரம்; அவர்கள் பொருளாதார அவசரநிலை (Economic Emergency) பிரகடனம் செய்தால் மாநில அரசுகளுக்கு காசோலை (செக்) எழுதும் அதிகாரம் இல்லாமல் போய்விடும்” என்கிறார்.  கடந்த காலாண்டு ஜி.டி.பி யில் மிகக் கணிசமான வீழ்ச்சி, எதிர்வரும் பொருளாதார சிக்கல்கள் எல்லாம் எதை நோக்கி நகர்த்த இருக்கின்றன என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் கூட ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. உயர் கல்வி, வேளாண்மை, மின்சாரம் போன்றவை ஏழாவது அட்டவணையின் பொதுப்பட்டியலில் (Concurrent List) உள்ளன. பொதுப் பட்டியலில் உள்ளவற்றில் மத்திய அரசு அணுகும் முறை என்பது ஒட்டகம் கூடாரத்துக்குள் இடம் கேட்ட கதை தான். முதலில் தலை நுழைக்க அனுமதி கேட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக கழுத்து, முன்னங்கால்கள், உடம்பு என நுழைத்து, கடைசியாக முழுமையாக உள்ளே வந்து அனுமதி அளித்தவரை வெளியேற்றுதல் தான் நீட், ஜி.எஸ்.டி போன்றன நமக்கு சொல்கிற கதை.
பொதுப் பட்டியலுக்குள் இந்த கோலம் என்றால், வேடிக்கையின் உச்சமாக ‘கொரோனா’ காலத்தில் மாநிலப்  பட்டியலில் (STATE LIST) இருக்கும் பொது சுகாதாரம் என்பதற்குள் அதிகாரம் செலுத்தி, பி.சி.ஆர். சோதனைக் கருவிகள் தன்னிச்சையாக மாநிலங்கள் வாங்கக் கூடாதெனவும், மத்தியிலிருந்து பகிர்ந்து தருவதனை வாங்கிட வேண்டுமெனவும் வந்த ‘சுற்றறிக்கை’ என்பது மத்தியில் உள்ளோரின் அதிகார வேட்கையினாலான மாநில உரிமைப் பறிப்பின் உச்சம்.  பல்வேறு தரப்பு எதிர்ப்புகளுக்கு பிறகு இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய அனுமதி, அதன் உற்பத்தி மிகை ஆனதால் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி அனுமதி என்றானதெல்லாம் தனிக் கதை. இந்த இடத்தில் ஒட்டகத்தின் தலையை மாத்திரம் நுழைத்துக் கொள்ள அனுமதி செய்து, அதனுடன் நிறுத்திக் கொண்டதுதான் நமது சரியான முடிவு என்க.

கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன வரிகள் தான் முக்கியமானவை. “இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தன்மையை மாற்றிட பாராளுமன்றத்தினை அனுமதிக்க இயலாது” என்பதே அது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளில் ஒன்றான கூட்டாட்சியை பலப்படுத்த ‘பூரண கூட்டாட்சி’ (Absolute Federalism)  கொண்டு வருதல் அவசியமாகிறது. ஒன்றியங்களின் கூட்டமைப்பு (Union of States) என்பதிலிருந்து நகர்ந்து இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) எனும் சீர்திருத்தம் தான் மாநில சுயாட்சியினைக் கொண்டு வரத் தக்கது. சொல்வதனைப் போல செய்வது அத்தனை எளிய காரியமல்ல என்றாலும், இப்படியே இருத்தல் என்பது மத்தியில் அதிகார மையங்கள் மேலும் உறுதிப்பட வழிசெய்யும் என்பதும், அதனால் இந்தியாவில் இதுகாறும் பின்பற்றி வந்த பண்பாட்டுப் பன்மைத்தன்மைகள் (Cultural and  traditional Pluralism) நசிந்து, நலிவுற்று நிற்க, ‘ஒரே தேசம்; ஒரே அரசு’ என ஏகாதிபத்திய ஆதிக்கத்தைப் போல மத்திய அரசு அதிகாரம் செலுத்த விட்டு வேடிக்கை பார்த்தல் என்பது நாளைய தலைமுறை நம்மை நோக்கி நகைக்கத்தக்க ஒரு புள்ளி.

அரசியல் ரீதியாக இன்னும் கடினமான ஒரு ஒருங்கிணைப்பு நடந்தால் தான் இந்தக் கூட்டாட்சி முறை பலப்படும். அது, மாநில சக்திகள் ஒன்றுபட்டு, ஒருமித்தக் கூட்டணியமைத்து, மக்களவையில் அவர்கள் பலம் பெற்று ஆட்சி அமைத்தால் தான், ஒவ்வொருவரின் தனித்தனி அடையாளமும் பேணப்படுவதற்கான  வழி உண்டாகும். பிரதமர் வேட்பாளர் யார் என்ற தன்முனைப்பு சண்டையினால் கட்சிகள் அல்ல, அடையாளங்கள் வீழ்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் தனது முகவரியை தொலைத்துக் கொண்டிருக்கிறது. அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை மாநில உரிமைகளின் மீது என்பதனை உணர வேண்டிய தருணம் இது.

வளவன்.