உள்ளாட்சி தேர்தல் வரும்…..ஆனால் வராது .- ராஜகுரு.

//
Comment0

உள்ளாட்சிக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது..
உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் வந்திடும்…என நம்புவதற்கு ஆதரவாக இருக்கின்ற காரணிகளை,நம்பாமல் இருப்பதற்கு அடிப்படையான காரணங்கள் தாரளமாக உள்ளன.

உள்ளாட்சி என்பது மக்களுக்கான சனநாயக உரிமையின் உயிர் நாடி; அதிகாரம் குவிக்கப்படுகின்ற ஏதேச்சதிகாரத்திற்கு எதிரான அதிகார பரவலாக்கலின் அடிநாதம் என்பது சட்டமன்ற – நாடாளுமன்ற முற்றங்களில் உலாவுவதையே தங்களின் மகோன்னத லட்சியமாகக் கொண்ட கட்சிகளுக்கு தெரியாததோ புரியாததோ அல்ல.மக்களுக்காக தாங்கள் அதிகாரம் செய்வதையே சனநாயகம் என்பதாக நம்புகின்ற,அதேவேளை பிறரையும் நம்ப வைக்கின்ற இக்கட்சிகள்,மக்களுக்கான அதிகாரம் மக்களிடையே கசிந்து செல்வதைக் கூட ஏற்க முடியாதவர்களாக உள்ளன.

  1. இட ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட குளறுபடிகளுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு மற்றும் அதனால் உருவான தடை

2.நடைபெற்ற சட்டமன்ற,நாடாளுமன்ற தேர்தல்கள்

3.சட்ட மன்றத்தை- சட்டமன்ற தொகுதியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் புதிய வாக்காளர் பட்டியல்

4.அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 50% ஆக உயர்த்தப்பட்டது.

மேற்கூறிய காரணங்கள் எதுவுமே ,தள்ளிப்போட அவசியமான காரணங்கள் அல்ல.மாறாக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட காரணம் தேடுவோருக்கு பயன்படக்கூடிய சொத்தை காரணங்களே ஆகும்

தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்த பிறகு. அதற்கு எதிராக எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க,முடியாது என்கின்ற சட்டப்பாதுகாப்பை (immune)சட்ட மன்ற-நாடாளுமன்ற தேர்தலுக்கு வழங்கியுள்ளதைப் போல் உள்ளாட்சி தேர்தலுக்கு வழங்காமல் இருப்பதிலேயே இவர்களின் களவாணித்தனம் குடிகொண்டு இருக்கிறது.

எனவே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் ஏதோவொரு வடிவில் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடையாணை பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

நீதிமன்ற தடையை காரணம் காட்டி,உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவே விரும்புகிறோம். முயன்றோம். நீதிமன்ற தடை காரணமாகவே நடத்த முடியவில்லை என தங்களின் சனநாயகக் கடமையை கை கழுவ தயாராகி விடுவார்கள்.

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் உள்ள அடிப்படை கோளாறுகள்,நீதிமன்ற தலையீட்டிற்கு தோரணம் கட்டி வரவேற்பதாகவே உள்ளன.பல கோளாறுகள் இருப்பினும் மிக முக்கியமானது.

‘2011 மக்கள்தொகைக்கேற்ப, உள்ளாட்சிகளுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி/குறைத்து
அதற்கேற்ப ஊராட்சி வார்டுகளை மறுவரையறை செய்யாமலே,பழைய மக்கள் தொகையின் படியமைந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கான சட்ட விதி முறைகளை உதாசீனம் செய்வதாகும்.

மக்கள் தொகை 500 லிருந்து 2000வரை உள்ள ஊராட்சிகள் 6 வார்டுகள் உடைய ஊராட்சியாகும்.சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அந்த ஊராட்சியின் மக்கள் தொகை 2000க்கு மேல் என்றால் 9 வார்டுகள் உடைய ஊராட்சி ஆக்கப்பட வேண்டும்.

5000 மக்கள் தொகை உள்ள ஊராட்சி வார்டுகள் அடங்கிய பகுதி ஒன்றிய வார்டு ஆகும். 25000 மக்கள் தொகை இருந்த ஒன்றியம் 5 ஒன்றியக்குழு உறுப்பினர்களை பெற்றிருந்தது.சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அந்த ஊராட்சியின் மக்கள் தொகை 35000 ஆக உள்ளது. 7 ஒன்றிய வார்டுகள் உருவாக்கப்பட வேண்டும்.

மேற்கூறியது போன்று அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தமிழ்நாடு முழுக்க செய்யப்படாமலே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முனைவது,மக்களுக்கான பிரதிநிதித்துவ உரிமை-உள்ளாட்சி சட்டம் வழங்கியுள்ள உரிமையை அப்பட்டமாக மறுப்பதாகும்.

ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை தடுக்கப்பார்க்கிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜா முழங்குவது. வாராவது தடுக்க மாட்டார்களா என்ற அவர்களின் விருப்பத்தையே காட்டுகிறது.

அதனால் தான்,உள்ளாட்சித் தேர்தல் வரும்…..ஆனா வராது

ராஜகுரு.