சென்னை -சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம்:மக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம்தீர்ப்பு!- பேரா. த. செயராமன்.

//
Comment0

சென்னை -சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து மக்கள் கடும் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். “எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும், நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்பதே மக்கள் முறையீடு. ஆனால், திட்டத்திற்குத தடை விதித்திருந்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு வழக்கில், இன்று (டிசம்பர் 8) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அது அளித்த தீர்ப்பில், மக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம், “எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது; புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் அதிகாரம் உள்ளது” என்று கூறியுள்ளது.

சென்னையிலிருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லப் பயன்படும் சாலைகளில் 130% அதிக வாகனங்கள் செல்வதாகவும், இதனால் விபத்துகள் அதிகரிக்கும் என்றும், 15 ஆண்டு எதிர்காலப் போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்ய வேண்டியது இருக்கிறது என்றும் கூறி, சென்னை- சேலம் இடையே 10,000 கோடி  மதிப்பீட்டில் 8-வழிப் பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாய் வழியே அறிவித்தது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இச்சாலையை அமைக்க 1900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணையையும் வெளியிட்டது.
அதிரடியாக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து மக்கள் போராட்டம் தொடங்கியது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
2019 ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பை அளித்தது. ‘தமிழக அரசின் அறிவிப்பாணையை இரத்து செய்வதாகவும், நிலம் கையகப்படுத்துவதற்குத் தடை விதிப்பதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் 8 வார காலத்தில் மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்’ என்றும் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும், நெடுஞ்சாலைத துறையும் மேல்முறையீடு செய்தன. உயர் நீதிமன்றமும் மக்களுக்குச் சார்பாக தீர்ப்பை அளித்து விடவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில், ‘8 வழி சாலைத் திட்ட அறிக்கை குறைபாடு உள்ளது’ என்று கூறி இரத்து செய்தது. “உழவர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தி, சுற்றுச்சூழல் அனுமதி பெற்று, அதன்பிறகு இத்திட்டம் குறித்து முடிவு செய்யலாம்” என்று கூறியது.

உயர் நீதிமன்றம் பசுமை வழித் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடக் கூற வில்லை. மேலும், உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியது:
” திட்டம் தொடர்பான ஆலோசனை அறிக்கை இரத்து செய்யப்பட வேண்டும். உத்தேசத் திட்டத்தால் வனப்பகுதிகள், நிலப்பகுதிகள், நீர்நிலைகள், கானுயிர்கள் மற்றும் தாவரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஆழமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்த பிறகு, திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறியது. இவ்வாறு உயர் நீதிமன்றம் “திட்ட அறிக்கை”யில் குறைகளைக் கண்டதே ஒழிய, அத்திட்டமே கைவிடப்பட வேண்டியது என்று கருதவில்லை.

இந்நிலையில், மத்திய அரசும் நெடுஞ்சாலைத் துறையும், உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன (ஜூன் 2019). உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் “தற்போதைய நிலையில், திட்டத்துக்காக அனுமதி தேவை இல்லை; முதலில் மாநில அரசு நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். அதன் பிறகே, சம்பந்தப்பட்ட துறைகளிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்படும்” என்று வாதிட்டார். “2006 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, நிலத்தைக் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை” என்று கூறினார்.

இதை எதிர்த்து வாதிட்ட வழக்கறிஞர்கள், “சென்னை- சேலம் பசுமைச்சாலைத் திட்ட சாத்தியக்கூறு களுக்கான அறிக்கை குறைபாடு உள்ளது என உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும், “சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும்” என்றும், “ஆகவே உயர் நீதிமன்ற தீர்ப்பு சரியானது” என்றும் வாதாடினர். திட்டமே தவறானது என்று வாதிட முடியவில்லை.  திட்ட அறிக்கைத் தயாரிப்பு குறைபாடுள்ளது என்று வாதிடப்பட்டது.

எழுத்துப் பூர்வமாக வாதங்களைப் பெற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஒரு வாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி, அதையும் பெற்றுக்கொண்டது. அதன்படி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பு, இன்று டிசம்பர் 8 அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசை எதிர்த்து வழக்காடிய வழக்கறிஞர்களும், பசுமை சாலைத் திட்ட சாத்தியப்பாட்டு அறிக்கையில் குறைபாடுகள் உள்ளன என்றே குறிப்பிட்டனர். திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் அனுமதியை  முன்னரே பெற வேண்டும் என்று வழக்காடினார்.

ஆகவே, உச்சநீதிமன்றம், “புதிய சாலை அமைக்க மத்திய அரசுக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும், சாலைகள் அமைக்க அதிகாரம் உள்ளது; எட்டு வழிச் சாலை திட்டத்திற்குத் தடை இல்லை; நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லாது; நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்; ஆனால், புதிய அறிவிக்கை வெளியீடு மற்றும் புதிய அரசாணை மூலம் நிலங்களைக் கையகப்படுத்தலாம்; இத்திட்டத்தை செயல் படுத்தலாம்” என்று கூறி விட்டது. மேலும், “சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்; மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்த வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து திட்டத்தை மீண்டும் தொடரலாம்”, என்று கூறியிருக்கிறது. உரிய துறைகளில் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, எட்டு வழி சாலைத் திட்டத்தைப் புதிதாகத் தொடங்கலாம். நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும், என்று கூறி விட்டது.

இத்தீர்ப்பை நீதிபதிகள் ஏ. எம். கான்வில்கர், பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய குழு அறிவித்துள்ளது. ஆகவே, எட்டு வழிச் சாலை பிரச்சனையில் மக்களுடைய  குரல் உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை. எடுத்து வைக்கப்பட்ட வாதங்களும் திட்ட அறிக்கையில் உள்ள குறைபாடுகள் பற்றியதாகவும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமை குறித்ததாகவும் இருந்ததால், அக் குறைபாடுகளை நீக்கி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் படி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

தமிழக அரசு மக்களுடைய குரலுக்கு மதிப்பளித்து இத்திட்டத்தைக் கைவிடுவதாகவே இருந்தாலும்கூட, மத்திய அரசும், நெடுஞ்சாலைத்துறையும் விடுவதாக இல்லை. அவர்களுக்கு சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை என்பது இந்திய அரசின் பாரத்மாலா – பரியோஜனா சாலைத் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். 34, 800 கிலோ மீட்டர் நீளமுள்ள, 5.35 இலட்சம் கோடி செலவில்  அமைக்கப்பட இருக்கும் இந்தத் திட்டத்தில் சென்னை- சேலம் செல்லும் 277. 3 கிலோ மீட்டர் நீளமுள்ள எட்டு வழிச் சாலை ஒரு பகுதியாகும்.

மக்களுடைய எந்த வலியையும் பொருட்படுத்தாமல், எதிர்காலத்தில் இயற்கை வள- கனிமவளச் சூறையாடலில் ஈடுபட இருக்கும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே நடைமுறைப்படுத்தப்படும்  இத்திட்டத்தை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தடுத்து நிறுத்தவில்லை. மக்கள் போராட்டம் மட்டுமே இதைத் தடுத்து நிறுத்த முடியும். திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இந்நிலையில், மாநில அரசு மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சும் வகையில், போராட்டங்கள் முழுவீச்சு பெறவேண்டும். தளர்ச்சி அடையாமல், போராட்டங்களை மக்கள் மீண்டும் கையில் எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து மக்களும் இப்போராட்டத்தில் இணைய வேண்டும்.மண்ணையும் மக்களையும் காக்க, மக்கள் பெருந்திரள் போராட்டங்களைத் தவிர வேறு ஒரு வழி இல்லை.

–பேராசிரியர்
த. செயராமன்
தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
08.12. 2020.