ஒருமுறைக்கு இருமுறை சிந்தியுங்கள்!- அ.லோகசங்கர்.

//
Comment0


உங்கள் பொன்னான வாக்குகளை அர்த்தமுள்ளதாக்குங்கள்!!
அன்பார்ந்தவர்களே!

தட்டுத்தடுமாறி,துவண்டு தவழ்ந்து ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல் நம் வீட்டு வாசலைத் தேடி வந்தேவிட்டது.கடந்த 2016முதல் முடக்கப்பட்டு ஒர் மூலையில் கிடத்தப்பட்ட உள்ளூர் சனநாயகம் மூச்சு வாங்கத்துவங்கி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததைப்பற்றி – மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட உள்ளுர் அரசாங்கம் (LOCAL GOVERNMENT) இல்லாமல் இருந்ததைப்பற்றி கடுகளவும் கவலைப்படாத,சனநாயகத்தின் அறங்காவலர்களாக தங்களை கருதிக்கொண்டவர்கள் எல்லாம் வீதி உலா வரத்தயாராகி விட்டனர்.

நாட்டை ஆளுவதற்குரிய மத்திய அரசாங்கம்,மாநிலங்களை ஆளுவதற்கான மாநில அரசாங்கம் போன்று மூன்றாவதாக அமைகின்ற அரசாங்க வடிவமே உள்ளுர் அரசாங்கம்.இது மத்திய – மாநில அரசாங்களை விட மக்களுக்கு மிக நெருக்கமாக உள்ள அரசாங்கம்.மக்களாகிய நாம் செல்வாக்கு செலுத்த முடிந்த ஒர் அரசாங்கமும் ஆகும்.

அதிகாரத்தைப் பரவலாக்கி மக்களிடம் அதிகாரத்தை கொண்டு சேர்த்து,மக்களை அதிகாரமிக்கவர்களாக ஆக்குவதை குறிக்கோளாகக் கொண்டு உருவான உள்ளுர் அரசாங்கங்களை,சொல்லிலும் செயலிலும் மக்களுக்கான அரசாங்கமாக உருவாக்குவது – வளர்ப்பது – நிலைநாட்டுவது மக்களாகிய நமது கைகளில் தான் உள்ளது. சனநாயகத்தின் உள்ளுர்மட்ட அமைப்பான உள்ளாட்சிகளுக்கு உரித்தான மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதன் மூலம் ஒரு புதிய வரலாற்றை துவங்குவோம்!படைப்போம்!!

கடையனிலும் கடையனிடம் சேர்ந்திட தயங்காத நெஞ்சுரம் கொண்டோரை……வலியோரிடம் மண்டியிடாத துணிச்சல் மிக்கோரை…..

உழைப்பாளியின் வேர்வையை போற்றவும் உயர்நிலைக்கு ஏற்றவும் உரியோரை….சுயமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுகின்ற ஆளுமைமிக்க பெண் பிரதிநிதிகளை……

கற்பிதம் செய்யப்பட்டுள்ள அனைத்து விதமான பாகுபாடுகளையும் புறந்தள்ளும் பண்பாளரை…. ஆதிக்கம் என்கின்ற உரிமை மறுப்பை உதறித்தள்ளி சனநாயகத்தை போற்றுவோரை…. ஆகாத தெய்வமென்று எதுவுமில்லை எனக்கண்டு அணைத்து நம்பிக்கைகளையும் மதிப்போரை….உயிருக்கு நேரான தமிழை பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டோரை…..

எல்லாவற்றிற்கும் மேலாக
உள்ளாட்சி தேர்தலையும் உள்ளாட்சி அமைப்புகளையும் உள்ளாட்சிகளுக்கான அலுவலக கட்டமைப்புகளையும் உதாசீனப்படுத்தி உளுத்துப்போகச் செய்யும் ஆதிக்க முயற்சிகளுக்கு எதிராக,உள்ளாட்சியை வலுவான மக்கள் அரசாங்கமாக்கிட அவசியமான முயற்சிகளை,மக்களோடு இணைந்து மேற்கொள்ள தன்னை முமுஅளவில் தயார்படுத்திக் கொண்டோரை….

தேர்வு செய்யுங்கள்! இனியொரு விதிசெய்வோம்! – அதை எந்நாளும் காப்போம்!!