பெண்களுக்கு எமனாகும் கந்துவட்டி, மைக்ரோ பைனான்ஸ்- ந.சண்முகம்.

//
Comment0


வேலையின்மை, மருத்துவ செலவு, கல்வி செலவு, விவசாயத்தில் நட்டம், தொழிலில் நட்டம், எதிர்பாராத செலவுகள் ஆகியவை கந்துவட்டிக்கு வழிவகுக்கிறது. ஒருவரிடம் கைநீட்டி வாங்கும் பணத்திற்கு நாள், மாதம்,ஆண்டு என்று ஆயுள் முழுவதும் வட்டி கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்
யாரும் மிட்டாமிராசுகள் அல்ல. அன்றைய வயிற்றுப்பாட்டுக்கு மாடாய் உழைக்கும் எளிய மக்களே இதில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அதே போல் பணத்தை கொடுப்பவர்களும் எந்த பின்புலமும் இல்லாத எளியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,
திருப்பூர், கரூர், கோவை, நெல்லை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி
மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கந்துவட்டிக் கொடுமையில் சிக்கி தவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இவர்கள் வாங்கும் பணத்தை உரிய தேதியில் செலுத்தாவிட்டால் அதற்கு மைக்ரோ வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்று உருட்டி ,மிரட்டி வாங்கிவிடுகின்றனர். இதனால் சொற்ப உடமைகளையும் இழந்து பலர் வீதிக்கு வருகின்றனர். அப்போதும் சமாளிக்க முடியாது என்ற எண்ணம், மனதில் ஆழமாக பதியும் போது, அரிய உயிரையும் மாய்க்க தயாராகின்றனர் என்பதும் ஆய்வுகள் தெரிவித்துள்ள அதிர்ச்சி தகவல். இந்த கொடுமைகள் தொடர்வதற்கு நிர்வாக கோளாறுகள் தான் முக்கிய காரணம் என்கின்றனர்
சமூக ஆர்வலர்கள்.

நாடு என்னதான் வேகமாக வளர்ந்தாலும், கிராமங்களில் வாழும் பலருக்கு, வங்கிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் கந்து வட்டி கொடுப்போருக்கு வரமாக உள்ளது. இதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், வேறு வழியில்லாமல் ஏழை மக்கள் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். இப்படி வாங்கி, சிக்கலில் மாட்டிக் கொள்ளும் பலரிடம், அதனை வசூலிக்க போலீசாரே துணையாக இருப்பதும் கொடுமை. இதனால்தான், சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் குமுறல்.

சமீபகாலமாக தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் குறை தீர்க்கும் முகாமில், கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையில் புகார் தெரிவிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் நியாயம் கிடைக்கவும், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவும் சிலர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி,
தீ வைக்க முயலும் அவலங்களும் தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இது போன்ற முயற்சியில் ஈடுபட்ட
இளம்பெண், 2 குழந்தைகளுடன் உடல் கருகி பலியானது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இதற்கு பிறகு அரசு அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்தது.

இதேபோல் லேட்டஸ்ட்டாக மைக்ரோ பைனான்ஸ் என்பது நடுத்தர குடும்பத்து பெண்களுக்கு எமனாகி வருகிறது.

எந்த தொழிலும் செய்யாத பத்து பெண்களை ஒரு குழுவாக இணைத்து அவர்களுக்கு 20 ஆயிரம் கடன் கொடுத்து வாராவாரம் திருப்பி செலுத்தும்
நெருக்கடியை மைக்ரோபைனான்ஸ்
வருகின்றன.இந்த நிறுவனங்கள் சுயதொழில் செய்யாத வேலைக்கு செல்லாத பெண்களுக்கு கடன் கொடுக்கிறது. இதன் ஆபத்து தெரியாமல் கடன் வாங்கிவிட்டு அதை கட்டமுடியாமல் பெண்கள் தவிக்கின்றனர்.

ஒரு குழுவில் பணம் வாங்கிவிட்டு செலுத்தமுடியாமல் தவிக்கும் பெண்கள், அதனை திருப்பி செலுத்த வேறு குழுவில் இணைந்து கடன் பெறுகின்றனர்.
இரண்டு குழுவுக்கும் வாரம் தோறும் தவணையை செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்த அலுவலர் காவல்துறைக்கு போவதாக மிரட்டுவார். கடன் பெற்ற ஒன்பது பெண்களும், கட்டாத பெண்ணின் வீட்டிற்கு சென்று கௌரவத்தை சந்தி சிரிக்க வைத்துவிடுவார்கள். இதனால் மனஉளைச்சலில், பெண்கள் உயிரை மாய்க்கும் சம்பவங்களும் நடந்து
வருகிறது. இந்த வகையில் மைக்ரோ பைனான்ஸ் என்பதும், எளிய குடும்பத்து பெண்களுக்கு எமனாக மாறி வருகிறது என்கின்றனர் பெண்ணியல் ஆர்வலர்கள்.

மொத்தத்தில் கந்துவட்டி என்பது ஒரு சமூக கொடுமை. அந்த கொடுமைக்கு எதிரான கோரிக்கைகள், அரசால் காது கொடுத்து கேட்கப்படவில்லை. சட்டமும். காவல்துறையும் பாதித்தவர்களை விட,
பணத்தை இறைப்பவர்களுக்கே பல நேரங்களில் சாதகமாகிறது. நிதியும், நீதியும் எப்போதும் ஏழைக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது என்பது
பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த குரலாக ஒலிக்கிறது.

4 மாதத்தில் 3 உயிர்களை பலியாக்கிய பரிதாபம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெறும் மகளிர் குழுவினர் வாரத்தின் முதல் நாளில்
தங்களுக்கான தவணைத் தொகையினை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கட்டாத உறுப்பினரின் வீட்டிற்கு மற்ற ஒன்பது பேரும்சென்று தவணைத் தொகையை எப்படியாவது பெற்றுத்தர வேண்டும். குழு
கூட்டம் நடக்கும் நாளில் தவணை தொகையை செலுத்திட பெண்கள் படும்பாட்டை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. இதில் குமாரபாளையத்தில்
கடந்த 4 மாதங்களில், குழு கடன் கட்டமுடியாமல் அவமானத்தால் குறுகி, காட்டூர் ராஜூ, உடையார்பேட்டை சண்முகசுந்தம், சுந்தரம் காலனி
தையல்நாயகி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். அதன் பின்னரே மைக்ரோ பைனான்ஸ் என்ற அரக்கனின் கோரமுகம், மற்றவர்களுக்கு
தெரியவந்தது.

தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையின் உச்சகட்டமாக நிகழ்ந்தது, கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளரான வேலுசாமி என்பவரது படுகொலை சம்பவம். பள்ளிபாளையம் அக்ரஹாரத்தில்
உள்ள ஒரு பெண் தொழிலாளி, கந்துக்கான தவணைத்தொகையை தனது மகளிடம் கொடுத்து அனுப்பினார். பணத்தை வாங்கிய கந்துவட்டி கும்பல்,
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டது. மகளின் வாழ்வை சீரழித்து, இணையத்தில் வெளியிட்ட பதிவை அகற்றும்படி மன்றாடிய தாய்க்காக காவல் நிலையத்தில் வாதாடி, போராடி எப்ஐஆர் போடவைத்தார் வேலுசாமி. இதற்கு பிறகு காவல் நிலையத்திலிருந்து மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டவரை, ராஜவீதி மஜிக் அருகே வெறிகொண்டு வெட்டிச்சாய்த்தது கந்து வட்டி கும்பல், தமிழகத்தை
உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்திற்கு பிறகே, கந்துவட்டி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது.

வங்கிகளில் கடன் கிடைப்பது சிரமம். நெசவாளர்கள், சிறு தொழில் செய்வோர்களுக்கு, தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்திட நடைமுறை முதலீடு தேவைப்படுகிறது. வங்கிகள் பெரும் நிறுவனங்களுக்கு உரிய ஆவணங்களை பிணையமாக வைத்து பணம் கொடுக்கின்றன. ஆனால் சிறுதொழில் செய்வோருக்கு வாசல்வரை வந்து நிதி உதவிகளை செய்ய வங்கிகளால் இயலுவதில்லை. மேலும் வங்கியில் கடன் பெறுவதற்கான நடைமுறை விதிகள் சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. இதனால் கந்து வட்டி, அடகுகடை போன்றவற்றில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி விட்டு, ஆயுள் முழுவதும் அதனை கட்டமுடியாமல் தவிக்கின்றனர் என்பது சிறுதொழில் முனைவோர் கூட்டமைப்பு நிர்வாகிகளின் குமுறல்.

பெண்களை குறிவைத்து கடன்:

மைக்ரோ பைனான்சாக இருந்தாலும் கந்துவட்டியாக இருந்தாலும், ஆண்களுக்கு கடன் தருவதில் தயக்கம் காட்டுகின்றனர். பெண்களை போல் ஆண்கள், அவர்களது நிபந்தனைகளுக்கு ஒத்துப்போவதில்லை. இதனால் கந்து வட்டி நிறுவனங்கள் ஏராளமான மகளிர் குழுவை உருவாக்கி வருகின்றன. இதில் குமாரபாளையம் தாலுகாவில் மட்டும் சுமார் 400 மைக்ரோ பைனான்ஸ் மகளிர் குழுவினர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் நூதன கந்துவட்டி:

கந்துவட்டியை ஒழிக்க பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் திருவண்ணாமலை, மாவட்டங்களில் தொடர்ந்து கந்துவட்டி நடைபெறுகிறது. தனியார் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில், விசிட்டிங் கார்டுடன் வலம் வரும் நபர்கள், நகரையொட்டியுள்ள சலூன்கடைகள், காய்கறி கடைகள், பெட்டிக்கடை, மளிகைகடை உரிமையாளர்களுக்கு கடனுக்கு பணம் கொடுத்து கந்துவட்டி வாங்கி வருகிறார்கள். இதே போல் அனைத்து மாவட்டத்திலும், பல கிராமங்களில் இந்த கந்துவட்டி கும்பல் கடன் கொடுத்து பணம் வசூல் செய்வது குறிப்பிடத்தக்கது.

நடைமுறைகளை எளிதாக்கி தூண்டில்:

வங்கிகள் பெரிய முதலீடு தேவைப்படும் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதையே விரும்புகின்றன. இந்த சிரமத்தை மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் கந்து வட்டியாளர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். பணத்தேவை அதிகம் இருப்பதால் வட்டி அதிகம் என்ற
போதிலும் கந்து வட்டி வலையில் மக்கள் எளிதாக மாட்டுகின்றனர் என்கின்றனர் மூத்த அதிகாரிகள்.

வங்கி விதிகள் உள்ளது போல், ஒரு மகளிர் சுய உதவி குழு, ஒரு வங்கியில் கடன் பெற்று விட்டால் மற்ற வங்கியில் அந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுக்க மாட்டார்கள். ஆனால் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள், “ஒரே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5 நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றனர். இதனால் அடித்தட்டு மக்கள் பல மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் பணத்தை பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி கட்ட முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். மேலும் கால வரையறை இல்லாமல் வசூல் என்ற போர்வையில் இரவு 10 மணி,
11 மணி என குண்டர்களை வைத்து தொந்தரவு செய்கின்றனர். இதனால் பல குடும்ப பெண்கள் தடம் மாறி செல்லும் நிலை உள்ளது. ஆகவே வங்கிகள் போன்ற திட்டத்தை மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் கடை பிடிக்க விதிகள் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி விதிகள்படி தான் வட்டி வசூலிக்க வேண்டும் என்பதை கண்காணிக்க வேண்டும்.

மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் சுய உதவி குழுக்களிடம் அதீத வட்டி வசூலித்து வருகின்றனர். மேற்படி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான விதிகளை கடைபிடிப்பதில்லை.
ஆகவே தமிழ் நாட்டின் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனைவரும் உடனடியாக தமிழக அரசுக்கு பரிந்துறை செய்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை ஒழுங்கு படுத்தி, விதிகளை வகுத்து அதன்படி
செயல்படுவதற்கு ஆவன செய்து அடித்தட்டு மக்களை இந்த அரசு பாதுகாக்க வேண்டும்.

ந.சண்முகம், வழக்கறிஞர்.