கமலஹாசனிடம் நீதியுமில்லை, மய்யமுமில்லை- விக்கி கண்ணன்.

//
Comment0

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரு சூரப்பா நியமனம் செய்யப்பட்ட போதே பல எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழக பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும் எனும் விதியுள்ளது. உதவி பேராசிரியர் பணிக்கே இவ்விதி பொருந்தும் போது துணைவேந்தராக பதவியேற்கும் நபர் தமிழ் அறியாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் அதோடு பொறியியல் படிப்பிற்கான அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கன்னடர். சட்டக்கல்லூரிக்கு ஆந்திரத்தை சேர்ந்தவர். இசைப்பல்கலைக்கழகத்திற்கு கேரளர் என தமிழக பல்கலைக்கழகங்களுக்கு தொடர்ந்து தமிழ்நாட்டை சாராதவர்களை நியமிப்பது தமிழகத்தில் மெத்த படித்த கல்வியாளர்களுக்கு செய்யும் அவமரியாதை. தமிழர்களின் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கும் செயல் என பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்த எதிர்ப்புகளை சரிக்கட்டும் வகையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்தவரே நியமிக்கப்பட்டார்.

அதோடு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கான நேர்காணல் நடைபெறுவதற்கு முந்தைய நாளே சூரப்பா தான் துணைவேந்தராக தேர்வாகப்போகிறார் எனும் செய்திகள் திரு சூரப்பாவின் நெருங்கிய வட்டாரங்களின் மூலமே வெளியில் கசிந்தது. இதனால் நேர்காணல் என்பது வெறும் போக்குகாட்டும் செயல் என தெளிவாக தெரிந்தது. மாநில உரிமைகளை துச்சமென கருதி திரு சூரப்பாவின் பணி நியமனம் நடந்தது. பணி நியமனம் செய்யப்பட்ட கையோடு ஆளுநர் மாளிகையில் இருந்து அவருக்கு துதிபாடி செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தார்கள்.

ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதைப் போன்று சூரப்பா மெச்சத்தக்க நிர்வாகியோ, கல்வியாளரோ அல்ல. வழக்கமாக இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப் படுவோருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட சூரப்பாவை அந்த பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று கூறி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது. அதற்கு மத்திய அரசு சொன்ன காரணங்கள்:

  1. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குனராக பணியாற்றிய போது பெரும்பாலான நாட்களில் பணிக்கு வராதது,
  2. நிர்வாகம் சார்ந்த முடிவுகளை விரைந்து எடுக்காதது,
  3. பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.760 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், 5 ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டது. இதனால் கட்டுமான செலவு மதிப்பீடு ரூ.1958 கோடியாக உயரக் காரணமாக இருந்ததாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கண்டனத்திற்கு ஆளானது,
  4. பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை தமது கண்டுபிடிப்பாக காட்டியது,
  5. பேராசிரியர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது என இவர் மீது ஏராளமான புகார்களை அடுக்கியது.

ஆனாலும் ஆளுநர் மாளிகை அவரை பாராட்டி வாழ்த்துப்பா பாடி நியமித்தது. அவர் வந்ததும் வராததுமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு Institute of Eminence (IoE) கேட்காமலேயே வழங்கப்பட்டது. இதன்மூலமாக இட ஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாவதோடு, இனி அப்பல்கலைக்கழகம் இளங்கலை படிப்புகளை நிராகரித்து, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் சார்ந்த படிப்புகளை தரம்/தகுதி அடிப்படையில் வழங்குவதோடு, 25% சீட்டுகளை வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு வழங்கப்போவதாக கூறியது. தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். தமிழக அரசு இட ஒதுக்கீடு குறித்து கேள்வியெழுப்பியபோது அதற்கு மத்தியில் இருந்து பதில் இல்லை. இந்நிலையில் துணைவேந்தரே அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியதாகவும் அதில் IoE அந்தஸ்து தரவேண்டும் என்றும், அதற்கான செலவுகளை பல்கலைக்கழகமே ஏற்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் கசிந்தன. அதனை சூரப்பா மறுத்தார்.

இதுதான் திரு சூரப்பாவின் பணி நியமனம், அவரது முந்தைய பணியின் சாதனைகள்(?!) உயர் அந்தஸ்து பெற வேண்டி அடித்த பல்டிகள், அவருக்கு ஆளுநர் மாளிகை அளித்த வாழ்த்துப்பா போன்றவைகளின் ஒரு குறுகிய செய்தி தொகுப்பு. இந்நிலையில் தீடிரென தொபுக்கடினு குதித்து ‘நான் கேட்பேன்’ என சம்மந்தமே இல்லாமல் நம்பி நாராயணன் கதையெல்லாம் இழுத்து வைத்து திரு சூரப்பாவுக்கு உத்தமர் பட்டம் வழங்கிய ஒரு மய்யஸ்தர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

கமல் யாருக்கான முகம் என்பதை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் காட்டிக்கொண்டேயிருக்கிறார். ஏனெனில் அவர் ‘உத்தமவில்லன்’.

விக்கி கண்ணன்.