கறுப்பு தேசியம்- அபராஜிதன்.

//
Comment0

முடியரசுகளையும், காலனியாதிக்கத்தையும், நவீன காலனியாதிக்கத்தையும் எதிர்த்து உலகெங்கும் நடைபெற்ற தேச விடுதலை போராட்டங்கள் மக்கள் சமுகத்தின்  எழுச்சிக்கான சிறப்புமிகுந்த அடிப்படையாக பார்க்கப்படுகிறது. அதாவது மக்கள் தங்களை ஒருங்கிணைத்து கொள்வதற்கு, உணர்வு கொள்வதற்கு பிணைப்பு சக்தியாக இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை சார்ந்த  மக்கள் தங்கள் வாழ்விட, வாழ்வாதார உரிமைகளுக்கு மிகப்பெரிய வல்லரசுகளை கூட எதிர்க்க முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்றிருப்பதால் அவ்வகை போராட்டங்கள் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.

வரலாற்றின் மிக கொடூரமான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடம்தான் அமெரிக்கா.
வெள்ளையினத்தவரின் நிறவெறியால் எழுதப்பட்டிருக்கும் ரத்த வரலாற்றின் பக்கங்கள் மிகவும் நீண்டது, கொடூரமானதும் கூட. இந்த ஒடுக்குமுறைகள் அனைத்தையும்   எதிர்த்து நின்றதற்கு அந்த நிறமே  குறியீடாக முன்வைக்கப்பட்டது. நிறம், இனம் சார்ந்த பண்பாட்டு தேசியமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது சுயநிர்ணய உரிமை, தனிநாடு என்பது வரை வளர்ச்சி கண்டது.

அமெரிக்காவில் கறுப்பர் தேசியம் அரசியல்ரீதியாக, பண்பாட்டுரீதியாக, இனரீதியாக, நிறரீதியாக, மதரீதியாக, பொருளாதார ரீதியாக என்று அனைத்து வழிகளிலும்  முன்னெடுக்கப்பட்டது. கறுப்பர்களுக்கான தேசம் என்பதை 1960- 75 களில் பல்வேறு கறுப்பின இயக்கங்கள் உரக்க ஒலிக்க துவங்கியது.

பல்வேறு நாடுகளில் இருந்து ஆனால் ஓரே கண்டத்தில் இருந்து சிறைபிடிக்கப்பட்டு உலகின் மிகவும் கொடுமையான முறையினில் வடஅமெரிக்காவுக்கு கடத்தி வரப்பட்டு அடிமைகளாக்கப்பட்டவர்களின் எழுச்சி காவியமாகத்தான் இந்த கறுப்பு தேசியம் பார்க்கப்பட வேண்டும்.

அமெரிக்கா அவர்களுக்கான பூர்வீக நிலம் இல்லை. அதே போல் கறுப்பின மக்களுக்கு திரும்பி செல்வதற்கும் நாடென்று ஒன்று இல்லை. தாங்கள் எந்த கண்டத்தில் இருந்து வந்தோம் என்று தெரிந்தாலும் எந்த நாட்டிலிருந்து வந்தோம் என்பது பலருக்கு தெரியாது. இந்த நிலையில் தற்போது வாழும் இடத்தில் நின்று போராடுவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் அது மிகவும் கடினமான ஒன்று. அமெரிக்காவே குடியேற்ற நாடாக இருந்தாலும் ஐரோப்பிய வல்லரசு நாடுகளின், சகல வல்லமை பொருந்திய ஆங்லோ-சாக்சனிய கட்டுபாட்டின் கீழ் அது இருந்து வருகிறது. அப்போதும் கறுப்பின மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிட வில்லை. அவர்கள் அமெரிக்காவில் கால் பதித்த நாள் முதற்கொண்டு சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டுதான் வந்திருக்கின்றனர்.

1619 ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக கறுப்பின மக்கள் அடிமைகளாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அது முதற்கொண்டு இன்று வரை அவர்களின் போராட்டம் ஒயவில்லையென்றாலும், பலவிதமான போராட்டங்கள் மூலமாக தொடர்ந்து தங்கள் உரிமைகளை படிப்படியாக மீட்டுக்கொண்டே வருகின்றனர்.

1663-ல் விர்ஜீனியாவில் உள்ள கிளொவ்செஸ்டரில் அவர்களுடைய முதல் கிளர்ச்சி பதிவு செய்யப்படுகிறது. 1712-ல் நியுயார்க் அடிமைகள் கிளர்ச்சி,1739-ல் ரத்தக் களரியான ஸ்டோனோ எழுச்சி, 1764-ல் அமிஸ்டாட் கப்பல் கிளர்ச்சி, 1811-ல் ஜெர்மானிய கடற்கரை கிளர்ச்சி,  1831-ல் நட் டர்னர் கலகம், 1859-65-ல் உள்நாட்டு போரை ஒட்டி ஏற்பட்ட பல கிளர்ச்சிகள் வாயிலாக அவர்களின் விடுதலைக்கான கிளர்ச்சிகளை நாம் காண முடிகிறது.

கறுப்பின மக்கள் மீது கடுமையான அடக்குமுறையும் கண்காணிப்பும் இருந்தும் கூட அவர்கள் தங்களின் விடுதலைக்கான முயற்சிகளை கைவிடவேயில்லை.

1775-83 அமெரிக்க சுதந்திர போர் நடக்கும் போதும் சரி, அதற்கு பின்னரும் சரி அடிமை முறையை ஒழிப்பதற்கு வட மாகாணங்கள் முயற்சி எடுத்தன. நல்லெண்ண காரணம் எதுவுமில்லை. வடக்கில் தொழிற்சாலைகள் அதிகம் தோன்றின. அவற்றுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தெற்கில் மிகுந்து இருந்த பருத்தி, புகையிலை தோட்ட உரிமையாளர்களுக்கு அடிமைகள் மிகவும் அவசியமாக இருந்தார்கள். அடிமைகளை பங்கு போடுவதற்கான முரண்பாடு என்றாலும் கறுப்பின மக்களின் நிலை தெற்கை ஒப்பிடும் போது வடக்கில் சற்றே பரவாயில்லை எனலாம். வடக்கு, தெற்கு இரண்டுக்கும் உள்நாட்டு போர் துவங்கியதற்கு அடிமை ஒழிப்பு குறித்த மசோதாக்கள் முக்கிய பங்கு வகித்தன. சட்டப்படி 1805-ல் அமெரிக்காவின் வடக்கில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்துவது பொறுமையாகவே நடந்தது.ஆனால் தெற்கில் அடிமை ஒழிப்பு சட்டங்களுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இறுதியாக ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான அரசு 1865-ல் அடிமை முறையை ஒழித்து சட்டம் இயற்றியது.

1865-ல் சட்டப்படி அடிமை முறை ஒழிக்கப்பட்டாலும் ஒதுக்கலும், அவமானமும் தொடர்ந்துக் கொண்டேதான் இருந்தது. அவர்கள் வெள்ளையர்கள் போல சம உரிமையுடன் தேர்தல்களில் வாக்களிக்க போராட வேண்டியிருந்தது. உள்நாட்டு போருக்கு பிந்தைய மறுகட்டுமான காலகட்டத்தில் அரசு பொறுப்புகளில் கறுப்பின மக்கள் அமர முடிந்தது. இவையெல்லாம் கடுமையான போராட்டங்கள் மூலமாக அடைந்ததே.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை குறைந்த ஊதியம் கொண்ட உடலுழைப்பு பணிகளில் மட்டுமே கறுப்பின மக்கள் பணியாற்றி வர முடிந்தது. இராணுவத்தில் போர்வீரர்களாக கறுப்பின மக்கள் அனுமதிக்கப்பட வில்லை. அதையும் உடைத்து கறுப்பர்கள் மட்டுமே கொண்ட ஒரு விமான தாக்குதல் அணி வெற்றிகரமாக செயல்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலகட்ட நெருக்கடி இராணுவத்திலும், பிற பணிஇடங்களிலும்  கறுப்பின மக்கள் உயர வழிவகுத்தது.

1955-ல் “ரோசா பார்க்ஸ்” என்ற கறுப்பின பெண்மணி பேருந்து பயணத்தின் போது கறுப்பின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தார். ஒரு வெள்ளையருக்காக அந்த இடத்தை விட்டுத்தர கட்டாயப் படுத்தப்பட்டார். அவர் மறுக்கவே கைது செய்யப்பட்டார். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவவே கிளர்ச்சிகள் துவங்கியது. இந்த அம்மையாரே ” நவீன குடி உரிமை இயக்கங்களுக்கான தாய்” என அழைக்கப்படுகிறார்.

அதே சமயத்தில் ரோசா பார்க்ஸ்-க்கான போராட்டத்தை முன்னின்று நடத்த கறுப்பினத்தின் தலைவர்கள் இணைந்து மார்டின் லூதர் கிங் ஜுனியரை தலைவராக தெரிவு செய்தனர். அது முதற்கொண்டு கறுப்பின மக்களின் குடிமை உரிமை இயக்கத்தின் அச்சாணியாக லூதர் விளங்கினார்.

1957-ல் குடி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது. அனைவருக்கும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டிருந்தாலும் தென் மாகாணங்கள் கறுப்பின மக்களை வாக்களிக்க பல தடைகளை ஏற்படுத்தியது. அதிபர் ஐசனோவரால் கையெழுத்திடப்பட்ட இந்த சட்டம் கறுப்பின மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

ஸ்டோக்லி கார்மைக்கேல், மார்டின் டிலனி, லூயிஸ் ஃபராக்கான், மார்க்கஸ் கார்வே, மால்கம் எக்ஸ், வரீத் தீன் முகமது, எலிஜா முகம்மது  போன்றோர் அமெரிக்காவில்  கறுப்பின மக்களின் தேசியம் குறித்து பேசிய, செயல்பட்ட தலைவர்கள் ஆவர்.
கறுப்பின மக்கள் ஆப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும், லைபீரியாவில் சென்று குடியேற வேண்டும், அமெரிக்காவினுள்ளேயே தனி உரிமைகள் வேண்டும், சில மாகாணங்களை கறுப்பின மக்களுக்கு அளிக்க வேண்டும், தாய் மதமான இசுலாமிற்கு திரும்ப வேண்டும், அமெரிக்காவை பிரித்து கறுப்பின மக்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று கறுப்பின மக்களின் தேசியம் பலவகையில் வெளிப்பட்டது. நிற,இன அடிப்படையிலான பண்பாட்டு தேசியமாகவும் அது வெளிப்பட்டது.

“இசுலாம் தேசம்” என்ற அமைப்பை வாலஸ் பார்ட் முகமது என்பவர் தோற்றுவித்தார். எலிஜா முகமது அவருக்கு பின் பொறுப்பேற்றார். இந்த இயக்கம் வெளிப்படுத்திய கருத்தின் தாக்கத்தால் பலர் இசுலாத்தை தழுவினர். முகமது அலி போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். எலிஜாவின் சீடர்தான் நமக்கு நன்கு அறிமுகமான மால்கம் எக்ஸ்.

1966-ல் ஹுவே நியூட்டன், பாபி சீல் ஆகியோரால் உருவாக்கப்பட்டதுதான் “கருஞ்சிறுத்தைகள்” (Black panthers)இயக்கம். இதன் பாதிப்பில்தான் இந்தியாவில் “தலித் பேந்தர்ஸ்” உருவாகியது. இந்த இயக்கம் கறுப்பின மக்களின் மீதான வெள்ளையின காவல்துறையினரின் வன்முறைக்கு பதிலடி தருவதற்காக துவங்கப்பட்டது. மிகவும் தீவிரமாக செயல்பட்ட இந்த அமைப்பினை கலைக்க அமெரிக்க உளவுத்துறை கடும்முயற்சி மேற்கொண்டது.

தன்னை புரட்சிகர இயக்கமாக அறிவித்துக் கொண்ட கருஞ்சிறுத்தைகள்(Black panthers) கறுப்பின மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை முன்வைத்தார்கள். இவர்கள் பிரான்ஸ் பனான், மாசேதுங், நுக்ருமா போன்றவர்களின் தத்துவங்களை ஏற்று தங்கள் வழிமுறையை அமைத்துக் கொண்டனர்.

மிகச்சமீபத்தில் நடந்த ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலையை ஒட்டி எழுந்த ” கறுப்பு மக்களின் வாழ்வு முக்கியமானது”(Black lives matter) என்பதற்கான இயக்கம் உலகையே அதிர வைத்தது. இன்றும் அந்த நிறவெறி தொடர்ந்து கொண்டிருப்பதும், ஜார்ஜ் பிலாய்டின் கொலைக்கெதிரான கறுப்பின மக்களின் எதிர்வினையும் அவர்களுக்கென்று ஒரு தேசம் அமைந்தாலொழிய இது போன்ற குற்றச்செயல்கள் நிற்காது என்பதையே காட்டுகிறது.

அமெரிக்க கறுப்பின மக்கள் 350 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
350 ஆண்டுகால வரலாற்றில் அவர்கள் அனுபவித்த கொடுமை உலகில் யாருமே அனுபவிக்காதது. ஆனாலும் ஒடுக்குமுறைக்கு அஞ்சி அவர்கள் போராடாமல் இருந்ததே இல்லை.

பரந்த நிலப்பரப்பில் தங்கள் நிறத்திற்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடினார்கள்.சாத்தியமான அனைத்து வழிகளிலும் போராடினார்கள். அவர்கள் அனைவரையும் இணைப்பதற்கு, பிணைப்பதற்கு உடலின் நிறம் ஒரு அடிப்படையை வழங்கியிருந்தது. யாராலும் அழிக்க முடியாத அந்த மரபுரிமை இயல்பாகவே தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பை  எப்போதும், எங்கும் பதிவு செய்து கொண்டிருந்தது.

கறுப்பின மக்களின் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை. அது தேசியத்தின் வரையறைகளுக்கும் உட்பட்டும், அப்பாற்பட்டும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்க கறுப்பின மக்களின் போராட்டம் உலகம் முழுவதும் உள்ள  ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமே. இதில் உள்ள செழுமையான அனுபவங்கள் உலகெங்கும் ஒடுக்குமுறையை சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களை சென்று சேர வேண்டும்.

அமெரிக்காவின் வல்லமையின் முன்பு கறுப்பின மக்கள் தனி தேசமாவது சாத்தியக்குறைவாக தோன்றினாலும், அது அவசியம் என்றே தோன்றுகிறது.

2020 ஆம் ஆண்டிலும் நிறவெறி, மதவெறி சாதிவெறி போன்றவை நீடித்து வருவதும், வளர்க்கப்படுவதும், இதில் ஏதேனும் ஒரு காரணத்தினால் மனிதர்கள் கொல்லப்படுவதும், கொள்ளையிடப்படுவதும் என தொடர்வதால் இறையாண்மை என்பது அனைவருக்கும் தேவைப்படுகிறது. அதற்கான போராட்டங்கள் உடனடியாக வெற்றி பெற சாத்தியமில்லை என்றாலும், சாத்தியப்படும் போராட வேண்டியது மட்டுமே ஒடுக்கப்படுபவர்கள் முன் உள்ள ஒரே வழியாகும்.

அபராஜிதன்.