குடியுரிமை சட்ட திருத்தம் – நள்ளிரவில் தாலிபான் பயங்கரவாதம்- மா.சிவக்குமார்.

//
Comment0

நேற்று (டிசம்பர் 9, 2019) இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும் எதிராக 80 பேரும் வாக்களித்திருந்தனர்.

1955-ம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, இந்தியக் குடியுரிமை கோருபவர்கள் முந்தைய 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் இங்கு வசித்திருக்க வேண்டும். இந்த சட்ட திருத்த மசோதா பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இதை 5 ஆண்டுகளாகக் குறைக்கிறது. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கீழ் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையிலிருந்தும் அவர்களுக்கு விலக்கு அளிக்கிறது.

  1. இந்த சட்டத் திருத்தம் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறது, குடியுரிமை கோருவதில் முஸ்லீம்களுக்கு மற்றவர்களுடன் சமத்துவத்தை மறுக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கையிலிருந்து சம பாதுகாப்பை மறுக்கிறது.

இந்திய அரசியல் சட்டப் பிரிவு 14 “சட்டத்தின் முன் சமத்துவம்”

“இந்திய நிலப்பகுதியில் எந்த ஒரு நபருக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தையோ அல்லது சட்டங்களின் கீழ் சம பாதுகாப்பையோ மறுக்கக் கூடாது. மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டத் தடை”

  1. உண்மையிலேயே அண்டை நாடுகளில் ஒடுக்கப்படும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவது அமித் ஷாவின் நோக்கம் இல்லை. ஏனென்றால், பாகிஸ்தானில் ஒடுக்கப்படும் அகமதியா முஸ்லீம்கள், பர்மாவில் இருந்து துரத்தப்படும் ரோகிங்க்யா முஸ்லீம்கள், இலங்கையில் ஈழத் தமிழர்கள் கடந்த 20 ஆண்டுகளில் கொடூரமாக ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் ஆவார்கள்.
  2. இந்தச் சட்ட திருத்தம் பட்டியலிடும் முஸ்லீம் அல்லாத மக்களில் பெரும்பகுதியினர் இந்தியாவுக்குள் வந்து 50 ஆண்டுகள் தாண்டியிருக்க வேண்டும். எனவே, 11 ஆண்டு கால வரம்பை 5 ஆண்டுகளாகக் குறைக்கத் தேவையில்லை.

இவ்வளவு அப்பட்டமான ஜனநாயக விரோத, அரசியல் சட்ட விரோத திருத்தத்தை அமித் ஷா கொண்டு வருவதற்கான காரணம் என்ன?

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தி லட்சக்கணக்கான முஸ்லீம்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்க திட்டமிட்டது பா.ஜ.க. பதிவு செய்ய விண்ணப்பித்த 3.3 கோடி பேரில் 19 லட்சம் பேரை முறையான ஆவணங்கள் இல்லை என காரணம் காட்டி பதிவேட்டில் சேர்க்கவில்லை. இந்த 19 லட்சம் பேரில் முஸ்லீம்கள் மட்டுமின்றி மற்ற மதத்தினரும் இருந்தனர்.

இந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் அமித் ஷா. அதன்படி நாம் ஒவ்வொருவரும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்று நிரூபிப்பதற்கு ஆவணங்களை காட்ட வேண்டும். பெரும் எண்ணிக்கையிலான இந்திய குடிமக்கள் அத்தகைய ஆவணம் கொடுக்க முடியாமல் போகலாம். அப்படி காட்ட முடியாத முஸ்லீம்கள் அல்லாதவர்கள் இந்த சட்ட திருத்தத்தின் மூலம் குடியுரிமை கோரலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. முஸ்லீம்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் முஸ்லீம்களுக்கு குடியுரிமை கோரும் சட்ட உரிமை மறுக்கப்படுவதோடு, அவர்களை அச்சுறுத்தி ஒடுக்குவதற்கான சட்ட அடிப்படையையும் இது உருவாக்குகிறது.

பிறப்பால், மதத்தால் நம்மை நமது சகோதரர்களிடமிருந்து பிளவுபடுத்தி, நம் அனைவரையும் பய பீதியில் தள்ளி, நமது நாட்டை (ஹிட்லரின் ஜெர்மனியைப் போல) உலகத்தின் அவமானமாக மாற்றி வருகிறது பா.ஜ.க.

மா.சிவக்குமார்.