கொரோனா….கார்த்திக்.க

//
Comment0

கொரோனா என்பது நோய் அல்ல, இது வைரஸ் கிருமித் தொற்றினால் ஏற்படும் தாக்குதல். பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தியால் பலருக்கு இது குணமாகிறது. இதை கட்டுப்படுத்த எந்தவித சரியான மருந்தும் எந்த நாடும் இதுவரை பரிந்துரைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையை நம் நாடும், நாமும் எவ்வாறு கையாளப் போகிறோம்.

தமிழக அரசு மார்ச் 31 வரை ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு 35 சதவீத மக்களை பாதுகாக்க மட்டுமே உதவும் பெரும்பான்மையான 65 சதவீத மக்களை காக்க நமது அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்னென்ன.? வீடற்ற மக்களுக்கு, தினக்கூலி உழைப்பாளர்களுக்கு, கடலை நம்பி உயிர் வாழும் மக்களுக்கும் என்னென்ன திட்டங்களை நமது அரசு வகுத்துள்ளது.? இதுதாண்டி அரசின் முக்கியக் கடமையான மருத்துவத்திற்கு எடுத்துள்ள நடவடிக்கை என்ன.?

ஆதரவற்ற மக்களுக்கு உணவு கொடுக்க தடை விதித்துள்ள அரசு, அவர்களை பாதுகாக்க மண்டபங்களையும், பள்ளிகளையும், கல்லூரிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களுக்கு உணவும் பாதுகாப்பும் அரசு உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் அரசு சரியான விகிதத்தில் நிதியும், அத்தியாவசிய உணவுப் பொருளும் சரியாக கொண்டு சேர்க்கவேண்டும். மக்களை வெளியில் அலைக்கழிக்காமல் அரசு தன்னார்வலர்களுடன் இணைந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டும். வரிகளையும், மின் கட்டணம் மற்றும் பொது கட்டணங்களையும் அரசு தளர்த்த வேண்டும்.

பரிசோதனைகள் மிக தாமதமாகத்தான் நடைபெறுகின்றன, பரிசோதனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் இல்லை என அரசு பொது மருத்துவமனைகளில் கூறும் நிலையில் அதை சரி செய்ய அரசு வேகம் காட்ட வேண்டும். தமிழக அரசு அதன் தலைமையில் தனியார் மருத்துவமனைகளை இணைத்து காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளை மருத்துவமனைகளாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்துகளை ஊர்திகளாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

நம் அரசு பேரிடர் காலத்தில் எப்படி செயல்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மக்களிடம் நிவாரணப் பொருட்களை பொருட்களை வாங்கி அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி தாமதமாக மக்களிடம் கொணடு சேர்த்தது. ஓகி புயலின்போது விரைந்து மீனவர்களின் பிணத்தை மீட்டது. சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது மிக விரைவாக அவனை பிணமாக வெளிக்கொணர்ந்தது(?). சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது கைகொடுத்த மக்கள் யார் என்று நமக்குத் தெரியும். இதைத் தாண்டி நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம்மை எவ்வாறு காக்கப் போகிறோம்.

நிச்சயம் நாம் தனித்து இருக்க வேண்டும். யாரையும் தொடாமல், கிருமி நாசினி பயன்படுத்தி மற்றும் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும்.

முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். தேவையற்ற சூழ்நிலையில் வெளியில் செல்ல வேண்டாம். அத்தியாவசிய பொருள் வாங்க மட்டும் மிகுந்த பாதுகாப்போடு ஒரே ஒரு நபர் மட்டும் வெளியே செல்ல வேண்டும். அவர் மட்டுமே தொடர்ந்து வெளியே செல்லட்டும், வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெளியே சென்று வந்தவுடன் கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு வீட்டினுள் செல்லவும். முடிந்தால் பொருட்களை வெந்நீரில் நனைத்து வீட்டினுள் எடுத்துச் செல்லவும். குளிர்ந்த பொருட்களை உண்பதை தவிர்ப்போம். அடிக்கடி வெந்நீர் பருகுவது மிகவும் நல்லது. அரசு நம்மை காக்கும் என்ற அசாதாரண நம்பிக்கையை விட்டுவிட்டு நாம் நம்மை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மற்ற நாடுகளைப் போல் மரணம் தழுவினாலும் பிணங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நம்மிடம் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பது கேள்விக்குறியே. நம்மைவிட பொருளாதாரத்திலும், மருத்துவத்திலும், கட்டமைப்பிலும் பல மடங்கு உயர்ந்து நிற்கும் நாடுகளே குவிந்துகிடக்கும் பிணங்களை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்திய அரசு எந்த மாதிரி செயல்படும் என்று உறுதியாக கூறமுடியாது. பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இல்லாத சூழலில் நாம் அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும்.

இருப்பினும் அரசு தன் கடமையை உணர்ந்து மக்களை காக்க மேலும் பல முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும். முக்கியமாக பணியாளர்கள் மருத்துவ பணியாளர்கள் காவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் அளித்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.

-கார்த்திக்.க