மறைக்கப்படும் கோட்டா தற்கொலைகள்- இளந்திரையன்.

//
Comment0

ஏதோ தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு பொருட்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது போல பா.ஜ.க, பார்ப்பனீய ஆதரவு விசமிகள் கருத்துக்களை பரப்புகின்றனர்.

தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைவு, மாணவர்கள் தரம் சரியில்லை, அதனால்தான் அவர்களால் வெற்றி பெற இயலவில்லை என்பது போன்ற கருத்துக்களையும் இணைத்து பேசுகின்றனர்.

ஆனால் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தொடர்ந்து நடக்கும் மாணவர்களை தற்கொலையினை பற்றி இது போன்ற விவாதங்கள் நடப்பதில்லை. மாறாக மறைக்கப்படுகிறது. கோட்டாவில் NEET, IIT-JEE மற்றும் பிற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதே போல அந்த பயிற்சி பெறும் மாணவர்களில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் அதிகம். அங்கே மிகவும் தரமான என்று இவர்கள் சொல்லக்கூடிய தனியார் பள்ளிகள் பயின்ற மேலடுக்கு மாணவ, மாணவியரும் தற்கொலை செய்துக் கொள்வதால்,அங்கே தற்கொலை நிகழும்போதெல்லாம் இந்தக் பார்ப்பனீய கருத்தியலாளர்கள் தங்களின் வாய்களை எதை கொண்டு அடைத்து கொள்ளுகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2016- ஆம் ஆண்டு 9,478, 2017 ஆம் ஆண்டு 9,905, 2018- ஆம் ஆண்டு 10,156 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்கள்.

இதில் 2018-ஆம் ஆண்டில் முறையே மகராஷ்டிரத்தில் 1448, தமிழ்நாட்டில் 953, மத்திய பிரதேசத்தில் 862 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

2019- ஆம் ஆண்டிலும் மாணவர்களின் தற்கொலைகள் அதிகம்தான். மாணவர்கள் தற்கொலையை தடுக்க வேண்டும் என்று மனிதநேய அக்கறையாளர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தாலும் அரசுகள் கேளா செவிகளை உடையதாக இருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் தற்போதைய எண்ணிக்கைதான் அதிகம் என்று விவரங்கள் சொல்கின்றன. இதை தடுப்பதற்கு அரசு என்னதான் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பார்த்தால் ஒன்றுமில்லை. உங்களுக்கு ஓரு எண் தருகிறோம், உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்தால் அதற்கு அழைத்துப் பேசுங்கள் என்று பெரும்பாலும் அந்தப் பணியை அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடம் அளித்துவிட்டு இவர்கள் நகர்ந்து விடுகின்றனர்.

காரணிகளும், காரணங்களும்.

மாணவர்களின் தற்கொலைகளுக்கு மன அழுத்தம் காரணம் என்று பொதுவாக சொன்னாலும் அழுத்தங்கள் எவ்வாறு ஏற்படுத்தப்படுகின்றன என்பதைத்தான் நாம் முக்கியமாக பார்க்க வேண்டும்.

பணம் படைத்த மேலடுக்கு சமுகங்களிலும் தற்கொலைகள் நிகழ்கிறது. இது கவுரவக் கொலைகளுக்கு சமமானது. தங்களின் குடும்ப கவுரவத்திற்காக மாணவர்களின் விருப்பத்தை மதியாமல் அவர்களை நிர்பந்திப்பது இறுதியில் தற்கொலையில் முடிந்துவிடுகிறது. நடுத்தர குடும்பங்களிலும் ஏறத்தாழ இதையொத்த நிகழ்வுகள் நடக்கின்றன. ஏழை மாணவர்களோ உயர்கல்வியை லட்சியமாக கொண்டு படித்தாலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளினால் தங்களது லட்சியங்களை அடைய முடியாது என்பதை எண்ணி மனம் நொந்து தற்கொலை முடிவை நோக்கி நகர்கிறார்கள். ஒடுக்கப்பட்ட ஏழை மாணவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். வாழ்க்கையே அவர்களுக்கு போராட்டம்தான். ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து வருவதற்குள் அவர்கள் சோர்ந்து போய்விடுகிறார்கள்.

மேலடுக்கு சமுகங்கள் இன்று எல்லோரும் படித்து முன்னேறுவதை விரும்பவில்லை. தங்களுடன் இவர்கள் போட்டி போடுகிறார்கள் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

உயர்கல்வி திறந்த பொருளாதார சந்தைக்காக திறந்துவிடப் பட்டிருக்கிறது.
உயர்கல்வி நிறுவனங்கள், போட்டிதேர்வு பயிற்சி நிறுவனங்கள் வசூலிக்கும் மிகை கட்டணங்களை செலுத்த இயன்றவர்களுக்கு மட்டும்தான் இனி உயர்கல்வி.

மேலடுக்கு பார்ப்பனீயர்கள் மட்டுமே உயர்கல்வி பெறும் வண்ணம் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு அதற்கு சாட்சியாக இருக்கிறது. அரசு பள்ளிகளில் கல்வி பெறுபவர்கள் இனி உயர்கல்வியை பற்றி நினைக்கவே கூடாது என்பதை திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்கள்.

நீட் தேர்வு ஒரு சிறிய நகர்வுதான். புதிய கல்விக் கொள்கை அதன் ஒட்டுமொத்த பேருருவமாக இருக்கிறது.

இன்னும் பலர் தற்கொலை செய்துக் கொண்டாலும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதாவது ஒரு பதிலை சொல்லி கடந்து போய்க் கொண்டே இருப்பார்கள்.

இது அரசு, நிர்வாகம், நீதித்துறை, அதிகார வர்க்கங்கள் இணைந்து சமுகநீதிக்கு எதிராக தொடுத்திருக்கும் போர்.இவற்றை நாம் எளிதில் தீர்த்துவிட முடியாது என்பதை உணர வேண்டும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதான தீர்வுகளை வந்தடைந்தாலும் அதனை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளில் தேக்க நிலையில்தான் இருக்கிறோம்.

நமது வீட்டு பிள்ளைகளின் உயிர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை, மனித இயல்பையும் மீறி கொச்சைப் படுத்தவும் செய்கிறார்கள். தற்கொலைகள் தீர்வல்ல என்பது அந்த குழந்தைகளுக்கும் தெரியத்தான் செய்யும். அந்த பெற்றோர்கள்தான் காரணம் என்று சொல்லி இந்த சமுகமும், இந்த சமுக மனநிலையை உருவாக்கிய அரசும், அதன் கருவிகளும் எளிதில் தப்பித்துக் கொள்கின்றன.

பொறுப்பற்ற அரசுகள் ஆட்சி நடத்துவதால், அவர்களின் தோல்விகளை நியாயப்படுத்த, வீசும் எலும்புகளை கவ்வ பலர் குரைத்துக் கொண்டிருப்பதற்கு பதில் சொல்வதற்கு நமது நேரங்களை செலவிடுவதை காட்டிலும் இந்த அரசுகளை அடிபணிய வைப்பதற்கான செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அனிதா முடிவாக இருப்பாள் என்று நினைத்தோம். ஆனால் அவள் துவக்கமாக இருந்துவிட்டிருக்கிறாள். பழி குழந்தைகள் மீதல்ல, நம் மீதே.

இளந்திரையன்.