சார்லஸ் டார்வினும் , சங்கிகளும்.- ராம்பிரபு.

//
Comment0

சமீப காலங்களில் மாவட்ட கிளை நூலகங்களில் முற்போக்கு மாத ,வார இதழ்களை விட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பத்திரிக்கைகள்தான் அதிகம் காணபடுகிறது.விஜயபாரதம் என்ற பத்திரிக்கையில் டார்வினை பற்றிய ஒரு பதிவு இருந்தது. பிரபுபாதர் என்கிற ஒரு இந்து மத தலைவரின் பேட்டியில்” குற்றமற்ற அறிவை பெற டார்வினை கற்பதை விட பகவத்கீதையே சிறந்த நூல் என கூறுகிறார். மேலும் மனிதனின் சராசரி வாழ்நாள் என்பது 70 ஆண்டுகள்தான் டார்வினோ பல லட்சம் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியை பற்றி அனுமானத்தின் அடிப்படையில் கூறுகிறார் எனவும் இதை ஏற்றுக்கொள்ள அவசியமில்லை எனவும் வாதிடுகிறார். சரி நாம் டார்வினின் பயணம், ஆராய்ச்சி போன்றவற்றையும் ,அவரின் ஆராய்ச்சிக்கு மதவாதிகளிடமிருந்து கிளம்பும் எதிர்ப்பை பற்றியும் சுருக்கமாக காணலாம்.
சார்லஸ் டார்வின் பிரிட்டனில் 1809 பிப்ரவரி 9- ல் பிறந்தார். தந்தை ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர் .டார்வினின் தாத்தா எராமஸ் டார்வின் இயற்கை வரலாற்று ஆய்வாளர். டார்வினுக்கும் சிறு வயது முதலே இயற்கை ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகமாக இருந்தது .அதனால் அவரை மருத்துவராக்கும் அவரது தந்தையின் கனவு நடக்கவில்லைை. கடைசியாக கிறிஸ்துவ பாதிரியாராக கல்லூரியில் சேர்க்கபட்ட டார்வின் அதையும் பாதியிலே கைவிட்டார்.இந்நிலையில் தென் அமெரிக்காவை நில அள ஆய்வு செய்ய பிரிட்டிஷ் அரசு முடிவு செய்த்துள்ளதாகவும் கேப்டன் பீட்ரோய் தலைமையில் பீகிள் கப்பலில் பணிபுரிய இயற்கை மற்றும் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படுவதால் டார்வின் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும் என அவரின் கல்லூரி பேராசிரியர் வாய்ப்பளித்தார் .

தமது 22 வது வயதில் 4 ஆண்டுகள் 9 மாதங்கள் மூன்று உலக பெருங்கடல்களை கடந்து தனது 27வது வயதில் ஒரு முதிர்ந்த ஆய்வாளராக கப்பல் பயணத்தை நிறைவு செய்தார் .டார்வினின் பீகிள் பயணம் 40 ஆயிரம் மைல்கள்:நிலவழிபயணம் 2000மைல்கள். நில அமைப்பியல் தாவரங்கள் உயிரினங்கள் குறித்து அவர் எழுதிய பக்கங்கள்4000: பக்குவப்படுத்தி எடுத்து வரப்பட்ட பொருட்கள் 1500 என அவரின் ஆய்வு நீண்டது.

தனது ஆய்வின் ஒரு பகுதியாக தாத்தா எராமா டார்வின் எழுதிய ZOONOMIA என்ற நூலை படித்தார். தனது தாத்தாவின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை அவர் ஏற்கவில்லை.இந்த உலகம் கடவுளின் படைப்பு திட்டத்தால்தான் உருவானது என கூறும் வில்லியம் பேலீ எழுதிய “இயற்கை சார்ந்த வேத இறையியல் என்ற நூல அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாக இருந்தது.

அடுத்த கட்ட ஆய்வில் 1842 ல் உயிரினங்களின் செயற்கை தேர்வு, இயற்கை தேர்வு என்ற கோட்பாடுகளுக்கு வந்தார்.ஒரு பொதுவான தொன்மையான உயிரினங்களில் இருந்து பல்வேறு தனி உயிரினங்கள் வளர்ச்சியடைந்திருக்க முடியும் என்றும் இது மிக நீண்ட நெடிய காலமாக நிகழ்ந்திருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.இதன் அடிப்படையிலே அறிவியல் புரட்சியாக 1859 ல் ” உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியானது.கப்பல் பயணத்தின் போது தான் சேகரித்த உயிரினங்களின் படிமங்களின் அடிப்படையில் இயற்கை தேர்வு(Natural selection) என்ற கோட்பாட்டை உருவாக்கினார்.உயிரினங்கள் தங்களை சுற்றியுள்ள சூழ்நிலைமைகேற்ப தம்மை தகவமைத்து கொள்கின்றன. இப்படி நீண்ட காலம் நடக்கும் போராட்டங்களில் தகுதியான உயிரினங்கள் வாழ்கின்றன, தகுதியற்றவை சாகின்றன என்றும் இந்த சூழ்நிலைகேற்ற மாற்றங்கள் காரணமாக அவற்றின் சில உறுப்புகள் எச்சமாகின்றன.உதாரணமாக ஆண் உயிரினங்களில் பால்சுரப்பிகள் எச்சமாகிவிட்டத்தை போன்ற பல காரணங்கள் கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் -ன் இந்த அறிவியல் புரட்சியை சிதைக்கும் முயற்சி என்பது டார்வின் போன்ற அறியலாளர்கள் தாங்கள் வாழும் காலத்திலே கிறிஸ்துவ மதவாதிகளால் சந்தித்த ஒன்றுதான்.” இந்த உலகம் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் உட்பட்ட பிரபஞ்சத்தை ஆண்டவன் 6 நாட்களில் படைத்தான் என கூறுகிறது கிறிஸ்தவ மதம். இந்து மதம் உட்பட ஏனைய மதங்கள் அதனதன் படைப்புவாதத்தை முன் வைக்கின்றன.

1920- ல் ஐக்கிய அமெரிக்கா நாட்டிலும் மத அடிப்படைவாதிகள் படைப்புவாதத்திற்கு அறிவியல் சாயம் பூசும் முயற்சியில் இறங்கினர் காரணம் அப்போது அமெரிக்காவின் பொதுப்பள்ளிகளின் பாடத்திட்டத்தில் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு சேர்க்கப்பட்டதுதான். பல மாகாண அரசுகள் தீர்மானம் நிறைவேற்றியதால் டார்வினின் கோட்பாடு நீக்கப்பட்டது.அறிவியலின் முன்னேற்றம் காரணமாக 1960 ஆம் ஆண்டு டார்வினின் கோட்பாடு மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கபட்டது. இப்போது நவீன மத அடிப்படைவாதிகள் படைப்புவாதத்தை படைப்பு அறிவியல்( creation science) என்று மாற்றம் செய்து இதுவும் பாடத்தில் சேர்க்கப்பட்டு மீண்டும் டார்வினை மழுங்கடிக்கும் வேலையை செய்தனர். ஆனால் அறிவியல் ஆய்வாளர்கள் சமூக ஆர்வலர்களின் தொடர் இயக்கம் மற்றும் கருத்து போராட்டங்களின் வாயிலாக அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநில நீதிமன்றம் 1987 ஜூன் 17 ல் மிக சிறப்பான தீர்பை வழங்கியது ” டார்வினின் கோட்பாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட படைப்பு அறிவியல்(creation science) அறிவியல் முன்னேற்றத்திற்கும் சட்டத்திற்கும் எதிரானது எனவும் படைப்பு அறிவியலை பள்ளிகளில் இனி கற்பிக்க கூடாது என தடை விதித்தது .இது டார்வினின் அறிவியல் புரட்சிக்கு கிடைத்த வெற்றியாகும் . சங்கிகளும் இங்கு மத அடிப்படைவாதத்திற்கு அறிவியல் சாயம் பூசும் முயற்சியை தொடர்ந்து முயன்று வருகின்றனர் அதை நேர்மையான அறிவியலின் மூலமாக வீழ்த்த வேண்டும்.

ராம்பிரபு.