சீமானின் தம்பிகளுக்கு….ஓர் எளிய தி.வி.க.தோழரின் மடல்.

//
Comment0

வரலாறு தெரியாத அல்லது வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் சீமான் மற்றும் அவர்களின் தம்பிகளிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனாலும் மணி செந்தில் என்பவர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி குறித்து எழுதியுள்ள கற்பனை கதைக்கு சில உண்மை செய்திகளை பதிலாக சொல்லவேண்டியது அவசியமாகிறது.

மணி செந்தில் என்ற சீமானின் தம்பி,
கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கோபாலபுரத்து தெருக்களில் திமுகவின் தலைவருக்காக காத்து நிற்பதாகவும், செஞ்சோற்றுக் கடனுக்காக திமுகவை ஆதரிப்பதாகவும், அறிவாலயம் வாசலில் வரிசை கட்டி நின்று கொண்டிருப்பதாகவும், இலட்சிய பற்றுகளைத் தவற விட்டுவிட்டு வரலாற்றின் வீதியில் அம்பலப்பட்டு நிற்பதாகவும் இதனை சகிக்க முடியாமல் மிகவும் வேதனையோடு “உங்களுக்கா இந்த நிலை? நீங்களா இப்படி?” என்ற மனம் நொந்து, உண்மை நிறைந்த ஒரு ஆன்மாவிற்கு அருகில் நின்று,கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு ஒரு மடல் எழுதி இருக்கிறார்.

எழுதிய மடலைக் குறித்த செய்தியைக் காலம்கடந்து அறிந்ததால் இப்போது மறுமொழி எழுதுகிறோம்.

இதற்கு முன் ஒருமுறை, கறுப்பர் கூட்டம் எனும் யூ டியூப்(youtube) சேனலுக்கும், இப்போது சீமானின் விக்கிரவாண்டி தொகுதியில் ராஜீவ் கொலையை பற்றி ஆற்றிய உரை பற்றி கருத்து கேட்க வந்த விகடன் செய்தியாளரிடமும் மட்டும் கழகத்தலைவர் கூறிய செய்திகளைப் பார்த்துவிட்டு, படித்துவிட்டு, சில நாட்களாக சீமான் அவர்களுக்கு எதிராக ஆற்றிவரும் எதிர்வினை என்று அங்கலாய்த்திருக்கிறார்.

“சீமான் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்கிறீர்கள். ஆனால் சீமானைப் பற்றிப் பேசி விளம்பரம் தேடி கொள்ளுமளவிற்கு நீங்கள் காணாமல் போய் விட்டீர்கள் அண்ணா..” என்று கழகத்தலைவரைப்பார்த்து வருந்தியிருக்கிறார்.

“நீங்கள் கடைசியாக செய்த போராட்டம் என்ன அண்ணா..?? ”
“காஷ்மீரிகளுக்காக, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, பாஜக அரசின் இந்துத்துவ திணிப்பை எதிர்த்து , தமிழக நலன் சார்ந்த போராட்டங்கள் ஏதாவது நீங்கள் கடைசியாக செய்த போராட்டம் என்ன அண்ணா..??” என்றெல்லாம் அதிரடி வினாக்களை எழுப்பி அதிர வைத்திருக்கிறார்.

கடிதத்தின் நோக்கம் எதுவோ நமக்கு தெரியாது; ஆனால் அவர் சீமானின் உண்மையான(!) தம்பி என்பதை அவருடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் துணிச்சலான பொய்களைக் கொண்டு மெய்ப்பித்துவிட்டார்.

தோழர் மணிவண்ணன் அவர்கள் இல்லத்தில் நடந்த நாம் தமிழர் இயக்கக் கூட்டங்களில் அவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துகொண்டு கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி திட்டங்களைத் தீட்டியதாகவும் சொல்லியிருக்கிறார்.

சீமான் அவர்கள் பொதுக்கூட்டத்தில் ஈழப் பயணத்தைப் பற்றியும், தலைவரை சந்தித்தது பற்றியும் பலமுறை பேசுகிற போதெல்லாம் கைதட்டி மகிழ்ந்து விட்டு இப்போது இப்படி பேசுகிறார் என்கிறார்! ஈழத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சீமான் கழகத்தலைவர் அவர்களிடம் நேரிடையாக விளக்கிய பல தருணங்களில் அவர் உடன் இருந்ததாகவும் வேறு சொல்லி இருக்கிறார்!

அந்தக் கடிதத்தின் இறுதிப் பகுதியில் அவருடைய அண்ணன் சீமானுக்குத் தெரியாமல் இந்த கடிதத்தை எழுதுவதாகவும், தெரிந்தால் மிகுந்த வருத்தம் கொள்வார் என்றும் எச்சரிக்கையாக சொல்லிவைத்திருக்கிறார். இந்த கடிதத்தைப் பற்றி சீமானுக்குத் தெரியாது என்று அவர் பாடுபட்டு நிறுவமுயல்வதை நம்பிக்கொள்கிறோம். அது எப்படியோ போகட்டும்!

அவர்கள் அண்ணன் சீமானிடம் சொல்லிவிட்டு,செய்திகளைத் தெரிந்துகொண்டு இவற்றுக்குப் பதில் சொல்லட்டும்.

உங்கள் நாம் தமிழர் கட்சியில் ஒரு ஒருங்கிணைப்பாளராக இருந்த புதுக்கோட்டை முத்துக்குமார் உங்களது இயக்க கூட்டமொன்றில் பேசிவிட்டு இறங்கிய வழக்கறிஞர் ராஜீவ் காந்தியைத் தாக்கி விட்டார் என்ற செய்தி குறித்து முத்துக்குமாரையும் ராஜீவ் காந்தியையும் நேரில் வைத்துப் பேசித் தீர்க்க வேண்டும் எனவும் அதனை தனது அறையில் அமர்ந்து பேசலாம் என்றும் தோழர் மணிவண்ணன் அவர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு வந்து கழகத்தலைவர் அவர்கள் பேசிய அந்த ஒரு நிகழ்வைத் தவிர, வேறு எந்த உங்களுடைய கூட்டங்களில் திட்டங்களைத் தீட்ட, அமைப்பை முன்னெடுக்க, கழகத்தலைவர் கலந்து கொண்டார் என்பதை உங்கள் சீமானிடம் கேட்டுவிட்டு மற்றொருமுறை கூட ஒரு மடல் எழுதுங்கள்; தவறில்லை.
( தாராபுரத்தில் அப்போது ராஜீவ் காந்தியை நாம் தமிழர்கட்சியினர் தாக்க முயன்றபோது அவரை பாதுகாப்பாக அழைத்து வந்தவர் ஒரு பெரியார் தொண்டர் என்பதும் அந்த தோழர் இப்போதும் எமது இயக்கத்தில் இருக்கிறார் என்பதை வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, வழக்கறிஞர் தஞ்சை நல்லதுரை போன்றவர்கள் அறிவார்கள்.)

மேலும் 2-1-2017 அன்று உடல் நலமற்றிருந்த கலைஞரைப் பார்க்க சென்றதைத் தவிர, வேறு எந்தெந்த நாட்களில் ( 200 ரூபாய் பேட்டா வாங்குவதற்காக என்றாலும் சரியே) கழகத் தலைவர் கொளத்தூர் மணி தி.மு.க தலைவர் வீட்டுக்கு, அறிவாலயத்துக்கு முன்னர் காத்துக் கிடந்தார் என்பதை நீங்களாவது, உங்கள் பிரச்சாரப் பீரங்கி துரை முருகன் போன்ற யாரிடமாவது கேட்டு அடுத்த மடலில் அந்த விவரங்களையும் குறிப்பிட்டு தலைவர் கொளத்தூர் மணியைத் திணறடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

ஈழப் பயணம் முடிந்துவிட்டு கொழும்பு திரும்பும்போது அவருக்கு செய்யப்பட்ட பயண ஏற்பாட்டைப் பற்றி பலரிடம் பேசியதைக் குறித்து கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சீமானை கண்டித்துள்ளார்.

தலைவர் பிரபாகரன் அவர்களுடைய சந்திப்பு குறித்து, “தலைவர் பிரபாகரன் இறந்தது உறுதியா?” என்று ஒருமுறை அவரிடம் கழகத்தலைவர் கேட்டதற்கு அவர் பதறிப்போய் நிற்க, “பதற வேண்டாம், அவருடனான சந்திப்பு பற்றி நீங்கள் அடித்துவிடும் கதைகளை வைத்து இவ்வாறு கேட்டேன்” என்ற அளவில் மட்டுமே சிரித்தபடி அவரது ஈழப் பயணம் பற்றி கழகத்தலைவர் அவர்கள் சீமானுடன் பேசியிருக்கிறார்.வேறு எப்போது, எங்கே அவரது பயணம் பற்றி அவரிடம் பேசினார் அல்லது பேசியதைக் கேட்டார் என்பதையும் கூறிவிடுங்கள். உங்களுக்கும், உங்கள் அண்ணனுக்கும் தேவையெனில் தலைவர் பிரபாகரனுடன் நடந்த சந்திப்பின்போது உடன் இருந்தவர்கள் சிலர் இன்னும் உயிரோடு உள்ளனர்; அவர்களிடம் காணொளி பதிந்துகூட வெளியிடமுடியும். எதற்கும் உங்கள் அண்ணன் சீமானிடம் கேட்டுவிட்டு இன்னொரு மடல் எழுதுங்கள்.

இனம் அழிந்த போது காங்கிரசை வீழ்த்த அந்த காலகட்டத்தில் ஈழம் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்த ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்ற முடிவினை நீங்கள் தானே எடுத்தீர்கள்? என்று கழகத்தலைவரைப் பார்த்துக் கேட்கிறார். 2009 பிப்ரவரியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட தலைவர் அவர்கள் மே மாதம் ஐந்தாம் தேதிதான் சிறையிலிருந்து வெளிவந்தார் என்பது பாவம் அவருக்குத் தெரியவில்லை; அதனால் அவரும் அண்ணன் சீமானைப் போலவே அடித்து விடுகிறார்.

தலைவரும் தோழர் கோவை இராமகிருஷ்ணன் அவர்களும் பிரிந்தபோது ஏற்பட்ட சர்ச்சையில் தலைவருக்கு அரணாக இருந்து தெருத்தெருவாக அலைந்து தொண்டை வலிக்க வலிக்கப் பேசி, வழக்கு செலவுக்காக எல்லோரிடமும் வசூலித்து வேறு சீமான் தலைவரிடம் கொடுத்தாராம்.

அந்த பிரிவு ஏற்பட்டது 2012ஆம் ஆண்டின் பிற்பாதியில். அது, திராவிடப் பன்றிகளை வீழ்த்திவிட்டு, முதல் தேர்தலில் 200 சட்டமன்ற இடங்களில் வென்று அமைச்சரவை அமைத்து “ஈழ விடுதலைத் தீர்மானம்” இயற்றியதால் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, அதன்பின்னர் நடக்கும் இடைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று, மீண்டும் முதல்வராக வந்து தமிழ்த் தேசியத்தை ( திராவிடத்தைப் போல ஆளுக்கொரு விளக்கத்தைத் தமிழ்த் தேசியவாதிகள் – புதிய கூட்டாளி தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட – யாரும் கொடுக்கமாட்டார்கள் என்று ‘சத்தியமாக’ நம்புகிறோம்) வென்றெடுக்கத் தீவிரமாகத் தமிழ்த்தேசியத் தொண்டு ஆற்றிய நேரம். அப்போது கூட, பாவம், அடுத்து முதலமைச்சராகவிருந்த “மாண்புமிகு” சீமான் கழகத் தலைவருக்காக வந்து அரணாக நின்று வசூலித்துக் கொடுத்திருக்கிறார். வழக்குக்கும் நிதிவசூலித்து கொடுத்திருக்கிறாராம். நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் அண்ணன் சீமானின் தம்பி மணி செந்தில்.

ஒரு காலத்தில் கழகத்தலைவர் அவர்களை கதாநாயகனாகப் பார்த்த, தேவதூதனாக நினைத்துத் தொழுத தோழர் மணி செந்தில், இப்போது கதாநாயகனாகவும், தேவதூதனாகவும் எண்ணி தொழுதுகொண்டிருக்கும் அவரது அண்ணன் சீமானிடம் கேட்டு அய்யம் தெளிந்து, அவரது ஒப்புதலோடு எழுதும் அடுத்த மடலை எதிர்நோக்கியிருக்கிறோம்.

தலைவர் வாய் திறந்து பேசுவதற்கும், எழுதுவதற்கும் ஆயிரம் இருக்கும். ICUவில் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் திணறிக் கொண்டிருக்கும் நோயாளியான எதிரியின் மீது என்னதான் ஆத்திரமும், கோபமும் இருந்தாலும், இயற்கை மரணம் அடையவிருக்கும் நிலையில் உள்ள ஒருவரை யாரும் தாக்கவோ, அழிக்கவோ முயலமாட்டார்கள். அந்த சிந்தனையோடு கழகத்தலைவர் பெருந்தன்மையாக இருந்துவிட்டது தவறுதான். இனி வாய்ப்புகள் தானாக வரும்போல்தான் தெரிகிறது. அப்போதும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவ்வாறு இருந்துவிட மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்.

இப்படிக்கு

உங்கள் தலைவர்,
அடுத்த (?) முதல்வர் சீமானை முன்பிருந்தே அறிந்த,
ஓர் எளிய தி.வி.க.தோழர்.