திருவாரூர் மாவட்டத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகள் – அஸ்வினி கலைச்செல்வன்.

//
Comment0

சாதிய அமைப்பு
சாதி என்பது இந்திய சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகாக வரையறுக்கப்பட்டு மக்கள் மன பிரிவினையைத் தோற்றுவிக்கும் கொடூர அமைப்பாக உள்ளது. இது பிறப்பின் அடிப்படையில் தொழில் வாயிலாக வரையறுக்கப்பட்ட பிரிவினை கூறு. இது இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை
உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. 
ஒரு நபரின் சாதியானது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு நடைமுறையில் இருப்பதால் இதிலிருந்து மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ளும் வகையற்று சிக்கிக் கொண்டுள்ளனர். இது தோற்றுவிக்குப்பட்ட காலம் தொடங்கி அதன் வழி அரசுகளும் சுயநலமாக பாதுகாத்து வருகிறது.

ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, பாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறைஆகும். 

முன்பு தொழில் வாரியான வகுப்புகள் இருந்தன,தொழில் மாறலாம் தீண்டாமையில்லை,பாகுபாடு இல்லை. பின் தொழிலை வாரிசு ரீதியாக செய்ய தொடங்கினர்.பின் தொழிலின் அடிப்படையில் சாதி தோன்றி,அதன் தொடர்ச்சியாக, தீண்டாமை, உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. மனிதன் என்ற உயர்நிலை, மனிதன் தரம் தாழ்ந்த உயிரினம் ஆனான். ஆரியர்களின் தெய்வம் படைப்பு போன்றவற்றை எதிர்த்து விலகியவர்கள் தாழ்த்தப்பட்டார்கள் என்றழைக்கப்பட்டனர்.

பக்தவச்சல பாரதியின் மானிடவியல் கோட்பாடுகள் .

மரபுக் கோட்பாடு (traditional theory)

தொழிற் கோட்பாடு (occupational theory)

சமயக் கோட்பாடு (religious theory)

அரசியற் கோட்பாடு (political theory)

இனக் கோட்பாடு (racial theory)

படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)

தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது.அவை

பட்டியல் சாதிகள் (76)

பட்டியல் பழங்குடியினர் (36)

பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136)

பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7)

மிகவும் பிற்பட்ட சாதிகள் (41)

சீர்மரபினர் (68)

முற்பட்ட சாதிகள் (79)

என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும். முற்பட்ட வகுப்பினர் தவிர்த்து, ஒவ்வொரு வகுப்பினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகிதத்திலான தனி இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.இதில் தற்போதைய திருத்தங்கள் தனி.

திருவாரூர் மாவட்டம் இந்தியமாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவாரூர் ஆகும். திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 

வலங்கைமான் வட்டத்தையும்,  நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 1 ஜனவரி 1997இல் நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும்.
ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தின் பெரும்பகுதி வேளாண்தொழிலை சார்ந்தே செயல்படுகிறது. வலுவான சாதிய கட்டமைப்பை உடைய மாவட்டமாகவும், மேலோங்கிய சாதிய ஒடுக்குமுறைகள் நிறைந்த மாவட்டமாகவும் ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டம் உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் சாதிய வன்கொடுமை

சம்பவம் 1:

மே 13 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள திருவண்டுதுறை
கிராமத்தைச் சார்ந்த கொல்லிமலை என்பவருக்கு சாதிய வன்கொடுமை இழைக்கப்பட்டது.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாவில் நடந்த சச்சரவை மனதில் வைத்து அதற்கு பழிதீர்க்கும் நோக்கத்தோடு தலித் சமூகத்தைச் சேர்ந்த கொல்லிமலை என்பவரை சாதிவெறியர்கள் கடுமையாக தாக்கியதோடு. அவரது வாயில் சிறுநீர், மலம் ஆகியவற்றை திணித்து கொடுமை செய்துள்ளனர். கேட்பவரை மனம் நடுங்கச் செய்யும் இந்த வன்கொடுமை தொடர்பாக ஒரு சிலரை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது. மற்றவர்களை இதுவரை கைது செய்யாமல் மெத்தனமாக உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் எனென்ன விதமான தீண்டாமை கொடுமைகள் எத்தனை ஊர்களில் நிலவுகின்றன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் SASY என்ற தொண்டு நிறுவனம் விவரங்களைக் கேட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டிலேயே தீண்டாமைக் கொடுமைகள் நிலவும் கிராமங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது திருவாரூர் மாவட்டம் தான் என தெரியவந்துள்ளது.

சம்பவம் 2:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கீழமருதூரில் தலித் வகுப்பைச் சேர்ந்த அமிர்தவல்லி என்ற பெண்ணும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரும் காதலித்து உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களது திருமணத்திற்கு பழனியப்பனின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவர்கள் திருப்பூர் சென்று வசித்துவந்தனர். இவர்களுக்கு குழந்தை பிறந்ததும் மீண்டும் அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று இந்தத் தம்பதி சொந்த ஊருக்கு வந்தபோது, அவர்களை வழிமறித்த பழனியப்பனின் சகோதரர்களும் அவர்களது நண்பர்களும் பழனியப்பன் தம்பதியையும் குழந்தையையும் வயல்வெளியில் உள்ள சேற்றில் அழுத்திக் கொலைசெய்தனர். சடலங்களும் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டன.இந்த வழக்கில் பழனியப்பனின் சகோதரர்கள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியம், அவர்களது நண்பர்கள் மகேந்திரன், துரைராஜ் ஆகிய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டது. குற்றவியல் சட்டம் தவிர, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் இதில் வழக்குத் தொடரப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் 3:

கடந்த அக் – 2 அன்று தஞ்சை சாலியமங்கலம் பகுதியில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (20) கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலைசெய்த குற்றவாளிகளான பரோட்டா மாஸ்டர் இராஜா, (28), (வெள்ளாளர்), குமார் (24), (ஆசாரி), ஆகியோரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. குற்றவாளிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.சாலியமங்கலம் பகுதியில் இதுவரை 15-20க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் ஆதிக்கச் சாதியினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் என்கிற செய்தியைக் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது இதுவரை 4 கொலைகள் நடந்துள்ளதாகவும், அவற்றில் இஸ்லாமியர், அகமுடையர், தலித் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அவற்றிலும் எதனால் நடந்தது? என்பதை முழுமையாக உறுதிசெய்ய முடியவில்லை. 

சாதியத்திற்குள் இருக்கும் ஒருவர் தலித்துகளிலிருந்து தனது வாழ்க்கைத் துணையை தேர்தெடுப்பதையே சாதி மறுப்பு திருமணம் என சட்ட ரீதியாக வரையறுத்துள்ளது அரசாங்கம். அவ்வாறு மணம் புரிபவர்களை ஊக்கப்படுத்தவும், பாதுகாக்கவும், தேவையான உதவிகளை செய்வதற்கும் ஆற்றல் இல்லாமல் தவித்து நிற்கிறது அரசு நிர்வாகம். இதற்கு காரணம்,ஆட்சியாளர்களிலும், காவல் மற்றும் நீதித்துறையிலும் இன்னும் பிற அரசு இயந்திரங்களிலும் உள்ளவர்களிடம் ஓங்கியிருக்கும் சாதிய உணர்வுதான்.

தன் சாதியின் தூய ரத்தத்தில் இன்னொரு சாதியின் இரத்தம் கலப்பதை தீட்டாக கருதாத ஒரு சமுதாயத்தில் மட்டுமே ஆணவக் கொலைகளை தடுக்க முடியும். சாதிய கொடுமைகளை அல்லது படிநிலையை வெறும் ரத்தக்கலப்பினால் மட்டுமே குலைத்துவிட முடியாது, ஆனால் ரத்தக்கலப்பு நிகழாமலும் மாற்றிவிட முடியாது. ஆனால் இதற்கான முயற்சிகள் இரத்த வெள்ளத்தில் மீண்டும் மூழ்கடிக்கப்படுகிறது. ஆனால் ஆதிக்கத்தை திணிக்கும் சாதியினரின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பும், கல்வியும் நெடுங்கனவாய் இருந்தாலும் அதுகுறித்தெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை.

கீழ் வெண்மணி படுகொலைகளும் ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டங்களில் அரங்கேறிய சாதிய வன்கொடுமைகள் தான்.

பிரபல பத்திரிகையாளர் அருந்ததி ராய் இந்திய இழிவு என்னும் கட்டுரையில் “தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளின்படி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

“என்ன தோழரே! இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்?” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.

இது வருந்தத்தக்க உண்மை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

“யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு!” என்றார் தோழர் அருந்ததி ராய் .நிச்சயமாக ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்ட சாதிய கொடுமைகள் உங்களையும் தொந்தரவு செய்திருக்கும்..
உயர் வாழ்வதை உணர்த்தவாது பேசி கொண்டிருப்போம். சிறு மாற்றமும் பெரும்நம்பிக்கையுமாய்…

அஸ்வினி கலைச்செல்வன்