பாஜகவை வாக்குச்சீட்டில் தோற்கடிக்க முடியுமா ?-க.இரா.தமிழரசன்.

//
Comment0

பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 124 இடங்களைக் கைப்பற்றியுள்ளது ராஷ்ட்ரீய ஜனதாதளக் கூட்டணி 111 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய செய்தி வெறும் 500 முதல் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 70 இடங்களில் பாஜக கூட்டணி கட்சி பெற்றுள்ளது. மிகச்சரியான கூட்டணி வியூகம் அமைக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் அந்த 70 இடங்களை ஆர்ஜேடி கூட்டணி பெற்றிருக்கும். இதன் விளைவாக பாஜக கூட்டணியை வீழ்த்தியிருக்க முடியும்.

ஆனால் கூட்டணி வியூகத்தால் மட்டுமே பாஜகவை எதிர்காலத்தில் வீழ்த்த முடியுமா என்பது தான் முக்கியம்.

பாஜகவின் தந்திரம்

என்னதான் முதல்வர் வேட்பாளராக நிதீஷ்குமார் நிறுத்தப்பட்டாலும், நிதீஷ் குமாரை தனக்குப் பின்னால் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த லோக் ஜனசக்தி கூட்டணியிலிருந்து விலகி நிதிஷ்குமாருக்கு எதிராக வேட்பாளராக நிறுத்தியது, பாஜக நினைத்திருந்தால் லோக் ஜனசக்தியைத் தங்கள் கூட்டணியில் வைத்திருக்க முடியும். ஆனால் நிதிஷ் குமாரை வீழ்த்துவதற்காக மிகச் சரியாக சிராக் பஸ்வானை பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவாக ஐக்கிய ஜனதா தளத்தைப் பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னுக்கு வந்துள்ளது .

2015இல் 53 இடங்களை பிடித்து இருந்த பாஜக 74 இடங்களையும் 71 இடங்களை பிடித்து இருந்த ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. தற்போதைக்கு நிதிஷ்குமார் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டாலும் இன்னும் சில மாதங்களில் ஐக்கிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு வருவார்கள். பிறகு பாஜக ஆட்சி அமைக்கும்.

இப்படித்தான் எல்லா மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது பாஜக. அதே வேளையைத்தான் தமிழகத்திலும் பாஜக செய்து வருகிறது, அதிமுக கூட்டணியில் தான் இருந்தாலும் அதிமுக வீழ்த்திவிட்டு அந்த இடத்திற்கு, தான் வரவேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதுதான் முக்கியமானது. வெறும் கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி பாஜகவை வீழ்த்திவிட முடியுமா என்பது முதன்மையானது.

வெறும் நாடாளுமன்றத்தை சட்டமன்றத்தை பிடிக்க வேண்டும் என்பதல்ல பாஜகவின் அரசியல். பாஜகவின் அரசியல் என்பது ஆர். எஸ்.எஸ்.இன் அரசியல் . ஆர்எஸ்எஸின் இந்துத்துவ கனவை நிறைவேற்ற இளைஞரணி மாணவரணி இருப்பது போல் இது நாடாளுமன்ற அணி அவ்வளவு தான். நாம் பாஜகவை வீழ்த்துவது என்பது ஆர்எஸ்எஸின் நாடாளுமன்ற அணியை வீழ்த்துவது அவ்வளவுதான். அந்த அணியின் தோல்வி மட்டுமே ஆர்எஸ்எஸின் தோல்வியாக இருந்துவிட முடியாது.மற்ற அணிகள் அதன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன.
எனவே நாம் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் தேர்தலில் மட்டுமே வீழ்த்திவிட முடியாது, அதைத் தாங்கிப் பிடிக்க அதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ்-ம் அதன் அணிகளும் உள்ளன, அந்த அணிகளையும் சேர்த்து வீழ்த்துவதன் மூலம் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும்.

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் ஆர். எஸ்.எஸ்.க்கு எதிரான கொள்கையை முன் வைப்பதில்லை மாறாக தங்களையும் இந்துக்களின் காவலர்கள் என்று தான் காட்டிக் கொள்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.ஐ பொருத்தவரை பா.ஜ.க.தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதில்லை. தங்களது இந்துஸ்தான் கனவை நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுங்கள் அல்லது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருங்கள் என்பதுதான். அதேநேரம் தேர்தல் களத்தில் பாஜகவை வீழ்த்திவிட ஆர்.எஸ்.எஸ்.ஒருபோதும் அனுமதிக்காது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள்/ மடங்கள்/கோவில் குழுக்கள் போன்றவை இந்தியா முழுக்க வேரூன்றி நிற்கின்றன, அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்கிற நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அகன்ற இந்துஸ்தான் என்ற தத்துவத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே பாஜகவை தேர்தல் காலத்தில் மட்டும் வீழ்த்தவேண்டும் என்று சிறுமைப்பட்டு நினைத்துவிடக்கூடாது, தத்துவார்த்த தளத்தில் நாம் மோத வேண்டும்.

இந்துத்துவம் எப்படி சமூக நீதிக்கு எதிரானது,
இந்துத்துவம் எப்படி சம நீதிக்கு எதிரானது,
இந்துத்துவம் எப்படி பாலின நீதிக்கு எதிரானது,
இந்துத்துவம் எப்படி மத சார்பற்ற தன்மைக்கு எதிரானது,
இந்துத்துவம் எப்படி தேசிய இனங்களின் உரிமைக்கு எதிரானது,
இந்துத்துவம் எப்படி வர்க்க ஒடுக்குமுறைக்கு ஆதரவானது என்பதை நாம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.

இப்படியான தத்துவார்த்தப் போராட்டத்தை எல்லாத் தளங்களிலும் குறிப்பாக வெகுமக்கள் அரங்கில் நடத்த வேண்டும். அதன் மூலமாக மட்டுமே நாம் ஆர் எஸ் எஸ் ஐ அம்பலப்படுத்த முடியும்.ஆர் எஸ் எஸ் ஐ அம்பலப்படுத்துவதன் மூலம் பாஜகவை வீழ்த்த முடியும்.

க.இரா.தமிழரசன்.