நிசான் தொழிலாளர்களின் ஒருநாள் பட்டினி போராட்டம்…தனி ஒருவன்.

//
Comment0

25.09.2020.
சென்னை ஒரகடத்தில் இயங்கி வரும் பிரபல ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு எதிரான பல தொழிலாளர் விரோத செயல்களை நிர்வாகம் தொழிற்சங்கத்தின் மீது நடத்தி வருகிறது. அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும் நிர்வாகமும் சேர்ந்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் நடத்திய தொழிற்சங்க தேர்தலில் பெரும்பான்மையான தொழிலாளர்களின் பங்களிப்போடு வெற்றி பெற்று தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையான, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை சிறிதும் மதிக்காமல் தன்னிச்சையாக தொழிலாளர் விரோத போக்கை நிர்வாகம் கடைபிடித்து வருகின்றது.

கடந்த சில மாதங்களாக தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது, விருப்பமின்றி பதவி உயர்வு (technician to Team Leader) கொடுப்பது, வேறு மாநிலங்களுக்கு பணி மாற்றம் செய்வதாக மிரட்டுவது, Deputation என்று தொழிலாளர்களை விருப்பமின்றி பணிமாற்றம் செய்வது, இரண்டு வருடங்களாக ஊதிய உயர்வு தராமல் இருப்பது, ஆயுதபூஜை போனஸ் போன்ற அனைத்து சலுகைகளையும் நிறுத்தி தொழிலாளர்கள் மீது கடும் விரோத செயல்களை நிர்வாகம் நடத்தி வருகின்றது

இதை கண்டித்து தொழிற்சங்கம் பலமுறை நீதிமன்றத்தையும், சமரச அதிகாரிகளையும் நாடிய போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாத நேரத்தில், தற்போது அந்த தொழிற்சங்கத்தை சார்ந்த 3600 தொழிலாளர்களும் இன்று ஒருநாள் (24.09.2020) அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தொழிலாளர்கள் யாரும் உணவு, தேநீர் எதுவும் அருந்தாமல் இன்று உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கும் அந்த நிர்வாகம் மனிதாபிமானம் கூட இல்லாமல் இதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு தொழிற்சங்கமே பொறுப்பு என்றும் அறிவிப்பு பலகையில் ஒட்டி உள்ளது…

இவ்வளவு அதிகாரத்தை இந்த நிர்வாகத்திற்கு வழங்கியது யார்..? இத்தனை தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு யார் பொறுப்பு..? தொழிலாளர்களுக்காக தொழிலாளர் நலச் சட்டங்கள் இருக்கும் பொழுதே இப்படி பல இன்னல்களை தொழிலாளர்கள் அடைந்து வருகின்றனர்.

ஆளும் மத்திய அரசு தற்போது பல சட்டதிருத்தங்களையும் கொண்டுவந்துள்ளது. அதில் தொழிலாளர் சட்ட திருத்தம் ஒன்று. இந்திய ஜனநாயக நாடு என்று கூறிக் கொள்வது பெயரளவில் மட்டுமே தவிர ஒரு பாசிச ஆட்சி மட்டுமே இங்கு நடந்து வருகிறது. மக்களுக்கும், விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எந்த ஒரு பயனும் இல்லாத சட்டங்களையே இந்த ஆளும் பாசிச அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்களுக்கான சட்டங்களை விட கார்ப்ரேட் முதலாளிகளுக்கான சட்டங்களே இங்கு அதிகம் நிறைவேற்றப்படுகின்றன. இதை கண்டித்து நாம் இப்போதும் போராட்டக் களத்தில் இறங்கவில்லை என்றால் நாம் போராடிப் பெற்ற பல உரிமைகளை இழக்க வேண்டியிருக்கும்.

இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் விரோத செயல்களை சட்டத்தின் மூலம் நிறுத்த நினைப்பது தற்போதைய சூழ்நிலையில் தெரிந்தே பாழுங்கிணற்றில் விழுவதற்கு சமம். எனவே நம்முள் இருக்கும் கொஞ்சநஞ்ச போராட்ட குணங்களையும் ஒன்றுதிரட்டி அனைத்து தொழிலாளர்களும் ஒற்றுமையாக சேர்ந்து போராடி, புரட்சிகர சூழலை உருவாக்கினால் மட்டுமே நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்…..
போராட்டங்களும் புரட்சிகளும் மட்டுமே நம் உரிமை விடுதலைக்கான ஒரே தீர்வாக அமையும்….

இந்த ஆளும் கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும்
இந்த ஆளும் கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் போராட்டம் வெற்றி அடையவும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

தனி ஒருவன்…