பற்றி எரியும் பொலிவியா – அபராஜிதன்.

//
Comment0

தென்னமெரிக்க கண்டத்தில் இருக்கும் பொலிவியா ஓரு மறக்கப்பட முடியாத நாடு.ஆம் இங்கேதான் புரட்சியாளர் சே குவேரா கொல்லப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் ஆதிக்கத்தினுள் நெடுங்காலமாக இருந்து வரும் இந்த தென்னமெரிக்க நாடுகள் தாங்கள் சுதந்திரமாக வாழ்வது ,இயங்குவதென்பது இன்றளவும் பெரும் போராட்டமாகத்தான் இருந்து வருகிறது. முன்பு ஸ்பானியர்களின் பிடியில் இருந்தவர்கள் பின்னர் அமெரிக்காவின் பிடியில் சிக்குண்டு கிடக்கின்றனர்.

சே குவேராவை பொலிவியப்படைகள் சிறைபிடித்த பிறகு அவரை விடுவிக்க உலகெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் சி.ஐ.ஏ வின் நேரடி உத்தரவின் பேரில் சே கொல்லப்பட்டார்.அப்படி அமெரிக்காவின் பரம அடிமையாக இருந்து வந்த நாடுதான் பொலிவியா. அமெரிக்காவின் உத்தரவால் தண்ணீரை கூட பண்டமாக மாற்றிய பொலிவிய அடிமை அரசிற்கு எதிராக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது இந்நாட்டில்.முடிவாக பெக்டெல் நிறுவனம் விரட்டியடிக்கப்பட்டது.அதனுடைய நீட்சியாக அமெரிக்க அடிவருடிகளான இந்த பொலிவிய ஆளும் வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் தூக்கியெறியும்படி செய்தவர்தான் ஈவா மொரலஸ்.

பொலிவிய ஆட்சி அதிகாரம் பெரும்பாலும் ஐரோப்பிய- ஸ்பானிய வழியில் வந்தவர்களாலேயே கட்டுபடுத்தப்பட்டு வந்தது. பொலிவியாவின் பூர்விக பழங்குடி மக்களின் நலன்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. அதனை முறியடித்து பொலிவிய பழங்குடி மக்களின் பிரதிநிதியாக முதன் முதலில் ஆட்சி பொறுப்புக்கு வந்தவர்தான் ஈவா மொரலஸ்.அய்மாரா என்னும் பழங்குடியினத்தை சார்ந்த ஈவா மொரலஸ் ஓரு கோகோ விவசாயியுமாவார்.

2006 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவர் இன்றளவும் தன்னுடைய ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்தார். புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது திடீரென்று வாக்கு எண்ணிக்கை 23 மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. அதுவரை 7.2 சதம் அளவிற்கு முன்னிலை பெற்று வந்த மொரலஸ் பின்னர் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த போது 10 சதத்திற்கு மேல் முன்னிலை பெற்று வெற்றி பெற்று விட்டார் என்று அறிவிப்பு வந்தது. இது மொரலஸ் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்துவிட்டார் என்று செய்தியை பரவச்செய்தது. இதை ஒட்டி இவருக்கு எதிர்போட்டியாளரான கார்லோஸ் மெசா ” இந்த தேர்தல் முடிவுகளை ஒப்புக்கொள்ள மாட்டேன் என அறிவித்தார். மெசாவின் ஆதரவாளர்களும் , மதபிரச்சாரகரான கமாச்சோவின் ஆதரவாளர்களும் நாட்டின் பல பகுதிகளில் கலவரத்தில் ஈடுபடலாயினர்.மொரலசின் கட்சியை சேர்ந்த பழங்குடியின தலைவர்கள் தாக்கப்பட்டனர்.இதற்கிடையே ஈவா மொரலஸ் OAS (organisation of american) states- என்ற அமைப்பிடம் தேர்தல் முறைகேடுகளை பற்றி விசாரணை செய்யுமாறு அழைப்பு விடுத்தார். OAS தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதற்கு சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது என்பது போன்ற ஓருவிதமான அறிக்கையை வெளியிட்டது எந்த வித ஆதாரத்தையும் காட்டாமலே. ( வாக்கு எண்ணிக்கை இடைவேளைக்கு பிறகு வாக்குகள் எண்ணிய பகுதிகள் மொரலசின் கட்சி மிகுந்த செல்வாக்கு பெற்ற பகுதி.அதனாலேயே முன்னிலை பெற முடிந்தது ,முறைகேடுகளால் அல்ல என்பது பின்னர் நிருபணம் ஆனது) இருப்பினும் அவர்களின் சந்தேகத்தை ஓட்டி மொரலசும் பொலிவியாவில் தேர்தலை மீண்டும் நடத்துவதாக அறிவித்தார்.

மொரலசுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் அதிகமாகின.திடீரென்று பொலிவிய காவல்துறை எதிர்போராட்டக்கார ர்களுடன் இணைந்துக்கொண்டு ஈவா மொரலசுக்கு கைது ஆணை பிறப்பித்தது. விலைபோன காவல்துறையுடன் பொலிவிய இராணுவமும் இணைந்து நாட்டில் அமைதி திரும்ப மொரலஸ் பதவி விலக வேண்டும் என்று நிர்பந்தித்தது.

அமெரிக்க செனட்டரான பெர்னி சாண்டர்ஸ் ,பொலிவியாவில் ஈவா மொரலஸ் ராணுவ சதியின் மூலமாக தூக்கியெறியப்பட்டிருக்கிறார் என்று பேசும் அளவிற்கு இந்த துரோகம் பகிரங்கமாக நடந்தேறியது.பதவி விலகிய ஈவா மொரலஸ் உயிருக்கு ஆபத்து இருந்ததால் மெக்சிகோ நாட்டிடம் அரசியல் தஞ்சம் புகுந்தார்.மெக்சிகோவும் அவருக்கு அடைக்கலம் வழங்கியது.

ஈவா மொரலஸ் மெக்சிகோ சென்றவுடன் ஒரு சிறு கட்சியின் உறுப்பினரான ஜீனைன் அனெஸ் என்பவர் அமைச்சரவையின் ஒப்புதலை பெறாமலே முறைகேடான முறையில் தன்னைத்தானே அதிபராக அறிவித்துக்கொண்டார். அவருக்கு பொலிவிய இராணுவமும் ,காவல்துறையும் ,அமெரிக்காவும்,ஐரோப்பிய ஒன்றியமும் உடனடியாக தங்களது ஆதரவை தெரிவித்தன.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ” அடுத்தது வெனிசுலாவும் ,கியூபாவும்தான்” என்றார்.மொரலசின் வீழ்ச்சியை திட்டமிட்டவர்கள் உடனடியாக வினை புரிவது கண்கூடாக தெரிந்தது.

பொலிவியாவில் சோசலிச ஆட்சி தூக்கியெறியப்பட்டு ஜனநாயக ஆட்சி திரும்பியதாக அறிவிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சியை கைப்பற்றியவர்களால். ஈவா மொரலஸ் மெக்சிகோவில் இருந்தபடி ” என்னை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு நடந்த சதியின் பின்னணியில் அமெரிக்காவும் அதன் கூலிப்படையான OAS அமைப்பும் இருந்திருக்கிறது என்றார். முறையற்ற முறையில் ஆட்சியை கைப்பற்றிய தற்காலிக அதிபர் அறிவித்த அமைச்சகத்தில் ஒருவர் கூட பழங்குடியினத்தவராக இல்லை.இந்த செயலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பவே 12 நபர் கொண்ட அமைச்சரவையில் ஒரே ஒரு பழங்குடியினத்தவர் மட்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

தற்காலிக அதிபராக அனெஸ் பொறுப்பேற்றவுடன் தன் அதிகார வரம்பிற்கு மீறி அவசரமாக செய்த காரியங்கள் இராணுவத்திற்கும் , காவல்துறைக்கும் அதிக அதிகாரங்களை வழங்கியது, வெனிசுலா ,கியூபாவுடனான உறவுகளை முறித்துக்கொண்டதாக அறிவித்தது, 11 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாமல் இருந்த அமெரிக்காவிற்கான தூதரை நியமித்தது ,கியூப மருத்துவர்களையும் , வெனிசுலா நாட்டினரையும் வெளியேற்றியது ஆகும். இவையனைத்தும் ஈவா மொரலசை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மிகப்பெரிய சதி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்கிறது.

பொலிவியாவின் நீண்ட வரலாற்றில் ஐரோப்பிய- ஸபானிய ஆட்சியாளர்களால் பொலிவிய பழங்குடி மக்கள் அனுபவித்த வேதனைகளும் சோதனைகளும் சொல்லி மாளாது. தொடர் போராட்டங்கள் ,தியாகங்கள் மூலமாகத்தான் ஈவா போன்றவர்கள் ஆட்சிக்கு வரமுடிந்தது.ஈவா வந்த பின் பழங்குடி மக்களுக்கான கல்வி, சுகாதாரம் ,கட்டமைப்பு போன்றவற்றை மேம்படுத்தினார்.மேலும் பொலிவியாவையும் முன்னேற்றப்பாதையில் அழைத்து சென்றார். இப்போது நடந்த இந்த சதி பொலிவிய பழங்குடியின மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இது பழங்குடியின மக்களுக்கும் , கோகோ தோட்ட விவசாயிகளுக்கும் தாங்கள் நெடுங்காலம் போராடி பெற்ற உரிமைகள் அநீதியான முறையில் பறிக்கப்படுவதை உணர்த்தியது.ஈவா மொரலசுக்கு எதிரான சதி தங்களின் அரசியல் எதிர்காலத்தை ஐரோப்பிய குடியேற்றவாதிகள் நாசமாக்கப்போவதற்கான முன்னறிவிப்பே என்பதையும் உணர்ந்து கொண்டார்கள்.அவர்களின் அரசியல் உணர்வு பெரும்போராட்டமாக கிளர்ந்தெழுந்தது.

ஈவா மொரலஸ் அதிபராக வேண்டும் , தற்காலிக அதிபர் ஜீனைன் அனெஸ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளோடு கொச்ச பம்பா பகுதி முழுக்க போராட்டத்தில் இறங்கியது.தலைநகரான லாபாசுக்கு செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன .லாபாசிற்கு சற்று தள்ளி இருக்கும் செங்காட்டா பகுதியில் உள்ள எரிவாயு கிடங்கும் பழங்குடியின மக்களின் கட்டுபாட்டிற்கு செல்லவே , எரிவாயு ,உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் லாபாசிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டன. போராட்டக்காரர்களை இராணுவமும் , காவல்துறையும் சுட்டுத்தள்ளியது. செங்காட்டாவில் உள்ள எரிவாயு கிடங்கை கைப்பற்ற பழங்குடியின மக்கள் மீது ஹெலிகாப்டர் தாக்குதல் வரை நடத்தியது இந்த ஜனநாயக அரசு. 32 பழங்குடியின மக்கள் அரச பயங்கரவாதத்திற்கு பலியானார்கள். ஈவாவுக்கு எதிராக மெசாவும் ,கமாச்சோவும் போராடிய போது அரசு மென்மையாக நடந்துக்கொண்ட போதும் வெகுண்டு எழுந்து கண்டித்த ஐரோப்பிய மனித உரிமை இயக்கங்கள் இப்போது வாய்மூடி அமைதியாக இருக்கின்றது. இழப்புகளை சந்தித்தாலும் மக்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. பலியானவர்களின் உடலை வைத்து போராட்டங்கள் நடக்கின்றன.

பொலிவியாவில் தற்போது இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கிறது.இதனை ஐ.நா மன்றமும் ,உலக நாடுகளும் தட்டிக்கேட்க வேண்டும் என்று மெக்சிகோவில் இருந்து ஈவா மொரலஸ் அழைப்பு விடுத்திருக்கிறார்.மக்களின் போராட்டம் கடும் நெருக்கடியை தரவே தற்காலிக அதிபர் தேர்தல் தேதியை அறிவிக்காமல் தேர்தலை அறிவித்திருக்கிறார்.வரும் தேர்தலில் சோசலிச இயக்க கட்சியின் சார்பாக மொரலஸ் போட்டியிட மாட்டார் என்று அக்கட்சி அறிவித்திருக்கிறது.

” நாட்டின் பல பகுதிகளில் எதிர்கட்சியினரால் கலவரம் ஏற்படுத்தப்பட்ட போது சோசலிச ஆட்சியினில் ஒருவரும் கொல்லப்படவில்லை , ஆனால் நீங்கள் கூறும் ஜனநாயக ஆட்சியில் 32 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஹெலிகாப்டர் கொண்டும் , இராணுவ வண்டிகள் கொண்டும் மக்கள் கொல்லப்படுவதை பார்க்கிறேன்.இதுதான் ஜனநாயகத்தின் உண்மை முகம்” என்ற மொரலசின் வார்த்தைகள் மிகவும் அர்த்தம் நிரம்பியது.

பொலிவிய பழங்குடி மக்கள் போராளிகள்.போராளிகள் மரணமடைவார்கள் ஆனால் ஒருபோதும் தோல்வியடையமாட்டார்கள்.மக்கள் போராட்டம் வெல்லட்டும்.