பாசிசத்தின் முகவர்களாக விளங்கும் மாநில ஆளுநர்கள்- வளவன்.

//
Comment0

இந்திய வரலாற்றில் பிராந்திய ஆளுநர் (கவர்னர்) என்பது நிர்வாக பதவியாக மௌரியர் காலத்தில் இருந்து, பின் ஆங்கிலேய காலனியாட்சிக் காலத்தில் நிர்வாகம் மற்றும் சட்டம் ஆகிய இரண்டிலும் தொடர்புடைய பதவியாயிற்று. 1935ல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம் (Government of India act, 1935) வடிவமைத்த ஆளுநரின் தன்மையை, கொஞ்சம் கூடுதல் நேர்த்தியோடு மறு உருவாக்கம் செய்தாற்போல இந்திய மாநிலங்களின் ஆளுநர் பதவி அரசமைப்புக் குழுவால் வடிவமைக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் 153வது பிரிவு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் நியமிக்கப் பட வேண்டும் எனவும், 154வது பிரிவு, மாநில நிர்வாக அதிகாரத்தின் தலைமைப் பொறுப்பில் அவர் உள்ளார் எனவும், நேரடியாகவோ அல்லது தனது துணை அதிகாரிகள் மூலமாகவோ தமது கடமைகளைச் செய்யலாம் என்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் நடந்த விவாதத்தில் ஆளுநருக்கான இத்தகைய அதிகாரம் குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்த பொழுது, குழுவின் தலைவர் டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் இப்படி குறிப்பிட்டார். “ஆளுநருக்கென்று அரசமைப்பு எந்த ஒரு தன்விருப்ப அதிகாரத்தையும் வழங்கி விடவில்லை; மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு  மாற்று கருத்து தந்து அதை முற்று முழுதாய் நிராகரிக்கும் மேலான பதவியாக ஆளுநர் பதவி இருக்குமாறு எந்த சட்டப் பிரிவுகளும் இல்லை; அவருக்கான கடமைகளாக  உள்ளவைகள், அமைச்சரவைக்கு  ஆலோசனை வழங்குதலும், தேவையான இடங்களில் எச்சரிக்கை செய்தலுமேயாகும். தேவைப்படுகிற இடங்களில் முடிவை மறு பரிசீலனை செய்ய கோரலாம், எத்தகைய பரிசீலனை எனவும் தெரிவிக்கலாம். நல்ல மற்றும் தூய நிர்வாகம் செய்கிற ஆளுநர் இவற்றைத் தான் செய்ய வேண்டும் ” என்று முடித்தார்.

இன்றைக்கு அம்பேத்கர் சொன்ன ஆளுநர் வழியிலான நல்ல மற்றும் தூய நிர்வாகம் இருக்கிறதா என்ற இடத்திலிருந்து இந்த கட்டுரை கட்டமைக்கப் படுகிறது. அவர்கள் ஆளுநர்களா அல்லது மத்தியில் ஆளும் கட்சியின் சார்பிலான  இடையூறுகளா என்கிற தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது. ஒரு மாநிலத்தின் நூற்றுக்கணக்கான மக்களால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ பிரதிநிதிகளின் ஒருமித்த கருத்து கொண்ட தீர்மானத்தை, மசோதாவினை கிடப்பில் போடுவதையும், சட்ட விதிகளினை காரணம் காட்டி, அதன் மீது முடிவெடுக்கும் நாட்கள் குறித்து தெரிவிக்காமல் இருப்பதையும், மத்திய அரசு ‘நியமித்த’ ஒருவர் செய்கிறார் என்றால் அது அந்த மாநில இறையாண்மைக்கும், மாநில மக்களின் உரிமைகளுக்கும் எதிரானதாகிறது. ஒரு மாநிலத்தின் சுயாட்சியை, மாநிலத்தின் ஓர்மையை தனிமனிதர் மட்டுப்படுத்துதல் என்பது ஏகாதிபத்திய, காலனிய, நிர்வாக பாசிசத்திற்கு எந்த வகையிலும் குறைவானதல்ல.

ஆளுநர்களும் சர்ச்சைகளும் என்பது சுதந்திர இந்தியாவில் புதிதல்ல. முதன் முதலில் 1952ல் மதராஸ் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தேர்தலில் போட்டியிடாதவரும், இரண்டாவது இடம் பெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான இராஜாஜியை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் ஸ்ரீ பிரகாசா. மாநிலத்தில் உறுதித் தன்மையை உருக்குலைக்கும் அரசியல் ஆடுபுலி ஆட்டங்களைப் பொறுத்த வரை, 1959 ல் அன்றைய ஆளுநர் ராமகிருஷ்ண ராவ் அவர்களால் கேரளாவில் கலைக்கப்பட்ட இ. எம். எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான இடதுசாரி அரசு தொடங்கி கடந்த ஆண்டு (2019) விடியற்காலை 5.47க்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கி பெரும்பான்மை இல்லாத பா. ஜ. க வின் தேவேந்திர பட்னாவிஸை ஆட்சியமைக்க அழைத்த மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வரை சர்ச்சைகளுக்கு குறைவில்லாத நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு இடையில் மாறாதது மத்திய அரசுகள் நிகழ்த்தும் கூட்டாட்சிக் குலைப்பு முயற்சிகளின் தீவிரத்தன்மை ஒன்றுதான். அந்த முயற்சி தினந்தோறும் பல புதிய உச்சங்களை தொடுதலையும் நாம் கண்டு வருகிறோம்.

இத்தகைய ஆளுநரின் அதிகார மீறல் வழக்குகளில் குறிப்பிடத்தக்கது, 1989ல் கலைக்கப்பட்ட கர்நாடக அரசின் முன்னாள் முதல்வர் எஸ். ஆர். பொம்மாய்  எதிர். இந்திய ஒன்றிய அரசு எனும் வழக்கு. இந்த தீர்ப்பு தான் ஆளுநர்கள் தங்களின் விருப்பப்படி வரைமுறைக்குட்படாமல் மாநில அரசுகளை அரசமைப்புச் சட்டம் 356ம் பிரிவினைக் கொண்டு கலைப்பதை கண்டித்தது. மேலும் அரசு இடைநீக்கம் செய்யப்படும் எனவும், இரண்டு மாதங்களுக்குள் ஆட்சிக் கலைப்பு தீர்மானம் குடியரசுத் தலைவரால் அனுப்பப்பட்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அப்படி இயலாத பட்சத்தில் ஆட்சி இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு மீண்டும் ஆட்சியைத் தொடரலாம் என்றும் கடிவாளத்தை நீதித்துறை பூட்டியது. இதன் விளைவு 1971-1990 வரை 63 ஆக இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்த நிகழ்வுகள் 1991-2010 காலகட்டத்தில் 27 ஆக குறைந்தது. எண்ணிக்கை குறைந்தது தான் என்றாலும் மாநில அரசுகளின் ஆட்சி மீதான நெருக்கடிகள், மத்திய அரசுகளால் புதிய பரிணாமத்தில் வடிவமைக்கப்பட்டன. ஆட்சியைக் கலைக்காமல் ஆடுபுலி ஆட்டங்கள் தொடர்ந்தன.

“ஆளுநர் ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும்; அவரே ஆட்சியமைக்க முயலக்கூடாது” – சர்க்காரியா குழு. ஆனால் இன்றைக்கு இரண்டாவது செயலில் தான் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் ஆளுநர்கள். இல்லாது போனால் பெரும்பான்மை இல்லாத,  இரண்டாவது இடம் பிடித்த கட்சியை ஆட்சியமைக்க அழைப்பார்களா? 2017ம் ஆண்டு 40 க்கு 13ல் வென்ற இரண்டாவது கட்சியான பா. ஜ. க வை கோவாவிலும், 60க்கு 23ல் வென்று  இரண்டாவதாக வந்த பா. ஜ. க கூட்டணியை மணிப்பூரிலும் ஆளுநர்கள் ஆட்சியமைக்கக் கோரினார்கள். தேர்தலுக்கு பிறகான கூட்டணி, எம். எல். ஏ. க்கள் ஏலம், குதிரை பேரங்கள்  மற்றும் இதர இத்யாதிகள் பின்னால் நடந்தது தனிக்கதை. இதே கணக்கின்படி பார்த்தால் மகாராஷ்டிராவில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை. இரண்டாவது இடம் வந்த சிவசேனா வை அழைத்து ஆட்சியமைக்க சொல்லாமல் முதல் பெரும் கட்சியான பா. ஜ. க. வை கூப்பிட்டு விட்டார் ஆளுநர். இவை மூன்றும் வெவ்வேறு நிகழ்வுகள் என்று நினைக்கிறீர்களா? ஒரே ஒரு இணைப்புப் புள்ளி மூன்றிற்கும் உண்டு. 2014ல் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பிறகு அன்றைக்கு இருந்த 36 ஆளுநர்களில் (29 மாநிலம், 07 யூனியன் பிரதேசங்கள்), 33 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் மற்றும் ஆளுநர் பதவி அரசியலுக்கு விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது  என்று வேறு நம்மை நம்ப சொல்லுகிறார்கள். நம்பி விடுங்கள். தங்களின் அபிமானிகளையும், விசுவாசிகளையும் அரசமைப்புச் சட்ட பதவிகளில் அமர்த்தி, அந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான சகல நகர்வுகளையும் அரங்கேற்றுதல் என்பது நம் வரிப்பணத்தை வீணாக்கும் பல நூறு காரணிகளுள் தானும் ஒன்றாக உள்ளதென்க.

மற்றொரு பரிமாணத்தில் பார்த்தால் ஆளுநர் பதவி என்பது ஒரு கட்டாய கள அரசியல் ஓய்வு மற்றும் அரசியல் ரீதியான தண்டனை எனலாம். தொடர்ந்து அதிக நாட்கள் தில்லி முதல்வராக இருந்தவர் எனும் சாதனைக்குரியவரும், மூன்று முறை தில்லி முதல்வராக இருந்தவருமான ஷீலா தீட்சித், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான தோல்விக்கு பின்பும், இரண்டு தேர்தல்களில் கட்சி சோபிக்காததால் முன்னாள் தமிழக மாநில பா. ஜ. க தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜனும் கட்டாய அரசியல் ஓய்வளிக்கப்பட்ட சமகால உதாரணங்கள். கள அரசியல் முடிந்துவிட்டது எனும் எண்ணத்தில் உள்ளவர்கள், தொடர்ந்து தங்களின் ‘பதவி’ இருத்தலுக்காக, மத்திய அரசின் விருப்பு வெறுப்புகளை மாநிலத்தில் நிறைவேற்றும் ஒரு அமைப்பாகிறார்கள். காரணம், குடியரசுத் தலைவர் (பிரதமர்) விரும்பும் வரையில் தான் ஒருவர் ஆளுநராக நீடிக்க முடியும் என்கிறது அரசியல் சாசனம். மாநிலங்களை விட யூனியன் பிரதேச ஆளுநராக உள்ளவர்களுக்கும், அப்பிரதேச அரசுகளுக்கும் இடையிலான மிகத் தெளிவான அதிகாரப் பகிர்வு இல்லாததால் நிகழும்  அரசியல் பகை முரண்கள் முடிவிலியாய் நீண்ட படியே இருக்கின்றன. புதுச்சேரி நமக்கு நெருக்கமான உதாரணம். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் பல சிறப்பு அதிகாரம் பெற்றவர்களாக உள்ள ஆளுநர்கள் அப்பூர்வ குடிகளுக்காக செய்தவைகள் எவ்வெவ்வவை என்பதனை அவர்களின் பிரதிநிதிகள் பேசுவதற்கான வாய்ப்பும், களமும் அமைத்தாலன்றி உண்மைத்தன்மையை நாமறிய இடமில்லை. ‘ஏகலைவா’ என்று மத்திய அரசு தொடங்கிய பழங்குடியினர்களுக்கான மாதிரி உண்டு,உறைவிட பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு முதன் முறையாக 2020ம் ஆண்டு தான் தேசிய நல்லாசிரியர் விருது எனும் அங்கீகாரம் கிடைத்ததுள்ளது. ஆசிரியர்களுக்கே இப்போது தான் என்றால் மாணவர்கள் தலையெடுக்க இன்னுமொரு அரை நூற்றாண்டுக்குக் குறையாத காலம் எடுக்கும்.

இப்போது நாம் எல்லோரும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டிய ஒரு காலத்தில் நிற்கிறோம். மத்திய அரசின் பிரதிநிதியாக இல்லாமல் மத்திய ஆளும்கட்சியின் பிரதிநிதியாக ஒருவர் எங்கள் மாநிலங்களிலெதற்கு? கூட்டிப் போய் கட்சிப்பணிகளையே தொடரச் சொல்லுங்கள். ஆளுநர் மாளிகைக்கான கட்டுப்பாட்டு தொலைவியக்கிகள் (ரிமோட்) தில்லியிலிருக்க, பொது மக்களுக்கு அவர்களால் என்ன பயன்? மாநில சுயாட்சிக்கும், மாநில மக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் எதிராக நிற்கிற, எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலத்தின் இறையாண்மையை கபளீகரம் செய்கிற ஒருவர் எப்படி அந்த அரசின் நிர்வாக அதிகாரத் தலைவராக  இருக்க முடியும்? எங்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து, எங்களின் உணர்வுகளுக்கும், அறத்திற்கும் எதிராக விருப்பு, வெறுப்பு சுமந்து வரும் நேர்மையற்ற ஒருவரின் பயனிலா இருத்தலை நாங்கள் ஏன் ஊக்குவிக்க வேண்டும்.  அண்மைக்காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் நீதித்துறை ஊழியர்களின் அரசுப் பதவி’ நியமனங்கள் அவர்கள் இறுதிக் கால மக்கள் பணியில் பின்பற்றிய மதிப்பீடுகள், நேர்மை, அறம் மீதான கேள்வியையும், நியமனப் பொறுப்பில் நீடிக்க அடிக்கப் போகும் ‘பல்டி’க்கள் மீதான நியாயமான கவலையையும் எழுப்புகிறது.

மத்தியில் எந்த அரசு இருந்தாலும், கூட்டாட்சிக் குலைவிற்காகவும், மாநில இறையாண்மை சிதைவிற்காகவும் ஆளுநர் எனும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியை பயன்படுத்துவதில்  நேர்த்தியையும், நிதானத்தையும் தொடர்ந்து கடைபிடிக்கின்றனர் என்பது ஐயத்திற்கு இடமில்லாமல் விளங்குகிறது. ஆளுநர் தாம் மாநில பல்கலைக்கழக வேந்தராக இருந்து வருகிறார். அப்படி இருந்து அவர் செய்கிற ஒரே வேலை பட்டமளிப்பு விழாவில் ஒரு வித மின்னும் ஜிகினா மேலங்கியோடு பட்டம் வழங்குவது தான். தமிழ்நாட்டில் அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. சூரப்பாவுக்கும் இடையில் உயர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பிரச்சனை முற்றி விசாரணை ஆணையம் வரை போயிருக்கிறது. துணைவேந்தரை நியமித்த வேந்தர் ஆளுநர் என்னென்ன முயற்சிகள் செய்து இதனை தீர்க்க முயன்றார்? அவர்தாம் நிர்வாகத்தின் உச்சாணிக் கொம்புக்காரர். நிர்வாக பிரச்சினை. தீர்க்க எதையும் செய்யாதவருக்கு தலைமை பீடம் மற்றும் பதவி எதற்கு? எனவே இதுவுமொரு வேலையற்ற வேலை. மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளில் படுபாதாளத்தில் தொல்பூர்வ பழங்குடிகள் வாழும் பகுதிகள் தொடர்ந்து நீடிக்கின்றன என்பது தேசிய அவமானம். அரசு அப்பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்து அவர்களை நிலமற்றவர்களாக, பண்பாட்டுத் தொடர்ச்சி அற்றவர்களாக மாற்றுவது தான் மனித வளம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறதென எந்த பழங்குடியினர் பகுதிகளின்  ஆணையர் மற்றும் மாநில ஆளுநர்கள் பேசியிருக்கிறார்கள். பணியில் தொடர்ந்து நீடிப்பது என்பதற்கு முன்னாள் அறமாவது அவலாவது. ஏவலாளியாக இருக்கிறவர்களின் பதவி மீது ‘ஆளுமை’ எனும் பதம் வேறு. இந்த பொம்மலாட்டதிற்காக இவர்களின் நூல்களை திரைக்கு பின்னால் இருந்து பிடித்துக் கொண்டிருப்போரே! அந்நூல்கள் அறுத்து விடுங்கள். பொம்மைகள் ஓய்வெடுக்கட்டும். களத்தில் உங்கள் கருத்துக்களோடு நேரடியாக வாருங்கள். விடைகளுக்கான விவாதங்களைக் கட்டமைப்போம்.