பார்ப்பனீயம்தான் இந்திய பண்பாடா?- வளவன்

//
Comment0

செப்டம்பர் 14, 2020 அன்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலொன்றில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல், கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய கே. என். தீக்ஷித் தலைமையிலான 16 பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்துள்ளதாக தெரிவித்தார். 21ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் (சி.பி.எம்) அவர்கள் பின்வருமாறு பேசினார்.
“இந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை; தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபான்மையினரோ, தலித்தோ, பெண்ணோ இந்தக் குழுவில் இடம் பெறவில்லை; இந்து உயர்சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் இந்தக் குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள்; மத்திய அரசால் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி அறிஞர்கள் யாரும் இடம் பெறவில்லை; ஆனால், சாதி சங்கத் தலைவர் இடம் பெற்றுள்ளார்; விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? ; வேத நாகரிகத்தை தவிர வேறு நாகரிகம் இல்லையா? ; சமஸ்கிருதத்தைத் தவிர வேறு ஆதி மொழி இங்கு இல்லையா? ; ஜான் மார்ஷல், சுனித் குமார் சட்டர்ஜி தொடங்கி ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர். பாலகிருஷ்ணன் வரை பல்வேறு ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் நிராகரிக்கப்பட்டு, புராணங்களை வரலாறு என மாற்றத்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதா? ; எப்படி மண்ணுக்கு கீழே உள்ள வேர்களை விமானத்தில் பறந்து கொண்டு பார்க்க இயலாதோ அதைப்போல இந்த மண்ணின் பண்பாட்டினை சாதிய பீடத்தின் மேலே உள்ளவர்களால் ஒரு பொழுதும் எழுத முடியாது; எனவே இந்தக் குழுவை கலைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ” என்று கோரினார்.

செப்டம்பர் 23 அன்று 32 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்தக் குழுவை கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினர். இதனிடையே  தென்னிந்தியப் பிரதிநிதி ஒருவர் அக்குழுவில் சேர்க்கப்படுவதாக  தகவல் வந்தது. இன்றுவரை அரசின் செய்திக் குறிப்பாக அச்சு ஊடக தகவல் துறை (Press Information Bureau) அப்படி ஒரு உறுப்பினர் சேரக்கப்பட்டதாக எந்த சுற்றறிக்கையையும் ஊடகங்களுக்கு வெளியிட வில்லை என்பது கூடுதல் தகவல். ஏற்கனவே உள்ள ஐதராபாத் மானுடவியல் பேராசிரியர், தன் ஆராய்ச்சி பணிகளை ஒரிசாவில் தான் மிகுதியாக செய்துள்ளார். இனி இந்த குழுவின் மீதான பார்வைகள்.

குழுவில் உள்ளவர்களின் பின்னடை (சாதியாகு) பெயர்கள் நமக்கு ஒன்றை சொல்லுகிறது.  அவர்களின் அடையாளப் பெயர்கள்: ஷர்மா, ஷர்மா, ஷர்மா, சாஸ்திரி, பாண்டே, தீக்ஷித், சுக்லா, சுக்லா, பிஷ்த், மணி, மிஸ்ரா, ஸ்ரீ வஸ்தவா, கவுஷிக், மக்கன் லால்). அட.! எத்தனை பன்மைத்தன்மை பேணல்.

தனது பதவி உறுதிமொழியேற்பின் போது, ” இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன். இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும்…” என உறுதிமொழி எடுத்துக் அமைச்சர், இந்த ‘ஒருமை’ என்பதை ‘ஓர்மை’ என்ற பொருளில் புரிந்து கொண்டாரோ எனும் கேள்வி எழுகிறது. 

மேலும்,  அதே உறுதி மொழியில் ” …அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்கி, அச்சமும் ஒருதலைச்சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன்…” என்றும் சொன்னவர் இந்தக் குழுவை அமைத்த பொழுது ஒருதலைச் சார்பின்றி என்பதை வசதியாக வாபஸ் வாங்கி விட்டாரோ.? ஒரு வேளை சின்னக் குழந்தைகள் மனதிற்குள் அ-சொல்லி (அ)சத்தியம் செய்வதைப் போல செய்திருப்போரோ.?

விருப்பு, வெறுப்பற்றவர் தான் பார்ப்பனர் (சாதி)சங்கத்தின் பிரதிநிதியை இணைத்து, 6 சமஸ்கிருத அறிஞர்களை(?) சேர்த்து, பிற  5 செம்மொழி குறித்தவர்களை புறக்கணித்து ஆளுமை செய்துள்ளாரோ?   வேட்டையின் வரலாற்றை வேட்டையாடிகள் எழுதுவதற்கும், வேட்டையாடப் பட்டவர்கள் எழுதுவதற்குமான வித்தியாசம் தான் இங்கே மிக முக்கியமானது. தங்களின் பண்பாட்டினை மேட்டிமைக்குரியதைப்  போல சித்தரித்து, இங்கே ஆதிக்கம் செலுத்திய கபடர்கள், ஆதிக்கம் செலுத்தப் பட்டவர்களின்  பண்பாடுகளை நடுநிலையாக, சார்பற்ற தன்மையுடன், எத்தனை மேன்மையாக உச்சி முகர்ந்து அறிக்கை அளிக்கப் போகிறார்கள் என்று எண்ணுகையில் நமக்கு ரோமாஞ்சனம் ஆவதை தவிர்க்க முடியவில்லை(!).

ஏகாதிபத்திய மண்ணின் இயக்குனர் காந்தியை தனது படத்தில் பேசியதை போல இவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது என்பது வேடிக்கையானது. அவர்களின் நேர்மையை ஒரு செய்தியில் நான் பார்க்க ஆவலாய் உள்ளேன். வேத காலத்தில் பெண்கள் நல்ல நிலையில் இருந்தனர் எனும் சொற்றொடரை ஒரு கும்பல் தொடர்ந்து பேசி வருகிறது. தமிழில் சங்க காலத்தில் தமிழில் பெண்பாற் புலவர்கள் 43 பேர். வேத கால சமஸ்கிருத பெண்பாற் கல்வியாளர்கள் 44 பேரை காட்டட்டும். வேத கால நாகரிகம் குறித்தவற்றை ஒப்பிடுவதற்கு பரிசீலிக்கலாம். அப்படி முடியாவிட்டால், இந்த நேர்மையான பண்பாட்டுக் குழு, வைகை நதி நாகரிகத்தின் தொன்மையயும், அது துணைக் கண்டத்தின் பிற நாகரிகங்கள் தவழ்ந்த போது, பறையடித்து, நாட்டார் கூத்து நிகழ்த்திய கலை வளர்ச்சி கொண்ட நாகரிகமாய் இருந்ததையும் ஏற்று உலகுக்கு அறிவிக்கட்டும்.

இனி அதன் உறுப்பினர்கள் குறித்து ஒரு கழுகுப் பார்வை காண்போம்.
1. கமல் நாத் தீக்ஷித்:
இராமாயண காவிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சியின் இயக்குனராக பணியாற்றினார். சிருங்கவேரபுரா(1978-79, 1984-85), பரியார்(1978), பரத்வாஜ் ஆசிரமம் (1978, 1983), அயோத்தியா (1979), சித்ராகுட் (1980) ஆகிய இடங்களில் தலைமையேற்றுள்ளார். 1984-1994 வரை பூரி ஜெகந்நாதர்  ஆலயத்தின் பாதுகாப்பு நிபுணர் குழுவில் உறுப்பினராக, செயலாளராக இருந்தவர். 2012, 2013ல் தொலைந்த சரசுவதி நதி நாகரிகம் (புராண கதைக் குறிப்பின் அடிப்படையிலான தேடல்) குறித்து சர்வதேச மாநாட்டில் உரை நிகழ்த்தியவர்.

2. முனைவர். ரவீந்திர சிங் பிஷ்த்:
இந்தி இலக்கியத்திலும், சமஸ்கிருதத்திலும் ‘விஸ்வரத்’ பட்டம் பெற்றவர். 1998ல் கதொடங்கி ஹரப்பா நகரமும், ரிக் வேதமும் என்று தொடர் உரைகள் நிகழ்த்தியவர். இராமாயண குறிப்பின் அடிப்படையிலான சரஸ்வதி நதி மீட்பு திட்டத்தினைக் கொண்டு வந்ததில் பெரும் பங்கு வகித்தவர்.

3. முனைவர். புத்த ராஷ்மி மணி:
பத்தாம் வகுப்பு மற்றும் இண்டர்மீடியேட் தேர்வுகளில் சமஸ்கிருதத்தில் முதல் வகுப்புடனான தனியிடத்துடன் (First class with distinction) தேர்ச்சி பெற்றவர். சம்பூர்ணானந்த் சமஸ்கிருத கல்லூரியில் டிப்ளமோ படித்தவர். பாபர் மசூதிக்கு அடியில் 10-12 ம் நூற்றாண்டை சேர்ந்த 3 கோவில் போன்ற அமைப்புகள் உள்ளதாக 272 பக்க அறிக்கையினை தாக்கல் செய்த குழுவின் இயக்குனர் இவர். நீதிமன்றம் இதனை சாட்சியாக ஏற்று அண்மையில் அந்த வழக்கில் நிலைநாட்டப்பட்ட நீதி குறித்த பார்வை தனிக்கதை.

4. பேரா. சந்தோஷ் குமார் சுக்லா:
பூர்வ மிமம்ஸா (சமஸ்கிருத வேதங்களின்) தத்துவம், தர்ம சாஸ்திரம் மற்றும் சமஸ்கிருத பாடங்களில் புலமை பெற்றவர். ‘வைதீக கரிகா’ என்ற வைதீக மதம் குறித்த நூலின் ஆசிரியர் இவர். டெல்லி சமஸ்கிருத கல்வி நிறுவனத்தின் பிரதிபா புரஸ்கார் விருது பெற்றவர்.

5. முனைவர். ரமேஷ் குமார் பாண்டே:
தர்பங்கா சமஸ்கிருத விஷ்வ வித்யாலயா வில் சமஸ்கிருத சாகித்யத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். 1999ல் இருந்து சமஸ்கிருத ஆராய்ச்சியாளராக பணியாற்றுபவர்.
தில்லியில் உள்ள ஸ்ரீ  லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யபீடத்தின் துணைவேந்தர் இவர்.

6. பேரா. மக்கன் லால்:
இவர் 2003 ல் மாணவிகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக டெல்லி பாரம்பரிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து 2004ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். இது தொடர்பாக மகளிர் ஆணையத்தின் இருவர் குழு அமைக்கப்பட்டு, அவரை அன்றைக்கு அந்த பதவியிலிருந்து நீக்கிட பரிந்துரைத்தவர், அந்தக் குழுவின் தலைவர், இன்றைய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. பின் அவர் ஆர். எஸ். எஸ் ஆதரவாளர் போன்ற நிலைப்பாட்டுடன் வென்டி டோனிகரின் புத்தகம் மீது  கடும் விமர்சனங்கள் செய்தார். ஒரு வரலாற்று ஆய்வாளரை இந்துக்களுக்கு எதிரான திரிபுவாதி என்றொரு மற்றொரு வரலாற்றாய்வாளர் விமர்சித்த காட்சிகள் அரங்கேறின. அதே பா. ஜ. க இப்போது அவருக்கு அளித்துள்ள பதவியை ஒப்பிட்டுக் கொள்க.

NCERT எனப்படும் சி. பி. எஸ். சி. பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு வரலாறு புத்தகத்தின் ஆசிரியராக இருந்து பல்வேறு வரலாற்று புனைவுகளுக்காகவும், கவனமின்மைக்காகவுப் பெரும் விமர்சனங்களுக்கு ஆளானவர். அவற்றுள் சில:மெசப்படோமியா நாகரிகம் 7000 வருடம் முற்பட்டது (5200 தாம் சரி), ஹரப்பா தெற்கு ஆப்கானிஸ்தானின் பகுதிகளிலும் இருந்தது (ஒரு அகழாய்வு இடம் கூட கண்டறியப் படவில்லை). சதவாகனர்களிடம் பெரும் கடற்படை இருந்தது (வரலாற்றுக் குறிப்பு இல்லை).

7. நீதியரசர். முகுந்தன் சர்மா:
முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர். தில்லியில் உள்ள ஸ்ரீ  லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யபீடத்தின் வேந்தர் இவர். இதே கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் தான் மேலே உள்ள ரமேஷ் குமார் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

8. பரமேஸ்வர நாராயண சாஸ்திரி:
ராஷ்டிரிய சமஸ்கிருத நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்) துணைவேந்தர் இவர். 2016-17 ம் ஆண்டில் இந்த பல்கலைக்கழகத்தில் தான் இரண்டு ஆண்டு டிப்ளோமா பாடமாக யோகா, ஆயுர்வேதம், சோதிடம் மற்றும் வாஸ்து ஆகிய புதிய பாடங்கள் இவரின் நிர்வாகத்தின் கீழ்தான் கொண்டு வரப்பட்டது.

9. முனைவர். கமல் கே. மிஸ்ரா:
ஐதராபாத்தை சேர்ந்த மானுடவியலாளர். ஒரிசாவின் உத்கல் கலாச்சாரப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர். ஆய்வுப் பணிகளினை போபால், கொல்கத்தா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் மேற்கொண்டவர். இதுவே இவரை தென் தமிழக பிரதிநிதியாக எடுத்துக் கொள்ள இடையூறாக உள்ள காரணி. 2013ல்  மத்திய அரசால் பழங்குடியினர் வாழ்க்கை நிலை குறித்த அறிக்கை அளிக்க சிறப்பு ஆணையராகவும் நியமிக்கப்பட்டவர். எனவே வடகிழக்கு மாநிலங்கள் குறித்த அறிமுகம் கூடுதலாக உள்ளவர்.

10. முனைவர். பல்ராம் சுக்லா:
தில்லி பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறை பேராசிரியர். சமஸ்கிருத இலக்கணம், சமஸ்கிருத மொழியியல், சமஸ்கிருத இலக்கியம், வேத மொழி, தர்ம சாஸ்திரம் ஆகியவற்றில் வல்லுநர்.  யஜ்னவால்கிய ஸ்மிருதியின் பாட ஆசிரியராக உள்ளார். சமஸ்கிருத கவிஞர்.

11. பேரா. ஆசாத். கே. கவுஷிக்:
அறிவியலாளர் மற்றும் பன்னாட்டு சிந்தனையாளர், கனடா என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால் தெரிவிக்கப்படாத செய்தி இவர், உலக பார்ப்பனர் கூட்டமைப்பின் (World Brahman Federation) நிறுவன தலைவர்  (Founding President). ஆராய்ச்சியாளர் மற்றும் சிந்தனையாளர் என்பதற்காக தான் அவர் சேர்த்துக் கொள்ளப் பட்டார் என்பது அரசின் நிலைப்பாடு.

12. பண்டிதர். எம். ஆர். சர்மா. :
‘சன்மார்க்’ – உலக பார்ப்பனர் கூட்டமைப்பின் இந்திய கிளையின் சேர்ந்த பிரதிநிதி.
குறிப்பு: மேலே உள்ள ஆசாத் கவுஷிக் ஆரம்பித்த WBF அமைப்பின் கிளை தான் இது.

முனைவர். ஸ்ரீ வஸ்தவா – புவியியலாளர், ரமேஷ் சந்த் ஷர்மா – மொழியியலாளர் ஆகிய இருவர் மாத்திரம் தான் வெளிப்படையான சித்தாந்த குறிப்புகளற்றவர்களாக இந்த 16 பேர் குழுவில் உள்ளவர். மேலும் இருவர் கலாச்சாரத் துறை மற்றும் தொல்லியல் துறை  சார்ந்த பெயர் குறிப்பிடப்படாத பிரதிநிதிகள்.

இத்தனை பண்டிதர்கள் இருப்பதால் நிச்சயம் தங்களின் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்குமுன் யாகம் வளர்ப்பதில் சிரமம் இல்லாமல் இருக்கும் இந்த குழுவிற்கு. நான்கு சமஸ்கிருத புலமை பெற்றவர்கள், மூன்று சமஸ்கிருத கல்லூரி நிர்வாகிகள், இரண்டு பார்ப்பனர் சங்கத்துக்கு பிரதிநிதிகள் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியாவின் பண்பாட்டின் தொன்மை குறித்து ஆய்வு செய்வார்கள் என்பது மற்றுமொரு அரசு செலவிலான வரலாற்றுத் திரிபு முயற்சி.  2004 ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவு குறித்த தகவல்களை 2019ல் நீதிமன்றம் போய் தான் வாங்க வேண்டுமென்ற நிலையில் தான் உள்ளது பட்டவர்த்தனமாக தென்னக நாகரிகம் மீது உமிழப்படும் இருட்டடிப்பு நகர்வுகளின் அரசியல்.இன்னமும் அதிகாரப்பூர்வ முழு அறிக்கை விபரம் வெளியிடப் படவில்லை. கீழடியில் நிகழ்த்தப்பட்ட அண்மைக்கால மத்திய அரசின் நகர்வுகளை கூடுதலாக நினைவு கூர்க.

இந்தியாவில் பெண் வரலாற்று ஆய்வாளர்களே இல்லையா அல்லது திட்டமிட்டு தவிர்க்கப் பட்டுள்ளனரா? ஜி. எஸ். டி. கவுன்சிலில் பெண் உறுப்பினர் இல்லாமல் போனதால் சானிட்டரி நாப்கினுக்கு வரி விதித்த ‘ஆணாதிக்க’ அதிகார முடிவுகளினைக் கண்டோம்.  பெண்களின் வரலாற்றினை எழுத அவர்களை நாலாந்தர  குடிகளாக நிறுத்தி  வைத்துள்ள சித்தாந்தவாதிகள் பேனா பிடித்தால், வர்ணனைகளிருக்குமே தவிர வரலாறு இருக்காது.

ஆண், பெண் நீங்கலான மாற்று பாலினத்தவர் வரலாறு (History of Indian Non binary Genders) ,  எதிர் பாலீர்ப்பாளர்கள் நீங்கலான மாற்று பாலீர்ப்பாளர்கள் வரலாறு (Indian LGBTQIDAP+ History) , அவர்கள் மீதான வரலாற்று அடக்குமுறை, அரசியல் முதலியவற்றை எந்த ஒரு மத அடிப்படைவாதிகள் குழுவும் ஒரு நாளும் எழுதி விடப் போவதில்லை என்பதில் எள் மூக்கின் முனையளவும் மறு கருத்து கொள்ள வேண்டாம்.
சேரியை உருவாக்கியவர்கள் சேரியின் பண்பாட்டை எப்படி நுட்பமாய், நேர்மையாய் பதிவு செய்வார்கள்? இந்த தேசத்தின் சபாக்களில் பரதத்தையும், கர்நாடக சங்கீதத்தையும் ஏற்றியவர்கள் குறவன் குறத்தி ஆட்டத்தையும், பறையிசையையும் எப்படி யோக்கியமாய் பதிவு செய்வார்கள்? கேள்விகள் இன்னும் இன்னும் விரிகின்றன. பதில் சொல்ல வேண்டியவர்கள் தான் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பழக்கமற்றவர்களாக இருக்கின்றனர்.

~ வளவன்.