போரும் அமைதியும்- அபராஜிதன்.

//
Comment0

அசர்பைஜான்- ஆர்மீனீயாவிற்கு இடையே கடுமையான போர் நடந்துக் கொண்டிருக்கிறது. தினமும் பலர் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். நாகர்னோ- காராபாக் என்னும் பகுதியை சொந்தம் கொண்டாடுவதற்காக இந்தப்போர் நடக்கிறது. அசர்பைஜானுக்கு துருக்கி உதவுகிறது. ஆர்மீனியா ரஷ்யாவின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது. துருக்கி சிரிய வீரர்களை லிபியாவில் பயன்படுத்தியதை போல அசர்பைஜானிலும் ஆர்மீனீயாவிற்கு எதிராக சிரிய வீரர்களை களம் இறக்கியிருக்கிறது.இது உலக அளவில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்யாவும், துருக்கியும் சிரியா, லிபியா, ஆர்மீனியா ஆகிய மூன்று களங்களில் நேரெதிர் தரப்புகளை ஆதரிக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதில்லை. உலகை பங்கீட்டு கொள்வதற்கான வல்லரசுகளின் சதுரங்க நகர்வில் போரும், அமைதியும் தேவைப்படும் இடங்களில் அமர்த்தப்படுகின்றன, பின் விலக்கப்படுகின்றன.

அசர்பைஜானும், ஆர்மீனீயாவும் மட்டும்தான்  இதுபோன்று போர்களில் ஈடுபடுகிறதா?  சிரியா, லிபியா, இஸ்ரேல், ஏமன், துருக்கி, இரான், லெபனான், ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, வெனிசுவேலா, கொலம்பியா, உக்ரைன், ஜியர்ஜியா போன்ற பல நாடுகள் போர்சூழலில்தான் உழன்று கொண்டிருக்கின்றன.

குர்துக்கள், கட்டலோனியர்கள், பாலஸ்தீனியர்கள், காஷ்மீரிகள், தமிழீழத்தவர்கள், திபெத்தியர்கள், ரோஹிங்கியர்கள், பலூச்சியர்கள் என்று தங்களின் தேச விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் தேசிய இனங்களும் சதா அடக்குமுறையினையும், இன அழிப்பையும் எதிர்கொண்டே வருகின்றனர்.

பொதுவாக போரை யாரும் விரும்புவதில்லை. ஆனால் சிலர் போரை மிகவும் விரும்புகின்றனர். அவர்களால்  தவிர்க்க இயலாதவாறு போர் பலர் மீது திணிக்கப்படுகிறது. அவர்களே அந்தப் போரை விட்டு விலக நினைத்தாலும் அவர்களால விலக இயலுவதில்லை. சிலர் தங்களுடைய போர்களில் இருந்து தாங்களே விலகவும் விரும்புவதில்லை. இது பொதுவாக ஆக்கிரமிப்பு போர், ஆக்கிரமிப்பிற்கு எதிரான போர் என்ற வகையினங்களாக இருக்கிறது.

பெரும்பாலான போர்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவதில் முதற்காரணமாக அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஐரோப்பிய யூனியனும், இரண்டாம் காரணமாக ரஷ்யா, சீனா, துருக்கி, ஐப்பான் போன்றவை விளங்குகின்றன. அமெரிக்கா கியூபா, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்றவற்றை ஆக்கிரமித்தும், பல நாடுகளில் தனது படையை நிறுத்தியும் வைத்திருக்கிறது.
உக்ரைனின் கிரீமியா ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டு அதனுடன் இணைக்கவும் பட்டுவிட்டது.

சில நாடுகளின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை மற்ற சிலரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக உலகப்போரே நடந்து முடிந்தது. அதற்கு பின்னர் உலக அளவிலான கட்டுபாடில்லாத வர்த்தகம் என்பதை முன்வைத்து உலகப்பெருமுதலாளித்துவ நாடுகள் தங்கள் சந்தைகளை விரிவாக்க துவங்கின. சந்தைகள் விரிவாகத் துவங்கிவிட்டால் அந்த சந்தைகளுக்கு தேவையான  விற்பனை பொருளை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கான மூலப்பொருட்களை கைப்பற்றுவதும், மூலப்பொருட்களின், விற்பனை பொருட்களின் போக்குவரத்து தடங்களை கைப்பற்றுவதும், கட்டுப்படுத்துவதும் இன்று உலக பொருளாதார அரங்கில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

இன்றைக்கு  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே உலகில் உள்ள ஒட்டுமொத்த மூல வளங்களையும், பொருளாதார அமைப்பையும் கட்டுபடுத்த விரும்புகின்றன. சோவியத் அரசின் வீழ்ச்சிக்கு பின் ஏறுமுகம் கண்ட இந்த ஏகாதிபத்தியங்கள் குறிப்பாக அமெரிக்கா தற்போது “சுதந்திர வர்த்தகத்தை” கைவிட்டுவிட்டு தனது நாட்டு பொருளாதாரத்தை சுதந்திர வர்த்தகத்திடம் இருந்து காப்பாற்ற முனைப்பாக இருக்கிறது.

சீனா, ரஷ்யாவின் சமீபத்திய எழுச்சி இந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை பாதுகாப்பு நிலையை நோக்கி பின்வாங்க வைத்திருக்கிறது. அமெரிக்கா தன் பாதுகாப்புவாதத்தின் முன்னிட்டு உலகெங்கும் அதன் பொருளாதார சமநிலைக்கு எதிராக இருக்கும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது.

ரஷ்யா, சீனா மீது பொருளாதார தடை, ஈரான், வடகொரியா, வெனிசுலா என்றால் போர் மிரட்டல். இந்த பெரிய நாடுகளுக்கு போர் என்பது அவர்கள் வர்த்தகத்தின் மிகமுக்கியமான அங்கம். வெனிசுலா, லிபியா மீது பல்வகை குற்றச்சாட்டுகளை விதித்து அவர்களின் வைப்பு தங்கம், பணம், முதலீடுகளை அபகரித்து கொள்வது, மேலும் தாங்கள் தயாரிக்கும் ஆயுதங்களையும் விற்றுக்கொள்வது. எல்லா வகையிலும் போர் அவர்களுக்கு மிகவும் லாபகரமானதாக விளங்குகிறது.
பாதிக்கப்படும் மக்களுக்கோ வாழ்விற்கும், சாவிற்குமான போராட்டமாக மாறிவிடுகிறது.

இரான், இராக், லிபியா, சிரியா, வெனிசுவேலா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இதே காரணங்களுக்காகத்தான் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நேட்டோ நாடுகளால் தொடர்ந்து நாசமாக்கப்பட்டு வருகிறது.

எதனால்?

அனைவருக்கும் தெரிந்த உண்மையான எண்ணெய் வளத்திற்காக என்பதே அது. பத்தாண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலேயே ஏன் உலக தரவரிசையில் சிறப்பான வளர்ச்சி கண்டிருந்த நாடான லிபியா இந்த நேட்டோ நாடுகளால் சூறையாடப் பட்டது.

ஈராக், சிரியா என பல மத்தியகிழக்கு நாடுகள் முழுமையாக தங்கள் அமைதியை இழந்தது. ஒவ்வொரு நாட்டிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான குடும்பங்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகினர்.

உலகப்பெரு முதலாளித்துவ நாடுகளின் அரசியலை அறியாத  இந்த அப்பாவி மக்கள், அதன் பொருளாதார நலன்களுக்காக இரையாக்கப்படுகின்றனர்.

இந்த நாடுகளின் மீது முதலில் பொய் குற்றசாட்டுகள் சுமத்தப் படுகின்றன. அதற்கு வாய்ப்பில்லாத போது உள்நாட்டில் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக இருக்கும் குழுவினருக்கு ஆதரவு அளித்து கலகத்தின்(அ) சதியின் மூலம் ஆட்சியை தூக்கி எறிகின்றனர், அதுவும் முடியாவிட்டால் ஒரு பயங்கரவாத இயக்கத்தை இவர்களே உருவாக்கி அதனை காரணம் காட்டி குறிப்பிட்ட நாடுகளில் உள்நுழைந்து விடுகின்றனர்.
அதாவது அந்த நாடுகளின் அரசிற்கோ, மக்களுக்கோ தீர்மானிப்பதற்கு எந்த சுதந்திரமும் இல்லை. எங்கோ ஒரு முதலாளி தான் விரும்பிய நடிகைக்கோ அல்லது மாடல் அழகிக்கோ விலையுயர்ந்த பரிசுகள் அளிப்பதற்காக இந்த அப்பாவி நாட்டு மக்கள் உயிரை விட்டுத்தான் ஆக வேண்டும். எதற்காக உயிரை விடுகிறோம், வாழும்கால கொடுமையை அனுபவிக்கிறோம் என்று தெரியாமலே அந்த மக்கள் இவற்றை எதிர்கொள்வதுதான் மிகவும் கொடுமையானது.

மூன்றாம் உலக நாடுகளும், கீழை நாடுகளும் மீளாத் துயரில் இருத்தப்பட்டிருக்க விளையாட்டு, சினிமா, கேளிக்கைகள், மனித உரிமை என்று வளர்ந்த நாடுகள் அமைதியின் உறைவிடமாய் திகழ்கின்றன. சிறந்த வாழ்க்கை, சிறந்த சுற்றுப்புறம், சிறந்த கட்டமைப்பு, சிறந்த கல்வி, உயர்ந்த கார், உயர்தர உணவு என்று எல்லாம் சிறந்ததாகவும் உயர்ந்ததாகவும் இருக்க வேண்டும். ஆம், அவர்கள் அமைதியில் வாழ வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கானோர் அமைதியை தொலைக்க வேண்டி இருக்கிறது.

ஐ.நா மன்றம், மனித உரிமை கவுன்சில், உலக வங்கி, பெருநிறுவனங்களின் அறக்கட்டளைகள் என்று இந்த அமைதியை இழந்தவர்களை நோக்கி படையெடுப்பதன் காரணம் அமைதியை இழந்தவர்கள் கோபப்பட்டு பொங்கி எழுந்துவிடாமல் அவர்களின் தனலை தணிக்கவும், பல்வேறு நாடுகளில்  மக்களின் நிலை பற்றிய தகவலை சேகரிக்கவுமே….( முக்கியமாக அவர்கள் எழுச்சிக்கு தயாராகிறார்களா என்பதை உளவு பார்க்கவே)

நம் நாட்டில் நாமே நிறைய சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும்போது நாம் ஏன் உலகை சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இந்த கட்டுரையை  வாசிப்பவர்களிடம் தோன்றினால் நல்லதே.

நாம் அமைதியை விரும்புகிற மக்கள். நம்மை நோக்கி எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதனை கடந்துப்போய்விட பழகிக்கொண்டவர்களாக இருக்கிறோம்.
நமது வாழ்வு முக்கியம். நமது குடும்பத்தினர், குழந்தைகள் முக்கியம். அடிமைத்தனம் நிறைந்ததாக இருந்தாலும் கூட இன்றைய வாழ்க்கையின் சொகுசு மற்றும் அமைதியினை கைவிட நாம் ஒருபோதும் விரும்புவதில்லை.

அப்போது போர் புரிபவர்கள் போரை விரும்புபவர்களா? நிச்சயம் இல்லை. அவர்களும் நம்மை போன்று அமைதியை விரும்பும் மக்கள்தான்.

ஆனால் போர் அவர்கள்மீது இரண்டு முறையில் திணிக்கப்படுகிறது. முதலாவது அவர்கள் விரும்பாமலே தவிர்க்க முடியாத அளவிற்கு ஏகாதிபத்திய நாடுகளால் திணிக்கப்படுபவை, இரண்டாவது தங்கள் மீது திணிக்கப்படும் அடக்குமுறையை எதிர்த்து தவிர்க்க இயலாமல்(?)நடத்த வேண்டிய போர்.

போர் நடத்தாமலும் இருக்கலாம், ஆனால் அதனை தொடர்ந்து நிரந்தரமாக அடிமைகளாக இருக்க வேண்டி வரும். தங்கள் அமைதியை இழக்க வேண்டி வரும். அடிமைகளாக மாறாமல், அமைதியை இழக்காமல் இருக்க வேண்டுவதற்காகவே நடத்தப்படுவதே ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராக இருக்கிறது. ஆக்கிரமிப்பு போரினை எதிர்க்க வலு இல்லாமல் இருக்கும் நாடுகளின், தேசிய இனங்களின் நிலை மிகவும் சிக்கலானதுதான்.

போரும், அமைதியும் மிகவும் நெருக்கமான உறவு கொண்டவை. போர் அமைதியை விரும்புமாறு செய்கிறது. அமைதி போரை நோக்கி உந்துகிறது. இது மனிதன் வாழ்வதற்கான தத்துவம்.

நமது வாழும், வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்படும் போது அதனை எதிர்த்து வாழ்வதற்கான போர் வாழ்க்கைக்கான போர். ஓரு சிலரின் லாபநோக்குகளுக்காக திணிக்கப்படும் போர் வாழ்க்கைக்கு, அமைதிக்கு எதிரான போர்.

போர் எனப்படும் போது அது பெரும்பாலும் ஆயுதத்தை ஏந்திதான் வருகிறது என்று கருதாதீர்கள். அவை பண்பாட்டு, சமுக, மொழி, மத, சாதி வழியான ஒடுக்குமுறைகளாகவும், அரசின் கொள்கைகளாகவும் வெளிப்படுகிறது.

இன்று நம்மீதும் பல்வேறு முனைகளில் இருந்து பல்வேறு வகையில் போர்கள் துவங்கி நடத்தப்பட்டு வருகின்றன.அவை  நம் வாழ்வியல், வாழ்வாதார உரிமைகள், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சமுகநீதி என அனைத்தையும் மிதித்து நமது எதிர்காலத்தையும், அமைதியையும் அழிக்க முற்படுகின்றன.

இவற்றுக்கு எதிராக ஆயுதம் ஏந்திதான் போராட வேண்டுமென்றும் இல்லை. மக்களனைவரும் வீதியில் இறங்கி நின்றாலே போதும்.

போர் புரிய வேண்டிய நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புவீர்களென்றால், உங்களை வென்றவர்கள் உங்களை ஒருபோதும் அமைதியாக வாழ அனுமதிக்க மாட்டார்கள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அமைதியை விரும்புகிறீர்கள். உங்கள் மீது போர் தொடுக்கிறார்கள். நீங்கள் போர்க்கோலம் பூணுங்கள். அவர்கள் அமைதியை விரும்புவார்கள்.

அபராஜிதன்.