மக்களை நாடற்றவர்களாக மாற்றும் பாசிசம்.-கார்த்திக் பாலசுப்பிரமணியன்

//
Comment0


இந்தியாவில் புதிய தலைவலியாக CAA, NRC கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எல்லோரும் முஸ்லிமிற்கு எதிரான சட்டமாக பார்க்கின்றனர். இது இலங்கை தமிழர்கள் மட்டும் அல்லாமல் தமிழக தமிழருக்கே கூட எதிரானதுதான். இந்த கட்டுரையை நான் எழுதுவதன் மூலம் இந்த அரசு என்னை இதில் எளிதாக சிக்கவைக்க முடியும்.
தமிழன் என்பதால் என்னை எளிதாக இலங்கை தமிழன் என்று கூறி எளிதாக அகதியாக்க முடியும். நான் இந்தியன் என்பதை நிருபிக்க நான் என் தாத்தா இந்தியர்தான் என்பதை நிருபிக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே இந்துத்துவத்திற்கு எதிராக இருக்கும் ஒரே இனமான தமிழர்களை எளிதாக அகதியாக்கி அலைய வைக்க முடியும்.
நம் தமிழகத்தில் பல இலங்கை அகதிகள் முகாமும், அதன் நிலையையும் பார்த்திருப்போம். அடிப்படை வசதி இல்லாத ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக அது இருக்கும். ஆனால் இந்தியாவில் ஒரு அகதிகள் முகாம் உணடு. பல அடுக்குமாடிகளுடன் இயற்கை எழல் சூழ அமைந்திருக்கும். மூசோரியில் உள்ள திபெத்திய அகதிகள் மூகாம் அது. அவர்களுக்கான சலுகை எவ்வளவு என்றால் அந்த ஊரின் காவல்துறையே இந்தோ- திபெத் காவல்துறை தான். மேலும் அவர்கள் தொழிற்தொடங்குவதற்கான வசதிகள் எல்லாம் அதிகம். இதன் காரணம் என்ன ? எல்லா அகதியும் ஒன்றுதான் என்றால் ஏன் அவர்களுக்கு மட்டும் இந்த சலுகை ?
ஆங்கிலேயரை எதிர்த்து போருக்கு அனுப்பிய தன் மகன்கள் இருவரது தலைகளையும் வெட்டி தட்டில் வைத்து ஹட்சன் என்ற ஆங்கிலேயன் தந்தபோது…

பார்த்தவுடன் கலங்கி விடுவார் என்ற எதிர்ப்பார்ப்புக்கு மாறாக.. இந்திய மன்னன் “பகதூர் ஷா ஜாபர்” கொஞ்சம் கூட கலங்காமல் அடுத்த போருக்கு நான் வருகிறேன் என்று கூற..

அதற்கு ஆங்கிலேயன்.. உங்கள் கண்ணில் நீர் வற்றிவிட்டதா மன்னா என்று கேட்க.. வீரமுடைய மன்னன் என்றும் அழுவதில்லை என்று மன்னன் பகதூர் ஷா பதில் கூறியது இன்னும் வரலாற்றில் இருக்கிறது…

இப்படிப்பட்ட பல வீர வரலாறு கொண்ட இந்த நாட்டின் பூர்வ குடி மக்களுக்கு..
தன் தாய் நாட்டை காட்டிக் கொடுத்து சுதந்திரமே வேண்டாம் என்று
ஆங்கிலேயன் காலடியில் மண்டியிட்டு வாழ்ந்த அடிமை கூட்டம் குடியுரிமை கிடையாது என்று சொல்கிறது…

வரலாறு சொல்லும் யார் இந்த தேசத்தை நேசித்தனர் என்று.

இந்த சட்டம் இந்துக்களின் ஒரு பிரிவினருக்கு மட்டுமே ஆதரவான சட்டம் என்பதை விளக்க இன்னோரு உதாரணம், அவர்கள் இஸ்லாமிய மதத்தினரை மட்டுமே இங்கு குறிப்பிடுகின்றனர். கிறித்துவர்களை அல்ல. இந்த சட்டம் யாருக்கும் வரக்கூடாது என்பதுதான் என் நோக்கமே அன்றி அவர்களையும் சேர்க்க வேண்டும் என்பது அல்ல. இருந்தாலும் உலகில் நிறைய கிறித்துவ நாடுகள் இருக்கும் போது ஏன் அவர்களுக்கு மட்டும் விலக்கு என்றால், அவர்கள் மீது கை வைத்தால், அந்தந்த கிறித்துவ நாட்டில் வாழும் அவாளின் வேலைகள் பாதிக்கும் என்பதே. இஸ்லாமிய தேசங்கள் ஒற்றுமையுடன் இல்லாத ஒரே காரணத்தால் மட்டுமே அவர்களை எல்லா நாட்டினரும் ஒதுக்கி வைக்கின்றனர்.
நாளை இதே சட்டத்தை மாற்றி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் இரண்டாம் குடிமக்களாக மாற்ற முற்படுவார்கள்.

‘இறுதியில், நாம் நம் எதிரிகளின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து பார்ப்பதில்லை,மாறாக நினைவுக்கு வருவது நமது நண்பனின் அமைதியே’ – மார்டின் லூதர் கிங்.

இப்போது நாம் இதை எதிர்க்கவில்லை என்றால் அது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம். சமீபத்தில் சிரியாவில் கடற்கரையில் இறந்து கிடந்த அந்த குழந்தை ஆலன் போல் அகதியாக நாமும் நமது சந்ததியினரும் இதே வங்காள விரிகுடாவில் இருக்கும் ஆபத்தை உணர ஆரம்பியுங்கள்.

கம்யூனிசத்தில் ஆங்கிலத்தில் ஒரு பாடல் உண்டு.

முதலில் அவர்கள் சோசலிஸ்டை தேடி வந்தனர்,
நான் சோசியலிஸ்ட் இல்லை. அமைதியானேன்.
பின்பு தொழிற்சங்கவாதிகளை ,தேடி வந்தனர்
நான் தொழிற்சங்கவாதியில்லை என்பதால் அமைதியானேன்.
பின்பு யூதர்களை தேடி வந்தனர்
நான் யூதனில்லாததால அமைதியானேன்.
இப்போழுது அவர்கள் என்னை தேடி வந்தனர்
இப்போழுது எனக்காக பேச யாரும் உயிருடன்இல்லை.

மறக்காதீர்கள். நம்முடைய மௌனம், கொடிய நாகத்தின் நஞ்சை விட ஆபத்தானது.


கார்த்திக் பாலசுப்பிரமணியன்.