மக்கள் களங்களும் பிரச்சனைகளும்: அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது போராட இயலாத வகையில் சமீபத்திய தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாநில அரசினை எதிர்த்துப் போராடக் கூடாத வகையில் சட்டங்களையும் தாக்குதல்களையும் சதி வலைகளாக ஏவி விடுகிறது ஆளும் அரசு.

மண்ணையும் காற்றையும் நச்சாக்கி பொதுமக்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தூத்துக்குடியில் நடந்த 100 நாள் போராட்டத்தையடுத்து ஆட்சியருக்கு மனு அளிக்கும் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற்ற வேண்டுமென்பதற்காக போராடிய பத்து பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று கதிராமங்கலம் அய்யனார் கோயிலில் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலத்தில் தங்களுடைய மண்ணை காக்க போராடி வருகிறார்கள். இதற்காக போராடிய பத்து பேரை கைது செய்துள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மக்களும், எல்லோரும் வலியுறுத்தும் போது, விடுதலை செய்ய அரசு ஏன் தயங்குகிறது?

தேசியப் புலனாய்வு முகமையின் சட்ட வரைவுகள் மக்களுக்காய் போராடும் போராளிகளின் மீது திட்டமிட்ட கட்டற்ற வன்முறையை ஏவியுள்ளது.
தேசியப் புலனாய்வு முகமைக்கு சி.பி.ஐ-யைவிட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி, எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார்மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தேசியப் புலனாய்வு முகமைக்கு முழு அதிகாரம் உண்டு. இதற்குக் குறிப்பான மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இணையக் குற்றப்பிரிவு (66F) என்.ஐ.ஏ.-வின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. போராளிகள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து, அரங்கேறி வரும் நிலையில் இச்சட்டமானது போராளிகளே இல்லாத கைக்கட்டி வாய் மூடி கிடக்கும் அடிமை வாழ்க்கையை திணிக்கும் வகையில் அமைந்திருப்பது என்பதில் ஐயமேதும் இல்லை.

இந்தச் சட்டத்தின்படி ஒருவர் மீது சந்தேகம் இருந்தாலே, அவரைக் கைதுசெய்து விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கலாம். மேலும் அந்த நபர் ஏன் கைதுசெய்யப்பட்டார், எதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார் என்ற விவரங்களை FIR-ல் கூறவேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் இந்தியாவிற்கு எதிரான முழக்கம்கொண்ட ஒரு சிறிய காகிதத்தை வைத்திருந்தால்கூட அவரைக் கைதுசெய்ய இயலும்.

இச்சட்டங்களுக்கு அஞ்சாது போராடத் துணியும் போராளிகளுக்கு தனி நபர் வருமானம் மற்றும் குடும்ப சூழல் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.

தேசப்பாதுகாப்பு என்ற போர்வையில் தேச மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், அடிப்படையான போராட்ட உரிமைகளையும் பறிக்க அரசு சிறிதும் தயங்குவதேயில்லை.

மத்திய மாநில அரசுகளின் இந்த அராஜகப்போக்கு மக்களின் மத்தியில் தொடர்ந்து போராடும் போக்கிற்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறுபட்ட பிரச்சனைகளை புது திட்டங்களாக அரசு வெளியிடுவதும் மக்கள் தொடர்ந்து போராடுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.தொடர்ந்து மக்களால் நடர்தப்படும் போராட்டங்களுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் சட்டங்கள், கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரச, அரச ஆதரவு வன்முறைகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

அனிதா தொடங்கி ஜோதிஸ்ரீதுர்கா வரை உயிர்களை காவு வாங்கியிருக்கும் நீட் தேர்வின் கோரமுகங்களுக்கு யாரிடம் போராடுவது.பல அச்சங்களை கடந்து மனித சமூகத்திற்கு விடிவை கொண்டுவர பாசிச அரசை நோக்கி போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே தான் இருக்கிறது.

மக்கள் பொறுமையுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. சாமானிய மக்கள் கோபம் கொண்டால் பேரரசுகளும் நொடியில் சரிந்திருக்கும் வரலாறு இவ்வுலகில் பல உண்டு.

இந்த அரசு தனக்கான சவக்குழியை தானே வெட்டிக் கொண்டிருக்கிறது.

அஸ்வினி கலைச்செல்வன்.