முன்னறிவிக்கப்பட்ட உண்மை- அபராஜிதன்.

//
Comment0

வரலாறு எப்போதும் நம்மை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் வழக்கம் போல அதனை உதாசீனப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறோம்.

ஒரு நாட்டில், குறிப்பிட்ட ஆட்சியில் அல்லது காலகட்டத்தில் தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆட்சி மாற்றம், சமுக மாற்றம் மக்களுக்கு தேவைப்படுகிறது.ஆனால், புரட்சிகர சக்திகளோ சிதறுண்டு கிடக்க, ஜனநாயக முற்போக்கு சக்திகள் பெருநிறுவன முதலாளிகளின் விருப்பங்களுக்கு உகந்ததாய் இல்லாத நிலையில், வலதுசாரிகளையும் விடுத்து, தீவிர வலதுசாரிகளைத்தான் இன்றைய ஏகாதிபத்திய நிறுவனங்கள் ஆட்சியில் அமர அனுமதித்திருக்கிறது.

அமெரிக்காவின் டிரம்ப், இந்தியாவின் மோடி, பிரேசிலின் போல் சொனாரோ, இங்கிலாந்தின் ஜான்சன் ஆகியோர் அதற்கு சிறந்த உதாரணங்கள்.

கடுமையான குழப்பத்தில் ஒரு நாடு சிக்கியிருக்கும் போது மக்களின் உணர்வை தூண்டுவது மிகவும் எளிது. நடந்துக் கொண்டிருக்கும் தவறுகளுக்கு யார் மீதாவது குற்றம் சுமத்தி அதை மீண்டும் மீண்டும் மக்கள் மனதில் பதிய வைத்து வெறியூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள்தான் காரணம் என்றும் அவர்களை அகற்றுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணமும் மக்கள் மனதில் உருவாக்க வேண்டும். இவையெல்லாம் தேசபக்தியின் பெயராலேயே பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இது ஒரு சூத்திரம்.

இந்த சூத்திரத்தை அச்சு பிசகாமல் பா.ஜ.க வும், ஆர்.எஸ்.எஸ்-ம் படிப்படியாக நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகையில் நாம் என்ன செய்துக் கொண்டிருந்தோம். காங்கிரஸ் எதிர்ப்பில் மும்முரமாக இருந்தோம், இப்போது பா.ஜ.க எதிர்ப்பில் மும்முரமாக இருக்கிறோம். யாரை எதிர்க்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறோமே தவிர யார் வரவேண்டும் என்பதில் நமக்கு தெளிவில்லை.

இந்தியாவில் இப்போது நடைமுறைப்படுத்தப்படும் ஒவ்வொரு மக்கள் விரோத சட்டத்திற்கும், நடக்கும் பாலியல் வன்முறைக்கும், சாதிய,மத வன்முறைகளுக்கும், அறிவுத்துறையினர் மீதான அடக்குமுறைகளுக்கும் நாம் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

நாம் கொடுத்து வரும் குரல்கள் இந்த அநீதிகளை தடுக்கும் அளவிற்கும் வலுவானதாக இல்லை என்பதையும் அனைவரும் உணர்கிறோம்.

அவர்கள் தாக்குதல் தொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். நாம் யோசிப்பதற்கு கூட நேரம் தராமல் தொடர்ச்சியாக தாக்குகின்றனர். நீதித்துறை,இராணுவம், உளவுத்துறை, காவல்துறை, ஊடகத்துறை, அரசு நிர்வாகம் என சகலத்தையும் பயன்படுத்தி அவர்கள் தாக்கிக் கொண்டிருக்கும் போது நாமோ நிராயுதபாணிகளாக நின்று கொண்டு தடுப்பாட்டம் கூட ஆட முடியாமல் இருக்கிறோம்.

ஒரு பாசிச அரசின் வளர்ச்சி,வழிமுறை போன்றவை வரிசைக்கிரமமாக அச்சு பிசகாமல் முன்னறிவிக்கப்பட்ட உண்மையாக வரலாற்றில் நமக்கு காண கிடைக்கிறது. இது போன்ற பாசிச ஆட்சியினை எதிர்கொள்வதற்கும், முறியடிப்பதற்கும் கூட அதிலே அனுபவங்கள் விரவிக்கிடக்கின்றன. நாம் அவற்றை எடுத்துக்கொள்வதும் இல்லை, மதிப்பதும் இல்லை. மேலும் அவைகள் கணிசமாக மாறியிருக்கும் இன்றைய நவீன காலகட்டத்தில் காலாவதியாகிப்போனவை என்றும் கருதுகிறோம். அதை விடுத்து ஆர்.எஸ்.எஸ் போன்ற ஒரு அமைப்பை கட்ட வேண்டும் என்பதே பலரது விருப்பார்வமாக இருக்கிறது. ஒரு பாசிச அமைப்பு தன்னை வளர்த்து கொள்வது போன்ற வழிமுறைகளில் ஒரு புரட்சிகர சனநாயக அமைப்பு தன்னை வளர்த்துக் கொள்ள முடியாது. ஏறத்தாழ 90 ஆண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றியிருக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க பாசிச அமைப்பு போன்று நாமும் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து வெற்றி பெறலாம் என்பதான கற்பனைவாதமாக அது இருக்கிறது.

பா.ஜ.க மட்டுமே ஆர்.எஸ்.எஸ்- ன் அமைப்பு அல்ல, காங்கிரசும் அதன் அமைப்பே. அரசியலில் இரு வேறு துருவங்களாக நின்றாலும் ஆர்.எஸ்.எஸ்- ஐ காப்பாற்றுவதில், வளர்த்தெடுப்பதில் அனைவரும் ஒன்றுபட்டே நிற்கின்றனர்.

நமது புரட்சிகர, ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள் கொடுங்கோல் அரசுக்கு எதிராக வேலை செய்வதை விட ஒருவருக்கொருவருக்கு எதிராக வேலை செய்வதில்தான் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

முன்னறிவிக்கப்பட்ட உண்மைகள் தீர்க்கமாக நமக்கு சில வழிமுறைகளை சுட்டுகிறது. அவைகளை விடுத்து மிகவும் நீண்ட, குறுக்கு வழிகள் ஆகிய இரண்டுமே பாசிச ஆட்சியினை ஒழிப்பதற்கான தீர்வுகள் இல்லை.

முதலில் புரட்சிகர, ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள் தங்களுக்குள் விரிவான ஒரு விவாதத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை துவங்க வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. முன்னறிவிக்கப்பட்ட உண்மைகளை பின்தொடர்வதன் மூலம் நாம் முன்நகர்வோம்.