வள்ளுவமும் வரலாறும்- விக்கி கண்ணன்

//
Comment0

திருவள்ளுவருக்கு காவி ஆடையை வழங்கி அவரை இந்து சமயத்தவராக காட்டும் போக்கு சமீபகாலமாக நிகழ்ந்து வருகிறது. திருவள்ளுவர் சைவரா, வைணவரா, பௌத்தரா,ஜைனரா, ஆசீவகரா, ஸ்மார்த்தரா, கிருத்தவரா என்பதெல்லாம் முடிந்த முடிபாக கூற இயலாதது. மேற்குறிப்பிட்ட சமயத்தவர்களில் சிலர் ‘க்ரூப்ல டூப்பு’ என்பது உலகறியும். ஆனால் வள்ளுவரை பிற சமயத்தவர்கள் எத்தனை நூற்றாண்டுகளாக கொண்டாடுகிறார்கள்? என்பது மிக முக்கியமான கேள்வி.

வள்ளுவரையும் அவரது திருக்குறளையும் ஏறத்தாழ ஆயிரமாண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக மேற்கோள் காட்டி இணைத்து வருவது சைவம். ஆங்கிலேயர் காலத்தில் திருக்குறள் உலகளவில் பிரபலமான பின்னர் பிற சமயங்களும் இந்த கோதாவில் இறங்கினர். இதுகுறித்து விரிவான ஒரு கட்டுரையை முன்னரே நான் எழுதியுள்ளேன். அதன் சுட்டி மறுமொழியில். இப்போது விடயம் அதுவல்ல. வள்ளுவர் சைவர் என்று கூறுவோர் அவருக்கு காவி ஆடை வழங்கியது தான்.

பண்டைய சைவத்தில் வெள்ளை ஆடை மரபு தான் இருந்தது. சமய குரவர்கள் நால்வரும், சந்தான குரவர்கள் நால்வருமே கூட வெள்ளை ஆடை தரித்தவர்கள் தான்.

சமண சமயத்தில் இருந்து சைவம் தழுவிய திருநாவுக்கரசர் குறித்து பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறும்போது,

” பொய்தருமால் உள்ளத்துப்
புன்சமணர் இடங்கழிந்து
மெய்தருவான் நெறியடைவார்

வெண்புடைவை #மெய்சூழ்ந்து

கைதருவார் தமையூன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தவமா தவர்வாழுந்
திருவதிகை சென்றடைவார்” – திருநாவுக்கரசர் புராணம் – 61

பொழிப்புரை: பொய்யைத் தரும் மயக்கமுடைய உள்ளத்தராகிய இழிந்த சமணர்கடளித்தினின்றும் நீங்கி, மெய்யுணர்வை வழங்கி அதனால் வீடுபேற்றைத் தருபவனாகிய சிவபெருமானின் நன்னெறியை அடைபவராய், அதற்கேற்றவாறு #வெண்மையான #ஆடையை உடலில் உடுத்திக் கொண்டு, கைகொடுத்துத் தம்மைத் தாங்கி வருவார்மீது ஊன்றியவாறு, சமணர் காணாத வண்ணம், தவம் செய்யும் மாதவர் வாழ்கின்ற திருவதிகையை இரவில் சென்று அடைவாராய்.

குறிப்புரை: வெண்புடைவை மெய் சூழ்ந்து – சமணரின் காவி உடையை நீக்கிச் சைவருக்குரிய வெண்மையான உடையை அணிந்து.

காவி என்பது வெறும் வண்ணம் மட்டுமல்ல. வெள்ளாடை தரித்து சன்யாசம் சென்றபின் அழுக்கு பொதிந்து அது காவியாக மாறியது. முடிவில் அதுவே அடையாளமாகி போனது. பௌத்த துறவிகளின் காவி உடை என்பது அழுக்கு பொதிந்தது தான். அது பௌத்தரின் அடையாளமானது. அதேபோல் வேதாந்திகள் சன்யாசம் சென்றதால் காவி ஆடையை தரித்தனர்.

இல்லற வாழ்வில் இருந்து துறவு பூண்டவர்கள் வெள்ளாடை மரபினரே. சந்தான குரவர்களில் உமாபதி சிவாச்சாரியார் கோவில் பூஜை செய்தவர். இல்லற வாழ்வில் இருந்தவர். அவர் காவியாடை உடுத்தினார் என்பது ஏற்கவே முடியாதது. அதேபோல் குருஞானசம்பந்தரின் ஆசிரியரான கமலை ஞானப்பிரகாசர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டவர். 15ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த கண்ணுடைய வள்ளலார் திருஞானசம்பந்தரை குருவாக கொண்டவர். ஐக்கியவாத சைவத்தினை தொடங்கிய இவரது ஆதினம் கடந்த நூற்றாண்டு வரை சீர்காழியில் செயல்பட்டு வந்தது. இவ்வாதீனத்தை ‘வெள்ளை வேட்டி மரபினர்’ என்று அழைப்பர். ஏனெனில், இந்த மரபு இல்லறத்தில் இருந்து துறவு நிலைக்கு வந்தவர்கள். தாயுமானவர்கூட இல்லறத்திலிருந்து துறவு நிலைக்குவந்த வெள்ளாடை தரித்த மகான்.

இந்த வாரிசின் தொடர்ச்சியாக இராமலிங்க சுவாமிகளும் ஞானசம்பந்தரை குருவாகக்கொண்டு சைவ நூல்களிடையே திளைத்து சைவ சமயத்தில் ஒளிந்து மலிந்து கிடக்கும் சடங்குகளையும் சாதி சாத்திரங்களையும் பழிக்கும்படி சமய சமூக சீர்திருத்தப் பாடல்களாக ஆறாம் திருமுறையில் வெளியிட்டார்.

இராமலிங்க சுவாமிகளை ‘வெள்ளை வேட்டி பரதேசிப் பண்டாரம்’ என்றே சிலர் அக்காலத்தில் அழைப்பார்கள். ‘பிள்ளைப்பெரு விண்ணப்பம்’ பகுதியில், “மெய்யுறக் காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்” என்று சுவாமிகள் பாடியதிலிருந்து அடிகள் வெள்ளாடையினர் என்பது புலனாகிறது.

வள்ளலார் தன்னுடைய வெள்ளி அம்பலத்து மகரிஷிகளுக்கு வேண்டிய வெள்ளை மல்பீஸ்களும், வெள்ளை லாங் கிளாத் துணிகளும், தலைப்பாகைத் துணிகளும் வாங்கி அனுப்பிய செய்தி அவரது வாழ்க்கை வரலாற்றில் அறிய நேரிடுகிறது.

எனில் சைவத்தில் காவி ஆடையே இல்லையா? என்றால் கட்டாயம் உண்டு. ஆனால் அது காபாலிக சைவத்தில் உண்டு. காபாலிகள் காவியுடை அணிந்த செய்திகள் தேவாரத்திலேயே கிடைக்கின்றன.

“கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்” (6.8.6)

“கல்லாடை புனைந்த காபாலி காண்” (6.92.2)

‘கல்’என்பது சிகப்பு நிறத்தினை குறிக்கும். கல்லால மரம் என்பதும் ஆலமரத்தில் காய்க்கும் சிகப்பு நிற பழங்களை குறித்து சுட்டப்படும் பெயர்.

“கல்லாலின் கீழிருந்த காபாலி காண்” (6.8.8)

ஆதினங்கள் காவியுடை தரிக்கின்ற மரபு வெகுபிற்காலத்திய மரபு. அதோடு இல்லற வாழ்வை கண்டிராத மரபும் கூட. சைவ சித்தாந்த மரபில் காவியுடை தரிப்பது என்பது மிக சமீபத்திய வழக்கம். வள்ளுவர் புலால் மறுப்பு குறித்து பேசுவதாலும் உயிர் கொல்லாமை குறித்து பேசுவதாலும் கபாலிக சைவர் பட்டியலிலும் அடைக்க முடியாது.

ஆனால் திருவள்ளுவர் காமத்துபால் அதிகாரம் எழுதியவர். வாசுகி என்ற துணைவியை பெற்றிருந்தவர். இல்லறத்தில் இருந்து துறவறம் நோக்கி நகர்ந்தவர். திருவள்ளுவருக்கு காவியாடை வழங்குவது என்பது அவரை இன்றுள்ள போலி காவி சாமியார்கள் பட்டியலில் சேர்க்கும் ஒரு இழிவான விடயம். காவியாடை தரித்து காமகளியாட்டம் ஆடிய சங்கராச்சாரியாரை போன்று நித்தியானந்தாவை போன்று கீழ்த்தரமானவர்கள் பட்டியலில் வள்ளுவரை சேர்க்க முற்படுவது கேவலமான செயல்.

வள்ளுவரை காவியாக்க முற்படுவோருக்கு திருக்குறளும் தெரியாது. தத்துவமும் தெரியாது. வரலாறும் தெரியாது. சைவமும் தெரியாது. வள்ளுவரை சைவராக்குவதற்கும் வள்ளுவரை காவியாக்குவதற்குமான வேறுபாடுகள் நிறைய உண்டு.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் #கூத்தாடும் என்பது சிலம்பு கண்டிராத புதுமொழி.

விக்கி கண்ணன்.

Leave a Reply