வேளாண் சட்டங்கள்- ஒரு விரிவான ஆய்வு- வளவன்.

//
Comment0

கொரோனா காரணமாக தனது பிரத்தியேக அதிகாரத்தை பயன்படுத்தி அவசர அவசரமாக மூன்று வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் வைக்காமல் இயற்றி, பின் களேபரங்களுக்கிடையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அது பற்ற வைத்த நெருப்பு மாநில வாரியாக கனன்று,  இந்திய தேசத்தின் விவசாய பெருமக்கள் தலைநகர் புது தில்லியில் நிகழ்த்துகிற அறம்சார் மக்கள்திரள் போராட்டம் இன்றைக்கு இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.

யூனியன் பிரதேச மக்கள் பிரதிநிதிகளின் தலைமை அமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுச்சிறை வைக்கப்பட்டுள்ளதாக இருவேறு தகவல்கள் விவாதிக்கப் பட்டு வருகிறது. பல்வேறு விதமான அரசியல் கற்பித சடுகுடுக்கள்,   இந்தப் போராட்டத்தைச் சுற்றி ஆடப்படுகிற வேலையில், நேர்மையாக எந்தப் வண்ணப் பூச்சும் இன்றி விவசாய அமைப்புகள் அணி வகுத்து இருக்கின்றனர். இவ்வளவுக்கும் காரணமான மூன்று மசோதாக்களை நிறைவேற்றியவர்களை நினைவு கூறும் வேளையில், இந்த ஏர் உழும் அபிமன்யுக்களால் உடைக்க முடியாது என்றெண்ணி அவர்கள் கட்டி எழுப்பிய மூன்று அடுக்க சக்ர வியூகங்கள் (மூன்று வேளாண் மசோதாக்கள்) குறித்து ஒரு பார்வையாக இந்தக் கட்டுரை.

அத்தியாவசிய பொருட்கள் (திருத்தச் சட்டம்), 2020:
இதன்படி உணவு தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், உணவாகும் எண்ணெய் வித்துக்கள், எண்ணெய் ஆகியன அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955ல் இயற்றப்பட்டது. இதன்படி, அத்தியாவசிய பொருட்கள் என்று பட்டியலிடப்படும் பொருட்களை வணிக நோக்கில் பதுக்கல், கூடுதல் விலை ஏற்றம் ஆகியவை மீது நடவடிக்கை எடுக்கவும், அவற்றை மீட்டு பொது சந்தைக்குக் கொண்டு வரவும், உச்சபட்ச விலையை அரசே நிர்ணயம் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. இப்போது நமக்கு எழும் கேள்வி வெங்காயமும், உருளைக்கிழங்கும் நீக்கப்பட்டதன் பின் உள்ளது நிர்வாக சீர்திருத்தக் காரணமா அல்லது கலாச்சாரப் புல்லுருவிகளின் வெளிப்படைத் தாக்குதலா என்பதே. கடந்தாண்டு இதே டிசம்பர் மாதம் நாட்டின் நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்கள் “நான் வெங்காயம் சாப்பிடுகிற குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல” என்று வெங்காய விலையேற்றம் குறித்த கேள்விக்கு மேட்டிமைத் தனத்துடன் பதிலளித்தார். எனினும் கடந்த ஆண்டு மத்திய, மாநில அரசுகள் விலையேற்றத்தை குறைக்க எகிப்து வெங்காயம் வரை இறக்குமதி செய்ய காரணம் அது அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்தது தான். அப்படி அரசுகள் செய்யாமல் இருந்திருந்தால் சட்டப்படி நீதிமன்றத்தை நாடலாம் என்கிற ஒரு வழியும் இருந்தது.

இப்போது  இந்த புதிய சட்டத்தின்படி இனி உணவு தானியம், பருப்பு, உருளைக்கிழங்கு, எண்ணெய், வெங்காயம் என எதன் விலை ஏறினாலும் அதன் பதுக்கல் தடுப்புகளை அரசுகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. பெரு முதலாளிகளான பதுக்கல் பெருச்சாளிகள் இனி தேவையைக் கூட்டி விலையேற்ற வேண்டாம். மாறாக, எப்போது வேண்டுமானாலும் விலையேற்றிக் கொள்ளலாம். ஏனெனில்க பட்டியலில் இல்லாத பொருட்களின் உச்சபட்ச விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் சட்டப்படியில்லை. முழுமையான கட்டுப்பாட்டை விட்டதாக காட்டாமல் இருக்க சட்ட திருத்தத்தின் 2 வது பிரிவு (ஆ)பகுதியின்படி, ஒரு பொருளின் கடந்த 12 மாதங்களுக்குள்ளான விலையையும், கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையையும் எடுத்து, அவற்றுள் குறைவாக உள்ளதை, அன்றைய நாளின் விலையோடு ஒப்பிடுகையில் உழவுப் பொருட்கள் 100% விலையேற்றம் அடைந்தாலோ அல்லது நீண்ட நாள் சேமிக்கத் தக்க கெட்டுப் போகாத விளை பொருட்கள் 50% விலையேற்றம் அடைந்தாலோ அரசு விலை நிர்ணயத்தில் தலையிடும் என்கிறது அந்த பிரிவு. அதாவது 100 ரூபாய் விலையுள்ள பொருள் 199 ரூபாய் வரை போனால் அரசு தலையிடாது என்பது திண்ணம்.

அப்படி 100% விலையேற்றம் அடையும் பொழுது அரசு தலையிடுவது என்பது தங்களினால் முடிந்த பதப்படுத்தம் அளவிற்கான உணவை சேமித்து (பதுக்கி) வைத்துள்ள தொழிற்சாலைகளையும், பிற நாடுகளுக்கு தேவையின் காரணமாக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்தாது என்கிறது அந்தப் பிரிவு. அரசு தலையிட்டாலும் தொழிற்சாலை, ஏற்றுமதி பெருநிறுவனங்களை எல்லாம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றால் மீதமுள்ளது சிறு, குறு விவசாயிகள் தான். அவர்களினை ஒழுங்குபடுத்தி விலையேற்றத்தைக் குறைத்தல் என்பது ஜிகினா வேலை. இதன் மூலமாக அவர்களை உளவியலாக  ஒரு பெருநிறுவனத்துக்கு தங்கள் விளைபொருட்களை தந்து விடலாம் என்று எண்ணச் செய்கிற ஒரு இடைத்தரகர் வேலையை அரசே கையிலெடுக்கிறதோ எனும் ஐயமும் எழுகிறது.

2018 – 19 ல் 23.5 மில்லியன் டன் வெங்காயம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, 3.25 மில்லியன் டன் ஏற்றுமதி மூலமாக 5,356 கோடி வருவாய் வந்துள்ளது. 2023 ல்  உலகளவில் 37.4% வெங்காயம் இந்தியாவில் விளைவிக்கப்படும் என்கின்றன கணிப்புகள். இந்த புதிய சட்ட திருத்தம், கூடுதல், முறைப்படுத்தப் படாத விலையேற்றத்தை நினைத்த நேரத்தில் உருவாக்கவும், நினைத்த அளவு எவ்வளவு வேண்டுமானாலும் தங்களின் குடோன்களில் பதுக்கலாம், அரசு கேட்க அதிகாரமில்லை எனும் தன்மையையும், உள்நாட்டு மக்களை வாங்கும் தன்மையற்றவர்களாக ஆக்கி, மொத்தத்தையும் வெளிநாட்டிற்கு வெளிப்படையான கடத்தல் நிகழ்த்தவும் உறுதியான கட்டமைப்பினை நிறுவுகிறது.

கூடுதலாக, நாம் சாப்பிடாத  வெங்காயத்தை இவர்களுக்கு எதற்கு செலவு செய்து வாங்கித் தர வேண்டும் என்று தன்னைப் போல மொத்த தேசத்தின் உணவு கலாச்சாரத்துக்கும் காவி அடிக்கிற  முயற்சியா என்பது உபரி கேள்வி.

இரண்டாவது சட்டம், “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020”. இதன் பிரிவுகள் பின்வருமாறு வகை செய்கின்றன.
2(அ): வேளாண் விளைபொருள் சந்தைக்குழு மண்டலம் (Agriculture Produce Market Committee Yard) என்கிற நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.
பிரிவு 3(1): எந்த விவசாயியும் தனது விளைப் பொருட்களுக்காக கொள்முதல் வணிகர்களுடன் (Sponsor) எழுத்துப் பூர்வ ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அந்த பத்திரத்தில் விளைப் பொருட்களின் தரம், கொள்முதலுக்கு தரும் காலம், விலை, தன்மை ஆகியவை குறித்தும், வயலுக்கான உபகரணங்கள் வாங்குபவை குறித்தும் இடம்பெறலாம்.
பிரிவு 3(3) : குறைந்தது ஒரு அறுவடைக் காலமோ, ஒரு பயிரின் சாகுபடி காலமோ அல்லது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செய்யலாம். ஐந்தாண்டுகள் தாண்டிய பயிர்களுக்கான ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்வார்கள்.

கேள்வி: ஒரு வருடம், இரண்டு வருடத்திற்கு பிறகு விளையப் போகிற பொருட்களுக்கு முன்னமே விலையை ஒப்பந்தம் செய்தல் ஏற்புடையதல்ல. Sponsor எனும் பெயரில் ஒவ்வொரு இடத்திலும் உள்ளே நுழைய போகிறவர்கள் யார் எனும் கேள்வி நிற்கிறது. ஒரே நாடு ஒரே வேளாண் பொருள் கொள்முதல் விலை கொடுக்க எது இவர்களை தடுக்கிறது.
இப்படி செய்யப் படுவதனால் அரசின் கூட்டுறவு கொள்முதல் நிலையங்களை விட்டு கூடுதல் விலை தருவதாக தனியார் அழைக்கும் பட்சத்தில், அதை நோக்கி ஆரம்ப காலத்தில் நகரும் உற்பத்தியாளர்களினால், அரசின் “பொது விநியோகத் திட்டம்” (ரேஷன் கடை) மூடப்படும். அரசு கொள்முதல் செய்யும் நிலை போன பிறகு உள்ளூர் மண்டிகளும் தேய்ந்து, பின்னாளில் தனியார் தரும் விலை மட்டும் தான் என்றாகும் பொழுது, விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எப்படி விவசாயிகள் வசம் வரும்?

பிரிவு 4(2(ஆ)) : பயிர்களுக்கான தர நிலைகள் (ரேங்க் முறை)  மத்திய, மாநில அரசுகளோ அல்லது அவை நிறுவும் நிறுவனங்களோ செய்யும்.
கேள்வி: பயிர்களுக்கு தரநிலை (ரேங்க்) வழங்குமிடத்தில் ஒட்டு மொத்தமாக ஓய்வு பெற்ற விசுவாச அதிகாரிகள் அல்லாமல் விவசாய சங்கத்தினர் பிரதிநிதித்துவம் பாதிக்கு மேலாக இருத்தல் அத்தியாவசியம். அரசு நியமிக்கும் நிறுவனம் அரசு நிறுவனமாயிருக்குமா?

பிரிவு 4(4) : பயிர்கள் விளையும் பொழுது, அவற்றின் தரம், தன்மை குறித்து தொடர்ந்து ஆராயவும், அதற்கான சான்றிதழ் தரவும், சார்பற்ற மூன்றாவது நபர்கள் நியமிக்கப் படுவார்கள்.

கேள்வி: கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வறிக்கையின் படி ஆசியாவில் அதிக இலஞ்ச விகிதமுள்ள முதல் நாடான இந்தியாவில், நல்ல தரநிலை சான்றிதழ் பெறுவது என்பது பெரிய விஷயமல்ல. இதுவரை இடைத்தரகர்களுக்கு தந்த பணம், அரசு நியமன சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கு மடைமாற்றமாக்கும் முயற்சியாக இது பரிணமிக்கும். சார்பற்ற மூன்றாவது நபரை சார்புடையவராக்குதல் எனும் முயற்சி ஸ்பான்சர் எனும் பணம் படைத்த கொள்முதலாளர்களுக்கு சவாலானதாக இருக்காது. இடைத்தரகர் ஒழிப்பு என்று சொல்லி இடையில் ஒருவரை அரசே நியமித்தல் நகைப்பிற்குரிய நடவடிக்கை.

பிரிவு 5(அ) : பயிரிடும் முன்பே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்முதல் விலையில், விளைச்சலுக்கு பிறகு மாறுதல் ஏற்படும் சமயத்தில்,ஒப்பந்தத்தில் முன்னதாகவே குறிப்பிட்டுள்ள ஒரு உறுதி ஆதார விலையை வழங்க வேண்டும்.
பிரிவு 5(ஆ): கூடுதல் விலை வழங்கப்படும் போது, அதற்கான வரையறையை, அந்த குறிப்பிட்ட விலை நிலம் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழு மண்டலத்தில் (APMC Yard) வழங்கப்படும் விலையை பொறுத்து எவ்வளவு கூடுதல் என்று நிர்ணயிக்கலாம்.

கேள்வி: வணிக நோக்கோடு கொள்முதல் செய்வோர் இயற்கை சீற்றத்தால் பாழாகிற அல்லது பூச்சிகளால் உண்ணப்படும் பயிர்களுக்கும் முன்னர் குறிப்பிட்ட விலையினை எப்படி வழங்கிட சம்மதிப்பார்கள். ஒரு வேலை இது விவசாயிகளுக்கான நன்மையான புள்ளி என்று எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் எழும் கேள்வி, குறிப்பிட்ட தரத்தை விட கூடுதலாக விளைவித்தவர்களுக்கு நேர்மையான விலை தரப்படுமா?
உதாரணத்திற்கு ஏக்கருக்கு ₹2,000  என்று பேசி ஒப்பந்தம் செய்த பிறகு, மிகச் சிறந்த தரத்தில் விளைவித்த விவசாயி கூடுதல் விலை கோருகிறார். சட்டப்படி அந்த மண்டலத்தில் அதே பயிருக்கு போகிற விலையின் அளவை பொறுத்து கூடுதல் விலை வழங்க வேண்டும். இந்த விவசாயி விளைத்த பயிருக்கு ₹1,500 உச்சபட்ச  விலையாக போகிறது எனும் பட்சத்தில் எப்படி கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்படும்.  ஒரு வேளை மிகப்பெரிய கார்ப்பரேட் ஒன்று, அந்த மண்டலம் முழுக்கவும் கொள்முதலாளர் ஆகி, இவரிடமும் ஒப்பந்தம் போடும் பட்சத்தில், அவர்கள் மண்டலம் முழுக்க ஒரே விலை தான் தருவார்களே தவிர, நியாயமான கூடுதல் விலை வருவதை ஒரு நாளும் அனுமதிக்கப் போவதில்லை.

பிரிவு 6(1) : கொள்முதலாளர் விவசாய நிலத்திற்கு வந்து கொள்முதல் செய்வார். அதனை உரிய நேரத்தில் தயார் செய்து வைக்க வேண்டியது விவசாயியின் பொறுப்பு.
பிரிவு 6(2) : கொள்முதல் செய்பவர் கடைசி நேரத்தில் பொருளை எடுக்க மாட்டேன் என்று மறுதலிக்க உரிமையில்லை.
பிரிவு 6(3) : பேசியதில் மூன்றில் இரண்டு பங்கு பணத்தை நேரடியாக கொள்முதல் செய்யும் போது தர வேண்டும். மீதி பணத்தை 30 நாட்களுக்குள் தர வேண்டும்.

கேள்வி: இது நேரடியாக அரசு கொள்முதல் நிலையங்களை மூடும் வழி. ஒரு மீன்பிடி தொழிலாளருக்கு தான் பிடித்த மீனை பொது இடத்தில் வைத்து வாங்குவோர் முன்னிலையில் ஏலம் விடவும், தனக்குரிய விலை தர முன்வருபவரிடம் அதனை விற்கவும் உள்ள உரிமையை போல விவசாயிகளுக்கும் பன்முனை கொள்முதலாளர்கள் விலையை தந்து, பேசி விளைபொருள் வாங்கும் அமைப்பினைச் சிதைத்து, ஒரு வழிக் கொள்முதல் ஆக்குதல் என்பது உறுதியாக  விவசாயிகளுக்கான ஒரு புள்ளி அல்ல.

பிரிவு 7(1): இந்தச் சட்டத்தின்படி விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்கிறவர்கள், எந்த ஒரு பெயரிலான மாநில வேளாண் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை.

கேள்வி: 2017ல் தில்லியில் தமிழக விவசாயிகள் எலிக்கறி தின்று மூன்றிலக்க நாட்கள் கடந்து போராடிய பொழுது, வேளாண்மை மாநில பட்டியல் ஏன் தில்லியில் போராடுகிறார்கள் என்று மேட்டிமையோடு கேட்டவர்களுக்கு இப்போது பதில் கிடைத்து இருக்கும் என்று நம்புகிறோம். இது முழுக்க முழுக்க மாநில உரிமைக்கு எதிரான ஒரு ஷரத்து. தமிழகம் தனக்கான இராணுவம் ஒன்றை ஆரம்பிக்கும்; மத்திய சட்டம் கட்டுப்படுத்தாது என்று சொன்னால் “அது மத்திய பட்டியல், பூரண உரிமை எங்களுக்கு” என்று சிலிர்த்து கொண்டு வருகிறவர்கள் ஏன் மாநில பட்டியல் வேளாண்மையில் இப்படி அதிகபிரசங்கித் தனமாக  நுழைகிறார்கள்?

நாமெல்லாம் ஒரே தெருவில் குடியிருக்கிறோம். ஒருவர் ஏரியாவின் செயலாளர் (செகரட்டரி). என் வீட்டுக்கு எவர் எவரோ வந்து போகிறார்கள். அவர்களை யார் நீங்கள் என நான் கேட்கப் போனால், செக்கரட்டரி வந்து “நான் தான் அனுப்பினேன். வீடு உன்னுடையது தான் ஆனால் நான் தான் ஒரு விஷயமாக அனுப்பினேன். நீ அவர்களை கேள்வி கேட்காதே. ஏனெனில் நான் இந்த ஏரியா செகரட்டரி” என்று சொல்லுவது எத்தனை அராஜகமோ அதைத்தான் இவர்கள் இப்போது சட்டப்பூர்வமாக செய்யப் போகிறார்கள்.
எங்கள் மாநில விவசாயிகளுக்கான மின்சாரம், உர மானியம் தொடங்கி காப்பீடு வரை அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை நாங்கள் செய்து செப்பனிட்டு வைப்போம். நீங்கள் எவரையோ அனுப்பி விளைபொருளை வாங்குவீர்கள், நாங்கள் கேள்வி கேட்கக் கூடாது என்பீர்கள். இது மாநில சுயாட்சி, உரிமை, இறையாண்மைக்கு விடப் பட்டிருக்கும் நேரடி சவால். இதனால், எவர் எவரோ  உள்ளே வந்து உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். அக்கா மாலா, கப்சி விற்பன்னர்கள் முன்னிலையில் புலிகேசியும், மங்குனியும் பேசிய வசனம் நினைவுக்கு வருகிறது. “உள்ளூர் வியாபாரிகளின் பாதிப்பு முக்கியமா அல்லது அரசுக்கு வருகிற இனாம் முக்கியமா?”.
சில வருடங்கள் கழித்து அனுமதித்த கட்சிக்கு வருகிற கார்ப்பரேட் நன்கொடை நிதியின் உயர்வு எத்தனை மடங்கு ஆகிறது என்பதிலிருந்து இதனை நாம் உணரலாம்.

பிரிவு 7(2): இந்த சட்டத்தின்படி ஒப்பந்தம் போடுகிறவர்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 மற்றும் சமகால பதுக்கல் சட்டங்கள் கட்டுப்படுத்தாது. (அதாவது ஒரு வியாபாரி இவ்வளவு தான் உச்சபட்ச அளவு குடோனில் சேமித்து வைத்து விற்க வேண்டும் என்கிற அளவுகோல் இல்லை).

கேள்வி: வியாபாரிகள் சுவாகா; உள்ளூர் வணிகர்கள் சுவாகா; இப்போது பொருளை வாங்கும் சாமானிய மக்களும் சுவாகா. எவ்வளவு வேண்டுமானாலும் சட்டப்பூர்வமாக பதுக்கிக் கொள்ளலாம் என்பது ஒரு ஷரத்து, அதற்கு ஒரு சட்டம். “நாங்கள் எல்லாப் பொருளையும் பதுக்கிக் கொள்வோம்; வேறு எவரிடமும் அந்தப் பொருள் இல்லை; நுகர்வோருக்கு விற்க ஒரே ஒரு கம்பெனி நான் தான்; நான் சொல்வது தான் விலை; முடிந்தால் வாங்கு; ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நான் விலையேற்றுவேன்; யார் கேட்பார்கள்? ; யார் கட்டுப்படுத்துவார்கள்?” என்கிற ‘ஒரே நாடு; ஒரே கார்ப்பரேட் கடை’ நோக்கி நகர்த்தும் வேலை இது.

பிரிவு 10: கூட்டு மதிப்பீட்டாளர் (அக்ரிகேட்டர் – Aggregator) ஒருவர் விவசாயிகளுக்கும், கொள்முதலாளருக்கும் இடையில் இருந்து பிரச்சனைகள் ஏற்படும் பொழுது தீர்க்க முயல வேண்டும். அவர்களின் வேலை, பங்கு குறித்தவற்றை ஒப்பந்தத்தில் குறிப்பிடுதல் அவசியம்.

கேள்வி: இடைத்தரகு நீக்கப்பட்டதாக சொல்லி கட்டப் பஞ்சாயத்து 1.0 வாசல் திறக்கப் பட்டுள்ளதோ? காலம் பதிலளிக்கட்டும். வழக்கம் போல மௌனிகளாக வேடிக்கை பார்த்துக் கடந்து போவோம்.

பிரிவு 13(1): ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் சமரசக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதில் இரண்டு தரப்பினர் சார்பாகவும் சமமாக ஆட்கள் இருக்க வேண்டும்.
பிரிவு 13(2): ஒப்பந்ததாரர்களிடையே பிரச்சனை வந்தால் சமரசக்குழுவிடம் செல்ல வேண்டும்.
பிரிவு 13(3): சமரசம் எட்டினால் ஒரு உடன்படிக்கை ஒப்பந்தம் போட்டு முடித்துக் கொள்ளலாம்.
பிரிவு 14(1): சமரசக் குழுவால் உடன்பாடு எட்டப்படாமல் அல்லது குழுவின் முடிவில் உடன்பாடில்லாத தரப்பு துணை-நிலை வட்டாட்சியரிடம் (Sub-Divisional Magistrate) 30 நாட்களுக்குள் முறையிடலாம்.
பிரிவு 14(2): அவர் 30 நாட்களுக்குள் மற்றொரு சமரசக் குழுவை அமைத்தோ, பிரச்சினைக்குரிய பணத்தை பறிமுதல் செய்தோ, வட்டியுடனான அபராதம் விதித்தோ வழக்கை முடிக்கலாம்.
பிரிவு 14(3) :  துணை-நிலை வட்டாட்சியருக்கு ஒரு உரிமையியல் நீதிமன்றத்திற்கான (Civil court) அதிகாரம் வழங்கப்படும்.

பிரிவு 14(4): துணை-நிலை வட்டாட்சியரின் முடிவில் உடன்பாடு இல்லாதவர்கள் 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது அவர் நியமிக்கிற சார்-ஆட்சியரிடமோ (Additional Collector) மேல்முறையீடு செய்யலாம்.
பிரிவு 14(5): சார்-ஆட்சியர் 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
பிரிவு 14(7) : நில வருவாயாக அபராதத் தொகை வாங்கப்பட வேண்டும்.
பிரிவு 14(8): ஒரு சிவில் நீதிமன்றத்தைப் போல நேரடி சாட்சிகளை விசாரிக்க, சாட்சியங்களை சரிபார்க்க எல்லா உரிமையும் துணைநிலை வட்டாட்சியருக்கும், சார்-ஆட்சியருக்கும் உண்டு.
பிரிவு 14(9) : இந்த மேல்முறையீடுக்கான வழிமுறைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடும்.

கேள்வி: இத்தனை அடுக்கடுக்கான வழக்கு விசாரணைக்கான செலவை எப்படி ஒரு விவசாயி எதிர்கொள்வார்? இந்த 90 நாட்களும் வயலில் உள்ள விளைந்த விளைபொருளை சமரசம் ஏற்படாமல் அந்த கொள்முதலாளர் எடுக்க மாட்டார். ஒப்பந்தம், வழக்கு இருப்பதால் வேறு ஒருவரும் வந்து விளைந்த பயிரை விலைக்கு வாங்க மாட்டார்கள். அடுத்த போகம் பயிர் செய்ய இடம் இருக்காது. ஒன்றை அறுவடை செய்தால் தானே அடுத்தது நாற்று நட்டு விளைவிக்க. இது விவசாயிகளை அலைக்கழித்து, கடைசியில் வாங்குபவர் சொல்லும் விலைக்கு கட்டுப்பட்டால் அலைச்சல் மீதி என அயற்சியடைய செய்து, கார்ப்பரேட்களுக்கு பிரச்சனையில்லாமல் கதவைத் திறந்து விடும் வழி.

பிரிவு 17: இதற்காக நியமிக்கப்ப்டும் பதிவாளர், துணை-நிலை வட்டாட்சியர், சார்-ஆட்சியர் ஆகியோர் பொதுத்துறை ஊழியர்களாக கொள்ளப் படுவார்கள்.

பிரிவு 18: இந்த சட்டத்தின்படி ஒப்பந்த சமரசம் செய்த பதிவாளர் மீதோ அல்லது துணை-நிலை வட்டாட்சியர் மீதோ அல்லது சார்-ஆட்சியர் மீதோ மத்திய மாநில அரசுகள் மீதோ வழக்கு போடவோ, தண்டனை வழங்கவோ பிற சட்ட நடைமுறைகளுக்கு ஆட்படுவதையோ அனுமதிக்கவில்லை
(No suit, prosecution or other legal proceeding shall lie against the central government, state government, the Registration authority, the sub-divisional authority, the appellate authority or any other person for anything which is in good faith done or intended to be done under the provisions of this act or any rule made thereunder (18))

பிரிவு 19: எந்த சிவில் நீதிமன்றத்திற்கும் இந்த சமரசம் செய்யும் துணை-நிலை வட்டாட்சியர் மீதோ அல்லது சார்-ஆட்சியர் மீதோ வழக்கை விசாரிக்க அதிகாரமில்லை.

கேள்வி: நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாத இடத்திற்கு தாங்கள் நியமிக்கிறவர்களை கொண்டு போய் வைக்க விரும்புவதன் மூலம் இது நீதிமன்ற இறையாண்மைக்கு எதிராகவும் தொடுக்கப்பட்ட போர் என்க. தனி தர்பார் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளாகவும் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு விவசாயி தனக்கென அரசியல் சாசனம் வழங்கியுள்ள உச்சாணிக் கொம்பிலுள்ள உச்சநீதிமன்றத்தை அணுக வழியில்லாமல் செய்தல் என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரான எதேச்சாதிகாரம்.
இந்த நியமன சார்-ஆட்சியர் உச்சநீதிமன்றத்திற்கும் மேற்பட்டவர் எனும் பிம்பம் பாராளுமன்ற-நீதிமன்ற அதிகாரப் பகிர்வின் மீதான அடுத்த பனிப் போர். பி. எம். கேர்ஸ் நிதியைப் போல இதுவும் வெளிப்படைத் தன்மையற்ற அமைப்பாக பட்டவர்த்தனமாக செயல்படுத்துவதற்கான ஏற்பாடு.

விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020:

இதன் ஷரத்துகளின் சாரத்தை காண்போம். பிறகு நமது கேள்விகள்.

பிரிவு 3: எந்த ஒரு விவசாயியோ, வணிகரோ, இணையவழி விற்பனை நிறுவனமோ விவசாய விளைப் பொருட்களை மாநிலத்திற்குள்ளாகவோ அல்லது மாநிலங்களின் இடையிலோ விற்பனை செய்ய பூரண சுதந்திரம் வழங்கப்படுகிறது.
பிரிவு 4(1) : விற்கிறவருக்கு பான் கார்டு இருத்தல் அவசியம்.
பிரிவு 4(3) : விளைப் பொருளை வாங்கி விற்கிறவர்கள் விவசாயிக்கு அன்றைய தினமோ அல்லது அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள்ளாகவோ தொகையை வழங்க வேண்டும்.
பிரிவு 5(1): இதற்கான நிதி பரிமாற்றம், பொருள் பரிவர்த்தனை, இணைய வழியிலான கோப்புகள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு, இன்ன பிற வழிமுறைகள் குறித்து மாநில மொழிகளில் அளிக்க வேண்டும்.
பிரிவு (6) : செஸ் வரி உட்பட எந்த ஒரு மாநில வரியும் இந்த வணிகத்திற்கு விதிக்கப்படக் கூடாது.
பிரிவு 7: மத்திய அரசு ‘விலைப் பட்டியல் தகவல் மற்றும் சந்தை நுண்ணறிவு அமைப்பு’ (Price Information and Market Intelligence System) அமைத்து இதனை நிர்வகிக்கும்.

கேள்வி: விவசாயிகளை நுண்ணறிவுக்கும், இணைய வழிப் பரிமாற்றங்களுக்கும் பழக்குதல் என்பது கடும் சவால் இல்லையா? ஒரு ஆதார் கார்டு திருத்தத்திற்கு நடந்தே தேய்கிற  யதார்த்த சாமானிய வயோதிகர்களை நினைவு கூராமல் செய்துள்ள வழி இல்லையா? உள்ளே வருகிறவர்கள் வந்து வர்த்தகம் செய்து விட்டு போவார்கள்; மௌனியாக ஒரு அரசு மாநிலத்தில் இருக்க வேண்டும். மாநிலங்களில் வரி விதிப்பு அதிகாரம் மீது நிகழ்த்தப் படும் தாக்குதல் இது. வரி விதிக்கக் கூடாது என்று பெரு நிறுவனங்கள் வரும் போது மட்டும் தான் இவர்கள் கூறுவார்கள்.  காரணம் இவர்கள் யாருக்கானவர்கள் என்பதை கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டி விதிப்பும், வட்டி கட்ட வேண்டாம் என்றும் யார் யாருக்கு சலுகை செய்தனர் என்பது உணர்த்தியது தானே.

மாநில மொழிகளில் மொழி பெயர்த்து மக்கள் எப்படி இணைய வழியில் வியாபாரம் செய்வது என்பதை விளக்குவீர்களா? வெறும் இரண்டு பக்கமுள்ள அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தை பத்து மாதமாக ஆங்கிலம், இந்தியை தவிர வேறு மொழியில் வெளியிடாத மொழி மேட்டிமை எதேச்சாதிகாரர்கள் இதனை என்ன லட்சணமாக சிரத்தையுடன் செய்வார்கள் என்பது வெளிப்படை.

பகுதி 3: வணிகம் சார் பிரச்சனைகளின் சமரசம் சார்ந்த ஷரத்துகள்.

ஒரு தலைவருடன் சேர்த்து இரண்டு முதல் நான்கு பேர் வரையிலான சமரசக் குழுவை துணை-நிலை வட்டாட்சியர் பிரச்சனை வரும் போது நியமிக்க வேண்டும். தலைவர் தவிர்த்த பிற உறுப்பினர்களை இரண்டு தரப்பும் முன்மொழிய வேண்டும். ஒரு வாரத்திற்குள் அப்படி முன்மொழியத் தவறினால் தாமாகவே துணை-நிலை வட்டாட்சியர் அவர்கள் சார்பாக நியமிக்கலாம். 30 நாட்களுக்குள் இதனை சமரசக் குழு தீர்த்து உடன்படிக்கை எட்டு வேண்டும்.

உடன்பாடு எட்ட முடியாத பட்சத்தில், துணை-நிலை வட்டாட்சியர் தாமாகவே முடிவெடுக்கலாம். அவர் அந்த பிரச்சனைக்குரிய பணத்தை பறிமுதல் செய்து கைப்பற்றவோ, அபராதம் விதிக்கவோ, குறிப்பிட்ட பிரச்சனைக்குரிய நிறுவனம் விளைபொருள் விற்பனை செய்யாமல் இருக்க இடைக்கால ஆணை பிறப்பிக்கவோ அதிகாரம் படைத்தவராகிறார்.

துணை-நிலை வட்டாட்சியர் முடிவில் திருப்தி படாதவர்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட சார்-ஆட்சியரிடம் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்.

அவரின் முடிவிலும் திருப்தி அடையாதவர்கள் மேல் முறையீடாக, இந்திய அரசு நியமிக்கிற கூடுதல் செயலாளர் அதிகாரத்திலுள்ள அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரி ஒருவரிடம் 60-90 நாட்களுக்குள் கொண்டு செல்லலாம். அது அடுத்த 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்து வைக்கப்படும். .

சமரச அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க, சமரசத்திற்கு தடை வாங்க, தண்டனைக்குட்படுத்த எந்த சிவில் நீதிமன்றமத்திற்கும் உரிமை இல்லை.

கேள்வி: 270 நாட்கள் (9 மாதங்கள்) வேளாண் பொருளை வைத்துக் கொண்டு நுகர்வோருக்கு கொண்டு செல்லாமல் சமரசம் செய்து, செய்து பொருள் வீணானால் நஷ்டம் யாரைச் சேரும்? இத்தனை காலம் நடக்க விவசாயிகளும், சாமானியர்களும் வலு படைத்தவர்கள் தானா? இடைப்பட்ட காலத்தில் தொழிலற்றவர்களாக அவர்கள் நின்றால் வாழ்வாதாரம் என்ன ஆகும்? நீதிமன்ற தலையீடில்லாத கட்டப்பஞ்சாயத்து அமைப்பு 2.0 ஆக இது மத்திய அரசின் இணைச் செயலாளர் அதிகாரமிக்கவரை உள்ளடக்கி செயல்படப் போகிறதா? வழக்கம் போல காலம் பதில் சொல்லும் வரை காத்திருக்கப் போகிறோமா?

அவர்கள் அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். உங்களுக்காகவும், எனக்காகவும் சேர்த்து தான். உட்காருவதற்கான நேர்மையான காரணங்களை அறிதல் உடன் நிற்பவர்களின் தார்மீக கடமையாகிறது. களத்தில் உடன் நிற்க முடியாவிட்டாலும் உரிய காரணம் அறிந்து அவர்கள் மீதான விஷமப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து அறம்சார் மக்களாட்சி வழியிலான கருத்தியல் விவாதங்களால் எதிர் கொள்வோம்.

ஏர் பிடித்த அபிமன்யுக்கள் வஞ்சக ஆச்சாரியர்களின் மூன்றடுக்கு சக்ர வியூகங்களை உடைத்து நொறுக்கி வரட்டும். வரலாறு திருத்தத்திற்குள்ளாகட்டும்.

வளவன்.