அதிகாரத்தை பயன்படுத்தி ஊடகங்களை ஆக்கிரமிக்கும் பாரதீய ஜனதா கட்சி- வசந்தன்.

//
Comment0

வசந்தன் சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.

இந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் வெகுஜன ஊடகங்கள், குறிப்பாக சமூக ஊடகங்கள் அளித்த மாய பிம்பத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவராக நரேந்திர மோடி அறியப்படுகிறார். காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு இருந்த கணிசமான எதிர்நிலை உணர்வு நேர்த்தியான திட்டமிடல் மூலமாக பாஜகவுக்கான வாக்குகளாக மாற்றப்பட்டன. மோடியை முன்வைத்து வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போன்ற கவர்ச்சிகரமான உறுதிமொழிகளால் 2014 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை பாஜக சாத்தியப்படுத்தியது.

வாஜ்பாய் காலத்திற்கு பிறகு தீவிர இந்துத்துவ, பழமைவாத சித்தாந்தங்களால் தம்மை மெருகேற்றிக்கொண்டு காத்திருந்த பாஜகவின், ஏகபோக இரண்டாம் தொடக்கமும் அதுவே. இதற்கான அடித்தளம் என்பது வெறும் 2014 தேர்தல் காலகட்டத்தில் சாதாரணமாக உருவாக்கப்பட்டது அல்ல. கார்ப்பரேட்டுகளின் பெரும் நிதி ஆதாரங்களைக்கொண்டு நீண்ட நெடுங்காலமாக சமூக ஊடகங்களால் இந்திய வளர்ச்சிக்கு வித்திடும் ஒற்றை நாயகனாக நரேந்திர மோடியைத் தொடர்ந்து முன்னிறுத்தி வந்திருக்கின்றனர். அதன் விளைவாகவே பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பிற்பாடு 2019-இல் நரேந்திர மோடியின் இரண்டாம் வெற்றியிலும் சமூக, வெகுஜன ஊடகங்களின் பங்கு எத்தகையது என்பது நாம் அறிந்ததே. இளைய தலைமுறையினரை வளர்ச்சி, ஊழலின் பெயராலும், மற்றவர்களை மத உணர்வெழுச்சியாலும், சாதிய வன்முறைகளாலும் திசைதிருப்பி தமக்குச் சாதகமாக்கிக்கொள்வதே பாஜகவின் செயல்முறை. இதுவரை ஏனைய மாநிலங்களை உள்ளடக்கி ஒட்டுமொத்த நாட்டிற்கும் இந்த உத்தியை மேற்கொண்ட பாஜக, சமீபகாலமாகத் தமிழகத்தில் இவைகளுக்கு பிரத்தியேக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. தேசிய அளவில் கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை ஆட்சியமைத்திருக்கும் பாஜக, வடக்கில் கணிசமான மாநிலங்களையும் கைப்பற்றியிருக்கிறது. ஆட்சியைக் கைப்பற்றாதபட்சத்தில், அடுத்த நிலைகளில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளும் பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுவிடுகிறது. ஆனால் மக்களவைத் தேர்தலிலும் சரி, மாநில சட்டப்பேரவைத் தேர்தலானாலும் சோபிக்கவே முடியாத இடமாக பாஜகவைத் தமிழகம் திணறடித்துக்கொண்டிருக்கிறது.

பாஜகவின் மிகப்பெரிய இலக்கான தமிழகத்தின் மீது அதன் முழு கவனமும் இப்போது குவியத்தொடங்கியிருப்பதைச் சமீபகால நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. இதில் முக்கியமாக சமூக ஊடகங்களின் வழியே தீவிரமாக பாஜக ஆதரவு பிரசாரங்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் வெகுஜன ஊடகங்களும் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றாக பாஜகவை அடையாளப்படுத்தி வருகின்றன. எந்த முன்னணி தொலைக்காட்சியில் நடக்கும் எந்த தலைப்பிலான விவாதங்களானாலும் சரி, தினந்தோறும் அதில் ஒரு பாஜக அல்லது அதன் ஆதரவு பிரதிநிதி கட்டாயமாக இடம்பெறுகிறார். பாஜகவின் பிரதிநிதி இடம்பெற வேண்டிய அவசியமற்ற தலைப்பிலான விவாதங்களிலும்கூட ‘வலதுசாரி’ என்ற அடையாளத்திலாவது ஒருவரை இடம்பெறச் செய்வதை ஊடகங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவற்றை நிச்சயம் தற்செயலானதாகக் கருதமுடியவில்லை. இதன்பொருள் பாஜகவினர் விவாதங்களில் இடம்பெறக்கூடாது என்பதல்ல. எதன்பொருட்டு எல்லா விவாதங்களிலும் திமுக – அதிமுக போன்ற பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளோடு பாஜகவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கட்டாயமாக அங்கம் வகிக்கிறார்கள் என்பதுதான். நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ, இதன்மூலம் ஏதோவொருவகையில் பாஜகவின் இருப்பு தமிழகத்தில் தவிர்க்கமுடியாததாகச் சித்தரிக்கப்படுகிறது.

தமிழகத்தின் 50 ஆண்டுக்காலத்தைக் கடந்த திராவிட ஆட்சி வரலாற்றில் பல்வேறு மக்கள் இயக்கங்களும், புரட்சிகர முற்போக்கு அரசியல் இயக்கங்களும் இம்மண்ணில் தீவிரமாகச் செயலாற்றி வந்திருக்கின்றன. அவற்றில் பல்வேறு இயக்கங்கள் தேர்தலிலும் பங்கேற்றிருக்கின்றன. சமூக நீதி, ஜனநாயகம், சிவில் சமூக உரிமைகளை முன்வைத்தும் அதிகாரத்துவ ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தும் அன்றாடம் மக்களைத் திரட்டி போராடும் இயக்கங்கள் இங்கு பல உண்டு. அவற்றுக்கெல்லாம் கிட்டாத ஊடக வெளிச்சம் இதுவரை தமிழகத்தின் சட்டமன்ற, மக்களவைத் தொகுதிகளில் சொல்லிக்கொள்ளும் வகையில்கூட பிரதிநிதித்துவம் பெறாத பாஜகவுக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறது?

தேர்தலில்கூட மக்களால் பெரிதாக அங்கீகரிக்கப்படாத பாஜக, இன்று தமிழகத்தில் இயங்கும் பிரதான கட்சிகளின் பட்டியலில் முன்வரிசையில் இருப்பதைப்போன்ற மாயபிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. ஏதோவொரு வகையில் தமிழகத்தில் தொடர்ச்சியாக இயங்கும் கட்சியாக பாஜக முன்னிலைப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் நரேந்திர மோடியை அமரவைக்க பாஜக முன்னெடுத்த அதே செயல்முறையைப் பின்பற்றுவதாகவே உள்ளது. அதற்கு ஊடகங்கள் கூடுதல் பலம் சேர்க்கும் கருவியாக மாறி வருகின்றன. பாஜகவின் இந்த இலக்கிற்கு ஊடகங்கள் அவர்களுக்கு ஆதரவான செய்தியை வெளியிட்டுத்தான் உதவ வேண்டுமென்பது இல்லை. விவாதங்களிலும், கருத்துப் பதிவிலும், நிகழ்வுகளாலும் பாஜக மக்களிடம் திணிக்கப்பட்டுக்கொண்டிருப்பதே அக்கட்சிக்கு பெரும் சாதகம்.

ஒவ்வொரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என்கிற நடைமுறையை இயல்பாக அன்றாடம் காணமுடிகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இணையான பிரதிநிதித்துவம் தமிழ் மக்களுக்கு அந்நியமான ஒரு தேசியக்கட்சிக்கு எவ்வாறு நிகழ்ந்தது என்பதில் பல்வேறு ஐயங்கள் எழுகின்றன. இங்கு விவாதிக்கப்படும் சமூக அரசியல் பிரச்சினைகளில் மத்திய அரசு சார்பு என்கிற போர்வையில் வந்து ஒரு வலதுசாரியால் சர்வசாதாரணமாக சமூக நீதிக்கு எதிராக, தேசிய பன்மைத்துவத்திற்கு எதிராக, மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசமுடிகிறது.

எல்லா நிகழ்வுகளிலும் எதிரெதிர் தரப்புகள் மட்டுமே வாக்குவாதம் செய்து முட்டிமோதி விவாத நிகழ்ச்சிக்கு பரபரப்பை கூட்ட வேண்டுமென்பதல்ல. ஒரே நோக்கமுடைய இருவேறு தரப்புகள் விவாதித்து சாதகமான மக்கள் ஆதரவு நிலைப்பாட்டுக்கு வருவதற்கு வித்திடும் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதும் ஊடக அறத்தில்தான் சேரும். உதாரணத்திற்கு, திராவிட ஆட்சியின் மரபிலான பல்வேறு சமூக நீதி கொள்கை சார்ந்த விவாதங்களில் திமுக – அதிமுக ஆகிய பிரதான கட்சிகளிடையே ஓர்மையான கொள்கை முடிவு இருந்திருக்கிறது. ஆனால் அதுபோன்ற விவாதங்களிலும் சமூகநீதி கொள்கைக்கு எதிரான மதவாத வலதுசாரி தரப்பை இடம்பெறச்செய்யும் போக்கு தொடர்கிறது. அப்படியானவர்கள், தமிழ்நாட்டின் சிறப்பாகக் கருதப்படும் சமூக நீதி விழுமியங்கள், மொழிக் கொள்கை குறித்தெல்லாம் தொலைக்காட்சி விவாதங்களின் வழியே வெகு எளிதாக வன்மத்தை உமிழ்ந்து செல்கிறார்கள்.

சூரரைப்போற்று பாடல் விவகாரம் தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் இமையம் தனது கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார். அவரோடு அந்த விவாதத்தில் பங்கேற்றவர் இயக்குநர் என்ற அடையாளத்தோடு பிரவீன்காந்தி. இமையத்தின் காத்திரமான கருத்துப் பதிவுக்கு இடையில் பேசிய பிரவீன்காந்தி, போகிற போக்கில் “கீழ் சாதியிலும் நிறைய நல்லவங்க இருக்குறாங்க, மேல் சாதியில கெட்டவங்களும் இருக்குறாங்க. சாதியப்பத்தி பேசிக்கிட்டே இருக்கக் கூடாது” எனும் பொருள்படும் விதமாகக் கீழ்சாதி மேல்சாதி என அபத்தத்திலும் அபத்தமாகப் பேசினார். சாதி ஒழிப்பு கருத்தியலை முன்வைக்க வேண்டிய விவாதத்தில், அதற்கு மாறாக எந்த புரிதலுமின்றி இழிவாகப் பேசும் இவரைப்போன்றவர்கள் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சியில் பிதற்றுகிறார்கள்.

ஆகவே, ஊடகங்களில் பாஜகவை முன்னிலைப்படுத்தும் போக்கு இரண்டு வகையில் சிக்கலாக இருக்கிறது. முகாந்திரமே இல்லாமல் தமிழகத்தில் பேசுபொருளாக இருக்கக்கூடிய முக்கிய கட்சியாக மக்கள் மத்தியில் பாஜக தன்னை நிலைநிறுத்திக்கொள்வது முதலாவது. அடுத்ததாக, மக்கள் விரோத பாசிச பிற்போக்கு கருத்துக்களைப் பிரசாரம் செய்வதற்கும், மத்திய அரசின் எதேச்சதிகார ஒடுக்குமுறையை ஆதரிக்கும் தமிழ்க் குரலாக ஒலிப்பதற்கும் ஊடகங்கள் பாஜகவுக்கு வாய்ப்பளிக்கிறது. ஆதலால் மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக மேற்கொண்ட அதேபாணி இன்று தமிழகத்திலும் ஊடகங்களின் வாயிலாக பின்பற்றப்படும் ஆபத்தை உணர்ந்துகொள்வது அவசியம்.

வசந்தன்.