விவசாயம்
விவசாயத்தை நிலைப்படுத்தாமல் எந்த ஒரு நாடும் வளர்ந்து விட முடியாது. உற்பத்தி தொழில் வளர்ச்சியுற்ற பின்னர் விவசாயத்தை இரண்டாம்பட்சமாக பார்க்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆனாலும் இன்னும் தமிழகத்தில் 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை நம்பியே இருக்கின்றனர். மேலும் உணவு பொருள் உற்பத்திக்காக என்றைக்கும் நாம் யாரையும் சார்ந்து இருக்கவே கூடாது. அது நம் சுயசார்பை அறவே ஒழித்து விடும். விவசாயத்தில் முன்னோடியாக இருந்த தமிழகம் இன்று கடும் இன்னலுக்குள்ளாகியிருக்கிறது. தண்ணீர் பிரச்சனை, நிலங்கள் வளத்தை இழப்பது, விவசாயத்தொழிலாளர்கள் பற்றாக்குறை, போதிய விலை கிடைக்காமை, விதை, இடு பொருட்கள் விலை உயர்வு பெரு நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. தற்சார்பாக இருந்த விவசாய நிலையிலிருந்து உரம், பூச்சி கொல்லி, மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்று சார்பு நிலைக்கு மாற்றப்பட்டுள்ளோம். வேதியியல் உப்புக்களை கொட்டி கொட்டி நிலத்தை நஞ்சாக மாற்றி விட்டோம். நமக்கு மரபணு மாற்றப்பட்ட விதைகளையும், உரங்களையும், பூச்சிகொல்லிகளையும் விற்ற, விற்கும் நாடுகள் இயற்கை விவசாயத்திற்கு மாறத்துவங்கியிருக்கின்றன. மேலும் தண்ணீரை குறைவாக எடுக்கும் தானியங்களை விடுத்து தண்ணீரை அதிகம் எடுக்கும் பயிர்களை பயிர் செய்யத்துவங்கியது போன்ற நமது பாரம்பரிய இயற்கை விவசாயத்தை விடுத்து விவசாயத்தை கெடுக்கும் பல வழிமுறைகளை நாம் கடந்த 50 ஆண்டுகளில் பின்பற்றினோம், ஆனால் இன்று அவற்றை சீர் செய்து விவசாயத்தை மீட்டெடுக்கும் வழிமுறையை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. ஏனென்றால் நமது சந்ததியினருக்கு ஆரோக்கியமான சத்துள்ள உணவை வழங்குவதென்பதே நமக்கு முன்னுரிமையாக இருக்கும்.
தற்சார்பான இயற்கை விவசாயத்திற்கு மாறுவதும் இன்றைய வளர்ச்சி பெற்ற அறிவியல் ஆக்க பூர்வமாக விவசாயத்திற்கு வழங்கிய, வழங்கும் உதவிகளின் துணை கொண்டும், விவசாய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதை விவசாயிகளிடமே ஒப்படைத்தும், மரபணு விதைகள், வேதியியல் உப்புகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை அறவே ஒதுக்கியும், மதிப்புள்ள விவசாய விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதை கணிசமாக குறைத்து அவற்றை மதிப்பு கூட்டி, தரத்தை கூட்டி விற்பனை செய்வதும் மீண்டும் விவசாயத்தை வளர்ச்சி பாதையில் திரும்ப உதவும். பனைப்பொருளாதாரம் போன்ற திட்டங்களும் இருக்கவே செய்கின்றன. இவை அனைத்தும் விவசாயத்தின் வழியாக நமது பொருளாதாரத்தை மேம்படுத்திட நாம் முன்வைக்கும் வழிகளாகும்.
விவசாய நிலங்களை காப்பதற்கு விவசாய நிலங்களை மாற்று உபயோகங்களுக்கு பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்படும். விவசாயத்தை லாபகரமான வாழ்வியலாகவும், தொழிலாகவும் மாற்றும் தற்சார்பான அறிவியல் பூர்வமான கூட்டு முறை இயற்கை விவசாயத்தையும், நிலநீர் அமைப்புக்கேற்ற பயிர் வகைகளை தேர்வு செய்தலும், விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதும், விவசாயத்தை வெற்றிகரமாக தொடர்வதற்கு வழிவகுக்கும்.
நீர் மேலாண்மை மற்றும் நீர்பாசனம்
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கொப்ப நீரின் முக்கியத்துவம் இன்று கடுமையாக உணரப்படுகிறது.உலகின் பல பாகங்களில் நீரின் பற்றாக்குறை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு நீர் பற்றாக்குறை மிகுதியாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.பழம்பெரும் விவசாய பகுதியான தமிழ்நாட்டில் ஆறுகள், ஏரி,குளங்கள் , வாய்க்கால்கள் என்று பல்வேறு முறைகளில் நீர்பாசன வசதிகளை ஏற்படுத்தி விவசாயத்தை செழிக்க செய்தனர்.ஆனால் இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் பல மாநிலங்களை தழுவி ஓடும் ஆறுகள் மாநிலங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்தை ஆண்ட கட்சிகளின்,தலைவர்களின் தொலைநோக்கற்ற குறுகிய பார்வையால் காவிரி,பாலாறு,முல்லை பெரியாறு ஆகிய ஆறுகளின் நீர்பிடிப்பு,தலைப்பகுதிகளை இழந்தோம்.அதற்கு பிறகும் அணைகள் கட்டுவதில் பல சட்ட திட்டங்கள் இருந்தாலும் எதையும் மதிக்காமல் கர்நாடகமும் ,ஆந்திரமும் பல அணைகளையும் ,தடுப்பணைகளையும் கட்டியதன் மூலமாக தமிழகத்திற்கு வந்துகொண்டிருந்த நீரினை தடுத்துவிட்டனர்.கேரளாவும் முல்லைபெரியாறு அணையில் தண்ணீர் சேமிக்கும் அளவு குறித்து சிக்கலை ஏற்படுத்துவதால் அங்கிருந்தும் குறைவான நீரை பெறும் சூழல் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.அவற்றை தடுப்பதாக பாசாங்குகள் செய்யப்பட்டதே தவிர உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
நீண்ட காலம் உருவாக்கப்பட்ட நீர்பாசன முறைகளில் சேமிக்கப்பட்டிருந்த நீரை இயந்திரங்கள் மூலம் உறிஞ்சி தள்ளிய பிறகு, மழை பெய்யாதபோது தண்ணீரை காணாத தடங்களை ஆக்கிரமித்து நீர்பிடிப்பு பகுதிகளின் உயிர்குழாய்களை சேதப்படுத்தி விட்டு,ஏரி,குளங்கள்,வாய்க்கால்கள் என்று ஆக்கிரமிக்க துவங்கி ஏன் சில ஆறுகளையே விழுங்கிவிட்ட பின்னரும் அவர்களின் லாபவெறி தீரவில்லை. மேலும் ஆறுகளில் இருக்கும் மணலையும் கொள்ளையிட்டு பெருஞ்சேதத்தை ஏற்படுத்திய பின்பும் அரசும்,தண்ணீர் வியாபாரிகளும்,மணல் கொள்ளையர்களும் மேலும் கொள்ளையடிக்க வேண்டும் என மும்முரம் காட்டுகிறார்களே ஓழிய, தாங்கள் உருவாக்கிய பாதிப்பை உணர்ந்தவர்களாக இல்லை.குடிநீர் விற்பனை முழுக்க வியாபாரமயமாகி விட்டதும்,மணல் கொள்ளையில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணமும் , குளிர்பான நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நீரும், பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நீரும்,அதற்குமேல் அவர்கள் திருட்டுத்தனமாக உறிஞ்சும் நீரும் என தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நீர்வளமும் தமிழ்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்காக இல்லாமல் பெருமுதலாளிகளின் லாபவேட்டைக்கு தாரை வார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு குடிக்க நீர் இல்லை,குளிக்க,துவைக்க நீர் இல்லை இறுதியாக விவசாயத்திற்கும் நீர் இல்லை.
தீர்வாக கர்நாடகா,ஆந்திரா,கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் பாயும் ஆறுகளின் நீர் பகிர்மானம் பொறுத்தவரை சர்வதேச விதிகளின் அடிப்படையில் நமது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.நமது பாரம்பரிய நீராதாரங்களையும்,நீர்நிலைகளையும் ,நீர் வழித்தடங்களையும் மீட்டெடுக்க வேண்டும்.ஆறு,ஏரி,குளங்கள் ,வாய்க்கால்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை போர்கால மும்முரத்தில் அகற்ற வேண்டும்.நீரை விற்பனைக்காக உறிஞ்சுவதை தடை செய்வதோடு,நீர் விற்பனை நிறுவனங்களையும் தடை செய்வது நமது கொள்கையாகும்.நீர்பாசன அமைப்பை பொறுத்தவரை 100 ஆண்டுகளுக்கு முந்தைய அமைப்பை மீட்பதுடன் நவீன முறையில் பாசன பொறிமுறையை மேம்படுத்த வேண்டும்.மழை நீர் சேகரிப்பு,வெள்ளம் , மிகை மழை காலங்களில் பெருக்கெடுக்கும் உபரி நீரை சேமித்து வைப்பதற்கான நீர்நிலைகளை ஆயத்தப்படுத்த வேண்டும்.அதே போல அதிக தண்ணீரை பயன்படுத்தும் பயிர்களிலிருந்து தண்ணீரை மிச்சப்படுத்தும் நமது பழைய சிறுதானிய விவசாயத்திற்கு மாறுவது,இறுதியாக பொது மக்கள் ,விவசாயிகள் அனைவருக்கும் நீரை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி வீணடிக்காமல் சேமிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்துவதும் நீர் மேலாண்மை மற்றும் நீர்பாசனம் குறித்த நமது கொள்கையாகும்.
தொழிற்துறை உற்பத்தி
உற்பத்தி சார்ந்த தொழிற்துறைதான் இன்று பிரதானமாக பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது. தொழிற்துறையை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள்தான் சகலத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். தொழிற்துறை என்று வரும் போது உலக அளவில் மிகப்பெரிய தொழிற்துறையாக இருப்பது ஆயுதங்கள் உற்பத்தி செய்வதுதான். பாதுகாப்பு என்ற அம்சத்தை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் பரப்புரை ஒவ்வொரு நாடும் மிக அதிகமான ஆயுதங்களை வாங்கி குவிக்கும் போக்கை உருவாக்குகின்றன. உலகின் சில நாடுகளே ஆயுத உற்பத்தியில் சிறந்து விளங்குவதால் லாபங்கள் முழுவதும் அவர்களிடம் சென்று குவிகின்றன. அடுத்தது எண்ணெய் தொழில். உலகின் மிகப்பெரிய இயக்கு சக்தியாக இருந்தாலும், இயற்கை வளம் குறிப்பிட்ட அளவே இருப்பதாலும் இதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உலகம் முழுவதும் கடும் போட்டி நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. கனரக இயந்திர உற்பத்தி, வாகனம், ஆடை, கட்டுமானம் போன்ற துறைகளும் கணிசமான பங்கினை செலுத்துகிறது. இவற்றை ஏன் குறிப்பிட வேண்டி இருக்கிறதென்றால் இந்த உற்பத்தி தொழிற்துறையில் உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் எண்ணி அந்த இடத்திலிருந்து தமிழகம் என்ன முக்கியத்துவம் பெறுகிறது? இவற்றுக்குள் ஏற்படும் மாற்றங்களில் நாம் எப்படி பாதிக்கப்படுகிறோம். நம்மால் இந்த உறவுகளுக்குள் என்ன வகையான அசைவுகளை உருவாக்கிட இயலும் என்றெல்லாம் நமக்கு ஒரு பார்வை வேண்டும் இல்லையென்றால் தற்சார்பு பொருளாதாரம் என்பதை முன்வைக்கும் நாம் அவற்றை சாதிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய இயலாது.
உற்பத்தி தொழிற்துறையை நாம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் எடுத்து தேச வளர்ச்சிக்கான கூறுகளோடு அதற்கான இலக்குகளையும், திட்டங்களாக உருவாக்கி செயல்படுத்தினால்தான் பொருளாதார மேம்பாட்டை அடைய முடியும்.
சேவைத்துறை -வங்கித்துறை
சேவைத்துறையில் முதலிடம் வகிப்பது நிச்சயம் வங்கிகள்தான். எந்தத் துறைக்கும் இல்லாத அளவிற்கு மிகவும் பலம் பொருந்திய துறை வங்கித்துறைதான். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட பணம் இல்லாமல் திண்டாடுவதற்கான வாய்ப்புகள் வரவே செய்கின்றன. எல்லா காலத்திலும் எல்லா தொழில்களுக்கும் கடனுதவி வழங்குவதற்கு வங்கி தயாராக இருக்கிறது. வங்கிகள் தன் சொந்த பணத்தை எடுத்து செலவு செய்துவிடப் போவதில்லை. வைப்பு நிதியாக பல கோடி மக்களிடமிருந்து பெறும் தொகைகளை அவை தனது பலமாக மாற்றிக்கொள்கிறது. மற்றவர்களுடைய பணத்தை தன் விருப்பம் போல் கையாளும் அதிகாரம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதால் அவை இந்த வைப்பு நிதிகளை பெரு நிறுவனங்களுக்கு கடன் உதவி செய்ய பயன்படுத்துகிறது. மக்களிடம் உள்ள பணத்தை பெரும்நிறுவனங்களுக்கு மாற்றும் வேலையைதான் வங்கிகள் செய்கின்றனவே தவிர மக்களுக்கு அது எந்த நன்மையும் செய்வது இல்லை. ஆனால் நாம் அதனை உண்மையில் மக்களுக்கு தொண்டாற்றும் வண்ணம் மாற்றியமைக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு துறை, மென்பொருள் துறை
தொலைத்தொடர்பு, இணையம், மென்பொருள் செயலிகள் என்று பின்னி பிணைந்து இருக்கும் இத்துறை சகலத்தையும் கட்டுப்படுத்தும் துறையாக மாறி நீண்டநாள் ஆகின்றது. செயற்கை அறிவு (Artificial Intelligence) என்று சொல்லப்படும் துறை இன்று மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்படுகிறது. மனிதர்களை தொடர்பு கொள்ளுதல், செய்திகளை பரிமாறிக்கொள்ளுதல் என்பவை போய் மனிதர்கள் அனைவரையும் கண்காணிப்பது, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்று இத்துறை வடிவெடுத்து இருக்கிறது. மின்னணு இந்தியா போன்ற திட்டங்கள் மக்களின் விவரங்களை சேகரித்து அதனை அரசிடமும், பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வேலையை செய்கின்றன. அந்த விவரங்களை அவர்கள் எப்படி செயல்படுத்துவார்கள் என்று நமக்கு அறவே தெரியாது. தேச மக்களை அளவுக்கு மீறி கண்காணிப்பது அவர்களின் தனி மனித சுதந்திரத்தை வரம்புக்கு மீறி தடை செய்வது போன்றவை கட்டுப்படுத்தப்பட்டு அவர்கள் தாங்கள் எப்போதும் கண்காணிக்கப்படுகிறோம் என்பது போன்ற உணர்வுகள் தோன்றாத வண்ணம் இந்த அறிவியல் சாதனங்கள் மனித வாழ்வை வளப்படுத்தவும், மனித குலத்தை இணக்கப்படுத்தவும், ஒன்று சேர்க்கவும் மட்டுமே பயன்படும் வண்ணம் இந்த துறைகளுக்கான திட்டங்கள் அமைக்கப்படும்.
தொழிலாளர்கள்
உழைப்பே மனித குலத்தின் வளர்ச்சிக்கு முதன்மை அடிப்படையாகும். உழைப்பு சக்தியை கொண்டிருக்கும் தொழிலாளியே அனைத்தையும் படைக்கிறான். ஆனால் அவர்களுக்கு உரிய மதிப்பையும், வாழ்வையும் அரசுகள் கொடுப்பதில்லை. சிலநூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிற்பாதுகாப்பும், சங்கம் அமைத்துக்கொள்வதற்கான உரிமைகளும், போராடுவதற்கான உரிமைகளும் இன்று உலகமெங்கும் விரவியிருக்கும் முதலாளித்துவத்தாலும் பரவலாக அமையப்பெறும் தீவிர வலது தேசியவாத அரசுகளாலும் பறிக்கப்பட்டு வருகின்றன. பெருந்தொழிற்நிறுவனங்களில் நிரந்தர தொழிலாளர்களாக இருக்கும் ஆலைத்தொழிலாளர்கள் ஒரு பக்கம், ஒப்பந்த தற்காலிக முறைகளில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் ஒரு பக்கம். அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஒரு பக்கம், விவசாய நிலங்களை சார்ந்த நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றொரு பக்கம் என்று தொழிலாளர் வர்க்கத்தினுள் இருக்கும் பிரிவுகள் இவர்களுடைய ஒற்றுமையை மேலும் குலைக்கின்றன. தொழிலாளர்களை பலவீனப்படுத்துவதற்காக, தங்கள் லாபத்தை அதிகப்படுத்துவதற்காக முதலாளிகள் வகுக்கும் திட்டங்களினை எதிர்த்து அவர்களுடைய திட்டங்களையே அவர்களுக்கு எதிராக மாற்றக்கூடிய தொழிலாளர்களை வெற்றி பெறச்செய்யக்கூடிய அரசியல் வழிமுறைகள், செயல்பாடுகள் வகுப்பதற்கு தகுதி படைத்த தத்துவத்தின் பற்றாக்குறையை நாம் உணரவே செய்கிறோம். சமகால சூழ்நிலையை துல்லியமாக ஆய்வு செய்து அவர்களுடைய மீட்சிக்கான தத்துவத்தை படைத்த மார்க்சும், அதனை செம்மைப்படுத்திய லெனினும் அளித்த அறிவை ஆதாரமாக கொண்டு இன்றைய சூழலுக்கேற்ப அதை வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகள் அரிதினும் அரிதாகவே இருக்கிறது. இருக்கக்கூடிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் கட்சியின் பொருளாதார மூலமாகவே பார்க்கப்படுகிறதே தவிர, தொழிலாளர்களுக்கு சிறிதேனும் அரசியல் பயிற்றுவிக்காமல் அவர்களின் பொருளாதார நலன்களை மட்டுமே மையப்படுத்தி அவர்களை அரசியல் நீக்கம் செய்துவிட்ட கட்சிகளிடம் இருந்து விடுவிப்பதும் மீண்டும் ஆற்றல்படைத்த சமூகத்தின் போர்வீரர்களாக மாற்றவும் அந்த தத்துவம் வழிகாட்ட வேண்டும். பொதுத்துறை அரசு நிறுவனங்கள், பெருந்தொழிற்சாலைகளில் உள்ள நிரந்தரப்பணிகள், படிப்படியாக, ஒப்பந்த அடிப்படையிலும் தற்காலிக பணிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதனை எதிர்த்துக்கூட நிரந்தர தொழிலாளர்கள் எதிர்ப்புகளை காட்டுவதில்லை. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது உங்களுக்கு பிறகு வருபவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொல்லும் நிர்வாகங்களுக்கு இசைவு தெரிவித்துவிட்டு அமைதியாக இருக்கின்றனர். அதேபோல பணியில் இருக்கும் ஒப்பந்த/தற்காலிக பணியாளர்களின் உரிமைகளை பற்றியும் இவர்கள் பேசுவதில்லை. இவர்களே இவர்களுக்குள் ஒரு வர்க்கமாக இருக்கும் போது முதலாளிகளை அவர்களுக்கு துணை நிற்கும் அரசினை இவர்கள் எப்படி எதிர்ப்பார்கள். ஒரு தொழிற்சாலைக்குள்ளேயே இப்படி என்றால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இவர்கள் மீது யாரும் அக்கறை கொள்வதில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியத்தின் கீழ் அவர்களை அடிமைப்படுத்திட அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் வேலை செய்கின்றனவே தவிர அவர்களை அரசியல் சக்தியாக மாற்றிட எந்த திட்டமுமில்லை. ஆனால் நமது தேசத்தில் ஜனநாயக புரட்சிக்கான மிக முக்கியமான முன்னணி ஆற்றல்கள் அவர்கள்தான்.
ஐரோப்பிய கண்டத்தில் வேலை நேரம் வாரத்திற்கு 26 மணி நேரம், 30, 36 மணி நேரம் என்றிருக்க இங்கேயோ வாரத்திற்கு 54, 60 மணி நேரம் என்றிருக்கிறது. சிறு சிறு தொகுதியாக ஆனால் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒரே பலமான அமைப்பாக்கும் அமைப்பு முறையை உருவாக்குவதே நமது முன்னால் உள்ள மிகப்பெரிய பணியாகும் .ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருக்கும் உரிமைகளை மீட்கவும் புதிய உலகத்தின் ஒழுங்கிற்குக்கொப்ப கூடுதல் உரிமைகளை வெல்லவும்,தொழிலாளர்களை அரசியல்படுத்தவும், முன்னணி ஆற்றல்களாக தங்களுடைய வரலாற்று பாத்திரத்தை நிறைவு செய்யவும் அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும்.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கும் நிலமற்ற விவசாயத்தொழிலாளர்களை பொறுத்தவரை ஆலைத்தொழிலாளர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான எல்லா கோரிக்கைகளையும் விவசாயத்தொழிலாளர்களுக்கும் வைத்து தொழிலாளர் சட்டத்தை இவர்கள் அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்பதும் நமது நிலைப்பாடாகும்.
நமது போராட்ட வழிமுறைகள்
அரசியல் போராட்ட வழிமுறைதான் நமது நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை அடைவதற்கான நேர் வழியாகும். அரசியல் போராட்ட வழிமுறை என்பது பெருந்திரளான வெகுமக்கள் பங்கேற்கும் மக்கள் திரள் போராட்டங்களேயாகும். மக்களிடம் அவர்களுக்குத் தேவையான உரிமைகளைப் பற்றியும் அந்த உரிமைகளை பெறுவதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய போராட்ட முறைகளைப் பற்றியும் விளக்கமாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மக்களிடம் தமது கருத்துக்களை கொண்டு செல்ல பிரச்சாரங்களை ஒரு வலுவான ஆயுதமாக கொண்டு செல்ல வேண்டும். மக்களின் பிரச்சினைகளை அவர்களிடம் நன்கு விளக்கி நியாயமான கோரிக்கைகளுக்காக போராட அவர்களை எழுச்சிகொள்ள வைக்க வேண்டும். தங்களது நியாயபூர்வமான போராட்டத்திற்கு பெரும் திரளாக திரளக்கூடிய மக்களுடன் நாமும் தோளோடு தோள் நின்று அந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டும்.
இந்தப் போராட்டங்களை முழுமையான சனநாயக வழியிலும் மக்கள் திரள் போராட்டம் என்னும் போராட்ட வழிகளிலும் முன்னெடுக்க வேண்டும். நமது சனநாயக வழியிலான போராட்டங்களுக்கு அரசு வளைந்து கொடுக்காதபோது, நமது போராட்டங்களை கடுமையாக ஒடுக்கும்போது அந்த சூழலில் மக்கள் தீர்மானிக்கும், முன்னெடுக்கும் எந்த வழியிலும் போராட நாமும் தயாராக இருக்க வேண்டும்.
தமிழர்களின் துவக்க கால எழுச்சி கட்டத்தில் நாம் நிற்கும் வேளையில், கருத்தியல் ரீதியான தெளிவு உதித்துள்ள காலத்தில் தமிழ்நாட்டுமக்கள் இருப்பதாக கருத முடிகிறது. இதுவே தமிழ்நாடு தேச உரிமை பெற்ற ஜனநாயக குடிமக்கள் அரசை உருவாக்குவதற்கு எதிரான சக்திகள் பேருரு கொண்டிருக்கிற காலமாகவும் இருக்கிறது.இவற்றை கருத்தில்கொண்டு சூழ்நிலைமைகளை முற்றிலும் ஆராய்ந்து அதற்கேற்றாற் போல் ஏற்படும் மாறுதல்களை உன்னிப்பாக கவனித்தும் நமது வழிமுறைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
மக்கள் போராட்ட வழிமுறையை இறுதியான தீர்வுக்கு இட்டு செல்லும் என்பதில் நாம் உறுதியாக இருப்போம்.
நமது இலக்கு
தமிழ்நாட்டின் தேச உரிமைகளை வென்றெடுப்பதும் ஏற்ற தாழ்வுகளற்ற ஒரு சனநாயக குடிமக்கள் அரசை அமைப்பதுமே நமது இலக்குகளாகும்.
தமிழ்நாட்டின் உரிமைகளை வெல்வோம். தமிழ்நாட்டு மக்களுக்கான அரசை உருவாக்குவோம்.
Leave a Reply