தமிழ்நாடு தேசிய கட்சி தமிழ்நாட்டில் அனைத்து தளங்களிலும் நிலவும் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி சமூக அமைப்பையும், சமூக பிற்போக்குத்தன்மையும் மாற்றுவதற்கும், சனநாயகத்தை படைப்பதற்கும் முனைந்து நிற்கிறது. தமிழ்நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்ற பல்வேறு கருத்துகளை பரிசோதிப்பதன் வழி நமக்கான சொந்த கருத்தை வடித்து எடுக்கவும் அதனடிப்படையில் நமக்குரிய நிலைப்பாட்டை உருவாக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.
‘தமிழ்நாடு தேசியம்’ என்று முன் வைப்பதால் தமிழ்த்தேசியம், தமிழர் தேசியம் சரி, இதென்ன தமிழ்நாடு தேசியம் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் நிலப்பரப்பிற்குள் வாழும் அனைவரையும் இத்தேசத்தவர் என்கிறோம். தமிழ்நாட்டில் வாழும் அத்துணை மக்களுக்குமான உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டமே தமிழ்நாட்டின் தேசியக்கடப்பாடாக இருப்பதால் தமிழ்நாட்டை தேசமாக மீட்பது இதன் குறிக்கோளாக இருக்கிறது.
ஒரு தேசம் அமைவதற்கு வரலாற்று வழியாக அமைந்த தொடர்ச்சியான நிலப்பரப்பில் பெரும்பான்மையான மக்கள் ஒரு குறிப்பிட்ட மொழியை பிரதானமாக பேசி, பயன்படுத்தி வருவது அடிப்படை தேவையாகும். அந்த மொழியை சார்ந்தே தேசிய இனமும் உருவாகும். பலர் தேசிய இனம் என்பதை தூய்மைவாதத்துடன் குழப்பிக்கொள்கிறார்கள். கலப்பில்லாத தூய ரத்தம், மரபு, இனம் என்றெல்லாமாக கருதி கொள்கின்றனர். வரலாற்றில் அப்படி ஒன்று கிடையவே கிடையாது. பல இனத்தை சார்ந்தவர்கள், பல மொழிகளை பேசுபவர்கள், வித்தியாசமான பண்பாடுகளை கொண்டவர்கள் அந்த குறிப்பிட்ட நிலப்பரப்பில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழியை சார்ந்து தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொள்வதன் மூலமும், ஒரு வரலாற்றுக் கட்டத்தில் ஒன்றுபடுவதற்கான (அ) ஒன்றுபடுத்துவதற்கான தேவை எழும்போது தங்களிடையே உள்ள வேற்றுமைகளை களைந்து, தேச உருவாக்கத்திற்கான போராட்டத்தில் தங்களை தேசிய இனமாக பரிணமித்து கொள்கின்றனர். மேலும் தேசம் என்பது நவீன காலகட்டத்தில் உருவான அமைப்பாகும். தொழிற்புரட்சி துவங்கிய பிறகு நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சியினூடே உருவானதுதான் தேசம் என்பது. முக்கியமாக ஐரோப்பிய கண்டத்தில்தான் இந்த நவீன தேச அரசுகள் உருவாக துவங்கியது.
தேசம் என்பது குறித்த தெளிவான வரையறையை பெற வரலாற்றின் வழியில் பரிசீலனை செய்வோம்.
வரலாற்றின் போக்கில் ஐரோப்பிய கண்டத்தில் தொழில்புரட்சி ஏற்பட்டு நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவம் உருவான வளர்ச்சியின் ஊடாக உதயமானதே தேசங்கள் முதலில் இங்கிலாந்தும் பின்னர் அமெரிக்கா பிரான்ஸ் இத்தாலி ஸ்பெயின் ஜெர்மனி என தேசங்கள் பரிணமித்தன. தேசம் என்பது நவீன காலகட்டத்தின் படைப்பு. தொழிற்புரட்சியின் வழியாக நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி வளர்ந்த முதலாளித்துவம் முடியாட்சிகளுக்கு முடிவுகட்டி ஜனநாயகத்தின் ஆட்சியை மலரச் செய்யும் போது அதற்கு அடிப்படையாகவும் தேவையாகவும் உருவானதுதான் தேசிய உணர்வு.
பல இனக் குழுக்களாக ,பல மொழி குடும்பங்களாக வாழ்ந்த மக்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தக்கூடிய பொது மொழியை நோக்கி நகர்வதன் மூலம் பெற்ற தேசிய உணர்வு தேசங்கள் உருவாக வழிவகுத்தது. பழங்குடியினர் இனமாக மாறுவதும் தேச உருவாக்கத்தில் வளர்ச்சி கட்டங்கள் ஆகும்.
ஒரு தேசம் அமைவதற்கு வரலாற்று வழியாக அமைந்த தொடர்ச்சியான நிலப்பரப்பில் பெரும்பான்மை மக்கள் ஒரு குறிப்பிட்ட மொழியை பிரதானமாக பேசி பயன்படுத்தி வருவது அடிப்படைத் தேவையாகும். அந்த பல இனத்தை சார்ந்தவர்கள் பல மொழிகளைப் பேசுபவர்கள் வேறுபட்ட பண்பாடுகளை கொண்டவர்கள். அந்த குறிப்பிட்ட நிலப்பரப்பில் பெரும்பான்மையானவர்களால் பேசப்படும் மொழியை சார்ந்து தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம் ஒரு வரலாற்று கட்டத்தில் ஒன்று படுவதற்கான அல்லது ஒன்று படுத்துவதற்கான தேவை எழும்போது தங்களிடையே உள்ள வேற்றுமைகளை களைந்து தேச உருவாக்கத்திற்கான போராட்டத்தின் வழியாக தேசிய இனமாக பரிணமித்து கொள்கின்றன.
தமிழ்நாடு ஒரு முழுமையான தேசமாக இன்னும் பரிணமிக்கவில்லை என்பதால் தமிழ்நாட்டை ஒரு தேசமாக உருவாக்க வேண்டியது முழுமுதற்கடமை ஆகின்றது. தேசம் குறித்த தெளிவற்ற தவறான கருத்துக்கள் தமிழ்நாடு ஒரு தேசமாக எழுவதற்கு தடைகளாக உள்ளன.
தேசம் என்பது நவீன கால கட்டத்திற்கு உரிய கருத்து என்பதை உணர மறுக்கும் சிலர்,” தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தேசிய இனமாக வாழ்ந்து வந்தனர்” என பெருமை பேசி வருகின்றனர். அவர்கள் முடியாட்சிகளுக்கும் குடியாட்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை தெரிந்து கொள்வது நல்லது.
யார் தமிழர் ? என்று வரையறுக்க முனையும் சிலர் இனத்தூய்மை என்னும் மாயக்கண்ணாடி முன் மயங்கி நிற்கின்றனர். மனிதகுல வரலாற்றில் இனத்தூய்மை என்பதற்கு இடமேயில்லை என்பதை மானுடவியல் உண்மைகள் உரக்கச் சொல்லிய பிறகும் இனத்தூய்மைவாதிகள் உணர மறுக்கின்றனர்
தாய்மொழியாக தமிழைக்கொண்டவர் மட்டுமே தமிழர் என சிலர் வாதிடுகின்றனர்.பிறமொழி, பிறதேச பின்னணி உடையவர்களை அவர்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்ற போதும் அந்நியர்களாக முத்திரை குத்துகின்றனர். தமிழ்வழி தோன்றல்கள் பல்வேறு தேசத்தின் அங்கமாக வாழ முடியும் என்பதை பெருமைக்குரியதாக உரக்கப் பேசும் இவர்கள் அதைப்போலவே ,பிறரும் தமிழ்நாட்டோடு பிணைத்துக்கொள்வதன் மூலம் தமிழராக முடியும் என்ற வெளிப்படையான உண்மையை காணத்தவறுகின்றனர்
வரலாற்றில் புலம்பெயர்தல் என்பது மனிதகுலத்தின் வாழ்வியல் நடவடிக்கைகளில் தவிர்க்க இயலாத ஒன்றாகும். வரலாற்றின் ஏதோ ஒரு காலகட்டத்தை அளவு கோலாக வைத்துக்கொண்டு ” வந்தேறிகள்” எனக்கூறி, புலம் பெயர்ந்து வாழ வந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை வெளியேறச் சொல்வது உலகெங்கிலும் உள்ள தமிழர்களை அவர்கள் இருக்கும் நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாட்டிற்கு வாருங்கள் என அழைப்பதற்கு ஒப்பாகும்
தமிழ்நாட்டின் மொழி தமிழ்மொழி என்பதை ஏற்று தமிழ்நாட்டோடு தங்களின் வாழ்வை பிணைத்துக்கொண்ட / பிணைத்துக் கொள்ள ஆயத்தமாக இருக்கும் ஒவ்வொருவரும் தமிழர் என்பதால் தமிழ்நாட்டின் நிலப்பரப்பிற்குள் வாழும் அனைவரையும் தமிழர் என்கிறோம்
தமிழ்நாட்டின் பெரும்பாலானோர் பேசும் மொழி தமிழாகவே இருந்த போதிலும் தமிழ்நாடு ஒரு தேசமாக பரிணமிக்க இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியது உள்ளது.
ஒரு தேசம் தன் உரிமைகளை வெல்வது என்பது மிகவும் கடுமையான, நீண்ட நெடிய போராட்டமாகும். நமது தேச உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று போராடினால் மட்டுமே சாத்தியமாகும். அப்படியே நாம் ஓரணியில் நிற்க முடியாமல் நம்முன் இருக்கும் தடைகள் என்ன என்பதை வரையறுப்பதில் நமக்கு தெளிவு வேண்டும். வரலாற்றின் பல்வேறு கட்டங்களிலும் ஆட்சியாளர்களின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு நடைபெற்ற நிலப்பறிமுதல் மற்றும் நிலப்பகிர்மானங்களின் காரணமாக, நில உடைமையின் பெரும்பான்மை நிலை ஆகியவை முற்றூடான நிலசீர்திருத்தத்தை கோருகிறது.
தொழில் உரிமை மற்றும் வாய்ப்பு பிறப்பாலும் பாலின பாகுபாட்டாலும் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவது தொடர்கிறது. சேவை தொழில்கள் பொதுத்தொழிலாக மாறாதது.பல பாரம்பரிய திறன் கோரும் தொழில்கள் ஆண்களுக்கு மட்டுமே உரியதாக இருப்பதும் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் சனநாயகமற்ற தன்மைக்கு அடையாளமாகவும் ஆதாரமாகவும் விளங்குகின்றன.
நிரந்தரமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையே நிரந்தரமாக பெரும்பான்மையாக இருப்பது தொழிலாளர் நல சட்டங்களின் உளுத்துப் போன தன்மையை காட்டுவதோடு சட்ட உரிமை மற்றும் சட்டப்பாதுகாப்பு போன்ற சனநாயகக் கூறுகள் நடைபிணமாகவே இருப்பதையும் தோலுரித்து காட்டுகிறது.
தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்கின்ற தார்மீக உரிமையை மறுக்கின்ற வகையில் கடந்த காலத்தின் சுமைகள் எதிர்காலத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் இளைஞர்களின் துணை தேடும் உரிமையை மறுப்பதும், துணிந்து மீறுபவர்களை ஆணவப் படுகொலைகள் செய்வதும் சமூகத்தில் சனநாயகப்பண்பு இல்லாத தன்மையை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
மனிதகுலத்தின் சரிபாதியாக உள்ள பெண்களை மதிப்புமிக்க சமூக உழைப்பிலிருந்து அந்நியப்படுத்துதலும் பொதுவெளியை அவர்களோடு பங்கிட மறுப்பதும் ஊதியமற்ற சேவை சாதியாக இருத்தி இருப்பதும் மக்கட்தொகையில் பாதிபேரின் உழைப்புச்சக்தியை சமூக வளர்ச்சிக்கு உதவாத விதத்தில் வீணடித்துக் கொண்டிருப்பதும் சமூக முன்னேற்றத்தை தடுக்கின்ற சனநாயக விரோத போக்குகளாகும். இது விளைச்சலின்றி வீணே நிலத்தை போடுகின்ற பண்ணைத்தனத்தின் பிரதிபலிப்பாகும்.
எதிர்காலச் சமூகத்தின் பிரதிநிதியும் எதிர்காலத்தின் ஒரே உரிமையாளருமான குழந்தைகளை சமூகத்தின் சொந்தமாக கருதி,அவர்கள் சமவாய்ப்பும், சமஉரிமையும் பெற்று வளர்வதை உத்திரவாதம் செய்யாமல்,இன்றைய சமூகத்தின் இழிநிலையின் நீட்சியாகவே அவர்களை வளர்த்தெடுப்பது, எதிர்காலத்தை இருள் நிறைந்ததாக ஆக்க முனைகின்ற பழமைவாதிகளின் புதுமையை மறுக்கின்ற புல்லுருவித்தனத்தின் வெளிப்பாடே !
நாலு எழுத்து படித்த , சமூக ஓர்மையற்ற படிப்பாளிகளையே உருவாக்க முனையும் கல்விமுறை, குறிப்பிட்ட தொழிலுக்கு உகந்த திறனாளிகளை உருவாக்குவதோடு திருப்திப்பட்டுக் கொள்கிறது. சமூகத்துக்கு தேவையான மனிதர்களை உருவாக்க தவறுகிறது. மனப்பாடமுறை என்னும் அறிவியலுக்கு பொருந்தாத முறையை ஆதாரமாக்கிக் கொண்டு ” தேர்வு – தேர்வு – தேர்வு ” என வடிகட்டுதல் முறையை வழிமுறையாக்கி மாணவர்களை புத்தக அடிமைகளாக, பகட்டு படிப்பாளிகளாக மட்டுமே உருவாக்குவது , சமூகத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தை விரும்பாத பிற்போக்காளர்களின் சதித்திட்டம் ஆகும். மூடநம்பிக்கைகளோடு ஈவிரக்கமின்றி கணக்குத்தீர்க்க விரும்பாத கல்விமுறை மூடர்களை உருவாக்குவது குறித்து வியப்படைய ஏதுமில்லை.
மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல நிலச்சீர்த்தம் மேற்கொள்ளப்படாமை; குலத்தொழில் நீடித்தல் ; நிரந்தரமற்ற தொழிலாளர்முறையே நிரந்தரமாக இருப்பது ; இளைஞர்களுக்கு துணைதேடும் உரிமையை மறுப்பது ; பெண்களை இரண்டாங்குடிகளாக வைத்து இருப்பது ; குழந்தைகளை சமூக சொத்தாக கருதாதது; பகட்டுப்போலி படிப்பாளிகளை உருவாக்குவது போன்றவை காலங்கடந்த நிலஉடைமையை பிரதானமாக கொண்ட சமூகத்தின் குணாம்சங்கள் ஆகும். இவை தமிழ்நாடு , தமிழர் என்ற ஓர்மையோடு எழுவதற்கு தடைக்கற்களாக உள்ளன.
தமிழ்தேசம், தமிழர்தேசம் போன்றவை தமிழுக்கான தேசம், தமிழ் மக்களுக்கான தேசம் என்று அர்த்தப்படுத்துவதாக நாம் புரிந்து கொள்வோம், ஆனால் தேசம் என்று ஒரு முடிவுடன் நாம் தீர்மானிக்கும் ஓர்மை இங்கு உருவாகிவிட்டதா? என்றால் நிச்சயம் இல்லை என்று அறுதியிட்டு சொல்லலாம். ஆனால் தமிழ்நாடு ஒரு தேசமாக உருவாகியே தீர வேண்டும் என்று விரும்புகிறோம். அப்படி உருவாக்கிட வேண்டும் என்ற பெரும்முயற்சிக்கு குறிப்பான- சிறப்பான தடையாக இருப்பது சாதி. தமிழர் என்பதை காட்டிலும் குறிப்பிட்ட சாதியாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதைதான் பார்க்க முடிகிறது. நாம் தேசத்தை அடைவதற்கு தேசிய இனமாக மாறுவதற்கு இருக்கும் ஆகப்பெரிய தடை என்பது சாதிதான்.சாதியகட்டுக்குள் இருந்து இன்னும் பெரும்பான்மையினர் தன்னை விடுவித்துக்கொள்ளாத போது,ஆதிக்க மனப்பான்மையுடன் நான் உயர்ந்த சாதி! ,கீழ்சாதிகளை எனக்கு சமமாக எப்படி பார்க்க முடியும்? என்கிற வன்மத்தை முன்வைக்கும் போது இதில் தமிழர் என்பவர் எங்கே இருக்கிறார்?. தமிழ்நாட்டின் பூர்வகுடிகளான, தமிழ்பேசும் மக்களையே தனக்கு சமமாக பார்க்க விரும்பாத மக்கள் ஒருபோதும் தமிழராக இருக்கவும் முடியாது, மாறவும் முடியாது. அவர்கள் தங்கள் சாதிகளின் பிரதிநிதிகளாக மட்டுமே இருப்பர். ஏனென்றால் தமிழராக ஒன்றுபட தடையாக உள்ள சாதி ஏற்றத்தாழ்வான சமூக பொருளியல் வாழ்வை பாதுகாப்பதற்கான அடிப்படையாகவும் இருக்கின்றது. தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு பிரிவு சாதித்தமிழர்களும் சொந்த சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட தமிழர் என்ற முறையில், அவர்கள் கடுமையாக எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிராளிகளான தமிழரல்லாதவர்களுடன் கைகோர்ப்பதில் எந்தவித தயக்கமும் காட்டுவதில்லை.
ஆனால் அவர்களின் அரசியல் மேடைகளில் தூய தமிழினம், நாமெல்லாம் தமிழர்,சாதி ஒழிப்பு, தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்றெல்லாம் முழங்குகின்றனர்.ஆனால் எதிர்படும் சாதிய பிரச்சனைகளில் எல்லாம் சொந்த சாதிக்காகத்தான் நிற்கின்றனர், செயல்படுகின்றனர்.இவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் சமூக தளத்தில் தமிழர் என்கின்ற ஒற்றுமையை உருவாக்காமல் , மாறாக சீர்குலைக்கின்றது. இத்தகைய சக்திகள் தங்களின் சாதிய நலன்களுக்காக தேசத்தின் நலன்களை கைவிடவும், காட்டிக்கொடுக்கவும் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள்.
இன்றைக்கும் சாதியக்குழுத்தன்மை, அமைப்பு முறை, பழக்க வழக்கங்கள் போன்றவை அப்படியே பண்டையகால பழங்குடிகளின் தன்மையை ஒத்ததாக இருக்கிறது. புறப்பார்வைக்கு நாகரிகத்தின் தோற்றம் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஒவ்வொருவரும் பண்டைய காலத்தின் பழங்குடி (காட்டுமிராண்டி என்ற சொல்லால் சுட்டப்படும் நாகரிக நிலைக்கு முந்தைய) தன்மைகளை ,அந்நியர்களை எதிரிகளாக மட்டுமே பார்க்கும் தன்மைகளை அப்படியே தக்கவைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய உணர்வு,”பிறருடன் கூடி கலந்து வாழ்வதை மறுக்கின்ற ,அவ்வாறு வாழ்வதை வெறுக்கின்ற நிலையில் துவங்கி “தான் மட்டுமே வாழ வேண்டும்,பிறர் வாழ்ந்துவிடக்கூடாது என்கின்ற உச்சத்திற்கு இட்டு செல்கிறது. தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக இந்த தமிழர்கள் ஒன்று சேர்வதில்லை,அதேவேளையில் சாதியின் படிநிலை ஆதிக்கம் கேள்விக்குள்ளாகும்போது சொந்த சாதிக்குரிய பிரச்சனையாக எடுத்துக்கொண்டு, ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலுபவர்கள் மத்தியில் நம்மால் தமிழர்களை காண முடிவதில்லை.
குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களின் உளமார்ந்த ஒற்றுமை என்பது தேச உருவாக்கத்தில் மிகவும் முக்கியமான அம்சம் ஆகும். அத்தகைய ஓர்மை தமிழ்நாட்டின் பிரதான சமுக ஓற்றுமையாக இல்லாத போது தமிழ்நாட்டை தேசம் என்று எவ்வாறு கருத முடியும்? இப்போதைக்கு தமிழ்த்தேசம், தமிழர்தேசம் என்பதெல்லாம் மொழிவழி, கற்பனையான இனவழி உணர்ச்சியின் வெளிப்பாடே. வரலாற்று வழிபட்ட ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பை சுட்டாமல் தேசமுமில்லை, தேசியமுமில்லை, தேசிய இனமுமில்லை. மொழிவழிப்பட்ட தேசியம், பண்பாட்டு தேசியம் போன்றவைகள் மக்களை பிளவுபடுத்தி குறுகிய வெறிஉணர்வை ஊட்டுவதால் அவைகளால் மக்களை முழுமையாக ஒன்றுபடுத்தி நிறுத்த ஒருபோதும் இயலாது.
தமிழ்நாடு தேசமாக உருவாகுவதை இலட்சியமாக கொண்ட நமக்கு, அந்த இலட்சிய கனவை நனவாக்கிட தகர்க்க வேண்டியிருக்கும் தடைகளையும்,அடைய வேண்டியிருக்கும் இலக்கினையும் துல்லியமாக வரையறுக்க வேண்டிய கடமை இருக்கிறது.
காட்டுமிராண்டிதன்மையிலிருந்து பழங்குடியாகவும், பழங்குடி நிலையிலிருந்து இனமாகவும், இனம் தேசிய இனமாகவும் மாறுவதுதான் மனிதகுல சமூக அமைப்பின் வளர்ச்சியாகும். இன்றைய வரலாற்று கட்டத்தில் இன்னும் பழங்குடி (சாதி) தன்மையை பிரதானமாக கொண்டிருக்கும் தமிழ்நாடு தனது பிற்போக்கு விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டு ஒரு இனமாக மாறுவதே உடனடி தேவையாகும்.அதுவே நமது இலக்கும் ஆகும்.சாதிக்கட்டமைப்பு தடைகள் தகர்க்கப்பட்டு தேசிய இனமாக மாறுவதே இலக்கு. சாதியை துறக்காமல், அழிக்காமல் ஒரு தேசிய இனம் உருவாகப்போவதில்லை. தமிழ்நாட்டிற்குள் வாழும் இன, மொழி குடும்பங்களின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதன் மூலம் அவர்களின் உளமார்ந்த ஒத்துழைப்பை பெற்று அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டியது அவசியம்.
நாம் இழக்கவேண்டியது என்ன, அடைய வேண்டியது என்ன? என்பது குறித்த தெளிவு இல்லையென்றால் நம்மால் வரலாற்றை மாற்ற முடியாது.பல்வேறுவிதமான கருத்துகள், நம்பிக்கைகள், விளக்கங்களுள் உணர்ச்சிவயப்பட்டு சிக்கிக்கொண்டு சமூகத்தையும், வரலாற்றையும் அறிவியல்பூர்வமான வகையில் நோக்குவதில் இருந்து பிறழ்ந்து, வரலாற்றின் இன்றைய கட்டத்தில் உரிய தலையீட்டை செய்ய நாம் தவறுவோமானால் வரலாறு நம்மை நிச்சயம் மன்னிக்காது. நமது வரலாற்று கடமையினை நிறைவேற்றும் பொருட்டு தெளிவான வரையறைகளிலிருந்து தெளிவான செயல்பாட்டிற்கு செல்வதன் மூலம் கருத்தியலில் மென்மேலும் தெளிவினை பெறுகின்ற கண்ணோட்டத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்.
Leave a Reply