1.தமிழ்நாடு தேச உரிமைப்போராட்டம்
தமிழ்நாடு தேச உரிமைக்கான போராட்டம் இன்றைய வரலாற்று கட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின் கட்டாய தேவையாக மாறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு அதன் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்படும் பொழுதோ, அதன் இன மக்கள் நசுக்கப்படும் பொழுதோ, அதன் மொழியினை அழிப்பதன் மூலமாக அந்த இடத்தையே இல்லாதொழிக்க முயற்சிகள் நடக்கும்போதோ அந்த ஒடுக்கும் முயற்சிகளை சகலவிதத்திலும் எதிர்த்துப் போராட அந்த தேசத்திற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. இந்திய கூட்டரசில் தமிழ்நாட்டிற்கு எந்த அதிகாரமும் இல்லாமல் இருப்பது தமிழர்களின் சமூக அரசியல், பொருளாதார விவகாரங்களில் அதிகாரம் இல்லாமல் இருப்பது, தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருப்பது, தமிழ்நாட்டின் நிலப்பரப்பு தமிழர்களின் அனுமதி இல்லாமலே மற்றவர்களுக்கு தாரை வார்க்கப்படுவது ஆகிய விடயங்கள் தமிழர்கள் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. பாதுகாப்பு, மத்திய வங்கி, நாணயம்,வெளியுறவுத்துறை ஆகியவற்றை மத்தியில் கூட்டரசு நிர்வகிக்க,
தமிழ்நாட்டிற்கான அரசியல் நிர்ணய சபையை அமைப்பதற்கான உரிமை,அரசியல் சட்டம் இயற்றுவதற்கான உரிமை, குடியுரிமை வழங்குவதற்கான உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெறுவதுதான் தமிழ்நாட்டின் உரிமைப் போராட்டமாகும். தமிழர்கள் தங்களது உரிமையை பெறவும் தங்களது அரசியல் பொருளாதார வாழ்வினை மேம்படுத்திக் கொள்ளவும் தங்களுக்கான உரிமைகளை தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் தமிழ்நாடு உரிமை போராட்ட வழியே தீர்வாகும். இதுவே நமது முதற்கொள்கையாகும்.
2.தமிழ்நாடு தேச உரிமைப் போராட்டமும் பெண் விடுதலையும்
முதலாளிய ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை இவற்றுடன் சேர்ந்து ஆணாதிக்க ஒடுக்குமுறையும் எதிர்த்து போராட வேண்டிய சூழலில் நமது பெண்கள் இருக்கிறார்கள். ஆதி பொதுவுடைமை சமூகத்தில் பெண்கள் இனத்தலைவர்களாக இருந்ததற்கு ஆதாரங்கள் நிறைய கிடைக்கின்றன. இயற்கையாக தோன்றி வளர்ந்த சமூகத்தில் பெருமையுடையவர்களாய் வாழ்ந்த பெண்கள் ஆணாதிக்க அடிமை சமுதாயம் தோன்றியவுடன் பெண்ணடிமைத்தனத்தை ஏற்றுகொண்டு வாழும் வண்ணம் ஒடுக்கப்பட்டனர். சங்க கால தமிழகத்தில் பெண்கள் பல துறைகளில் சிறப்புடன் விளங்கியதாகவும் அறிவினிலும் ஆண்களுக்கு சமமாகவும் விளங்கியதை பல நூல்கள் மூலமாக அறிகிறோம். ஆனால் அதன் பின்னர் வந்த ஆணாதிக்க அடிமை சாதிய பிற்போக்குத்தனத்தை பெண்கள் சிறுமைப்படுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர்.நவீன காலத்திலும் பெண்கள் குறித்த பார்வை மாறிவிடவில்லை. பெண்கள் இந்த பிற்போக்குத்தனங்களை உடைத்து இந்த சமூகத்தில் தாங்களும் ஆண்களுக்கு அனைத்து துறைகளிலும் சமம்தான் என மீண்டும் நிறுவ வேண்டும்.பெண்களுக்கு 50% இடப்பகிர்வும் ,சம ஊதியமும் வழங்கப்பட வேண்டும்.பெண்கள் மீதான வன்முறையை தடுக்கும் வண்ணம் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பெண்ணடிமைத்தனத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக போராடுவதும் அதனை ஒழிப்பதும் நமது கொள்கையாகும்.
3.தமிழ்நாடு தேச உரிமைப் போராட்டமும் சாதி ஒழிப்பும்
தமிழ்நாட்டின் அனைத்து பிற்போக்குத்தனத்திற்கும் அடையாளமாக விளங்கும் இந்த சாதிய கட்டமைப்பை ஒழிக்காமல் தமிழ்நாட்டில் சனநாயகத்தை எவரும் அடைந்துவிட முடியாது. பார்ப்பனிய மனு தர்மத்தால் கையாளப்படும் இந்த சாதிய கட்டமைப்பு தமிழகத்தில் வேர் பிடித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. தமிழர்களாக ஒருங்கிணைவதை காட்டிலும் சாதிகளாக வாழ்வதை சரியென நினைக்கும் இந்த சூழ்நிலையில் இந்த சாதிய கட்டமைப்பை எதிர்க்காமல் நாம் நம் தேச உரிமையை பெற்றுவிட முடியும் என்று எண்ணுவது நமது நோக்கத்திற்கு உதவாது. தமிழ் தேசிய உரிமையை அடைந்துவிட்டால் சாதிகள் தானே அழிந்துவிடும் என்பதோ அல்லது பல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடும் இயக்கங்கள் கூறுவது போல சாதி ஒழிக்கப்பட்டால் தான் தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டத்தை பற்றி யோசிக்க முடியும் என்பதோ தவறான பார்வையாகும். தமிழ்நாட்டு உரிமைக்காக போராடும் போதே சாதியை ஒழிப்பதற்கான போராட்டங்களை நடத்துவதும், சாதிய ஒழிப்பு போராட்டத்தை தமிழ் தேசிய உரிமைக்கான போராட்டத்துடன் இணைப்பதிலேயும், இந்த இரண்டு போராட்டங்களையும் ஒரு சேர இணைத்து போராடுவதில்தான் அதற்கான தீர்வு அமைந்திருக்கிறது. தமிழகத்தின் கூர் முரணான சாதிய அமைப்பே ஒடுக்குமுறையின் கொடூர வடிவமாக எப்பொழுதும் வெளிப்பட்டு வருகிறது. ஒடுக்குமுறைக்கு எதிராக போராடாமல் விடுதலையை பற்றி மட்டும் தனித்து பேசுவது நம் தேச உரிமைப் போராட்டத்திற்கு பெரும் ஆபத்தாகும். தமிழ்நாடு தேச உரிமைப் போராட்டத்துடன் சாதிய ஒழிப்பு போராட்டத்தை இணைத்து நடத்துவது நமது கொள்கையாகும்.
4.தமிழ்நாடு தேச உரிமையும் சனநாயக அரசும்
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சனநாயகம் என்பது அடைய வேண்டிய இலக்காகவே இருக்கிறது. சாதி ஆதிக்க நிலவுடைமை சமூகமாக விளங்கும் தமிழ்நாட்டில் இந்த பிற்போக்கான நிலையை தகர்த்து சனநாயகத்தை நிலை நிறுத்துவது நமது கடமையாகும். தமிழ்நாடு தன் உரிமைகளை பெறும்போது நாட்டில் நிலவும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதோடு இந்த சமனற்ற நிலை நீங்கிய சனநாயக அரசை நிலைநிறுத்துவதே மக்களுக்கு நாம் ஆற்றும் கடமையாகும்.
இப்போது ஆட்சியில் இருக்கும் இந்த போலி சனநாயகம், மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவது போலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சுரண்டல்கள் இல்லாத நீதியான ஆட்சியினை கொடுத்து கொண்டிருப்பது போலவும் தன்னுடைய அனைத்து அராஜக பலங்களின் ஊடாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இந்த போலி ஜனநாயகத்தின் ஏமாற்றுகளை மக்களிடையே அம்பலப்படுத்துவதோடு அது பழைய சாதி ஆதிக்க பிற்போக்கு நிலவுடைமை வர்க்க நலன்களையே பிரதிநிதித்துவபடுத்துவதை மக்களுக்கு உணர்த்துவதோடு, உண்மையான சனநாயகத்தை மலரச்செய்வது நமது கொள்கையாகும்.
5.தமிழ்நாடு தேச உரிமைப் போராட்டமும் ஏகாதிபத்திய முதலாளிய உலகமயமாக்கல் எதிர்ப்பும்
தமிழ்நாடு ஏகாதிபத்தியங்களின் பிடியில் சிக்குண்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டு நமது வளங்களை ஆக்கிரமிப்பு செய்வதுடன், உலகமயமாக்கல் என்னும் முதலாளிய கொடு வளையத்தினுள் நம் உரிமைகளையும் நமது தேசத்தையும் நாம் இழக்குமாறு நம்மை நிர்பந்திக்கிறது. எங்கோ ஏதோ ஒரு நாட்டில் இருக்கும் முதலாளி உலகம் முழுவதும் தன் கைகளை விரவி நமது நாட்டு சொத்துக்களை கொள்ளை அடிக்கிறான். நாம் சுதந்திரமற்ற முறையில் அவர்களை முழுவதும் சார்ந்து இருப்பது போன்ற அடிமை நிலையினை நம் மீது சுமத்துகிறான். நமது சுதந்திர பொருளாதார அரசியல், சமூக வாழ்வை நாசப்படுத்துகிறான். நம்மை சுரண்டி அவர்கள் வளம் பெறுவதுடன் ,நம் நாட்டை சுடுகாடாக மாற்றுகிறார்கள்.இத்தகைய கொடும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்துவது அதற்கு துணை நிற்கும் இந்திய தரகு முதலாளிகள் அனைவரையும் எதிர்த்து போராடுவது நமது கொள்கையாகும்.
6. தமிழ்நாடு தேச உரிமைப் போராட்டமும் இந்துத்துவா பார்ப்பனிய எதிர்ப்பும்
இந்திய துணை கண்டத்திலும் நமது தமிழ் தேசத்திலும் 2000 ஆண்டுகாலமாக கால் பதித்து நிற்கும் நால்வர்ண சாதிய முறைகளும் அந்த சாதி முறையினை காப்பாற்றும் இந்துத்துவாவையும் , பார்ப்பனியத்தையும் ஒழித்து சமுதாய சம நிலையை அடைய வேண்டும். பல இன, குழு வழிபாடு, பண்பாடு போன்றவற்றை கொண்டிருந்த இந்திய துணை கண்டத்தில் நமது தமிழ்நாட்டிலும் தமிழர்களுக்கு எதிராக சாதி முறையை கடைபிடிக்கும் பார்ப்பனிய சக்திகளும் இந்து மதத்தின் மூலமாக மக்களுக்கு இழைத்த கொடுமைகள் கணக்கிலடங்கா. இல்லாத மதத்தை பெரியதாக உருவகம் செய்து அதில் தீண்டாமை, அடிமை முறை, இழிவு, மூடநம்பிக்கைகள் உள்ளிட்ட பல அடக்குமுறை மற்றும் கொடுமைகளை தந்திரமாக புகுத்தி தமிழனின் ஒற்றுமையை குலைத்து கொண்டிருக்கிற இந்த மதவாத இந்துத்துவா அமைப்புகளையும் பார்ப்பனிய அமைப்புகளையும் மக்களிடையே அம்பலப்படுத்தி அவர்களுக்கு எதிராக போராட வேண்டும். அதேபோல் இந்த பார்ப்பனிய பண்பாட்டிற்கு ஆட்பட்டு தானும் பார்ப்பனிய தன்மையை உள்வாங்கிக்கொண்டு பிற சமூகங்களை ஒடுக்கும் எந்த இனத்தையும் எண்ணத்தையும் அமைப்புகளையும் எதிர்த்து போராடுவது நமது கொள்கையாகும்.
7. தமிழ்நாடு தேச உரிமைப் போராட்டமும் வளங்கள் மீட்பும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான அனைத்து வளங்களும் இந்திய அரசினாலும் இந்திய அரசு துணையுடன் இந்திய,பன்னாட்டு முதலாளிகளால் தொடர்ச்சியாக சுரண்டப்பட்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய் வளங்கள், கனிம வளங்கள், உயர் மதிப்புடைய மண் வளங்கள் அதிலிருந்து கிடைக்கும் அணு உற்பத்திக்கு தேவையான தாதுப்பொருட்கள், இயற்கை வளங்களான மரங்கள் மற்றும் காடுகள், நீர்வளங்கள் தொடர்ச்சியான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு சொந்தமான வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தமிழ்நாடு கடும் பொருளாதார சுரண்டலுக்கு ஆளாகி வருகிறது. அதே போல நமது வளங்கள் கொள்ளையடிக்கப்படும் பொழுது அதன் எதிர் விளைவாக சுற்றுச்சூழல் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுவதால் நமது மக்களின் வாழ்வாதார நிலைகள் வாழ தகுதியில்லாத இடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இந்திய, உலக வல்லாதிக்கம் அதைப்பற்றி அறவே கவலையின்றி தொடர்ந்து உருவாக்கி வருகிறது. கூடங்குளம் அணுஉலை திட்டம்,அணுக்கழிவு மைய திட்டம்,காவிரிப்படுகை மீத்தேன் – ஹைட்ரோகார்பன் திட்டம்,தேனி நியுட்ரினோ திட்டம்,சேலம்- சென்னை பசுமைவழிச்சாலை,கெயில் குழாய் பதிப்பு,கன்னியாகுமரி சரக்கு பெட்டக முனையம் போன்ற திட்டங்கள் சமகால உதாரணங்களாகும்.இத்தகைய மக்கள் விரோத இந்திய, உலக வல்லாதிக்கத்தை எதிர்ப்பதோடு நமது தேசிய வளங்களை மீட்டு காப்பது நமது கொள்கையாகும்
Leave a Reply