- தமிழ்நாடு தேச உரிமைப் போராட்டமும் தாய்மொழி வழிக்கல்வியும்,
ஒரு தேசம் தனது தாய் மொழியில் கற்பதுதான் அதன் மேன்மைக்கும் திறமைக்கும் வித்தாகும் என்பது அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்ட உண்மை. அதை விடுத்து மக்களை சுரண்டும் முதலாளித்துவம் ஒடுக்கப்படும் இனத்தின் ஆற்றலை சிதைக்கும் வண்ணம் தன்னுடைய மொழியினை அவர்கள் தாய்மொழியின் இடத்தில் திணித்து வருகின்றன. பொருளாதார காரணங்களுக்காக அல்லது உயர்ந்த மொழி போன்ற பொய் செய்திகள் அந்த அந்நிய மொழி குறித்து பரப்பப்பட்டும் வருகின்றன. இது அப்பட்டமான பொய் ஒரு இனத்தை சுரண்டுவதற்கு ஆதிக்க சக்திகள் மொழியினையும் ஒரு அழிப்பு ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன. குறிப்பிட்ட தேசிய இனத்தின் தாய்மொழியினை அழித்து அந்த இனம் வளர்ச்சியடைவதை தடுக்கின்றனர். இந்தக் கெடு நோக்கு முதலாளிகளை, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்த தரகு முதலாளித்துவ இந்திய அரசினை எதிர்த்து போராடுவது நமது கொள்கையாகும்.
9.தமிழ்நாடு தேச உரிமைப் போராட்டமும் கல்வி அரசு உடைமை ஆக்கமும்
தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை வசதிகளான பள்ளிக்கல்வி முதல் ஆராய்ச்சிகல்வி வரை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் தொடர்ச்சியான சுரண்டலுக்கு ஆளாகி வருகிறார்கள். இதைப்பற்றி அக்கறை கொள்ளாத அரசு தனியார்மயத்தை மேலும் ஊக்கப்படுத்துவதோடு மக்கள் விரோத நடவடிக்கையினை விரிவுபடுத்துகிறது. பா.ஜ.க முன்மொழிந்திருக்கும் தேசியக்கல்விக்கொள்கை (வரைவு)2019 விவசாயம், மருத்துவம்,பொறியியல்,சட்டம் போன்ற படிப்புகளை எளிய மக்கள் படிக்கமுடியாத வண்ணம் நடைமுறைகளை கடினப்படுத்தி குறிப்பிட்ட சமுகங்கள் மட்டும் அவற்றை படிக்க வழிவகை செய்கின்றன.நாட்டின் பொரும்பான்மை மாணவர்களை உலக வங்கி,உலக பொருளாதார மன்றங்களின் தேவைக்கான அடிப்படை கூலித்தொழிலாளிகளாக உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டது இந்த கல்விக்கொள்கை.
மக்கள் அனைவரும் அடிப்படை தேவையான கல்வி தவிர்க்கப்பட முடியாதது என்பதாலும், அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளாலும் தனியார் பள்ளிகளில் கொண்டு சேர்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்திய அரசின் இந்த மக்கள்விரோத கல்விக்கொள்கையை முழுமையாக நிராகரிப்பதோடு கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மீட்டெடுப்பது நமது கொள்கையாகும். பள்ளிக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அரசுடமை ஆக்குவதோடு அதன் தரத்தை உயர்த்தி அறிவியல்பூர்வமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். NEET,EXIT போன்ற தேர்வுகள் ஒழித்துக்கட்டப்பட்டு பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்குபவர்களை மருத்துவம்(விவசாயம்,பொறியியல்,மென்பொருள்,சட்டம்) படிக்க ஊக்குவிக்கும் வகையில் கூடுதலான மருத்துவகல்லூரிகள் அமைக்கப்பட்டு தரமான மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதும் நமது கொள்கையாகும்.
10.தமிழ்நாட்டின் உரிமை போராட்டமும் நலவாழ்வுத்துறையும் ,மருத்துவமும்.
நலவாழ்வுத்துறையை பொறுத்தவரை சிறிய நாடான கியூபா உலகிற்கே வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.155 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற வகையில் உலகிலேயே அதிக மருத்துவர் விகிதாச்சாரத்தை கொண்ட நாடாக விளங்கி வருகிறது.மிகவும் முன்னேறிய நாடான அமெரிக்கா கூட 396:1 என்ற மருத்துவர் விகிதாச்சாரத்தை கொண்டு கியூபாவை விட பின்தங்கியுள்ளது. சிறிய நாடாக இருந்தாலும் மருத்துவ படிப்பை தரமானதாகவும் அதே சமயம் அனைவரும் படிக்கும் வகையிலும் வழங்கி வருகிறது.மருத்துவர்கள் அதிகம் இருப்பதால் மக்களை வீட்டிற்கே சென்று சந்திக்கின்றனர் கியூப மருத்துவர்கள்.நோய் வந்தபின் மருத்துவம் என்றில்லாமல் நோய் வருவதற்கு முன்னரே தடுப்பதை இலக்காக கொண்டும் செயல்படுகிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கியூப நாட்டை போலவே நோய் வருவதற்கு முன்னே அதை தடுப்பதற்கான துறையாக நலவாழ்வுத்துறையை நாம் உருவாக்க வேண்டும். நோய்கள் உருவாவதற்கான முக்கிய காரணியாக சுற்றுப்புறத்தை சரியாக பேணாததும், கழிவுகள்,கழிவு நீரினை கையாளுவதற்கு சரியான அமைப்பு முறையை கொண்டிராததும் காரணமாக அமைகிறது. சுற்றுபுறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்வதையும்,கழிவுகள்- கழிவு நீர் மேலாண்மையையும் நலவாழ்வுத்துறை பிரதான பணியாக கொள்ளும்.துப்புரவு பணிகளில் மனிதர்களை பயன்படுத்துவதை முடிந்த அளவு குறைப்பதோடு சாத்தியமான அனைத்து இடங்களிலும் இயந்திரங்களை,இயந்திர மனிதர்களை பயன்படுத்தும். குறிப்பிட்ட சமுகத்தை சார்ந்தவர்களை மட்டுமே துப்புரவு பணிகளை செய்வதற்கு நிர்பந்திக்கும் முறையை ஒழித்து கட்டி பொது வேலையாக மாற்றப்படும்.
மருத்துவர்கள் மக்களின் வீட்டிற்கே சென்று அவர்களின் உடல் நலத்தை பரிசோதிக்கும் ,பராமரிக்கும் பணியை மேற்கொள்வர்.மருத்துவமனைகள் அரசு கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்படுவதோடு தரமான,சிறந்த மருத்துவத்தை மக்களுக்கு அளிக்கும் வண்ணம் மருத்துவமனைகளின் தரமும் உயர்த்தப்படும். நோய்கள் வருவதற்கு முன்னே அதனை தடுப்பதற்கான மருத்துவத்தையும்,நோய்கள் வந்துவிட்டால் தாமதிக்காமல் சிறப்பான,தரமான மருத்துவத்தை நகர்புற,கிராமப்புற மக்கள் அனைவருக்கும் வழுங்குவதையும் நலவாழ்வுத்துறை கொள்கையாக கொண்டிருக்கும்.
- தமிழ்நாடு தேச உரிமையும் மீனவர்கள் நலனும்.
பல்வேறு சமூக பிரிவினைகளின் வெளிப்பாடாக இன்றும் தமிழ்நாட்டில் மீனவர்கள் பொது சமூகத்துடன் இணையாத ஒரு தனித்துவமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரச்சனை பொதுசமுகத்தால் அந்நியப்படுத்தப்பட்டு பார்க்கப்படுகிறது.அதன் தொடர்ச்சியாக அவர்கள் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியவர்களாக அவர்களது வாழ்நிலைகள் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது. அவர்கள் பலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் மீனவர்களை கடற்கரையிலிருந்தும்,கடலில் இருந்தும் அப்புறப்படுத்த இந்த இந்திய வல்லாதிக்க அரசு திட்டங்களை போட்டு செயல்படுத்தியும் வருகிறது. மீனவர்கள் கடுமையான பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு, கடற்கரை மேலாண்மை திட்டம் , சரக்கு பெட்டக துறைமுக திட்டங்கள்( கடல்மாலை)மற்றும் இன அழிப்பு இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதை போன்று மக்கள் விரோத கொள்கைகளை நிறைவேற்றி செயல்படுத்தியும் தமிழர்கள் கொல்லப்படுவதையும், துரத்தப்படுவதையும் கண்டு கொள்ளாத அதற்கு துணை போகிறது இந்திய அரசு.அதன் நோக்கங்களை முறியடிப்பதோடு மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதோடு அவர்களின் சமூக நிலைமையினை உயர்த்தி, கல்வி,வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு போதிய வசதிகள் செய்து தரப்படவேண்டும்.அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் என்பது முறையாக கொடுக்கப்படாமலே நீண்ட நாட்களாக வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.அவர்களுக்கான பகுதிகளை மறுசீரமைத்து அவர்கள் உரிய பிரதிநிதிகளை அவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு அவர்களை கடல்சார் பழங்குடியினராக அறிவித்து கடலையும் கடற்கரையும் காக்கும் பொறுப்பையும் அவர்களிடம் ஓப்படைப்பதே நமது கொள்கையாகும்.
12.தமிழ்நாடு தேச உரிமையும் பழங்குடியினர் நலன்களும்.
காடுகள்,மலைகளில் வாழும் பழங்குடியினர் பொது சமூகத்துடன் இணையாத ஒரு தனித்துவமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.காடுகள், மலைகளில் வாழும் பழங்குடியினரை இந்திய அரசு வனத்துறை “வன நலன்” என்ற பெயரில் பழங்குடிகளின் உரிமைகளை பறிப்பதோடு அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டும், மிரட்டியும் அவர்களை அவர்கள் வாழிடங்களில் இருந்து அப்புறப்படுத்தியும் வருகிறது.முகாமையாக காடுகள் ,மலைகளில் இருக்கும் இயற்கை வளங்களையும் ,கனிம வளங்களையும் பன்னாட்டு/உள்நாட்டு நிறுவனங்களுக்கு விற்று விடுகிறது இந்திய அரசு .பன்னாட்டு/உள்நாட்டு நிறுவனங்கள் நமது வளங்களை சுரண்டுவதற்கு தடையாக இருப்பதாக பழங்குடியினரை அப்புறப்படுத்தும் பொறுப்பையும் இந்திய அரசே எடுத்து க்கொள்கிறது.இதன் விளைவாக பழங்குடியினர்களுக்கு அரசையே எதிர்த்து போராடும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.2019 இல் பா.ஜ. க அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் வனச்சட்டம், 1927,2006 ஆகிய ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட வனச்சட்டங்களில் பழங்குடியினர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் அனைத்தையும் பறித்து அதிகாரத்தை வன அதிகாரிகளுக்கும் , மத்திய அரசுக்கும் மாற்றுகிறது. இந்த அடாவடி சட்டங்களை ஒழிப்பதோடு ,அவர்களுடைய உரிமைகளும் அவர்களுக்கு திருப்பி தரப்படவேண்டும். பழங்குடியின மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதோடு அவர்களின் சமூக நிலைமையினை உயர்த்தி, கல்வி பொருளாதார நிலைகளை வளர்த்து பொது சமூகத்தோடு அவர்கள் விரும்பும் வண்ணம் இணக்கத்தோடு வாழ ஊக்கப்படுத்துவதும் நமது கொள்கையாகும்.இவை அனைத்தும் அவர்களின் அடையாளம், பண்பாடு, வாழ்சூழல் பாதிக்கப்படாமல் செயல் நடத்தப்படவேண்டும்.
- தமிழ்நாடு தேச உரிமைப்போராட்டமும் மதச்சிறுபான்மையினர் நலன்களும்
ஒடுக்குமுறைகளற்ற, சுரண்டலற்ற சனநாயக அரசினை வேண்டும் வேளையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதங்களின் நல்வாழ்விற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து அவர்களது நியாயமான உரிமைகள் பண்பாடு, மொழி போன்றவற்றை பேணி காக்கும் வண்ணம் நமது கட்சி செயல்பட வேண்டும்.ஒவ்வொரு மதத்தினருடைய சிறப்புரிமைகள்,வழிப்பாட்டு தலங்கள்,வழிபாட்டு முறைகள்,திருவிழாக்கள் போன்றவற்றை பாதுகாக்கவும் அவர்கள் சுதந்திரமாக ,அச்சுறுத்தலின்றி தங்கள் ஆன்மிக வாழ்வினை முன்னெடுத்து செல்லவும் தமிழ்நாடு தேச அரசு ஆவன செய்யும்.அதே போல, அனைத்து மதப்பிரிவினரும் தங்கள் மதத்தில் பின்பற்றப்படும் மூட நம்பிக்கைகளை களைவதற்கு முழுமனதோடு முயற்சி எடுக்க வேண்டும்.தங்கள் மதத்தை பின்பற்றும் அதே வேளையில் பிற மதத்தினரை விரோதிப்பதையோ,நிந்திப்பதையோ தவிர்க்க வேண்டும். அனைத்து மதத்தினரும் தமிழ்நாட்டின் சூழ்நிலைமைகளோடு ஒத்திசைந்து பிற மதத்தினருடன்,எல்லோரும் தமிழ் நாட்டு மக்கள் என்ற வகையில் சமுதாய சமத்துவத்தை ஒழுகி வாழவேண்டும் என்பதே நமது கொள்கையாகும். தமிழ்நாட்டின் உரிமைகள் என்று வருகிறபோது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று செயல்படுவதற்கான அவசியம் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து செயல்படவேண்டும்.
14.தமிழ்நாடு தேச உரிமைப்போராட்டமும் மொழிச்சிறுபான்மையினர் நலன்களும்
தமிழ்நாட்டில் தமிழுடன் பல்வேறு மொழிகள் வரலாற்றுபூர்வமாக பேசப்பட்டு வருகின்றன. வருகின்றன.தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,உருது,மராத்தி,சௌராஷ்டிரா இன்னும் பிற மொழிகள் தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ளன.தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை மொழி அனைத்திற்கும் அதற்கான அரசு அங்கீகாரம், வாய்ப்புகள் தமிழுக்கு இணையாக வழங்கப்படும்.ஆட்சிமொழி உரிமை குறிப்பிட்ட மொழியின் அவசியத்திற்கேற்ப நமது அரசு வழங்கும.மொழிச்சிறுபான்மையினர் அனைவருக்கும் அவர்களது தாய்மொழியில் பேசுவதற்கு,கற்பதற்கு,பயில்வதற்கு உண்டான உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு அவர்களது வளர்ச்சிக்கும் தமிழ்நாடு தேச அரசு பாடுபடும்.தங்களது மொழிகளில் கற்பிக்கும் பள்ளிகள் ,கல்லூரிகள் அமைத்துகொள்வதற்கான உரிமை வழங்கப்படும்.குறிப்பிட்ட மொழி பேசும் பிற மாநிலங்களுடன் மொழி வளர்ச்சிக்கான நட்புக்கழகம் அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.
தமிழ்நாட்டின் உரிமைகள் என்று வருகிறபோது தமிழ்நாட்டு மக்கள் என்ற வகையில் அதற்கு முன்னுரிமை கொடுத்து அனைவரும் ஓரணியில் நின்று செயல்படுவதற்கான அவசியம் உள்ளது.தமிழ்நாட்டின் நலன்களை காப்பதே அனைவரின் மேலான கடமை என்பதை தமிழ்நாடு தேச அரசு வலியுறுத்துகிறது.
- தமிழ் தேச உரிமைப் போராட்டமும் சர்வதேச அரசியல் நிலைப்பாடும்.
உலகெங்கும் வாழ தலைப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு தேசத்தவர் தன்னுடைய அடையாளம், பண்பாடு,மொழி,நாகரீகம்,பாதுகாப்பு ஆகியவற்றை பேணி காத்திடும்,வளர்த்தெடுக்கும் கடமையினை தமிழர்களின் தாயகம் என்ற முறையில் தமிழ்நாடு முன்னெடுக்கும்.
நம் தேசத்தின் உரிமைக்காக போராடும் அதே வேளையில் உலக அளவில் தமிழர்களுக்கு,பிற தேசிய இன மக்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாம் அணி திரள வேண்டும்.உலக அளவில் நடைபெறும் அனைத்து தேசிய இன போராட்டங்களுக்கும் தார்மீக ஆதரவு வழங்குவது, அண்டை நாடான இலங்கைக்கு எதிராக போராடி வரும் தமிழர்களின் தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவாகவும் அந்த கோரிக்கை வெற்றி பெறும் வரை அதற்கு அரசியல் ஆதரவு வழங்குவது நமது கடமையாகும்.முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு அணிதிரளும் நாடுகள்,அமைப்புகளோடு உறவை வளர்த்து அதற்கான போராட்டத்திலும் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பாலஸ்தீனம்,வெனிசுலா,வடகொரியா,சிரியா,ஏமன் போன்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் வல்லாதிக்கத்திற்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.உலக தேசிய இனங்கள் அனைத்துடனும் இணக்கத்தையும்,உறவையும் ஏற்படுத்துவதற்கு,வளர்ப்பதற்கு தமிழ்நாடு தேசிய அரசு பாடுபடும்.