தமிழ்நாடு தேச சமுக பொருளாதார திட்டம்
மக்கள் நலன் அரசுகளின் நோக்கமே மக்களின் சமூக வாழ்வை வளமாகவும், சுகாதாரமாகவும் அமைதியுடனும் வாழும் வண்ணம் ஆட்சி செலுத்துவதே. இவை அனைத்தையும் சாதிக்க வேண்டுமெனில் நாம் மிகச் சிறந்த பொருளாதார திட்டத்தை பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
வேலைவாய்ப்பு
ஒரு தேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சியில் இருக்கிறதா இல்லையா என்பதை அளவிடுவதற்கு வேலை வாய்ப்பின்மையும் ஒரு முக்கியமான குறியீடாக இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருந்தால் பொருளாதார நிலை சிக்கலை சந்தித்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தாலோ உற்பத்தி அதிகரிப்பு, தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பு, கூலி உயர்வு, வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு என்று வளம் எல்லா திசைகளுக்கும் செலுத்தப்படுகிறது. ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது என்றால் முதலில் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள்தான். அதாவது ஆட்குறைப்பு உடனடியாக தொடங்கிவிடும். வேலையின்மை பொருளாதார வீழ்ச்சியை முன்னறிவிக்கிறது. தமிழ்நாடு இந்திய துணைகண்டத்தினுள் குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சியடைந்த பகுதியாகவும், வேலை வாய்ப்புகள் ஓரளவு கிடைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. ஆனால் நம் தேசம் அதன் ஆற்றலுக்கேற்ப வேலைவாய்ப்புகளை பெறுகிறதா என்றால் இல்லை. மத்திய அரசின் கொள்கையினால் நமது தேசத்தின் பொருளாதாரம் பல பகுதிகளுக்கு திசைதிருப்பப்படுகிறது. உதாரணத்திற்கு நெய்வேலியில் நிலக்கரி மூலமாக கிடைக்கும் வருமானத்தை கொண்டு இந்தியாவின் மற்ற பகுதிகளில் வேறு தொழில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. நமது வளம் முழுவதுமாக சுரண்டப்பட்டு அதில் முழுவதும் மத்திய அரசுக்கு செல்வதோடு லாபங்களும் திசை திருப்பப்படுவது நமது பொருளாதாரத்தை சிதைக்கும் செயல். அதேபோல் நம்மிடமிருந்து சுரண்டப்படும் வளங்களுக்கு போதிய இழப்பீடும் தருவதில்லை இவை நமது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதை தடுக்கிறது. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பகுதி பகுதியாக இங்கிருந்து மற்ற மண்டலங்களுக்கு மாற்றப்படுகிறது. ஆவடியில் உள்ள கனரக தொழிற்சாலை அவ்வண்ணம் மாற்றப்படுகிறது. இவை நேரடியாக சில ஆயிரம் வேலை வாய்ப்புகளை நமது தேசம் இழக்குமாறு செய்கிறது.
இது போக இதுநாள் வரை தமிழ்நாட்டில் இருந்த மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டில் இருந்துதான் பெருமளவு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஏனென்றால் அதற்கான தேர்வுகளும் பகுதியளவில் நடத்தப்பட்டு வந்தன. பா.ஜ.க ஆட்சியில் இந்த தேர்வுகள் எல்லாம் மத்தியபடுத்தப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் முழுவதும் வடமாநிலத்தவர்கள் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். இது நியாயமாக நடைபெறுகிறதா என்றால் அதுவும் இல்லை. இதற்கான தேர்வு ஆணையமும் சில நிறுவனங்களும் இணைந்து மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் செய்து இந்த வேலைவாய்ப்புகளை கைப்பற்றி விடுகின்றனர். உச்சநீதிமன்றமே இந்தத் தேர்வினில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று அறிவிக்கும் அளவிற்கு இது போனாலும் ஆட்சியாளர்கள் அசையாமல் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இது எந்த அளவிலும் அனுமதிக்க முடியாத விடயமாகும். அஞ்சல், ரயில்வே, வங்கி, வருமான வரித்துறை, தணிக்கைத் துறை போன்றவற்றில் இது அதிகமாக நடந்தேறுகிறது. இந்த அலுவலகங்களுக்கு சென்றால் தமிழ் அறவே பேசத் தெரியாத வடமாநிலத்தவர்கள் அமர்ந்து கொண்டு தமிழில் எழுதிச்செல்வோரை நிராகரிக்கும் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நமது வேலைவாய்ப்புகளை பறித்துக்கொண்டும், இன்னொரு பக்கம் நமது அடிப்படை உரிமையை மிதித்துக் கொண்டும் இருக்கும் மத்திய அரசிற்கும் இதற்கெல்லாம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அவர்களுக்கு இசைவு தெரிவித்துக் கொண்டிருக்கும் மாநில அரசுகளுக்கு வேலையின்மையால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கோபத்தை உணர்த்த வேண்டும். தனித்தனியாக போராடுவதை தவிர்த்து ஒன்றாக நின்று போராடுவதே தாங்கள் தங்களுடைய வேலை வாய்ப்பினை பெறுவதற்கான ஒரே வழி என்பதை இளைஞர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்களை அமைப்பாக திரட்டி நமது வேலை வாய்ப்புகளை பறிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு தக்க பாடம் புகட்டி நமது வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான வழிகாட்டுதல் அளிக்கப்பட வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் பொருளாதார திட்டங்களை உருவாக்கவும் மத்திய, மாநில அரசுகளை நிர்ப்பந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான தேச உரிமைகளை நாம் பெற்று விட்டால் இன்னும் பல தேசங்களின் மக்களுக்கும் சேர்த்து நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது காணக்கிடக்கும் உண்மை. இந்தி பேசத் தெரிந்த பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுப்பதும், வேலை செய்து வருவதும் எங்கேயும் பார்க்க கூடிய செயலாக இருக்கிறது. தமிழ்நாடு அவர்களை விரட்டுவதில்லை அரவணைத்தே வருகிறது. ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டிலேயே தமிழர்களின் வேலைவாய்ப்பினை பறித்து வருகிறது. இது ஆரோக்கியமான நிகழ்வுகளுக்கு இட்டுச் செல்வதல்ல. நம் தேசத்தின் வேலைவாய்ப்புகள் நமக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.நமது தேச உரிமைக்கான முதன்மை சிக்கல்களில் போராட்டத்தில் வேலை வாய்ப்புக்கான போராட்டம் ஒன்றாக இருக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
கடன்கள்
இன்றைக்கு தற்சார்பு பொருளாதாரம் புறந்தள்ளப்பட்டு முழுக்க முழுக்க சார்பு பொருளாதாரத்தையே நம் தேசம் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. உலக வங்கி, அந்நிய நாடுகளிடம் இருந்து ஏராளமான கடன்கள் பெறப்பட்டு அக்கடனிலேதான் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதனால் ஏற்படும் கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே நமது உழைப்பு சென்றுவிடுகிறது. வட்டி கட்ட முடியாத சூழல் ஏற்படும்போது அவர்கள் நிர்ப்பந்திக்கும் பல ஒப்பந்தங்களுக்கு நம் ஒப்பு தர வேண்டியுள்ளது.அது நம்முடைய சுயசார்பான நிலையை ஒழித்து கட்டி அடிமைத்தனத்தை புகுத்துகிறது.அந்நிய நிறுவனங்கள்,வங்கிகள் போன்றவற்றின் கடன்களை தீர்ப்பதோடு கடனில்லா தேசமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க வேண்டும்.
வரி
ஒரு அரசு என்ற வகையில் வரி விதிக்கும் உரிமை என்பது மிகவும் முக்கியமான உரிமையாகும். அரசின் வருவாயில் முக்கியமான பங்கு வகிக்கும் அதே வேலையில் பல வளர்ச்சி திட்டங்களுக்கும் அந்த வரி பயன்படுத்தப்படும். ஆனால் இன்று ஜி.எஸ்.டி என்ற பெயரில் வரி வசூல் செய்யும் உரிமையையும் இந்திய அரசு தமிழ்நாட்டிடம் இருந்து பறித்திருக்கிறது. மேலும் உற்பத்தி இடத்தில் வரிகளை தவிர்த்துவிட்டு பொருள் நுகர்வு செய்யும் இடத்தில் வரி என்பது உற்பத்தியில் சிறந்து விளங்கும் நமது மாநிலத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது. ஏனென்றால் உற்பத்தி செய்யும் மாநிலங்களும் பகுதிகளும் இயற்கை வளம், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம் என்று பல விடயங்களை இழந்து அவற்றை உற்பத்தி பொருளுக்கு மாற்றி அதன் மூலம் பாதிப்பை சந்திக்கிறது. அவற்றுக்கு இழப்பீடாக அந்த வரி செயலாற்றும். நுகர்வு செய்யும் இடத்தில் வரி என்பது உற்பத்தியின் மூலம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு இழப்புகளை வழங்குவதில்லை.அதனால் வரி விதிப்பதற்கான உரிமையை போராடி்மீட்க வேண்டியது நமது கடமையாகும்.
நில மறுவிநியோகம்.
நிலம்தான் செல்வம்,நிலம்தான் அதிகாரம் ,நிலம்தான் அரசு , நிலம்தான் அனைத்து முரண்பாடுகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இந்திய சமுகத்தில் வைத்து பேசினால் நிலவுடைமைதான் சாதியத்தையும் பாதுகாக்கிறது. உலக நாடுகளில் முதலாளித்துவ புரட்சிக்கு பின்னர் நிலப்பிரபுக்கள் முக்கியத்துவம் இழந்தாலும் நிலம் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து விட வில்லை.அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த முதலாளித்துவ வளர்ச்சி காலத்திலும் நிலவுடைமை பலம் பொருந்தியதாகவே நீடிக்கிறது.அதாவது முதலாளியம் இந்தியாவில் நிலவுடைமையோடு கைகோர்த்து முன்னேறுகிறது.வர்க்கப்போராட்டம்தான் தீர்வு என்பதில் மாற்று கருத்து இல்லையெனினும் இந்தியாவில் வர்க்கப்போராட்டத்தை நீர்த்து போகச்செய்யும் அளவிற்கு ,அதாவது தொழிலாளி வர்க்கம், வர்க்கமாக ஓன்று சேர முடியாத அளவிற்கு சாதிய உணர்வு மேலோங்கி நிற்கிறது. அதனை உடைத்தெறியாமல் இங்கே மக்கள் ஒன்று சேரப்போவதில்லை.
சாதியத்தை பாதுகாப்பதில் இரண்டு அமைப்புகள் முனைப்பாக உள்ளன.ஒன்று அரசு ,இன்னொன்று நிலவுடைமை.
இந்தியாவிலும் நிலவுடைமைச்சமுகத்தை முதலாளித்துவம் தகர்த்துவிடும் என்று பலர் கருதி வந்தாலும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் வளர்ச்சிக்காக மூன்றாம் உலக நாடுகளில் பிற்போக்கான விவசாய உற்பத்திமுறை பாதுகாக்கப்படுகிறது.இது அவர்களுக்கு மலிவான மூலப்பொருட்களை தொடர்ந்து அளித்து வரவேண்டும் என்பதற்கான அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதி.இந்தியாவிலோ விவசாயத்தில் சாதியை முன்னிட்டு உழைப்பு சுரண்டல் நடைபெறுகிறது. நிலமற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் கூலி விவசாயிகளாகவே இருக்கின்றனர்.இவர்கள் மீதான சுரண்டலை சமுக அமைப்புகளான மதமும்,சாதியமும் நியாயப்படுத்துகிறது. இந்த மக்கள் ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றால் இந்த நிலவுடைமை சமுகத்தில் இருந்து விடுபட வேண்டும். இவர்கள் விடுபடுவது என்பது இவர்களுக்கான வாழ்வாதாரம் சுயசார்பாக மாறினால்தான் சாத்தியம்.இல்லையென்றால் கூலித்தொழிலாளியாக மாறுவது ஒன்றுதான் அவர்கள் முன்னே இருக்கும் வழி.
ஆனால் வரலாறு நெடுக மன்னர்களால் ,நிலக்கிழார்களால் ,முதலாளிகளால் ,மதங்களால் ,சாதிய முறையால் வஞ்சிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு நிலங்கள் மறுவிநியோகம் செய்யப்படுவதே சரியானது. அநீதியான முறையில் நிலவும் நிலவுடைமையை ஜனநாயக முறையில் உழைக்கும் மக்களுக்கு சீரான மறு விநியோகத்தின் மூலமாக மாற்றியமைப்பது .குறிப்பிட்ட சமுகங்களிடையே குவிந்து கிடந்த நிலத்தை வரிவருமானத்திற்காக ஜமீன்தாரி,ரயத்துவாரி,நில உச்ச வரம்பு சட்டங்களால் நிலங்கள் பிரித்து அளிக்கப்பட்டாலும் அது என்றுமே எல்லா மக்களையும் சென்று சேர்ந்துவிட வில்லை.நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களும் அப்படியொன்றும் எடுக்கப்படவும் இல்லை.நில உச்ச வரம்பு சட்டத்தின் ஓட்டைகள் நிலவுடைமையாளர்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது ,நிலம் கிடைக்கும் என நம்பிய கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை நாசம் செய்தது.
அந்த நில உச்சவரம்பு சட்டம் கூட இந்தியாவின் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்காக அமெரிக்காவின் நிர்பந்தத்தின் பேரில் இந்திய அரசாங்கம் செய்ததே.இந்திய அரசாங்கமும் கண்துடைப்புக்காக செய்ததே தவிர உண்மையில் நில உச்ச வரம்பு சட்டத்தினால் நிலமற்ற மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
இன்றைக்கும் வேறு வகைகளில் நிலங்கள் குவிக்கப்பட்டு வருவது நிலமற்றவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு விவசாய பொருளாதார வளர்ச்சியையும் மட்டுப்படுத்துகிறது.குவிக்கப்படும் நிலங்கள் முழுமையாக விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படுவதில்லை.தரிசாக விடப்படும் நிலம்தான் அதிகம்.இந்த நிலங்களை சார்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கும் நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு நிலங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பொருள் அவர்களிடம் அளிக்கப்பட்டால் உற்பத்தி என்பது பன்மடங்கு பெருகவும் வாய்ப்பிருக்கிறது. இன்று நிலத்தில் இறங்கி உழைக்காதவர்களுக்கு அதனை சொந்தம் கொண்டாட என்ன நியாயம் இருக்கிறது.அது சமுகப்பொருளாதார முன்னேற்றத்தின் அங்கமாக மாறாமல் தனிநபர் சொத்துகுவிப்பின் பேராசையினால் விளையும் உற்பத்தி முடக்கத்தை ,அதாவது பொருளாதார முடக்கத்திற்கே காரணமாக இருக்கிறது. சமுகநீதியின் அடிப்படையிலும் வரலாறு நெடுக நிலமற்றவர்களாக வாழ்ந்தவர்களுக்கு ஜனநாயக நாட்டில் நிலத்தை பகிர்ந்து அளிப்பதுதானே நியாயம். இது எங்கள் முன்னோர் சொத்துக்கள் என்று யாராவது வழக்குக்கு வந்தால் உங்கள் முன்னோருக்கு இந்த சொத்துக்கள் எப்படி வந்தது என்று அவர்களை நோக்கி எழுப்பப்படும் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டி இருக்கும்.ஏனென்றால் யாரொருவரும் நியாயமான முறையில் தங்கள் நிலங்களை பெற்றுவிடவில்லை. நிராயுதபாணிகளான மக்களை வாள்முனை கொண்டு அடிமைப்படுத்தி அபகரித்த நிலங்களின் மீது சொந்தம் கொண்டாடுவதும் அல்லது அநீதியான முறையில் நிலங்களை அபகரித்துக்கொண்டதும் (கடுவட்டி,பஞ்சம்,அதிக வரி) இந்த ஜனநாயக காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.அதே போல் அத்தனை ஆண்டுகளில் அவர்கள் அடைந்த இன்னல்களுக்கு தக்க நியாயமும் கிடைக்க வேண்டியுள்ளது.
நவீன காலத்திற்கு ஏற்ப நிலவுடைமையிலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டி இருக்கிறது.சீனாவில் மக்களுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்ட பின் ஏற்பட்ட முன்னேற்றம் அவர்கள் தொழில்துறையை நோக்கி சீரான முறையில் முன்னேறுவதற்கு அடித்தளமாக மாறியது.
இந்தியாவில்,தமிழ்நாட்டில் நிலங்கள் மறுவிநியோகம் செய்யப்படுவது அதாவது அனைவருக்கும் (அனைவருக்கும் என்றால் அனைவருக்கும் அல்ல,நிலமற்ற கூலி விவசாயிகள்,குத்தகை விவசாயிகள்,சிறு, குறு விவசாயிகள் போன்றோர்களுக்கு )நிலம் அளிக்கப்பட வேண்டும் . வாய்ப்பிருந்தால் கூட்டுப்பண்ணைமுறைகளை கூட முயற்சி செய்யலாம்.இந்த நில மறுவிநியோகம் ஒருபக்கம் சாதிய நிலவுடைமை சமுகத்தை தகர்க்கும்,இன்னொரு பக்கம் தேச பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும்.
இப்பெருமுக்கியத்துவம் வாய்ந்த நில மறுவிநியோகம் அதிக கவனத்துடனும் , பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டமாகும்.