ஜனநாயகவாதி திருமா அவர்களே… வணக்கம்!
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு எதிராக நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது எழுத நினைத்த கடிதம் இது.
பல ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த இருக்கையும், கம்ப்யூட்டரும் எனக்குக் கிடைப்பதற்கு..!
அருந்ததியர் மக்களின் மீதான சாதிய வன்கொடுமைகள் தொடங்கி அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பு வரை பார்த்தாகிவிட்டது உங்கள் முற்போக்கு அட்டகாசத்தை!
இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க, நான் ஒன்றும் எங்க அப்பன் ஆறுமுகமோ.. என் தாத்தன் சுப்பனோ இல்லை… சுயமரியாதை உள்ள முதல் தலைமுறை பட்டதாரி.
சமீபத்தில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சம்பந்தமாக நீங்கள் பேசிய வீடியோவை பார்த்தேன்.
சரி, அதற்கு அப்புறம் வருவோம்.
முதலில் “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் எளிய மக்களுக்கும் அதிகாரம்” என்பதை கட்சியின் முழக்கமாக கொண்டிருக்கும் நீங்கள்,
பல நூற்றாண்டுகளாக கல்வி, அரசியல், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் தான் முக்கியமே தவிர, எண்ணிக்கை அல்ல!
வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதும். குரல் அற்ற மக்களின் பக்கம் நிற்பது என்பதுதானே சம நீதியும் சமூகநீதியும்.
நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு எம்பிக்கள் வைத்துக் கொண்டிருக்கிற நீங்கள், பல நூற்றாண்டுகளாக எந்த உரிமையும் அனுபவிக்காத அருந்ததியர்கள் இப்பொழுதுதான் முதல் தலைமுறை பட்டதாரிகளாக படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழலில் உள் இட ஒதுக்கீட்டு ஆதரவான தீர்ப்பை எதிர்த்து சீராய் மனு தாக்கல் செய்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?
தமிழ்த் தேசியம் பேசும் திருமா அவர்களே எப்படி மாநில உரிமை கூடாது என்று பேசி வருகிறீர்கள்?
ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருந்தால் தவறாக பயன்படுத்த மாட்டார்களா!?
EWS உயர் சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
EWS இடஓதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூகநீதியின் அடிப்படைக் கொள்கையை படுகொலை செய்யும் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தீர்களா? பல்வேறு தலைவர்களை சந்தித்து எதிர்ப்பை பதிவு செய்ய ஆதரவு திரட்டினீரா திருமா அவர்களே..?!
உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் தங்களது சம வாய்ப்பை கேட்கின்ற பொழுது, நீங்கள், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்க வேண்டும் என்று சொன்னதற்கு, நீங்கள் எல்லாம் எனக்கு சமூக நீதிப் பற்றி பாடம் எடுக்காதீர்கள் என்று எவ்வளவு அதிகாரத்தோடு உங்கள் பதிலை சொன்னீர்கள்..?!
இரட்டை வாக்குரிமை அம்பேத்கர் கேட்டபோது இந்துக்களை பிரிக்காதீர்கள் ?என்று காந்தி சொன்னார். இந்துக்களும் தலித்துக்களும் ஒன்றாக வாழ்வது போலவும். இரட்டை வாக்குரிமை கொடுத்தால் இந்துக்கள் பிரிந்து விடுவார்கள் என்று காந்தி பேசியதற்கும் நீங்கள் (திருமாவளவன்) தற்போது தலித்துகளை உள் இட ஒதுக்கீடு பிளவு ஏற்படுத்தி விடும் என பேசுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
ஏதோ பறையர்களும் அருந்ததியர்களும் ஒரே குடியிருப்பில் சேர்ந்து வாழ்வது போலவும் உள் இட ஒதுக்கீடு வழங்கினால் தலித் ஒற்றுமை சிதைந்து விடும் என்பது போலவும் பேசுகிறீர்!
முதலில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தால் தானே பிரிவதற்கு எப்போது எங்கே ஒன்றாக சேர்ந்திருந்தோம் என கூறுங்கள்!
உரிமைகள் மறுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தின் மீது அக்கறை இல்லாத நீங்கள், எப்படி அம்பேத்கர் வாதியாக, பெரியார் வாதியாக, ஜனநாயக வாதியாக இருக்க முடியும்..?
இந்த முற்போக்கு முகமூடி உங்களுக்கு பொருந்தவில்லை
திருமா அவர்களே…!
அருந்ததியர் சமூகத்தின் மீது உங்கள் வன்மம் எப்படிபட்டது என்பதற்கு உதாரணமாக
உலகப் புகழ் பெற்ற கவிஞர் ஒருவர் இலங்கையில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது கவிஞருக்கு பணிவிடை செய்தது பறையர் பெண் என்ற விவாதம் நடந்து கொண்டிருந்த சூழலில் மதுரை தலித் கலை விழாவில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கவிஞருக்கு பணிவிடை செய்தது பறையர் பெண்ணல்ல, அது அருந்ததியர் பெண் தான் பாலியல் தொழிலாளியாக இருந்தாள் என மேடையிலே பேசினார்.
பறையர் பெண்கள் எல்லாம் புனிதமானவர்கள். அருந்ததியர் பெண் தான் பாலியல் தொழிலாளியாக இருந்தார்கள் என சித்தரிக்கும் பேச்சாகவே அது இருந்தது.
அந்த மேடையிலேயே தியாகி இமானுவேல் பேரவை பொதுச் செயலாளர் தோழர். சந்திர போஸ் அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது பெண் என்கின்ற பார்வையில் தான் பார்க்க வேண்டுமே தவிர அது பறையர் பெண் அல்ல அருந்ததியர் பெண் என சாதிய பார்வையில் பார்க்கக்கூடாது என ரவிக்குமாரின் பேச்சை வன்மையாக கண்டித்து பேசினார்.
அந்த நிகழ்வில் அன்றைய ஆதித்தமிழர் பேரவையின் பொறுப்பாளரும் இன்றைய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர்.தோழர். நாகை. திருவள்ளுவன் , உள் இட ஒதுக்கீடு போராளி தோழர். நீலவேந்தன் மற்றும் சோமனூர் குட்டி ஆகியோர் சாட்சியாக நிகழ்வில் இருந்தார்கள்.
கோவை மாவட்டம் – சோமனூர் செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளில் சோமனூர் பவர் ஹவுஸ் நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய நீங்கள் (திருமாவளவன்) கர்நாடகாவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் “தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர மறுப்பதை சரி என்றும் அதே வேளையில் தமிழ்நாட்டில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி காவிரி உரிமைக்காக போராடுவது அவர்களது உரிமை என்பது எங்கள் நிலைப்பாடு”
நான் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதியாக இருக்கிறேன் என்று பாருங்கள்! என்று பேசினீர்கள் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள்.என்று நினைக்கிறேன்.இதுதான் உங்கள் ஜனநாயகவாதி முகமூடி!
தோழர்.திருமாவளவன், எழுத்தாளர் ரவிக்குமார் இருவரின் முகமூடிகளை கிழித்துக் கொண்டே போகலாம்.
தலித்துகளுக்கு எதிரானவர் தந்தை பெரியார் என்று தொடர்ந்து தாய்மண் இதழில் எழுதி வந்தவர் தான் இந்த எழுத்தாளர் ரவிக்குமார். சனாதன வாதிகளுக்கு எதிரானவர்கள் நாங்கள் தான் என்று பேசுகிறீர்களே..! உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?
பெங்களூர் குணா எப்படி தமிழருக்கு எதிரானவர் தந்தை பெரியார் என்று தொடர்ந்து பொய் பரப்புரை செய்தாரோ அதேபோல தானே உங்கள் தாய்மண் இதழில் பெரியார் தலித்துகளுக்கு எதிரானவர் என்று எழுதினார் எழுத்தாளர் ரவிக்குமார், பெரியார் ஆதரவாளர்கள் அதற்கு கடுமையான எதிர்வினை தெரிவித்த போது அதற்கு நீங்கள் ரவிக்குமாரின் எழுத்துரிமையில் நாம் தலையிட முடியாது என்றல்லவா சொன்னீர்கள். பெரியார் இயக்கங்கள் மற்றும் முற்போக்கு இயக்கங்களும் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்புகள் வந்த பிறகுதான் தாய் மண் இதழில் பெரியாருக்கு எதிராக வந்த விமர்சனத்தை நிறுத்தி வைத்தீர்கள்…
ரவிக்குமாரின் பெரியாரைப் பற்றி விமர்சனக் கட்டுரை எழுதுவதற்கு நான் அனுமதிக்க வேண்டுமென்றால் நான் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதியாக இருந்திருக்கிறேன் என்று பாருங்கள் என்று கூறியது நீங்கள் தான்.
உண்மையிலே நீங்கள் ஒரு சிறந்த ஜனநாயவாதி என்று எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டீர்கள்.
தமிழக மண்ணில் இந்துத்துவ பாசிச சக்திகள் வளர்வதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்களில் ஒருவர் ரவிக்குமார் என்பது மறுக்க முடியுமா…?
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் சமூகநீதி பற்றி எனக்கு எல்லாம் நீங்கள், வகுப்பு எடுக்காதீர்கள் என்று கூறினர்களே அதைத்தான் நாங்களும் உங்களுக்குச் சொல்லுகிறோம் சமூக நீதி பற்றியும் ஜனநாயகம் மாண்புகளை பற்றியும் எங்களுக்கு பாடம் எடுக்கும் எந்த ஒரு தகுதியும் உங்களுக்கு இல்லை.
அருந்ததியர் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளை கண்டித்து போராடியவன் நான் என்று பேசி இருந்தீர்கள்.
இந்தப் பட்டியலுக்கு பதில் சொல்லுங்கள்..!
ஜனநாயக காவலர் திருமா அவர்களே..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள வெட்டல் நாயக்கன்பட்டி அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பாலமுருகன் பறையர் சமூகத்தைச் சார்ந்த நதியா இருவரும் காதல் திருமணம் செய்ததற்காக விடுதலை சிறுத்தைகள், புரட்சிப் பாரதம், பறையர் பேரவை அமைப்பைச் சார்ந்தவர்கள், அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த போஸ் என்பவரை கொடூரமாக கொலை வெறி தாக்குதல்…
விழுப்புரம் கச்சிராப்பாளையம் அருகே உள்ள கரடி சித்தூரில் பரிமளா (பறையர்) அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞன் வீரன் இருவரும் காதல் திருமணம் செய்தார்கள் தொடர்ந்து அருந்ததியர் சமூகப் பெண்கள் நான்கு பேரை மந்தையில் நிறுத்தி மானபங்கப்படுத்தி, 19 வயது வெள்ளையம்மாள் என்பவரை படுகொலை செய்யப்பட்டு, 17 வயது நதியாவை மனநோய்க்கு உள்ளாக்கியது…
விழுப்புரம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளி நயன் சேர்ந்த கோகிலா (பறையர்) அருந்ததியர் இளைஞன் கார்த்திகேயன் இருவரும் காதலித்து திருமணம் செய்த காரணத்தால் கோகிலாவை சாதி ஆணவக் கொலை செய்தது…
தேனி சின்னமனூர் ஒன்றியம் காட்சிபுரம் பகுதியை சேர்ந்த 11 வயது அருந்ததியர் சிறுமி நந்தினியை மூன்று பறையர் இளைஞர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டம் குண்டாயிருப்பு பகுதியில். பொது வீதியில் ஒரு அருந்ததியர் சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே ஊரைச் சேர்ந்த சிறுவனை (பறையர் ) கல்லால் அடித்திருக்கிறார்கள். இதனால் வலி பொறுக்க முடியாத சிறுவன் திரும்ப அடிக்க, இது பற்றிய விபரம் தெரிய வர, பறையர் சிறுவனின் உறவினர் முருகேஸ்வரி, அருந்ததியர் சிறுவனின் தாய்க்கு முன்பே அடித்து உதைத்துள்ளார்கள் இதுபற்றி இரண்டு குடும்பங்களும் பேசி முடித்த பிறகு, இரவு முத்துராசு என்பவர் ‘எப்படி என் அண்ணன் மகனை ஒரு சக்கிலியப் பய எதுத்து அடிக்கலாம்’ என்று சாதிப் பெயர் சொல்லித் திட்டி, மீண்டும் சண்டைக்கு இழுத்துள்ளார்.
சிறுவர்களின் சண்டையைப் பெரிதாக்க வேண்டாம் என்று சொன்ன கோவிந்தராசுவை, ‘கை நீட்டிப் பேசுற அளவுக்கு சக்கிலியப் பயலுக்கு தைரியம் வந்துருச்சா’ என்று விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த முத்துராசு, சுப்பையா, முருகேசன், சின்னப் பிரகாஷ், கருப்பசாமி ஆகியோர் பெரிய தடிகளுடன் சென்று கோவிந்தராசுவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். கோவிந்தராசுவை காப்பாற்ற முயன்ற தாய் வீரம்மாளை, பிறப்புறுப்பில் ரத்தம் கசியும் அளவிற்குத் தாக்கியுள்ளனர். அவர்களுடைய வீடும், பொருட்களும் சூறையாடப்பட்டது.
இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும்.
தோழர்.திருமா அவர்களே!
நாங்கள் சில கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறோம். உண்மையிலேயே பாதிக்கப்பட்ட அருந்ததிர் மக்கள் பக்கம் நின்று சமத்துவத்தை நிலைநாட்ட, தாங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள்!
ஆனால் நாங்கள்…
மதுரை மேலவளவு முருகேசன் படுகொலை செய்யப்பட்ட போது… தர்மபுரி நத்தம் கொட்டை, நாயக்கன் கொட்டை சூறையாடப்பட்ட போது…
இளவரசன் படுகொலை செய்யப்பட்ட போது…
கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட போது…
தலித் பறையர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பொதுக்கூட்டங்களும் அருந்ததியர்கள் ஆகிய நாங்கள் போராடி இருக்கிறோம்.
அருந்ததியர் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட போது…! அருந்ததியர் மக்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சி எங்கேயாவது ஒரு போராட்டமாவது நடத்தியது உண்டா?
அடேயப்பா.. உங்கள் மனிதாபிமானத்தை தூக்கி பெட்டியில்தான் போட வேண்டும். ‘மனிதாபிமானம்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கே தகுதியற்றவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறத்துவிடாதீர்கள்!
இன்னமும் அருந்ததியர் மக்கள் மீது பறையர்கள் நடத்திய தாக்குதல்களும் மற்றும் சந்தையூர் தீண்டாமை சுவர் தலித் ஒற்றுமையின் அவமானமான சின்னமாகத்தான் நிற்கிறது.
என்ன கிழித்துவிட்டீர்கள் ஜனநாயகத்தின் காவலரே…
நீங்களா!ஐயோ..!? நீங்கள்தான் ஆண்ட பரம்பரை பறையர்கள் ஆச்சே…?
அப்புறம் என்ன சொன்னீர்கள்…?
தலித்துகளை இந்துத்துவ சக்திகள் பிரித்து விடுவார்கள் என்று பேசினீர்கள்.
அம்பேத்கர் நூற்றாண்டு விழாவும், தலித் மக்களின் சுயமரியாதைக்கான எழுச்சியும், அந்த மக்கள் மீதான தாக்குதலும், தலித் இயக்கங்களின் ஒற்றுமையின் தேவை உணர்ந்து, எஸ்.டி.கல்யாணசுந்தரம் ( தமிழ் நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி) திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), அரங்க.குணசேகரன் (தமிழக மனித உரிமை இயக்கம்), பூ.சந்தரபோசு (தியாகி இம்மானுவேல் பேரவை) உள்ளிட்ட 9 இயக்கங்கள் ஒருங்கிணைந்து தலித் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள். மூன்று சமூகத்தின் மீது எங்கு தாக்குதல் நடந்தாலும் தலித் கூட்டமைப்பு களத்தில் இருக்கும் என்று அறிவித்தார்கள்.
தென் மாவட்டங்களில் தலித் (பள்ளர்) மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும், மேலவாளவு முருகேசன் (பறையர்) உள்ளிட்ட 6 பேரைப் படுகொலை செய்த சாதி வெறியர்களைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி மேலூரில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
அது தலித் மக்களிடம் புதிய நம்பிக்கை அளித்தது. அது மட்டும் இல்லாமல் தலித் மக்களுக்குள் என்ன பிரச்சினைகள் வந்தாலும், மூன்று சமூகத்தின் தலைவர்கள் கலந்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி சார்பாக ஆதிக்க சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதலைக் கண்டித்தும், தலித் (பள்ளர் & பறையர்) மக்களுக்கு ஆதரவாக துணை நிற்போம் என இராமநாதபுரத்திலிருந்து மதுரை வரையில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் நடைபயணம் சென்றது.
வழி நெடுக எல்லாப் பகுதியிலும் தியாகி இம்மானுவேல் பேரவை ஆதரவாக நின்றார்கள். இறுதியாக மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தலித் கூட்டமைப்பின் அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.
தலித் கூட்டமைப்பை உடைவதற்கு முதல் காரணமாக இருந்தவர் திருமாவளவன் இன்றைக்கு தலித் ஒற்றுமை பற்றி பேசுகிறார்.
“வாழ்க.. உங்கள் பறையர் ஜனநாயகம்.” நீங்கள் சொன்னதுபோல் எந்தவொரு ஜனநாயக வாதியும் ஏன் மனிதாபிமான உள்ள குப்பனும், சுப்பனும் கூட இந்தக் காரியத்தை செய்ய மாட்டான் ஜனநாயகவாதி திருமா அவர்களே..!
கடைசியாக தோழர். திருமாவளவன் அவர்களே..!
நீங்கள் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ். சட்டை அணிவதால் உங்களின் ஜனநாயகவாதி முகமூடிக்குள் பறையர் சாதி பாசம் மறைந்துவிடும் என்று நினைக்காதீர்கள்…!
நீங்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் வரலாற்று நெடுகிலும் அருந்ததியர் மக்களுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை?!.
இன்று அருந்ததியர் உள்ஓதுக்கீடு எதிர்ப்பில் உங்கள் சாயம் வெளுக்கிறது என்பதால் அவசர கதியில் மது போதைக்கு எதிரான மாநாடு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என புதிய புதிய நாடகங்களை அரகேற்றி வருகிறீர்கள்.அதில் போய் உங்கள் முகத்தை மறைக்க நீங்கள் பாடாய் படுவது அப்பட்டமாய் தெரிகிறது.
உங்களின் முற்போக்கு முகமூடியை அம்பலப்படுத்துவோம்!, எங்கள் வாழ்வியலில் நாங்கள் வாழும் வாழ்க்கை முறை அசாதாரணமானது என்பதை தயவு செய்து கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
திருமா அவர்களே…!
இத்தனைக்கும் பிறகும் எதிர்வினை புரியாமல் இருக்க நாங்கள் என்ன செத்த பிணமா..? ஆனால், நீங்களே எதிபார்க்காத சுயமரியாதையுடன் நாங்கள் வாழ்வதற்கு எங்களது போராட்டங்கள் மிக முக்கியமானது. இன்று ஒரு எழுச்சியை பெற்றிருக்கிறோம்.
”யார் இந்நாட்டின் வரலாற்றில் மறைக்கப்பட்டார்களோ,
அவர்களே இந்நாட்டின் வரலாற்றை திரும்பவும் எழுதுவார்கள்” –
என்பார் புரட்சியாளர் அம்பேத்கர்
இதோ எங்கள் வரலாற்றை நாங்களே எழுத வருகிறோம்..!
இறுதியாக…
எந்தவொரு தனிமனிதனையோ. அமைப்பையோ, குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் நோக்கம் எதுவும் எங்களுக்கு இல்லை. சொல்லப் போனால் அது எனது வேலையுமில்லை.
பல நூற்றாண்டுகளாக மிகப்பெரிய வலியைச் சுமந்து நிற்கின்ற எமது மக்களின் துயரத்தை பொது சமூகத்தின் மனசாட்சியின் முன்பு வைக்கவே நான் விரும்புகிறேன்.
பொது சமூகத்தின் மனசாட்சி விழித்துக்கொண்டு எங்களுக்கான அரசியல் உரிமைகளை மீட்க எங்களுடன் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையோடு…
இவண்…
வெள்ளமடை.ஆ.நாகராசன்
அருந்ததியர் இளைஞன்
முதல் தலைமுறை பட்டதாரி.
Leave a Reply