“தாராளமயம், தனியார்மயம், உலகமயம்” எனும் முதலாளித்துவ மும்மையால் கடத்திச் செல்லப்பட்டிருக்கும் நம்முடைய உலகில் மனிதர்களும், பிற உயிரினங்களும், இயற்கையும் முக்கியமானவை அல்ல. அள்ளித்தோண்டி எடுத்து, அதிக விலைக்கு விற்று, அதானி-அம்பானி-அனில் அகர்வால் போன்ற முதலாளிகளை மேலும் பணக்காரர்களாக்கும் கனிமங்கள்தான் இன்றைய உலகில் முக்கியமானவை.
நாடெங்கும் ஆங்காங்கேப் படிந்திருக்கும் முக்கியமானக் கனிமங்களைக் கண்டுபிடித்து, அகழ்ந்தெடுத்து, சந்தைப்படுத்துவது அரசின் தலையாயக் கடமைகளுள் ஒன்றாகிறது. இதனடிப்படையில் இந்திய அரசின் சுரங்க அமைச்சகம், “தேசிய முக்கியமானக் கனிமங்கள் இயக்கம்” (National Critical Mineral Mission) குறித்த அறிவிப்பை 2024-25 ஒன்றிய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. இதன் நோக்கங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்குவதும், நிகரச் சுழியப் பொருளாதாரத்திற்கு (net-zero economy) மாறுவதும் ஆகும். இந்நடவடிக்கைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்காகவே மேற்படி முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமானக் கனிமங்கள் இயக்கத்தின் நோக்கங்கள் மூன்று: முக்கியமானக் கனிமங்களின் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது, முக்கியமானக் கனிமங்களை மறுசுழற்சி செய்வது, மற்றும் முக்கியமானக் கனிமவளங்களை வெளிநாடுகளிலிருந்து கையகப்படுத்துவது.
முக்கியமானக் கனிமங்களின் நீண்ட பட்டியலில் கீழ்க்காணும் கனிமங்கள் இடம்பெறுகின்றன: லித்தியம் (lithium), கிராபைட் (graphite), தாமிரம் (copper), கோபால்ட் (cobalt), நிக்கல் (nickel), காலியம் (gallium), மாலிப்தினம் (molybdenum), பிளாட்டினம் (platinum), பாஸ்பரஸ் (phosphorus), பொட்டாஷ் (potash), சிலிக்கான் (silicon), டின் (tin), டைட்டானியம் (titanium), டங்க்ஸ்டன் (tungsten), வானாடியம் (vanadium) முதலானவை.
முக்கியமானக் கனிமங்களைக் கண்டுபிடித்து, அகழ்ந்தெடுத்து, பதனிட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது அனைத்தும் முக்கியமானக் கனிமங்கள் இயக்கத்தின் (Critical Mineral Mission) நோக்கங்களாக இருக்கும். இதற்காக ஆழ்கடல் பகுதியில் சுரங்கத் தொகுதிகள் ஏலம் விடப்படும். வெளிநாடுகளிலிருந்து கனிமங்கள் பெறுவதற்காக கூட்டுமுயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல் (Mines and Minerals (Development and Regulation) Act of 1957) எனும் சட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி லித்தியம் (lithium), பெரிலியம் (beryllium), நியோபியம் (niobium), டைட்டானியம் (titanium), டான்டலம் (tantalum), மற்றும் சிர்கோனியம் (zirconium) எனும் ஆறு அணுக்கனிமங்களைக் கண்டுபிடிப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமானக் கனிமங்களை அள்ளித்தோண்டி எடுப்பதிலும், தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும், வேவு பார்க்கும் நடவடிக்கைகளிலும் தனியார் நிறுவனங்கள் பணியாற்றும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், கேரளாவின் கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களிலும் வி. வி. மினரல் போன்ற தனியார் நிறுவனங்களும், கேரளா மினரல்ஸ் மற்றும் மெட்டல்ஸ் நிறுவனமும் (KMML), இந்திய அரியவகை மணல் நிறுவனமும் (IRE) கார்னெட், ரூட்டைல், சிர்கான், லூக்கொக்சின், சிலிமனைட், இல்மனைட், மோனோசைட் போன்ற கனிம வளங்களை அள்ளித்தோண்டி விற்று, கொள்ளை லாபம் அடைந்து வருகின்றன.
இம்முறைகேடுகள் குறித்தெல்லாம் பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள் நடத்தப்பட்டு, இறுதியில் மார்ச் 27, 2018 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தாதுமணல் அகழ்வை ஒன்றிய அரசு முறைப்படுத்த வேண்டும், மோனோசைட் கனிமம் அள்ளுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டது. அதனைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாதுமணல் ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. பின்னர் 2019-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் மோடி அரசு தனியார் நிறுவனங்கள் தாதுமணல் அள்ளுவதை முற்றிலுமாகத் தடை செய்தது. ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் பல்டி அடித்த மோடி அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளையும் நீக்கிவிட்டு, தனியார் நிறுவனங்கள் தாதுமணல் அள்ளலாம் என்று அறிவித்தது. இந்திய கடற்கரைகளையும், அவற்றின் கனிம வளங்களையும் அதானி குழுமத்துக்கு தாரைவார்ப்பதற்காக விதிகள் மாற்றியமைக்கப்படுகின்றன என்று பலரும் சந்தேகிக்கின்றனர். அதற்கேற்ப உள்ளூர் தாதுமணற் கொள்ளை நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே முடக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் கடற்கரையோரக் கனிமவளத்தை வணிகரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஐ.ஆர்.இ. நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 9.1.2023 அன்று கையெழுத்திடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தென் பகுதியில் சுமார் 52 மில்லியன் டன் தேரிமணல் இருப்பதாகவும், இதனைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் குதிரைமொழி மற்றும் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இரண்டு தொழிற்சாலைகள் தலா ரூ.1,500 கோடி முதலீட்டில் நிறுவி, ஆண்டிற்கு ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் ரூ.1,075 கோடி வருவாய் ஈட்ட முடியும் என்றும், இதன்மூலம் இப்பகுதிகளில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென்றும், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாகுமென்றும் அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு டாடா நிறுவனம் சாத்தான்குளம் பகுதியில் 12,000 ஏக்கர் நிலத்தில் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை ஒன்றை நிறுவி தேரிமணலை முழுவதுமாகக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதும், மக்களின் கடுமையான எதிர்ப்பால் அத்திட்டம் கைவிடப்பட்டதும் நினைவுகூரத் தக்கவை.
அண்மையில் இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடலிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு ஹட்ரோகார்பன் அகழ்வு மற்றும் உரிமம் கொள்கையின்கீழ் (Hydrocarbon Exploration & Licensing Policy–HELP) விருப்ப மனுக்களைக் (Notice Inviting Offers–NIO) கோரியிருந்தது. ஒன்றிய எரிசக்தி இயக்குனரகம் (DGH) சார்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்த வெளி அனுமதி (OALP) அடிப்படையில், 9-வது சுற்று ஏலம் அண்மையில் விடப்பட்டிருக்கிறது. இதில் நாடு முழுவதும் 28 பகுதிகளில் 1,36,596 சதுர கிலோமீட்டர் ஏலம் விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கன்னயாகுமரிக்கு அருகே உள்ள ஆழ்கடலில் மூன்று தொகுதிகளும், சென்னைக்கு அருகே ஆழ்கடல் பகுதியில் ஒரு தொகுதியும் அமைந்துள்ளன:
1. CY – UDWHP-2022/1 – 9514.63 ச.கி (குமரி)
2. CY – UDWHP-2022/2 – 9844.72 ச.கி (குமரி)
3. CY – UDWHP-2022/3 – 7795.45 ச.கி (குமரி)
1. CY – UDWHP-2023/1 – 5330.49 ச.கி (சென்னை)
மொத்தம் 32,485.29 சதுர கிலோமீட்டர் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு ஏலம் விடப்பட்டது. கடந்த 03.01.2024 அன்று மேற்கண்ட இடங்களில் ஆய்வு மற்றும் உற்பத்திக் கிணறுகள் அமைக்க சர்வதேச அழைப்பாணை விடுக்கப்பட்டது. அந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 21 அன்று விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்தது.
நான்கு ஆழ்கடல் தொகுதிகளையும் கபளீகரம் செய்ய ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.
குமரி முனைத் தொகுதிகளின் நடுவே ஆழ்கடலில் “வாட்ஜ் பேங்க்” (Wadge Bank) எனும் “படுகைக் கரை” ஒன்று அமைந்திருக்கிறது. உலகம் முழுவதும் வெகுசில படுகைக் கரைகளே உள்ள நிலையில், அவற்றுள் ஓன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. சற்றொப்ப 10,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்தப் படுகைக் கரை இந்தியாவின் மாபெரும் மீன்வளச் சுரங்கமாகத் திகழ்ந்து வருகிறது.
இங்கே பலமான நீரோட்டங்களோ, அலைகளோ, வெள்ளப்பெருக்கோ ஏற்படுவதில்லை என்பதால், மீன்களுக்குத் தேவையான உணவுகள் உற்பத்தி ஆகின்றன. ஏராளமான பவளப் பாறைகள் படிந்திருக்கும் இப்பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட மீன் வகைகளும், அறுபதுக்கும் மேலான கடல்வாழ் உயிரினங்களும் வாழ்கின்றன. மீன்களும், பிற கடல்வாழ் உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.
தென் மாநிலங்களைச் சார்ந்த லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாகவும், கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பெட்டகமாகவும் இந்தப் பகுதி அமைந்திருக்கிறது. இங்கே எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது மேற்படிச் சூழலை முற்றிலுமாக அழித்தொழித்து, மீனவக் குடும்பங்களை ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளிவிடும். அதேபோல, எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலைச் செயல்பாடுகளும், அதனால் ஏற்படும் மாசுபாடும், கடல் சூழலை முற்றிலுமாக அழித்துவிடும். பெரும்பாலான இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு தகர்த்தெறியப்படும்.
கனிம அகழ்வுக்கும், மேற்கத்திய வளர்ச்சி சித்தாந்தத்துக்கும், கார்ப்பரேட்டுக்ளின் லாபத்துக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்திய மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அரசுகளும், பெருமுதலாளிகளும் கள்ளஉறவு பூண்டு ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள, இதனைத் தட்டிக்கேட்கும் மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்களாக, தேசத்துரோகிகளாக, அந்நிய நாட்டு கைக்கூலிகளாக, நக்சல்களாக, மாவோயிஸ்டுகளாகப் பார்க்கப்படுகின்றனர்.
இந்த மண்மீது நாம் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் நாம் இந்த மண்ணிலிருந்துதான் எடுத்தாக வேண்டும். ஆனால் பொன் முட்டையிடும் வாத்தின் முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அனைவருமாக உயர்வதா, அல்லது கார்ப்பரேட் முதலாளிகளின், ஆளும் வர்க்கத்தின் பேராசையால் வாத்தை அறுத்து அனைத்தையும் இழப்பதா?
வளர்ச்சிக் கொள்கைகளில், திட்டங்களில் பொறுப்பான செயல்பாடுகள் வேண்டும். கனிமங்கள் அகழ்வதில் நீடித்த நிலைத்தத் தன்மை (sustainability) வேண்டும். கனிமங்களின் அகழ்வால், பதனிடும் பணிகளால், பயன்பாட்டால் எழும் சுற்றுச்சூழல் தாக்கங்கள், சமூகத் தாக்கங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, கனிமவள அகழ்வுத் திட்டங்களால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் மறுத்தால், அத்திட்டங்கள் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும்.
சுப. உதயகுமாரன்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
நாகர்கோவில்,