அறப்போரின் தொடர் அழுத்தத்திற்கு பிறகு திருநெல்வேலி மாவட்டம் பெருங்குடி கிராமத்தில் சட்டவிரோதமாக பல லட்சம் மெட்ரிக் டன் கனிமவளம் சூறையாடி வந்த ஸ்டான்லி ராஜா குவாரி மூடப்பட்டுள்ளது.
5 வருடத்தில் 312000 கன மீட்டர் சாதாரண கற்கள் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு ஒன்றரை ஆண்டுகளிலேயே 6 லட்சத்து 78 ஆயிரம் கன மீட்டர் சாதாரண கற்களை சட்டவிரோதமாக எடுத்து விற்று உள்ளார்கள். சேரன்மாதேவி சார் ஆட்சியர் இந்த குவாரிக்கு கிட்டத்தட்ட 29 கோடி அபராதம் விதித்தார். ஆனால் கனிமவள இயக்குனராக இருந்த ஜெயகாந்தன் IAS இந்த குவாரிகளுடன் கூட்டு சதி செய்து இந்த அபராதத்தை வெறும் 1 கோடியே 33 லட்சம் ஆக குறைத்தார். இதுபோல 25 குவாரிகளில் மட்டுமே சார் ஆட்சியர் போட்ட 262 கோடி அபராதத்தை வெறும் 14 கோடியாக குறைத்தார் ஜெயகாந்தன் ஐஏஎஸ். இதன் மீதான ஊழல் புகாரை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அரசுக்கும் கொடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி 2022-ல் அனைத்து சட்டவிரோத குவாரிகளையும் மீண்டும் அரசு திறந்து விட்டது. அதுதான் ஸ்டேன்லிராஜா குவாரியானது 5 வருடத்தில் எடுக்க வேண்டிய அளவை விட அதிகமாகவே ஒன்றரை ஆண்டுகளிலேயே எடுத்துவிட்டதே அப்பொழுது மீண்டும் திறந்தால் எடுக்கக்கூடிய ஒவ்வொரு கல்லும் சட்ட விரோதமானது தானே என்று மாவட்ட ஆட்சியரிடமும் அரசிடமும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பினோம்.
அதன் விளைவாக தற்பொழுது பெருங்குடி இமானுவெல் குவாரி என்று சொல்லப்படும் ஸ்டான்லி ராஜா குவாரி மாவட்ட நிர்வாகத்தால் ஆய்வு செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம். இது நமக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி. 2022 இலையே 29 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோதமாக அள்ளியுள்ள இந்த குவாரி இன்றைய தேதி வரை சட்டவிரோதமாக எடுத்த கற்களுக்கு இவர்களிடமிருந்து மீட்க வேண்டிய அபராத தொகை கிட்டத்தட்ட 50 கோடியை தாண்டக்கூடும். இப்படி ஒரு குவாரியின் சட்டவிரோத அபராதமே 50 கோடி என்றால் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே திருநெல்வேலி மக்களுக்கு அவர்களுடைய வளர்ச்சிக்கு செல்ல வேண்டிய அபராத தொகை ஆயிரம் கோடியை தாண்டும். மேலும் இதுபோல சட்டவிரோதமாக இயங்கி வரும் அனைத்து குவாரிகளும் மூடப்பட வேண்டும். ஜெயகாந்தன் ஐஏஎஸ் முதல் குவாரி உரிமையாளர்கள் வரை நம் சுற்றுச் சூழலையும் நம் இயற்கை வளங்களையும் தாங்கள் சொத்து சேர்ப்பதற்காக சட்டவிரோதமாக கொள்ளை அடித்தவர்கள் அனைவரும் சிறை செல்ல வேண்டும்.
அறப்போர் தொடரும்!
ஜெயராம் வெங்கடேசன்
ஒருங்கிணைப்பாளர் – அறப்போர் இயக்கம்
Ph: 9841894700