இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 8
குக்கிகள் ஒரு இனக்குழு ஆகும், இதில் பல பழங்குடியினர் உள்ளனர் , இவர்கள் மிசோ மலைகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தற்போது இந்தியாவின் வட-கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய இடங்களில் வசித்து வருகின்றனர். மியான்மரின் சில பகுதிகளிலும் பங்களாதேசின் சிட்டகாங் மலைப் பகுதிகளிலும் வாழ்கின்றார்கள்.
மணிப்பூரில், குக்கி பழங்குடியினர், மலைப் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர், தற்போது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையான 28.5 லட்சம் பேரில் 30 விழுக்காட்டினராக குக்கிகள் உள்ளனர்.
மெய்திகள், குக்கிகள் மற்றும் நாகாக்கள் அனைவரும் திபெட்டோ-பர்மன் குடும்பத்தைச் சேர்ந்த மங்கோலாய்டு இன மக்களாவர், மேலும் அவர்களின் மொழி குக்கி-சின் மொழிக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது. இது மிசோரமின் மிசோஸ் மற்றும் மியான்மரில் உள்ள சின்ஸுடன் தொடர்புடையது.
இதன் மூலம் மெய்திகளும் குக்கிகளும் நாகாக்களும் மொழியின் அடிப்படையில் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது வரலாற்றாய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் மெய்தி மக்களின் பாரம்பரிய இலக்கியத்தில், “தி பூயாஸ்” ‘குக்கி அஹோங்பா மற்றும் குக்கி அச்சௌபா என்ற இரண்டு குக்கி தலைவர்கள், மெய்திக்களின் மன்னரான நோங்டா லைரன் பகாங்பாவின் கூட்டாளிகளாக இருந்தனர் என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரின் குக்கிகள் மணிப்பூர் மாநிலத்தின் பூர்வகுடி மக்கள், அவர்கள் வந்தேறிகள் என்று சொல்வதெல்லாம் வரலாறு பற்றிய புரிதல் இல்லாதவர்கள். அல்லது அரசியல் ரீதியாக திட்டமிட்டு பொய் செய்தி பரப்புகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். குக்கிகள் தற்போது வாழ்கின்ற பகுதிகளில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருவதைக் குறிக்க ஏராளமான வரலாற்றுச் சான்றுகளும், தொல்பொருள் சான்றுகளும் உள்ளன.
குக்கிகளை எல்லோரும் ஒரே மாதிரியான பெயரிட்டு அழைப்பதில்லை. வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். சிலர் அவர்களை லுஷாய் என்றும், சிலர் குகிஸ், டார்லாங்ஸ், ரோகும்ஸ் என்றும், பர்மா எல்லைகளில் அவர்கள் சின்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களை ஹரே-எம் என்று அழைத்துக் கொண்டனர்.
குக்கிகளின் மூதாதையர்கள் வாழ்ந்த மணிப்பூரின் வடக்குப் பகுதியான மணிப்பூரின் தெற்கு மலைகள் (தற்போதைய பெர்சாவல், சுராசந்த்பூர், சண்டேல் மற்றும் தெங்னௌபல் மாவட்டங்கள்), 19 ஆம் நூற்றாண்டில் மணிப்பூர் (கங்லா) இராச்சியத்துடன் இணைக்கப்பட்டு மணிப்பூரின் ஒரு பகுதியாக மாறியது.
மணிப்பூரின் மற்ற மலைப் பகுதிகளைப் போலல்லாமல், குக்கி மூதாதையர்கள் தங்கள் நிலத்தை மணிப்பூர் மன்னருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இணைந்தனர். குக்கி தலைவர்கள் மற்றும் மணிப்பூரின் மன்னரால் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை அவர்களுக்குள் அமைதி மற்றும் நட்பின் அடையாளமாவும் குக்கிகளுக்கும் காங்லா இராச்சியத்திற்கும் இடையிலான உறவை நிர்வகிப்பதாகவும் இருந்தது.
இந்த உடன்படிக்கைகளின் கீழ் தான், குக்கிகள் இந்தியா சுதந்திரம் அடையும் வரை, மணிப்புரிகளாக , சுதந்திரமானவர்களாக , மணிப்பூர் இராச்சியத்திற்கு உண்மையான போர்வீரர்களாக இருந்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பர்மியர்களுக்கு எதிராக மெய்தி மன்னர் கரிப்னிவாஸின் (1709-1748) போரில் குக்கிகள் கலந்து கொண்டுள்ளனர். வடக்கு சின் மலைகளின் கம்ஹாவோ மன்னருக்கு எதிரான போரில் குக்கிகள் மெய்திகளுக்கு உதவியுள்ளாா்கள்.
1891 ஆம் ஆண்டு ஆங்கிலோ-மணிப்பூரி போரில் சாசாத் குக்கிகள் மணிப்பூர் மகாராஜாவுடன் பக்கபலமாக இருந்ததாகக் குறிப்பிடும் குறிப்புகளும் உள்ளன.
மன்னன் காகெம்பா (1597-1652) ஆட்சியின் போது, மணிப்பூர் இராச்சியத்தின் எல்லை பராக் (இப்போது அசாமில்) இருந்து சின்ட்வின் (இப்போது மியான்மரில் உள்ளது) மராம் மலைகள் மற்றும் திபைமுக் (இன்றைய மிசோரம் எல்லை) வரை நீட்டிக்கப்பட்டது.
மெய்டிங்கு பாம்ஹெய்பா (1690-1751) ஒரு ராஜ்ஜியத்தையும் கொண்டிருந்தார், இது மணிப்பூரின் மலைப்பகுதிகளை மட்டும் உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது, ஆனால் கிழக்கில் ஐராவதி நதியை (இன்றைய மியான்மர்) மேற்கில் கச்சார் மற்றும் திரிபுரா வரை விரிவுபடுத்தியது.
மெய்தி மன்னர்களின் ஆதிக்கம் மற்றும் நீடித்த கட்டுப்பாடு பெரும்பாலும் பள்ளத்தாக்கில் மட்டுமே இருந்தது. “பெரும்பாலான நேரங்களில், மலைகளின் கட்டுப்பாடு எப்போதுமே குறுகிய காலமாக இருந்தது. இதனால் மலைப்பகுதி பெரும்பாலும் தனியாகவே இருந்து வந்தது.
முகலாயர் கால இந்தியா மௌரியர் கால இந்தியா என ஒவ்வொரு ஆட்சி காலத்தின் போதும் இந்தியாவின் நிலப்பரப்பு மாறி மாறி வருவது போல் மணிப்பூரிடம் ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சி காலத்தின் போதும் அதன் நிலை இல்லை மாறி மாறி வந்திருக்கிறது எல்லைகள் மாறியனவே தவிர மக்கள் வாழ்ந்த நிலம் மாறவில்லை. மீதி அரசர்களின் கட்டுப்பாட்டில் சில காலமும் கட்டுப்பாடற்ற சில காலம் இன மாறி மாறி அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மன்னர் ஆட்சியின் போதும் எல்லைகள் மாறினவே தவிர குக்கிகள் அந்த மண்ணின் பூர்வகுடிகளாகவே வாழ்ந்தனர்.
குக்கி’ என்ற சொல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் மற்றும் வங்காளிகளால் வழங்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகை மணிப்பூரின் இறையாண்மை, எல்லை மற்றும் அரசியல் நிலைப்பாட்டைத் தகர்த்தது மட்டுமல்லாமல், காலங்காலமாக இருந்த சமூக-பொருளாதார மற்றும் கலாச்சாரத் தன்மையையும் சிதைத்தது.
ஆங்கிலேயர்கள் மக்களின் இன உறவுகளையும் அடையாளங்களையும் புறக்கணித்து, அவர்களின் நிர்வாக வசதிக்காக அன்னிய பெயர்களை எல்லா மாநிலங்களிலும் சூட்டியது போல் மணிப்பூரிலும் அவர்களின் மொழி மற்றும் கலாச்சார தொடர்புகளின் அடிப்படையில் பல்வேறு பழங்குடியினரைக் கூட்டாக அடையாளம் காண ஒரே பெயரில் அழைத்தனர்.
தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகளை ஒன்றிணைத்து திராவிடர்கள் என்ற புதிய பெயரை தமிழர்களுக்கு ஆங்கிலேயர்கள் சூட்டினார்களோ அப்படி ஒட்டுமொத்த மலைவாழ் பழங்குடியினரைக் குறிக்க குக்கி என்ற பெயரைப் பயன்படுத்தினர்.
வங்காளத்திற்கும் பர்மாவிற்கும் இடையே உள்ள மலைத்தொடர்களில் வசிக்கும் மக்களை ‘கோ-கி’ என்றும், அந்த மலைப்பாங்கான நிலப்பகுதியை ‘கோ-கி நாடு’ என்றும் அழைத்தனர். அசோகர் காலத்திலிருந்தே இந்த கோ-கி நாடுகளில் சங்கங்கள் நிறுவப்பட்டன என்று தாராநாதா என்ற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பகால பயன்பாடுகளில் இருந்து, ‘குகி’ என்ற பெயர் வங்காளத்தின் கிழக்கு மலைகள் மற்றும் வங்காளத்திற்கும் பர்மாவிற்கும் இடையே உள்ள மலைப்பகுதியின் மலைப் பழங்குடியினரை ‘குகி நிலம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது.
குக்கி’ பற்றிய முதல் குறிப்பு 1777 ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது, சிட்டகாங்கில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்கள் பழங்குடியினரால் தாக்கப்பட்டுள்ளனர், அது குறித்து எழுதும் போது குக்கிகள் பற்றிய குறிப்பை எழுதியுள்ளார் .
1808 இல் லண்டனில் வெளியிடப்பட்ட ஓரியண்டல் ரெபர்ட்டரி தொகுதி II இல் “குக்கீ” என்ற வார்த்தையை விரிவாகப் பயன்படுத்தப்பட்டது. “நாகா” என்ற சொல் அதுவரை சொல்லகராதியில் அறிமுகப்படுத்தப்படாததால் குக்கிகள் மற்றும் நாகாக்கள் இரண்டையும் விவரிக்க அவர் குக்கீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
மணிப்பூரில், 1877-1886ல் மணிப்பூரின் அரசியல் முகவராக இருந்த சர் ஜேம்ஸ் ஜான்ஸ்டன், மணிப்பூர் மற்றும் நாகா மலைகள் என்ற புத்தகத்தில் குக்கீகள் குறித்த பதிவு உள்ளது.
வடக்கு கச்சார் மலைப் பகுதியின் அப்போதைய துணை-பிரிவு அதிகாரியான டிஎஸ் காங்டே தனது ‘தி குகிஸ் ஆஃப் மணிப்பூர்’ புத்தகத்தில் “‘குக்கி’ என்ற பெயர் பழங்குடியினரால் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்று எழுதியுள்ளார்.
ஜி ஏ கிரீர்சன் “சின் என்பது பர்மாவிற்கும் அஸ்ஸாம் மற்றும் வங்காள மாகாணங்களுக்கும் இடையில் வாழும் பல்வேறு மலைவாழ் பழங்குடியினரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பர்மிய வார்த்தையாகும். இது உண்மையில் அங்குள்ள மக்களுக்கு, குக்கி என்ற சொல் ஒரு காலனித்துவ கருத்து என்று எழுதுகிறார்.
பி.எஸ். காவோ ஹிப், தனது புத்தகமான ‘Zale’n-Gam The Kuki Nation’ இல் குக்கி பெயரிடல் என்பது சமீபத்திய வளர்ச்சி மட்டுமே என்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகையுடன் மட்டுமே அதன் பயன்பாடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது என்றும் கூறுகிறார். அதற்கு முன் குக்கிகள் அவர்களின் ஊர்கள், தலைவர்கள், குலங்களின் பெயர்கள் மற்றும் பிறர் பயன்படுத்தும் வித்தியாசமான பெயர்களால் அறியப்பட்டனர்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு நாம் பார்க்கும் போது காலனித்துவ ஆட்சியாளர்களால், எழுத்தாளர்களால் வழங்கப்பட்ட பெயரே குக்கி என்பது புலப்படும்.
தங்கள் சொந்த இனப் பெயர்களைக் கொண்ட மணிப்பூர் மக்களுக்கு குக்கி என்பது அந்நியப் பெயரே என்றாலுங்கூட பிற்காலத்தில் இந்த பெயர்கள் நிலை பெறத் தொடங்கி விட்டது.
ஆங்கிலேயர்கள் எப்படி குக்கி என்ற புதிய பெயரை வழங்கினார்களோ அதே போல் குக்கிகளை ‘பழைய குக்கிகள்’ மற்றும் ‘புதிய குக்கிகள்’ என வகைப்படுத்தி மாபெரும் பிளவையும் உருவாக்கினர்.
அனல், ஐமோல், சிரு, சோதே கோம்ஸ், லாம்காங்ஸ் மாரிங், மோயோன், மோன்ஷாங், புரம்ஸ், டாரோஸ் போன்ற பழங்குடியினர் பழைய குக்கிகள் என்றும், டகல்ஸ், ஷிட்டில்ஹவுஸ், ஹாக்கிப்ஸ், கிப்ஜென்ஸ் ஆகிய நான்கு முக்கிய குலங்களுடனும், ஹேங்சிங், சோங்லோய், லௌவும், லாங்கும், மேட், மிசாவோ, பைட் போன்ற பல குலங்கள் மற்றும் துணை குலங்களுடனும் தாடஸ் புதிய குக்கி என்றும் வகைப்படுத்தப்பட்டனர்.
ஆங்கிலேய ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட புதிய பெயர்களைக் கொண்டவர்கள் புதிய குக்கிகள் என்றும் இவர்கள் தான் இந்த மாநிலத்திற்கு குடியேறியவர்கள்/ வந்தேறிகள் என்று தற்போது மணிப்பூரில் பேசப்படுவது இதன் விளைவாகத்தான்.
அதே நேரத்தில் யார் புதியவர்கள் யார் பழையவர்கள் என்ற குழப்பங்களுக்கு இடையே எல்லோரையும் குக்கிகள் என்று பொதுமைப்படுத்தி எல்லோரையும் வந்தேறிகள் என்று வகைப்படுத்தி அவர்களை வெளியேற்ற வேண்டும் என மெய்திகள் கூச்சலிடத் தொடங்கியுள்ளனர்.
உண்மையில், புதிய குக்கிகள் என்பவர்கள் மன்னராட்சியின் போது மணிப்பூரிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மணிப்பூருக்குள் புலம் பெயர வைக்கப்பட்டவர்கள்.
19 ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் ஆங்கிலேயர்களால் மணிப்பூர் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள இடங்களில் குக்கிகளைக் குடியமர்த்தி, அங்கு அவர்கள் கூலிப்படையாகப் பணியாற்ற வைக்கப்பட்டனர். நாகா பழங்குடியினரை எதிர்கொள்ள குக்கி பழங்குடியினரை பயன்படுத்தும் காலனிய மூல உத்தியோடு குடி வைக்கப்பட்டார்கள்
ஆங்கிலேயர்கள் ஒரு பழங்குடியினரை மற்றொன்றுக்கு எதிராக நிலை நிறுத்தி தங்கள் அதிகாரத்தை, தங்கள் சுரண்டலைப் பாதுகாத்துக் கொண்டனர். இது பழங்குடியினருக்கு இடையேயான மோதலை ஏற்படுத்தியது. அதோடு ஆங்கிலேய மிசனரிகள் 1900 களில் பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும், தேவாலயங்களையும் நிறுவி குக்கி பழங்குடியினரை கிறித்தவர்களாக மதம் மதமாற்றிய நிகழ்வு மணிப்பூர் பள்ளத்தாக்கை இந்துக்கள் பகுதி என்றும், மலைப்பகுதி கிறித்தவர்கள் பகுதி என்றும் மத அடிப்படையில் இரண்டாக , இரு தீவுகளாகப் பிரித்து விட்டது.
இன்று அது சங்பரிவார் கும்பல்களின் தலைமையில் மத மோதலாக வெடித்துக் கொண்டிருக்கிறது.
( தொடரும்)