இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 1
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையில் நடந்த வன்முறையில் 150 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். 400 பேருக்கும் மேல் காயமுற்றுள்ளனர், தோராயமாக 60,000 க்கும் மேற்பட்டோர் வீடு இழந்துள்ளனர்.
இதில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 6,068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பின்பு இந்தியா முழுக்க அது அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது கடந்த மே மாதம் 4-ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாகி உள்ளனர். இந்த வீடியோ வெளியான பிறகு தான் மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வீடியோ வெளியானதைத் தொடர்ந்து இதுவரை இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோக்கள் மட்டுமே வந்துள்ளன. ஆனால், இங்குள்ள நிலைமை அதைவிடக் கோரமாக உள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஏராளமான பெண்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்,” என்று அங்குள்ள மக்கள் தங்களது அச்சத்தைத் தெரிவிக்கின்றனர்.
மேலும், மணிப்பூர் காவல் துறை முன்னிலையில் தான் அனைத்து வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கிறது என்கின்றனர் குக்கி இன மக்கள்.
தங்கள் கிராமங்களிலிருந்து மெய்தி இனவெறியர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அருகில் இருந்த காட்டுக்குள் பெண்கள் தஞ்சமடைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த இரண்டு பெண்களை தௌபால் காவல்துறை அழைத்துச் சென்று செல்லும்வழியில் வாகனத்தை அக்கும்பல் வழிமறித்து நிறுத்தியதும் காவல் துறையினரே அந்த இரண்டு பெண்களையும் அக்கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர்.
மற்றொரு பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் நான்கு காவல் துறையினர் இருந்ததை அங்கு பார்த்துள்ளனர். காவல்துறை முன்னிலையில் இந்த வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதால் அநீதி இழைக்கப்பட்ட அந்தப் பெண்கள் சார்பாக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை.
இந்தச் சம்பவம் மே மாதம் நடந்திருந்தாலும் இது தொடர்பாக 2 மாதங்களுக்குப் பிறகு தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பெண்கள் தாக்கல் செய்த எஃப்ஐஆர்கள் மீது இரண்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வளவு நடந்த பிறகும் மணிப்பூர் தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடி எதுவுமே பேசவில்லை. மாறாக, அந்த கால கட்டத்தில் அமெரிக்கா, எகிப்து, பிரான்ஸ் என உலகம் சுற்றிக் கொண்டிருந்தார்.
“எனது மாநிலமான மணிப்பூர் எரிகிறது. தயவுசெய்து உதவுங்கள்” என்று இந்தியப் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பிரதமர் மோடியிடம் உதவி கோரி மே மாதத்தில் டுவீட் செய்தும் மோடி வாய் திறக்கவில்லை.
முன்னாள் இந்திய ராணுவத் தளபதி, ஜெனரல் (ஓய்வு) வி.பி. மாலிக், மணிப்பூரில் உள்ள நிலைமைக்கு “அவசர கவனம்” தேவை என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இம்பாலில் வசிக்கும் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் எல் நிஷிகாந்த சிங் “நான் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு சாதாரண இந்தியன், ஓய்வுபெற்ற வாழ்க்கை வாழ்கிறேன். மாநிலத்தில் இப்போது ‘அரசு’ இல்லாதது போல் இருக்கிறது . லிபியா, லெபனான், நைஜீரியா, சிரியா போன்ற நாடுகளில் யாராலும், எப்போது வேண்டுமானாலும் உயிரும் உடைமையும் அழிக்கப்படலாம் என்று இருப்பது போல மணிப்பூர் இருப்பதாகத் தெரிகிறது என்று எழுதியுள்ளார்.
இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு ஒரு கும்பல் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆனால் அப்போது பிரதமரும் உள்துறை அமைச்சரும் கர்நாடக தேர்தலுக்கான பரப்புரையில் மும்முரமாக இருந்தனர்.
பிரியங்கா காந்தி “மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களில் மத்திய அரசும், பிரதமரும் ஏன் கண்மூடித்தனமாக அமர்ந்திருக்கிறார்கள்? இதுபோன்ற படங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அவர்களை தொந்தரவு செய்யவில்லையா? என்று கேட்டது எதுவும் பிரதமரைத் தொந்தரவு செய்யவில்லை.
மன்-கி-பாத்’ வாராந்திர வானொலி நிகழ்ச்சிகளில், பிரதமர் மணிப்பூரைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, “நேற்று பகிரப்பட்ட வீடியோவால் நாங்கள் மிகவும் தொந்தரவுக்குள்ளாகி உள்ளோம். இந்தச் சம்பவம் மிகவும் கவலையளிக்கும் ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம்; நடவடிக்கை எடுங்கள்.
விரோதத்தை தீர்த்துக்கொள்ள பெண்களை வன்முறையின் கருவியாக பயன்படுத்தப்படுவது அரசியலமைப்பு ஜனநாயகத்தால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் எடுப்போம்.
இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிந்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தனது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தினார்.
இதற்குப் பிறகு தான் ” மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் தனது இதயம் சோகத்தில் மூழ்கியுள்ளது” என்றும் “ இந்த சம்பவம் வெட்கக்கேடானது. நாடு அவமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தாய்மார்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.” என்றும் “குற்றவாளிகள் யாரும் விடுவிக்கப்படமாட்டார்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது ஒருபோதும் மன்னிக்கப்படாது” என்று மே 3 இல் தொடங்கிய வன்முறைக்கு பிரதமர் மோடி மூன்று மாதங்கள் கழித்து வாய் திறந்தார்.
வாய் திறந்த மோடி ” பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்களை மேலும் வலுப்படுத்துமாறு அனைத்து முதல்வர்களையும் கேட்டுக் கொள்கிறேன். ராஜஸ்தானோ, சத்தீஸ்கரோ, மணிப்பூரோ – எந்த மாநிலமாக இருந்தாலும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்திப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தன் பேச்சில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் இப்படித் தான் நடக்கிறது என்று தன் பேச்சில் குறிப்பிட்டு அதிலும் அரசியல் ஆதாயம் தேடினார் .
தற்போது நாட்டில் நடக்கும் எல்லாத் தீமைகளுக்கும் நேருவும் இதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சியும் தான் காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மோடி தற்போது நடக்கும் மணிப்பூர் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லாமல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்திலும் இப்படி நடக்கிறது என குறிப்பிட்டு கீழ்த்தரமான அரசியல் பேசினார்.
மணிப்பூர் வன்முறையில் சர்வதேசத் தூண்டுதலை மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ முடியாது. இந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது’ என்று மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் சர்வதேசச் சதி இருப்பதாகத் திசை திருப்பினார்.
மேலும், இந்த பிரச்சனைகள் எங்கிருந்து வந்தன? இவை ஆழமாக வேரூன்றியவை, இவை இன்று தோன்றிய பிரச்சனைகள் அல்ல, அவர்கள் ( காங்கிரஸ்) விதைத்த விஷப்பழங்களை நாங்கள் உண்கிறோம். யாருடைய தவறு என்று உலகம் முழுவதும் தெரியும் என்று வழக்கம் போல் காங்கிரஸ் மீது பழி போட்டார்.
சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது; அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு , பயம், விரக்தி மற்றும் உதவியற்ற நிலைமை ஆகியவை மணிப்பூரின் பழங்குடி மக்களை அச்சத்தில் வைத்துள்ளது. இன்று வரை வன்முறை தொடர்கிறது.
நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் ஒரேடியாக குக்கி மக்கள் அழியட்டும் என்று நரேந்திர மோடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். ஏனென்றால் சங் பரிவார் கும்பலின் நோக்கம் அதுதானே.
அந்த வீடியோவில் காணப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்திய ராணுவத்தில் அசாம் ரெஜிமென்ட்டில் பணியாற்றியவர்.
தன்னுடைய மனைவியை இழந்த அவர் “நான் கார்கில் போரில் போராடியவன். அதேபோல் இலங்கைச் சென்ற இந்திய அமைதிக் குழுவில் இருந்திருக்கிறேன். நாட்டைப் பாதுகாக்க முடிந்த என்னால் என் மனைவியையும், என் சக கிராமத்தினரையும் காப்பாற்ற முடியவில்லையே” என்று தன்னுடைய வேதனையைப் பதிவு செய்துள்ளார்.
ஆம் , அவருக்குத் தெரியாது மோடி வகையறாக்கள் பேசும் தேச பக்தி என்பதெல்லாம் நாட்டைச் சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கானது என்பது.
( தொடரும்)
க.இரா. தமிழரசன்