தேசியஇனங்கள் மீதான துல்லிய தாக்குதல்கள் செய்வதன் மூலம் இந்திய அரசு இரண்டு பலன்களை அடைகிறது. முதலாவது, ஒற்றை தேசியஇனத்திற்குள் இனப்பிளவை ஏற்படுத்துவது மூலம் எதாவது ஒரு பிரிவினரை தனது அடியாளாக மாற்றும் வேலையில் வெற்றி பெறுவது. மற்றொன்று தேசியஇன அரசியலை காலி செய்து இந்தியாவை ஏற்க வைக்க கையாளும் சூழ்ச்சிகள் கொண்டு போராட்டங்களை இந்திய தன்மைக்கு மாற்றுவது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் இதனையே வெளிப்படுத்துகிறது.
ஒற்றை தேசியஇனத்தை இருகூறாக பிளந்து அதில் விளையும் அரசியல் லாபங்களை இந்தியாவும், நட்டங்களை மணிப்பூரும் அடைந்து வருவது என்பது வரலாறு நெடுகிலும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படும் தேசியஇன போராட்டங்கள் நீர்த்துப் போக வைக்கும் முறைகளையே இந்தியாவும் செய்துள்ளது.
எந்த ராணுவம் தங்கள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறது என்று சொன்னார்களோ,
எந்த ராணுவம் தங்கள் குழந்தைகளை தீவிரவாதிகள் என முத்திரைக் கொடுத்து கொல்கிறது என்று சொன்னார்களோ,
எந்த ராணுவம் தங்கள் உடைமைகளை கையகப்படுத்திவிட்டு முகாம் அமைக்கிறது என்று குற்றம் சுமத்தினார்களோ,
எந்த ராணுவம் மணிப்பூர் மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னார்களோ
அதே ராணுவத்தை அனுப்பி வைத்து தங்கள் மாநில காவல்துறையினரிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று இந்திய அரசிடம் அம்மக்கள் அழுதுபுலம்பும் காட்சிகளுக்கு பின்னால் இருக்கும் அரசியலில் இந்தியா தான் தற்போது வெற்றிப் பெற்றுள்ளது.
75 ஆண்டுகளாக வடகிழக்கு முழுமைக்கும் ஒலிக்கும் ஒற்றை குரல் “எங்களை யாரும் ஆள வேண்டாம்; எங்கள் நிலத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; எங்கள் மலைகளை நாங்கள் பாதுகாத்து கொள்கிறோம்; எங்கள் முன்னோர்களின் வழியில் அவர்கள் காட்டிய வழியில்”. இது தனிநாடு கோரிக்கையோ, பிரிவினைவாத முழக்கமோ, மாநில சுயாட்சி என்ற முனைமழுங்கிய வசனமோ அல்ல. அந்த மக்களின் அரசியல் சுயசார்பு உரிமை. அவர்கள் தங்களின் வளங்களை பலிகேட்கும் அரசுகளிடம் ஒருபோதும் பணிந்தது இல்லை. அவர்களின் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளுக்கு காரணம் அரசுகள் அவர்களின் உரிமைப் போராட்டத்தின் விளைவாக சுமக்க வைத்தவைகளே.
நாகா, குக்கி, மைத்தி, மிசோ முதலிய இனக்குழு மக்கள் பரவி வாழும் வடகிழக்கில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் இருந்தாலும் அவர்களின் அரசியல் முழக்கமும், நிலைப்பாடும் சுதந்திர பகுதிகள் தான். தெற்காசியாவில் சிக்கலான நிலபரப்பில் வாழும் இந்த மக்கள் சீனா, வியட்நாம், மியன்மார் என்று அண்டை நாடுகளின் அக்கிரமைப்புகளுக்கு எளிதான இலக்காக அமையும் சூழலிலும் தங்களின் அடையாளத்தை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
இத்தகைய நிலையில் மணிப்பூரில் நிகழ்த்தப்படும் வன்முறையானது முழுக்கமுழுக்க அரசின் திட்டமிட்ட தாக்குதலாகவே உள்ளது. மதத்தை வைத்து தேசியஇனத்தை பிளக்கமுடியும் என்ற காஷ்மீரின் வெற்றி கொடுத்துள்ள அசட்டு தைரியமே இந்தியாவை இதுவரையில் ஆண்டவர்கள் செய்யத் துணியாத ஒரு நிகழ்த்துதலை அரங்கேற்றி எரியும் நெருப்பில் குளிர்க் காய்ந்துக் கொண்டிருக்கிறனர் ஆளும் பாஜக தரப்பு. இந்தியா விரும்பிய போரை நாங்கள் முடித்து வைத்துள்ளோம் என 2009 ஈழப்போரின் வெற்றிக் குறித்த ராஜபக்சேவின் சொற்களை போலவே மணிப்பூரின் முதல்வர் பைரன் சிங்கின் நடவடிக்கைகள் கடந்த 100 நாட்களாக உள்ளது.
யாருடைய நலனுக்காக இத்தகைய இனக்கலவரம், அதனை தொடர்ந்த திட்டமிட்ட தாக்குதல்கள், 50000த்திற்கும் மேற்ப்பட்ட மக்களின் இடப்பெயர்வுகள், 350 முகாம்கள் என்ற கேள்விக்கு இந்தியாவிடம் பதில் உள்ளதா?. சொந்த தாய் மண்ணிலே அகதியாக மாற்றப்படும் நிலைக்கு மணிப்பூர் மக்கள் ஆளாக்கப்பட்டதன் பின்னணியில் இந்திய ஆளும் – அதிகார வர்க்கத்தின் பங்கு என்ன ? என்பதை பற்றி இந்தியாவில் உள்ள பிற தேசியஇனங்கள் திறனாய்வு செய்யாமல் போனால் ஒருநாள் நம் வீடுகளிலும் கல் வந்து விழும். தட்டிக்கேட்க வழியில்லாமல் நமது சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவார்கள். நம்முடனும் நமக்காகவும் பேசிய, போராடிய பலரின் உடல்கள் தெருக்களில் அனாதையாக கிடத்தப்பட்டிருக்கும்.
தமிழ்த்தேச மாணவர் இளைஞர் இயக்கம்.
தமிழ்நாடு