இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 2
மணிப்பூர் மாநிலத்தின் மெய்தி மக்கள் பெரும்பான்மையினர். அதற்கு அடுத்து குக்கி, தடௌஸ் மற்றும் நாகா பழங்குடி மக்கள் உள்ளிட்ட 34 வகையான பழங்குடி மக்கள் மலைப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறார்கள்.
மணிப்பூரின் புவியியல் நிலப்பரப்பில் சுமார் 10 விழுக்காடு நிலப்பரப்பை மத்திய பள்ளத்தாக்கு பகுதி கொண்டுள்ளது. இந்த மத்தியப் பள்ளத்தாக்கு பகுதி முழுக்க மெய்தி இன மக்கள் வாழும் பகுதியாக உள்ளது.
மீதமுள்ள 90 விழுக்காடு நிலப் பகுதி, பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைகளை உள்ளடக்கியது. அவை தான் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட குக்கி உள்ளிட்ட பழங்குடியினர்கள் வாழும் பகுதியாக உள்ளது.
மாநிலத்தின் மக்கள்தொகையில் 57 விழுக்காடு மெய்திகள். 43 விழுக்காடு குக்கிகள், நாகாக்கள் உள்ளிட்டோர்; குக்கிகள் மட்டும் 30 விழுக்காடு உள்ளனர்.
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மணிப்புரியம் மொழியுடன், வங்காளம், இந்தி மற்றும் இருபத்து ஒன்பது பழங்குடி இன மொழிகளும் பேசப்படுகின்றன.
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,181,876 (41.39 விழுக்காடு) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 239,836 (8.40 விழுக்காடு) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,179,043 (41.29 விழுக்காடு) ஆகவும் உள்ளது.
தலைநகரான இம்பாலைச் சுற்றியுள்ள சமவெளிப்பகுதி முழுக்க மெய்தி இனத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். கல்வி, அரசியல், பொருளாதாரம் என எல்லாத் துறைகளிலும் மெய்தி இன மக்களே செல்வாக்கு செலுத்துபவர்களாக உள்ளனர்.
மாநில அரசாங்கத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை உறுப்பினர்களுள், 40 சட்டமன்ற உறுப்பினர்கள் மெய்திக்கள்.
எல்லா துறைகளிலும் மெய்திகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் , உண்மைக்கு மாறாக, சுதந்திரத்துக்குப் பின் குக்கிகளுக்கு வழங்கப்பட்ட பழங்குடியின அங்கீகாரம். இதன் வாயிலாகப் பழங்குடியினர் பெற்ற இடஒதுக்கீட்டின் மூலமாக அரசு இயந்திரத்தில் பெரும்பான்மை இடங்களைக் குக்கிகள் கைப்பற்றிவிட்டதாகவும் இப்படியே விட்டால் மெய்திகள் செல்வாக்கு இழந்து விடுவார்கள் என்றும் மெய்தி பேரினவாத பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இது மெய்தி மக்களிடம் குக்கி மக்களைப் பற்றி எதிர்மறை எண்ணத்தை உருவாக்கியுள்ளது.
1960 இல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட MLR&LR சட்டம் ( மணிப்பூர் நில வருவாய் மற்றும் நிலச் சீர்திருத்தச் சட்டம், 1960)
அ. “பட்டியலிடப்பட்ட பழங்குடியினரைச் சேர்ந்த ஒரு நபரின் நிலத்தை பழங்குடியல்லாதவருக்கு மாற்ற முடியாது.
ஆ. அத்தகைய பழங்குடியினரில் உறுப்பினராக இல்லாத ஒரு நபருக்கு இடமாற்றம் செய்யப்பட்டால், அது துணை ஆணையரின் எழுத்துப்பூர்வமாக முந்தைய அனுமதியுடன் செய்ய வேண்டும்.
இ. ஒரு கூட்டுறவு சங்கத்திற்கு அடமானம் மூலம் மட்டுமே இடமாற்றம் செய்ய முடியும்.
அதே போல், 371 சி என்பது மணிப்பூர் சட்டமன்றத்தில் உள்ள மலைப்பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடி சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் ஒரு மலைப் பகுதிக் குழுவாக (HAC) செயல்படுவதற்கு அரசியலமைப்பு உரிமை வழங்குகிறது. இந்தக் குழுவின் அனுமதியின்றி மலைகளில் நிலம் வாங்க மெய்திகள் அனுமதிக்கப்படுவதில்லை.
எனவே, தாங்களும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்பட்டால் மலைப்பகுதிகளில் நிலம் வாங்க முடியும், மலைப்பகுதிகளில் அரசியல் செல்வாக்குபெற முடியும் மற்றும் பழங்குடிகளை அரச அதிகாரத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியும் என மெய்திகள் கருதுகிறார்கள்.
எனவே குக்கிகளின் அரசு அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும் குக்கிகளின் நிலத்தை ஆக்கிரமிக்கவும் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கையை வைக்கத் தொடங்கினர்.
2012 நவம்பரில் மணிப்பூர் பள்ளத்தாக்கின் பட்டியல் பழங்குடியினர் கோரிக்கைக் குழுவால் ( STDCM) ஆளுநரிடம் 2012 டிசம்பரில் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கை சந்தித்தும் தங்கள் கோரிக்கையை மனுவாக அளித்து மெய்தியினர் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடத் தொடங்கினர்.
1949 இல் மணிப்பூர் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பு தாங்கள் ஒரு பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டதாகவும், ஆனால் இந்தியாவில் இணைந்த பிறகு தங்கள் அடையாளத்தை இழந்துவிட்டதாகவும் கூறி தங்கள் கோரிக்கையை நியாயப்படுத்தி மெய்தியினர் 2012 லிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். 2017 லிருந்து பா.ஜ.க அரசின் ஆதரவோடு இன்னும் தீவிரமாக போராடத் தொடங்கினர்.
இந்த நிலையில்தான், மணிப்பூர் மாநிலத்தின் தாற்காலிகத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி முரளீதரன் கடந்த மார்ச் 27 அன்று பிறப்பித்த ஆணை, தற்போதைய மோதல்களுக்குக் காரணமாகிவிட்டது.
தங்களுடைய சமூகத்தைப் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மெய்திகள் கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்தி வந்ததைச் சுட்டிக்காட்டி
” மெய்தி சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்கும் கோரிக்கையை பரிசீலிக்குமாறும் இது தொடர்பான ஆலோசனைகளுடன் மாநில அரசின் பரிந்துரையையும் அடுத்த நான்கு வாரங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் ” என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
ஏற்கனவே அனைத்து துறைகளிலும் ஆக்கிரமிப்பு செய்து வரும் மெய்திகளுக்கு பழங்குடியினச் சலுகையும் கொடுத்தால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் அவர்களே அடைவார்கள் என்று குக்கி மக்கள் பயந்தார்கள். எனவே. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யத் தொடங்கினார்கள். ஏப்ரல் 23 அன்று வேலைநிறுத்தத்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் (ATSUM) ஒற்றுமை அணிவகுப்பு
மே 3 அன்று ஒருங்கிணைத்து நடத்தியது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பேரணி நடத்திய குக்கி இன மக்கள் ‘தங்கள் இனப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக’ மெய்தி இன மக்கள் வதந்தியைப் பரப்பி அந்த அணிவகுப்பில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். அரசும் தன் பங்குக்கு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதாகக் கூறி குக்கி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்த வன்முறை தான் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது.
நிலம், அதிகாரம் என்பதற்காக மெய்தி மக்கள் குக்கி மக்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது.
அரசுப் பணியாளர்கள் மற்றும் மருத்துவம், பொறியியல் மற்றும் பிற தொழில்நுட்ப படிப்புகள் போன்ற அரசு நிதியுதவி படிப்புகளில் மெய்திகளின் ஆதிக்கமே உள்ளது. குக்கி இன மக்கள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, அனைத்து அரசுப் பணிகளிலும் இடஒதுக்கீடு முறைப்படி பின்பற்றப்பட்டால், மாநிலத்தில் குறைந்தபட்சம் 10,000 பழங்குடியின ஊழியர்கள் கண்டிப்பாக இருப்பார்கள்.
கல்வித்துறை , உள்துறைக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஊழியர்களைக் கொண்ட துறையாகவும், பழங்குடியினருக்கு அதிகபட்ச வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாகவும் உள்ளது, மொத்த 12140 ஊழியர்களில் 3037 பழங்குடியினர் மட்டுமே உள்ளனர், 700 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பற்றாக்குறை. ஒரு ஜனநாயக அமைப்பின் மையமாக இருக்கும் மாநிலத்தின் சட்டமன்றச் செயலகத்தில் மொத்தமுள்ள 305 நிரந்தர ஊழியர்களில் 24 பழங்குடியினர் மட்டுமே உள்ளனர் – சுமார் 70 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இம்பாலில் உள்ள பிராந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(RIMS), 2000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது, அதன் ஊதியத்தின் கீழ் 100 பழங்குடியினர் உள்ளனர். இந்த புகழ்பெற்ற நிறுவனத்தில் மொத்தமுள்ள 220 ஆசிரியர் பீட உறுப்பினர்களில் 7 பழங்குடி ஆசிரிய உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் பல்கலைக்கழகம் சமீபத்தில் மத்திய பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. எல்லா வகையிலும், மத்தியப் பல்கலைக் கழகமாக மாற்றப்படும் வரை மாநிலத்தின் இடஒதுக்கீடு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இருப்பினும், தற்போது முழுத் துறைகளிலும் மொத்தமுள்ள 120 முழுநேர ஆசிரியர் ஆசிரியர்களில் இரண்டு பழங்குடியினர் மட்டுமே உள்ளனர். அரசின் அதிகாரப்பூர்வமல்லாத ஆசிரியர் பணிகளில், மொத்தமுள்ள 305 ஊழியர்களில் 48 பழங்குடியினர் மட்டுமே உள்ளனர், இது 46 பணியிடங்களுக்கு பற்றாக்குறையாக உள்ளது.
மாநிலத்தின் மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு பயனளிக்கும் வகையில் மட்டுமே இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு குக்கி மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இது மெய்தி மக்களுக்கும் பா.ஜ.க வுக்கும் நன்றாகவே தெரியும். இதையும் தாண்டி குக்கி மக்களை மத அடிப்படையில் பா.ஜ.க பிரித்து மெய்தி மக்களை தன் பக்கம் வைத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டத்தை தொடர்ந்து நடத்துகிறது.
மெய்திக்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதும் குக்கிகள் உள்ளிட்ட ஏனைய பழங்குடியினரில் பெரும்பான்மையினர் கிறித்தவர்கள் என்பதும் நாம் கவனிக்க வேண்டிய செய்தி. எனவே தான் மெய்திகளுக்கு ஆதரவாக அரசு இயந்திரம் செயல்படுகிறது.
(தொடரும்)