இன்றைய ஈழ அரசியல் மூன்று தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை-ஈழம், புலம்பெயர் ஈழமக்கள் வாழும் நாடுகள், தமிழ்நாடு.
இதில் இதுவரையும் ஈழத்தில் நடந்த அரசியல் நடவடிக்கையை பின்தொடர்ந்தே புலம்பெயர் சமூகமும், தமிழ்நாடும் செயலாற்றி வந்திருக்கிறது. ஆனால் 2009-ல் ஈழப்போர் பாரிய பின்னடைவுக் குள்ளான பிறகு ஈழவிடுதலையின் மையமான தமிழீழத் தாயகத்தில் செயல்பாட்டு பரப்பு மிகவும் சுருங்கி விட்டதால் புதிய தளங்களை நோக்கிய கவனங்கள் திரும்பியது. சர்வதேச அழுத்தத்தை உருவாக்க வேண்டி புலம்பெயர் சமூகங்கள் வாழுகின்ற நாடுகளிலும், இந்தியாவிற்கு அழுத்தத்தை உருவாக்க வேண்டி தமிழ்நாட்டிலும் போராட்டக்களங்கள் உருவாகின.
குறுகிய காலம் எழுச்சியுடன் நடந்த இந்த போராட்டங்கள் விரைவிலேயே சோர்வடைய துவங்கின, காரணம் ஈழவிடுதலை போராட்டத்தின் உண்மையான தளம் என்பது எப்போதும் தமிழீழத் தாயகம்தான். அங்கே அரசியலும், நடவடிக்கைகளும் நிகழாமல் அதற்கு வெளியில் நின்று போராடி தீர்வு பெற்று தந்துவிட ஓருபோதும் இயலாது.
புலம்பெயர் ஈழமக்கள் துவக்கத்தில் தங்களுக்காக யார் பேசினாலும், போராடினாலும் அதனை வரவேற்று இயன்றவரை உதவிகள் செய்யத்துவங்கினர். அவர்களுக்கு தமிழீழத்தை அடைவது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலம்பெயர் ஈழச்சமுகத்தில் பல்வேறு போக்குகள் வெளிப்பட்டன.
பெரும்பான்மையோர் தமிழீழ விடுதலை ஒன்றே தீர்வு என்று இருக்க, சிலர் மாறிவிட்ட சூழலில் தமிழர் விரோத தமிழ்த்தேசிய கூட்டணி சம்பந்தன், சுமந்திரன் போன்றோருடன் இணக்கம் காட்டி நின்றனர். இன்னும் சிலர் தமிழ்நாட்டு அரசியலை, தமிழ்நாட்டு களத்தை சாதகமாக்குவது ஈழவிடுதலைக்கு உதவியாக இருக்கும் என்று நகர்ந்தனர்.
இந்த நகர்வு தமிழ்நாட்டில் புதிதாக உருவாகி ஈழ அரசியலை முன்வைத்து இயங்குகின்ற கட்சிகள், அமைப்புகளுக்கு உகந்ததாக மாறின. அவர்களும் ஈழத்தில் உள்ள மக்களுக்காக குரல் கொடுக்காமல், புலம்பெயர்தமிழர்களின்(பல்வேறு குழுக்கள்- பல்வேறு நோக்கங்கள்) அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டு தங்கள் அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டனர்.இந்தப் போக்கு மெல்ல தமிழீழ தாயகத்தில் மக்களின் உண்மையான வாழ்வியல், பொருளியல், சமூக வாழ்க்கை அவலங்களை உலகத்திற்கு உணர்த்துவதை தவிர்த்துவிட்டு ஒரு சாகசவாத பரப்புரையாக பரிணமிக்க துவங்கிற்று.
அனைவரும் விரும்பிய பலனோ தமிழகத்தின் தமிழ்த்தேசிய அரசியல் ஈழமக்களின் உரிமைப் போராட்டத்திற்கு அரணாக மாற வேண்டும் என்பது, ஆனால் இங்கே தோன்றிய தமிழ்த்தேசிய கட்சிகளின் இலக்கோ தமிழ்நாட்டின் முதல்வர் பதவியை அடைவது. அதாவது பெரும் வஞ்சகத்துடன் இலங்கை அரசுக்கு துணை நின்று ஈழமக்களை கொன்றொழித்த இந்திய அரசுடன் நேர்எதிர் நின்று போராடுவதற்கு பதிலாக இந்திய அரசின் சட்டகத்திற்கும், விதிகளுக்கும் ஒப்புக்கொண்டும், இந்திய அரசிற்கு விசுவாசமாக இருப்பேன் என்று எழுதி கையொப்பமிட்டுவிட்டு தங்களுடைய குறுகிய அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வது.
தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியலின் இலக்காக தி.மு.க எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு மட்டுமே இலக்காக மாற்றிவிடப்படுவதால் ஈழம் அமைவதற்கு உண்மையான எதிரியாக விளங்கும் இந்திய அரசு காப்பாற்றப்பட்டு வருகிறது.தி.மு.க வை எதிர்க்கக் கூடாதா? நிச்சயம் எதிர்க்க வேண்டும். தி.மு.க துரோகம் செய்ததா? ஆம், செய்தது. ஆனால் தி.மு.க வகித்தது துணைபாத்திரமே, துணையாக நின்றவர்களையே இந்த தமிழ்த்தேசியர்கள் இந்தளவிற்கு எதிர்க்கும்போது, பிரதானமாக நின்று மக்களை கொன்றவர்களை எந்தளவிற்கு எதிர்க்க வேண்டும்?
காங்கிரசுதான் ஈழத்தை அழித்தது. பா.ஜ.க ஒன்றும் செய்யவில்லை என்று கூறினால் அவர்கள்தான் மிகப்பெரிய அயோக்கியர்கள். பா.ஜ. க வந்தால் நிலை மாறும் என்று பரப்புரை செய்தவர்கள் ஏராளம். இந்துக்கள், இந்துக்களுக்கு உதவி செய்வார்கள் என்பதை விதைத்தவர்கள், ஆரியர்களும், ஆரியர்களும் இணைந்து கொண்டதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
இந்த தமிழ்த்தேசியத்தலைவர்களுக்கு புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுவருவதிலே உள்ள நாட்டம், இன்றைக்கும் இலங்கை அரசினால் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ தாயகத்திற்கு செல்வதற்கு வழித்தெரியவில்லை. அங்கே வாடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் துயரினை துடைக்க வேண்டாம், துயரினை பற்றி பேசுவதற்கு கூட எண்ணமில்லை. மிகவலிமையான தேசிய விடுதலைப் போராட்டத்தையே இந்திய- இலங்கை அரசுகள் கொடூரமாக நசுக்கியிருக்கும் போது அதே தமிழீழ தாயகத்தை வெல்வதற்கு தமிழ்நாட்டு முதல்வர் பதவி போதும் என்ற நிலை கேள்விக்குரிய ஓன்று.
ஈழவிடுதலை போராட்டத்தை அழித்தொழிப்பது என்பது இந்திய அரசின் நிலைப்பாடு. அது ஏதோ ராசீவ் காந்தியை கொன்றதால் காங்கிரசுக்கு ஏற்பட்ட கோபம் என்பதெல்லாம் அல்ல. ஈழம் விடுதலை அடைந்திருந்தால், இந்தியா முழுவதும் தேச விடுதலை போராட்டங்கள் வெடித்திருக்கும். அதற்காகவே இந்திய அரசு ஈழவிடுதலை போராட்டத்தை அழித்தது.
இந்திய அரசின் நோக்கத்தை குறித்து தமிழ்நாடு பொதுவுடமை கட்சி முன்வைத்த கருத்துகளை சற்றே பார்த்துவிடுவோம்.
தமிழக மக்களை வஞ்சிக்கும் இந்திய அரசே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் நசுக்குகிறது.. எனவே பொது எதிரியான இந்திய அரசுக்கு எதிராக ஈழ, தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும்,
இன்று இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்தியாவில் தமிழ்த் தேசிய இனம் உட்பட பிற தேசிய மக்களுக்குத் துரோகம் இழைக்கவே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தலையிடுகின்றன.
இலங்கைத் தமிழரின் மீதான ஒடுக்குமுறையும் இலங்கைத் தமிழர்களின் விடுதலை எழுச்சியும் தமிழ்நாட்டு மக்களிடையே தேசிய விடுதலை எழுச்சியை மேலும் விரைவுப்படுத்திவிடும் என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் அஞ்சுகின்றன.
இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலையைக் கொஞ்ச காலத்திற்கு ஒத்திப்போடவே இலங்கைத் தமிழின விடுதலைக்கு எதிராக இந்திய பிரதமர் சமரசம் பண்ணப்பார்க்கிறார். (இந்திரா காந்தி வங்கத்திற்கு விடுதலை வாங்கி கொடுத்தது போல ஈழத்திற்கும் வாங்கி கொடுப்பார் என்பது ஏமாற்றே)
அதனால்தான் மிகச்சரியாக
“ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்” என்றது த. பொ.க.
தமிழக மக்கள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி தமிழ் தேசிய விடுதலையைப் பெறுவதே ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு செய்யும் உதவியாகும் என்பதுதான் தமிழ்நாடு பொதுவுடமை கட்சியின் நிலைப்பாடு.
அந்தக் காலகட்டத்திலேயே தேசிய இனச் சிக்கலையும், தேசிய இன விடுதலையையும் பற்றி தோழர் தமிழரசன் நுணுக்கமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
ஒருபோதும் தமிழீழ விடுதலைக்கு இந்தியம் ஆதரவளிக்காது, எதிராகவே செயல்படும் என்ற உண்மையை அப்போதே தெளிவுப்படுத்தியுள்ளார்.
அந்த உண்மையை நாம் இன்றைய நிகழ்வுகளோடு பொருத்தி பார்த்துக் கொள்ள முடியும்.
தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய கட்டமைப்பை வீழ்த்துவதற்கான முன்னெடுப்புகளை பல்வேறு தளங்களில் மிகப்பெரிய ஒருங்கிணைப்போடும், உறுதியான செயல்பாடுகளின் மூலமாகவும் செய்யப்பட வேண்டியிருக்கிறது.
இங்கோ, ஒரு மாபெரும் போராட்டத்தின் உன்னதமான தலைவனையும், போராளிகளையும், மக்களையும் சிலர் தங்கள் குறுகிய தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்துவதோடு அதன் திசைவழியை விடுதலைப்போராட்ட குறிக்கோளிலிருந்து வேறுதிசையை நோக்கி நகர்த்த முயற்சிப்பதை பார்க்க முடிகிறது.
தாங்கள் மட்டுமே ஈழத்திற்கான தமிழகப்பிரதிநிதி, ஈழவிடுதலை தங்கள் கையில் மட்டுமே இருக்கிறது என்று இளைஞர்களையும்,தமிழக மக்களையும் தொடர்ந்துக் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஈழப்போராட்டத்தின் வீரியத்தை முடக்கியும், வளரவிடாமலும், தமிழக தேர்தல் அரசியலின் பரப்பெல்லைக்குள் வெற்று பேசுபொருளாகவும், பரப்புரைக்கான செய்தியாகவும் மட்டும் குறுக்கிவிட்டிருக்கிறார்கள்.
ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி 2009-ல் பெரும் பின்னடைவுக்குள்ளான ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு பிறகு, ஈழவிடுதலையை பெறுவதற்கு இன்று என்னன்ன வாய்ப்புகள் உள்ளன என்று பார்த்தால்…
(1)ஐ.நா சபை மூலமாக தீர்வை பெறுவது அல்லது(2) விடுதலை போராட்டத்தை மீண்டும் முன்னெடுப்பது ஆகிய இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. அதில் ஐ.நா சபையில் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் போராட்டம் ஒரு தசாப்தத்தை கடந்துவிட்டிருக்கும் நிலையிலும் நாம் எதிர்ப்பார்த்த முன்னேற்றங்களை அடைந்து விடவில்லை. உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் போக்கு முழுமையாக ஈழவிடுதலைக்கு எதிராக இருக்கும் நிலையில் ஐ.நா மன்றத்தில் படிப்படியாக நீர்த்துப்போகச் செய்யப்படும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் ஆகியவற்றுக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கும், ஈழமக்களின் தேச உரிமைகளை மீட்பதற்கும் எதிர்வரும் காலத்தில் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை நடத்துவதால் மட்டுமே சாத்தியப்படும் என்பதே நிதர்சனம்.
அப்படி ஈழத்தில் விடுதலைப்போராட்டம் துவங்கப்பட்டால் தமிழகத்தின் ஈழ ஆதரவு அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ்த்தேசிய அமைப்புகள் அந்த விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுப்பார்களா என்று கேட்டால் தமிழகத்தில் நடந்தேறியிருக்கும் சம்பவங்கள் அதற்கு சான்றளிப்பவையாக இல்லை!
பரமக்குடி படுகொலை, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்,தருமபுரி கலவரம்,தாது மணல் திருட்டுக்கு எதிரான போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், தமிழகம் முழுவதும் நடந்தேறும் சாதி வெறிக் படுகொலைகள் என்று பல்வேறு சம்பவங்களில் கொன்றொழிக்கப்பட்ட தமிழகத் தமிழர்களின் உயிர்களுக்கு பதில் செய்யத் துணியாதவர்கள் இலங்கை இராணுவத்திற்கு முன் உயிர்விட துணிவார்களா? வாய்ப்பே இல்லை.
தமிழீழ தனியரசு அமைக்கப்போராடுவதே தமது இலட்சியம் என்பவர்கள் , மேடையிலும், தேர்தலிலும்தானே போட்டியிடுகிறார்கள். அதையும் தாண்டினால் சில அடையாள போராட்டங்களை நடத்துகிறார்கள். மேடையிலும் ,தேர்தலிலும் போராடுவதன் மூலம் தமிழீழ தனியரசை எப்படி அமைப்பார்கள் என்பதை அவர்கள் விளக்கவேண்டும்.
2014- க்கு முன் பா.ஜ.க வெற்றி பெற்றுவிட்டால் ஈழம் அமைத்துவிடுவோம் என்று பேசித்திரிந்தனர் சில தமிழ்த்தேசிய தலைமைகள். இன்றும்கூட ஈழத்தமிழர்களான காசி ஆனந்தன், சச்சிதானந்தன் போன்றவர்கள் இந்து அடையாளங்களை முன்வைத்து பா.ஜ.க வின் பின் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும், அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்களால் இன்னொரு நாட்டில் ஓரு தனியரசை அமைத்து தர இயலுமென்றால், ஏன் அவர்கள் தமிழ்நாட்டை தனியரசாக்க போராடக் கூடாது. இங்கே அப்படி பேசினால் இந்திய அரசு இவர்களை இல்லாமலாக்கி விடும், அப்படித்தானே! இங்கேதான் அறிவியல்பூர்வமான தமிழ்த்தேசியத்திற்கும், அடையாள தமிழ்த்தேசியத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.
இது போன்ற சந்தர்ப்பவாத உணர்வாளர்களுக்கும், புரட்சிகர தமிழ்த்தேசியத்தை பின்பற்றுபவர்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கத்தானே செய்யும். ஈழத்தை அமைத்து தருவேன் என்று சொல்பவர்கள் ஈழத்திற்காகவும் போராடத் தயாரில்லை, தமிழகத்திற்காகவும் போராடத் தயாரில்லை.
அதனால்தான் இன்றைக்கு ஈழப்போராட்டத்தின் எதிர்காலத்தை சரியாக கணிக்க முடியாத சூழலிலும், ஈழவிடுதலைக்கு உருப்படியாக உதவமுடியாத நிலையிலும், தமிழகத்தின் ஆட்சியில் அமர்வதன் மூலம் ஈழவிடுதலையை பெறமுடியும் என்ற தவறான நம்பிக்கையை தமிழக இளைஞர்களிடம் விதைத்து கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மையென நம்பி, அதுதான் தமிழ்தேசியம் என நம்புபவர்கள் தமிழ்த்தேசியத்தின் உண்மைகளை அறிந்துகொள்ளாமல் போகிறார்கள்.
இன்று தாங்கள் இல்லையென்றால் தமிழகத்தில் இளைஞர்களுக்கு பிரபாகரன் என்றால் யார் என்று தெரிந்திருக்காது என்று பரப்புரை செய்பவர்கள் தலைவர் பிரபாகரன் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டால் என்ன நிகழ்ந்து விடும்? அவர்களுக்கு, புலம்பெயர் ஈழச்சமுகத்தில் இருந்து அளிக்கப்படும் பெரும்நிதி நின்றுவிடும், ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் அவர்களை முற்றிலுமாக புறக்கணித்து விடுவார்கள். அவ்வளவுதான்.
ஆனால் உலகளாவிய தன்மை கொண்ட ஈழவிடுதலைப் போராட்டமும், அதன் தலைவனின் புகழும் வேட்கையோடு பற்றி பரவுமே தவிர சிறுமணியளவிலும் குன்றாது. ஈழப்போராட்டத்தின், புலிகளின், தலைவர் பிரபாகரனின் பெயரால் இந்த புதிய தமிழ்த்தேசிய தலைவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே தவிர, இவர்களின் தயவில் வாழ்ந்துவர வேண்டிய அவசியம் அந்த மாபெருந்தலைவனுக்கும், ஈழவிடுதலைப் போராட்டத்திற்கும் இல்லை. இவர்களால் எதிர்கால ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எந்த நன்மையும் இல்லையென்பதோடு, மாறாக தீமையே அதிகம். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு பாரிய செயல்பாட்டினை கட்டமைக்காமல் இருப்பதும் இது போன்ற போலிகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதற்கான காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.
.
.
.
.