உலகில் மக்கள்நல அரசுகளுக்கான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுபவை நோர்டிக் நாடுகள். நார்டிக் என்றால் வடக்கு. ஐரோப்பாவின், அட்லாண்டிக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளை ‘நார்டிக் நாடுகள்’ என்று குறிப்பிடுகிறார்கள். டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளையும் மேலும் சில தன்னாட்சி பிரதேசங்களையும் உள்ளடக்கிய பிராந்தியம் இது.
இந்த நாடுகள் சமூகச் சூழலில் ஒரு பொதுவான பண்பாட்டை உருவாக்கியிருக்கின்றன. பொது கல்வி, பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை; உயரிய தனிநபர் சுதந்திரம், மதிப்புக்குரிய சமூக நல்லிணக்கம் என்று மேம்பட்ட ஜனநாயகத்துக்கான முன்னுதாரணமாக உலக நாடுகளால் பார்க்கப்படும் நாடுகள் இவை.
இங்குள்ள கல்விச் சூழல் மிகப் பிரமாதமானது. பல நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களுடைய சமூகத்தில் உண்டாக்க வேண்டிய மாற்றங்களுக்காக இங்குள்ள கல்வி நிலையங்களைப் பார்வையிட்டுச் செல்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க கல்விச் சூழலை ‘அருஞ்சொல்’ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாகவே இந்தத் தொடரை வெளியிடுகிறோம். கட்டுரையாளர் விஜய் அசோகன் இந்தப் பிராந்தியத்தில் வசிப்பவர் என்பதோடு, இந்த நாடுகளில் பணியாற்றுபவரும்கூட. தமிழ்நாட்டின் கல்விச் சீர்திருத்தத்துக்கு இத்தொடரும் உதவட்டும்!
பின்லாந்து நாடு, உலகின் தலைசிறந்த பள்ளிக்கல்வியை வழங்குகிறது என்பது தமிழ்நாட்டிலேயே நாம் அடிக்கடிக் கேட்டுப் பழகிய செய்திதான். ஆனால், எப்படி பின்லாந்து நாட்டினரால் உலகின் தலைசிறந்த கல்வியை வழங்க முடிகிறது? பின்லாந்து போலவே ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து நாடுகளின் பள்ளிக்கல்வித் துறைச் செயற்பாடுகள் பல நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழக் காரணங்கள் என்ன? இதுபற்றி நாம் ஆழமாக விவாதித்தது இல்லை அல்லவா? இனி விவாதிப்போம்!
இந்த நாடுகள் அருகருகே இருப்பதால் மட்டுமல்ல, இவர்களுக்குள் ஒரு வரலாற்றுப் பிணைப்பும் உள்ளது. மொழிகளாலும், சமூக அமைப்புகளின் உருவாக்கத்தினாலும் மேலும் பல வரலாற்றுக் காரணங்களாலும் ஒன்றானவர்கள் இவர்கள்.
இன்றைய நார்வேயின் நிலப்பரப்பானது, டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் 400 வருடங்களுக்கு மேலாகவும், ஸ்வீடனின் கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளாகவும் இருந்தது. அதேபோல, பின்லாந்து 600 ஆண்டுகளுக்கும் மேலாக சுவீடனின் கட்டுப்பாட்டிலும், 100 ஆண்டுகள் ரஷ்ய நாட்டின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஆயினும்கூட நார்வே, பின்லாந்து இரண்டும் தனித்த ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்பிருந்தே கல்வி, தாய்மொழி, சமூகக் கட்டமைப்பு, அரசியல் அதிகாரக் கட்டமைப்பு என முக்கியமான சில விஷயங்களில் தத்தமது தனித்தன்மையினை நிலைநாட்டுவதில் ‘விடாப்பிடியான’ உறுதியுடன் இருந்தனர்.
நோர்டிக் நாடுகள்
ஸ்வீடன், நார்வே, டென்மார்க் மூன்றும் இணைந்த பகுதிகளை ‘ஸ்காண்டினேவியன் நிலம்’ என்றும் வகைப்படுத்துகின்றனர். இந்தோ-ஐரோப்பியக் கூட்டில் இருந்துவந்த ஜெர்மானிய மொழிப் பிரிவின் கிளை மொழிகள் ‘ஸ்காண்டினேவியன் மொழிகள்’ (ஸ்வீடிஷ், டேனீஷ், நோர்வேஜியன்) ஆகும். 1950களுக்குப் பின்னர், ஸ்காண்டினேவியன் கூட்டில், ஐஸ்லாந்தும் பின்லாந்தும் இணைந்த பின், நோர்டிக் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
நோர்டிக் நாடுகள் மொழிகளிலும் வரலாற்றிலும் பிணைந்திருப்பதுபோல, கல்வித் துறை வளர்ச்சியிலும் பல காரணங்களால் ஒருங்கிணைந்தவர்களே! கல்வியுரிமை, தாய்மொழிக் கல்வி, சமத்துவக் கல்வி ஆகியவற்றையும் மனித உரிமையின் அடிப்படையாயாக வகுத்துவைத்திருக்கின்றன இந்த நாடுகள்.
உலகின் முன்னணிப் பட்டியலில் நோர்டிக் நாடுகள்
உலகின் தலைசிறந்த கல்வியைக் கொடுக்கும் நாடுகளின் முதன்மைப் பட்டியலில் மட்டுமல்ல, ஆண்-பெண் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட பல சமூக மேம்பாட்டு அளவுகோல்களிலும் முதன்மையான இடத்தில் இருப்பதால், உலகின் மகிழ்வான நாடுகளில் இந்த நாடுகள் முன்வரிசையில் இருக்கும். 2022இல் உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதல் இடம். டென்மார்க் இரண்டாம் இடம். ஐஸ்லாந்து மூன்றாம் இடம். ஸ்வீடன் ஏழாம் இடம். நோர்வே எட்டாம் இடம்.
உலகின் பாதுகாப்பான நாடுகளின் வரிசையிலும் இந்த நாடுகள் முதன்மையில் இருக்கும். உலகின் சமூக நலத் திட்டங்களுக்கான மேற்கோள்கள் இந்த நோர்டிக் நாடுகளிடம் இருந்தே பெறப்படுகின்றன.
நோர்டிக் சமூக உருவாக்கமும் கல்வித் துறையும்
கல்வித் துறையை மனித உரிமை அடிப்படையில் வரிசைப்படுத்திய நாடு என்பதால், தாய்மொழிக் கற்றலைத் தங்கள் நாட்டில் வாழும் எல்லா நாட்டினருக்கும் எல்லா இனத்தினருக்கும் மனித உரிமை அடிப்படையிலான ‘மொழியியல் மனித உரிமை’ (Linguistic Human Rights) என இந்நாடுகள் வகைப்படுத்தியுள்ளன.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சமத்துவக் கல்வி, அனைவருக்கும் சம வாய்ப்புள்ள கல்வி எனும் கொள்கையை இவை கொண்டுள்ளன.
அனைவரையும் உள்ளடக்குதல், சமூக நீதி இந்த இரு விஷயங்களையும் ஒரு ஆசிரியரானவர் ஆசிரியர் பயிற்சியில் பங்கேற்கும்போதே இந்நாடுகளில் அளிக்கப்பட்டுவிடுகின்றன. நோர்டிக் நாடுகளின் கல்வித் துறை வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றும் இரண்டு காரணிகள் 1) தொடக்கக் கல்வியும் 2) ஆசிரியர் பயிற்சிக் கல்வியும்.
அரசியலும் பாலின சமத்துவக் கல்வியும்
நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அடுத்த செய்தி, அரசியல். ஆம், கல்வியும் சமூக அரசியல் பாடங்களும் பிரிக்க முடியாதவை. பின்லாந்து பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பாக, மாணவர்களுக்காக அரசியல் வகுப்புகள், விலைவாசி முதல் சுகாதாரக் கட்டமைப்பு வரையிலான விவாதங்கள், அதனைத் தொடர்ந்து மாணவத் தேர்தல், வாக்குப் பிரச்சாரங்கள் எனச் செயல்படுத்தப்படுகிறது.
1944இல் இரண்டாம் உலகப் போர் காலகூட்டத்தில் அமைந்த பின்லாந்து கூட்டணிக் கட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் அரசியல் கல்வி தொடர்பில் விவாதித்தது. கல்வித் துறை வடிவமைப்பில் அரசியல் குழுவினரின் வழிகாட்டலை இது உறுதி செய்தது. ‘கல்வி – சமூகம் – அரசியல்’ என்ற இணைப்பை இது கல்வித் திட்டத்தில் கொண்டுவந்தது. இதன் தாக்கம் இன்றைய சமூக மேம்பாட்டில் பிரதிபலிக்கிறது!
அடுத்தடுத்தக் கட்டுரைகளில் எல்லாவற்றையும் ஆழமாகப் பார்ப்போம்!
விஜய் அசோகன்
விஜய் அசோகன், ஆய்வாளர். நோர்வே, சுவீடன், அயர்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுவீடனில் உள்ள நார்டிக் ஃபோரம் ஃபார் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (Nordic Forum for science and technology) அமைப்பின் தலைவராகச் செயலாற்றிவருகிறார். தாய்மொழிவழிக் கல்வி மற்றும் ஐரோப்பிய உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் தொடர்ந்து எழுதிவருகிறார். தொடர்புக்கு: thamilinchelvan@gmail.com