இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை :-
இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்தபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த பல கோரிக்கைகளில் ஒன்று. இப்போது, தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ரூ.317.4 கோடி அளவிலான திட்டங்களை அவர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்காக 7,469 வீடுகள் கட்டித் தரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில், இலங்கைக்குத் திரும்ப விழையும் அகதிகளுக்கு எல்லா உதவிகளும் வசதிகளும் இந்திய அரசு செய்து கொடுக்க வேண்டும், அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் அறிக்கையின்படி, 2002-க்கும் 2020-க்கும் இடையில் 17,718 அகதிகள்தான் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து அவர்களில் பெரும்பாலோருக்கு இலங்கைக்கு திரும்புவதில் ஆர்வமில்லாத நிலை இருப்பது தெரிகிறது.
இந்திய அரசின் நிலைப்பாடு :-
அகதிகளாக நுழைபவர்களுக்கெல்லாம் மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்குவது என்பதை கொள்கையாகக் கடைப்பிடிக்க முடியாது. ஏற்கெனவே வறுமைக் கோட்டுக்குக் கீழே கணிசமான பகுதியினர் வாழும் நிலையில், அகதிகளையும் அனுமதித்து கூடுதல் சுமையைத் தாங்க இந்தியப் பொருளாதாரம் இடமளிக்காது. இதைத்தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, வங்கதேசப் போருக்குப் பிறகு லட்சக்கணக்கில் அகதிகள் நுழைய முற்பட்டபோது தெளிவுபடுத்தினார்.
இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு முறையாக குடியமர்த்தப்படுவார்களா? மாட்டார்களா? என்பது கேள்விக்குறியாகத் தொடர்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியக் குடியுரிமை பெற்று இங்கேயே இணைந்து விடுவது என்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் :-
1983 முதல் தமிழகத்தில் 3, 04,269 இலங்கைத் தமிழ் அகதிகள் இருக்கிறார்கள். அவர்களில் 52,822 பேர் 29 மாவட்டங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். பெரும்பாலானோர் முகாம்களுக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு போய்விட்டனர். பலர் மக்களோடு மக்களாகக் கலந்துவிட்டனர்.
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளுக்கும், சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா திரும்பாத இலங்கை வாழ் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கும் சட்டத்தை இலங்கை அரசு 2003-இல் நிறைவேற்றியிருக்கிறது. அதனடிப்படையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் அகதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் குடியுரிமை பெறுவது பிரச்னையாக இருக்காது. அப்படியிருந்தும் இலங்கை திரும்ப அகதிகள் விரும்பாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு மீண்டும் உள்ளாகிவிடுவோமோ என்கிற அச்சமும், அமைதியாக வாழ முடியுமா என்கிற கவலையும் அவர்களை யோசிக்க வைக்கின்றன. அதையும் மீறி தாயகம் திரும்பினால், தங்களது வாழ்வாதாரத்துக்கு என்ன வழி என்பது தெரியாத நிலையும் அவர்களின் தயக்கத்தை அதிகரிக்கிறது.
இந்திய குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படையில், இந்துக்களான இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான தகுதி பெறவில்லை. இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான ஹிந்து, கிறிஸ்தவ, பௌத்த, சீக்கிய, பார்ஸி, சமணர்களைப்போல இலங்கைத் தமிழ் அகதிகள் கருதப்படாததுதான் அதற்கு காரணம்.
மற்றொரு பார்வை :-
இலங்கை புலம் பெயர் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை இன்னொரு பார்வையில் பார்த்தோமென்றால், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது என்பது இலங்கையிலிருந்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கும் ராஜபட்ச சகோதரர்களின் இன வெறிக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும்.
வட கிழக்கு மாகாணத்தின் மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் அனைவரும் இலங்கைக்குத் திரும்பி, தங்களது சொத்துக்களை மீட்டெடுத்து, சம உரிமையுடன் வாழும் நிலைமைக்கு வழிகோலுவது இன்னொரு சரியான அணுகுமுறையாக இருக்குமே தவிர, வட கிழக்கு மாகாணத்தை சிங்களர்களுக்கு தாரை வார்ப்பதாக அமைந்து விடக் கூடாது.
தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் அவர்களை இங்கே நிரந்தரமாகக் குடியேற வழிகோலுமானால், ஈழத்தின் மீதான தமிழர்களின் உரிமையை சிங்களர்களுக்கு விட்டுக் கொடுப்பதாக அமைந்துவிடக் கூடும். “தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம் ” என்ற நோக்கத்திற்காக போராடிய போராளிகள் சிந்திய ரத்தத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
அகதிகளா? சட்டவிரோத குடியேறிகளா?- இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
ஆனால் அதே சமயத்தில் இங்கே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்கும் இலங்கை நாட்டு பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். இங்கேயே பிறந்து, இந்திய உறவுகளோடு கலந்து விட்ட அவர்களை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்ப முடியாது, மேலும் அவர்கள் ஏந்த வித உரிமையும் இல்லாமல் அதாவது குடியுரிமை அளிக்காமல் அவர்களின் வாழ்கையை கேள்வி குறி ஆக்க இயலாது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திலும் கூட ‘அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின், பௌத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில் இருந்து வந்த தமிழ் மக்களுக்கு குடியுரிமை வாய்ப்பு வழங்கப்படவில்லை
இலங்கை அகதிகளுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம். இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் “1947 இந்திய வெளிநாட்டினர் சட்டத்தின் ” படி, வெளிநாட்டினர் யாராவது உரிய அனுமதி (விசா ) இல்லாமல் இந்திய நாட்டிற்குள் குடிபெயர்ந்தால் அவர்கள் ” சட்ட விரோதமாக ” குடியேறியவர்கள் என்ற வட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். இந்திய சட்டத்தில் ” அகதிகள் ” என்ற கோட்பாடு இதுவரை கொண்டு வரப்படவில்லை. இதன் காரணமாக இலங்கையில் இருந்து வந்த மக்கள் ,” சட்ட விரோதமாக குடியேறியவர்கள் ” என்றே இந்திய அரசால் வரையறுக்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே, மதுரை உயர் நீதிமன்றதில் மத்திய அரசின் சார்பிலிருந்து, “சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு, குடியுரிமை வழங்க முடியாது ” என்று கூறப்பட்டது.
ஆனால் மாநில அரசின் இந்த நிலைப்பாட்டில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன,..
முதலாவதாக,
1) மாநில அரசால் ” அகதிகள் ” என்று வரையறுத்து, அனைத்து வித நலத்திட்டங்களையும் பெறும் இலங்கை அகதிகளை, ” சட்ட விரோதமாக குடியேறியவர்கள் ” என்று எந்த அடிப்படையில் மத்திய அரசு கூறுகிறது ?
இரண்டாவதாக,
2) 2019 குடியுரிமை சட்டத்தின் படி ஆப்கானிஸ்தான், பூடான், மியான்மர், பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம் இல்லாத அகதிகளுக்கு குடியுரிமையை உறுதி செய்யும் மத்திய அரசு ஏன் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமையை தர மறுக்கிறது?
மூன்றாவதாக,
3)மிக முக்கியமாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் நேரடியாக ” அகதிகளாக ” கருதப்பட்டு நிதி பெறப்படுபவர்கள் இலங்கை அகதிகள் மற்றும் திபெத்திய அகதிகள் மட்டுமே. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சட்ட விரோத குடியேறியவர்கள் என்று கூறி எவ்வாறு மத்திய அரசு குடியுரிமை தர மறுக்கிறது?
இறுதியாக, மத்திய அரசின் இந்த இரட்டை போக்கு பிற்போக்குத்தனம் ஏன்? போன்ற கேள்விகளுக்கு விடையை மத்திய அரசுதான் தர வேண்டும்.