அமைப்பை வழிநடத்துவோரை அரசியல்படுத்துவது ‘ அமைப்பை கட்டும் செயல்திட்டம் எனில், அந்த அமைப்பை ஏற்றுக்கொள்வோரை அரசியல்படுத்துவது ‘ அமைப்பாய் திரட்டும் செயல்திட்டமாகும்.
அமைப்பை வழிநடத்துவோர் மட்டுமே அரசியல்படுத்தப் பட்டால் , அவர்கள் ஒரு அரசியல் சக்தியாக பரிணாமம் பெற்றாலும் அவர்களால் ஒரு குழுவாகத்தான் இயங்கிட இயலும். ஒரு வெகுமக்கள் அமைப்பாக வலுப்பெற இயலாது. எனவே ஏற்புடைய வெகுமக்களையும் அரசியல்படுத்துவதுதான் அமைப்பாக்கச் செயல்திட்டத்தின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும்.
பெரும்பாலும் அமைப்பை வழிநடத்துவோரிடையே எழும் சிக்கல்கள்தாம், அமைப்பாக்க நடவடிக்கைகளுக்கு மிகப்பெரும் சவால்களாக உள்ளன.
ஒரே அமைப்பில், ஒரே களத்தில் , ஒரே இலக்கில் , ஒரே திசைவழியில் ஒரே சக்தியாக திரண்டு செயலாற்றும் போது, தனிநபர்களுக்கிடையில் கருத்து முரண், கருத்தியல் முரண், நடத்தை முரண், நடைமுறை முரண், நட்பு முரண், பகை முரண் போன்ற பல்வேறு வகையிலான முரண்கள் எழுவதும் அவை சிக்கல்களாக மாறுவதும் அவ்வப்போது அவற்றை இலகுவாக எதிர்கொண்டு வெற்றிகரமாக கடந்து முன்னேறி செல்வதும் அமைப்பாக்க நடவடிக்கையில் தவிர்க்க இயலாததாகும்.
அதாவது, அமைப்பை வெகுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய, அதனை வழிநடத்த வேண்டிய ‘ தலைவர்கள் முதலான தொண்டர்கள்’ வரையிலான பொறுப்பாளர்களிடையே எழும் ‘ தனிநபர்ச் சிக்கல்கள்’ தாம், பெரும்பாலும் அமைப்புக்குள்ளும், அமைப்புக்கும் மக்களுக்குமிடையே பெரும் இடைவெளியை உருவாக்குகின்றன. அவற்றை எதிர்கொண்டு தீர்வுகாண்பதுதான் அமைப்பாக்கத்தின் முன்னுள்ள சவால்களிலேயே முதன்மையானதாகும்.
தனிநபர்ச் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது?
அமைப்பாக்க நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் நேராவகையில் அவற்றுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது?
மக்கள்- அமைப்பு- கொள்கை- மக்கள் என்னும் தொடர்நிலை உறவுகளின் அடிப்படையில், மக்கள்நலன்கள் மற்றும் அமைப்பு நலன்களை முன்னிறுத்தாமல் ‘தனிநபர்- அமைப்பு- கொள்கை- தனிநபர்’ என்னும் அடிப்படையில் தனிநபர் நலன்களை மட்டுமே முன்னிறுத்துவோரால்தான் , இத்தகைய தனிநபர் முரண்கள் எழுந்து, சிக்கல்கள் வளர்ந்து, இயக்கப் போக்கில் தேக்கம் நிகழ்ந்து, அமைப்புக்கும் மக்களுக்குமிடையே தொடர்புகள் அறுந்து, ஒரு இடைவெளி நேர்ந்திடும் சூழல்கள் உருவாகின்றன.
இவ்வாறு தனிநபர்ச் சிக்கல்களை உருவாக்குவோர் மீது அமைப்புவழியிலான ‘சட்டம்- விசாரணை- எச்சரிக்கை- தண்டனை’ என்னும் அடிப்படையில், ஒழுங்குநடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தீர்வுகாண்பது ஒருவகையிலான வழிமுறையாகும்.
அதேவேளையில், ‘ அமைப்பியல்- கருத்தியல்- அரசியல்படுத்துதல்- ஆளுமை வளர்த்தல்’ என்னும் அடிப்படையில் அவர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் தீர்வுகாண்பது இன்னொரு வகையிலான வழிமுறையாகும். இந்தவகையிலான வழிமுறைதான் அறிவியல்பூர்வமான, நிறைவான, நிலையான தீர்வுமுறையாகும்.
‘ தண்டனை’ வழிமுறையிலான தீர்வைப் புரிந்து கொள்வதற்கும் ஒத்துழைப்பதற்கும்கூட, ‘ ஆளுமைவளர்த்தல்’ வழிமுறை இன்றியமையாத தேவையாகும். தண்டனை என்பது அமைப்பியலின் ஒரு பகுதியாதலால், அது ஆளுமைவளர்த்தலின் ஒரு அங்கமேயாகும். தண்டித்தலும் ஒருவகையான கற்பித்தல்தான் என்பதால், அதுவும் அரசியல்படுத்துதலே ஆகும். தண்டனை அல்லது ஒழுங்குநடவடிக்கையானது, அமைப்பையும், அதன் கொள்கைகளையும் பாதுகாப்பதற்காக மட்டுமின்றி, நடவடிக்கைக்குள்ளாகும் ஒருவரின் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்காகத்தான் என்கிற புரிதல் தேவையாகும். அதாவது, ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் ஒருவர் தான் சார்ந்த அமைப்பின் நிர்வாக நடைமுறைகள், சட்டம் மற்றும் விதிமுறைகள், தனிநபருக்குரிய அதிகாரங்கள் மற்றும் உரிமைகள், இன்னும் இவைபோன்ற பிறவிவரங்கள் யாவற்றையும் தெளிவுற அறிந்துக் கொள்ளவும் அமைப்பியல் தொடர்பான அடிப்படைக் கூறுகளைக் கற்றுக்கொள்ளவும் இயலும். இதன்வழி தண்டனைக்குள்ளாகும் நபர் அரசியல்படுத்தப்படுவதால் அவரது ஆளுமைத்திறனும் பெருகும். இவ்வாறு தண்டனை அல்லது ஒழுங்குநடவடிக்கையானது அமைப்பியல் குறித்த அரசியல்படுத்துதலை நிகழ்த்துகிறது.
அமைப்பாய் திரள்வோம் நூலில் இருந்து சில வரிகள்