வாழை திரைப்படம் வாழைத்தாரை சுமந்து வாழ்க்கை நடத்தும் எளிய மக்களின் வாழ்க்கை நிலையை, பள்ளியில் படித்துக் கொண்டே வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் சிறுவனின் நிலையை எடுத்துக்காட்டியுள்ள படம் என்ற வகையில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற வகையில் மாற்றக் கருத்தில்லை.
ஆனால், அதைத் தாண்டி அந்தப் படத்தை பார்த்து விட்டு வருபவர்கள் / இயக்குநர்கள் / நடிகர்கள் – கண்ணீரும் கம்பலையுமாக வருவது என்பதுதான் நமக்கு நெருடலாக உள்ளது. அந்த படம் கண்ணீரையும், கவலையையும் பார்வையாளர்களிடம் கடத்தவில்லை என்பதே உண்மை. இயக்குநர் மாரி செல்வராஜின் கதையைப் பேசுகிறது என்பதற்காகவே அந்த கதையை எல்லோரும் அதி உணர்ச்சி ததும்ப பேசுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.
Pari Elavazhagan பாரி இளவழகன் எழுதி இயக்கிய ஜமா என்றொரு திரைப்படம் இந்த அளவுக்கு யாராலும் கொண்டாடப்படவில்லை. ஆனால், அந்தப் படம் கதாநாயகனின் துயரத்தை பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்தும் ( எனக்குக் கடத்தியது) அவனுடைய துயரத்தை நம்முடைய துயரமாக மாற்றும், அவனுடைய வெற்றியை நம்முடைய வெற்றியாக கொண்டாட வைக்கும். அந்தளவிற்கு வாழை நமக்கு கடத்தவில்லை. கடத்தும் விதத்தில் படமாக்கப்படவில்லை.
அப்பா இல்லாத வறுமையான குடும்பம், வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத் தார்களை சுமக்க செல்கிறான் சிவனணைந்தான். வீட்டில் மாடு, கோழி, சொந்தமாக குடிசை வீடு என்று படத்தில் காட்டி விடுவதால் அவர்களது வறுமையும் கூட நம்மை முழுமையாக ஆட்கொள்ளவில்லை. வீட்டில் மாடு, கோழி இருந்து விட்டால் வறுமை இல்லையா என்று யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம் ? அது வறுமைதான். ஆனால் பார்வையாளர்களாக அது பெரும் துயரத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.
ஏனென்றால், குந்துவதற்கு குடிசை கூட இல்லாமல், குடும்பங்களாக தங்கள் பிள்ளைகளோடு கொத்தடிமைகளாகச் சென்று செங்கல் சூளைகளில் வாழ்க்கை சீரழிந்து கிடக்கும் சிறார்கள் மத்தியில் சிவனணைந்தான் பள்ளி விடுமுறை நாட்களில் வாழைத்தாரை தூக்கி சுமப்பது ஆகப்பெரும் துயரமாக பார்வையாளனக்கு வழங்காது. சிவனணைந்தானுக்கு அது நிச்சயம் துயரம் தான்.
வாழைத்தார் சுமக்கும் அவனது துயரமான வாழ்க்கையில் பூங்கொடி ஆசிரியை வந்து போவது கூட அவனது துயரத்தை நமக்கு கடத்தாமல் சென்று விடுகிறதோ என்னவோ ? சிவனணைந்தானுக்கு ஆறுதல் கிடைப்பது போலவே நமக்கும் அது ஆறுதலாகி விடுகிறது.
தனக்கு பிடித்த ஆசிரியை மீது அந்தப் பருவத்தில் விளையும் ஈர்ப்பை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இறுதியில் ஆசிரியையிடம் , “நேத்து எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க டீச்சர். இன்னைக்கு அக்கா மாதிரி” என சொல்லும் வசனம் பொருத்தமற்றது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியரை மனதிற்குள் நினைத்து பாடும் பாடலும், கைக்குட்டையை மோர்ந்து பார்க்கும் அவனது ஈர்ப்பையும் பார்க்கும் நமக்கு இந்த வசனத்தோடு பொருத்திப் பார்க்க முடியவில்லை.
குழந்தை பருவத்தில் சிவனணைந்தானின் மீது திணிக்கப்படும் சுமை , பசிக்காக பழத்தை எடுத்துச் சாப்பிட்டதால் அடி வாங்குவது, பசியால் மயங்குவது – என்பதைக் கடந்து துயரப்படுவதற்கு எந்தச் சம்பவங்களும் இல்லை. பின்னணி இசை தான் அந்தத் துயரத்தை நமக்குக் கடத்துகிறதே தவிர, காட்சி அமைப்பு இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம்.
சிறுவன் பசியால் சோர்வடைந்து மயங்கும் போது அமைக்கப்பட்ட காட்சியமைப்பு சிறப்பானது. அந்தத் துயரம் நமக்கு தொற்றிக் கொண்டாலும் அது கண்ணீரை வரவழைப்பது இல்லை. சோற்றுக்கு வழியில்லாமல் அவன் பசியால் வாடியிருந்தால் அவனது துயரம் நம்மை வாட்டியிருக்கும். வீட்டில் எப்போதும் பழைய சோறாவது இருந்து கொண்டே இருக்கின்றது. இருக்கும் உணவை சாப்பிட முடியாததால் வந்த மயக்கம் என்பதால் துயரம் நம்மை ஆட்கொள்ளவில்லை.
சம்பளத்தை உயர்த்தாமல் முதலாளி சுரண்டுவதைச் சுட்டிக்காட்டுகிற சம்பவத்தை இன்னும் விரிவாக எடுத்து இருக்க வேண்டும். முதலாளியின் கோர முகத்தை இன்னும் விரிவாக காட்டி இருக்க வேண்டும். ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய் சம்பள உயர்வை ஒரு மணி நேர ஸ்டிரைக்கில் முடிவுக்கு வந்ததாகக் காட்டுவதெல்லாம் நமக்கு ஒன்றவில்லை. ஒரு முதலாளி ஒரு மணி நேர ஸ்டிரைக்குப் பயந்து இரண்டு மடங்காக உடனே ஏற்றுவதெல்லாம் சாதாரண காரியம் இல்லை. போராடும் மக்களை விரட்டிவிட்டு வெளியாட்களைக் கொண்டு வாழைத் தார் அறுக்க முடியாதா என்ன ? கால் அணா காசு உயர்வுக்காக கீழ்வெண்மணியில் 44 உயிர்களை பழிவாங்கிய பண்ணையார்களை நாம் அறிவோம்.
அடுத்ததாக, கூலி உயர்வு கேட்டதற்காக கனியினுடைய வாழைத் தார் பிடிக்கும் வேலையை பறிப்பதைக்கூட சாதாரணமாக ஏற்றுக்கொண்டு காதலியைப் பார்ப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்பது போல் காட்டி விடுவதால் முதலாளி மீதான கோபம் நமக்கு வராமல் தடுக்கப்படுகிறது.
விபத்து சம்பவமும் அந்த சாவுக்கு காரணமான முதலாளியின் கோர முகத்தையும் இன்னும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருக்க வேண்டும். பிணத்திற்கு நீ மாலை போடக்கூடாது என்று முதலாளி வடிவிலான கொலைகாரனை தடுக்கும் ஒற்றை குரலோடு அந்த எதிர்ப்பு முடிந்து விடுகிறது. அவ்வளவு மரண ஓலத்திலும் நிவாரணத்திற்காக உறவுகளை இழந்தவர்கள் ரேஷன் கார்டை தேடப் போய் விடுவதால் அந்த மரணத்தை நாம் விரைவில் கடந்து விடுகிறோம்.
ரேஷன் கார்டு தேடப் போகும் அந்த தாயின் அழுகுரல் தான் நம்மை நெஞ்சை பிழிய வைக்கிறது. ஒரு வாய் சாப்பாட்டைக் கூட சாப்பிட விடாமல் தடுத்து விட்டேனே என்ற தாயின் அழுகை மட்டும்தான் நம்மை குலுங்க வைக்கிறது. அவரது நடிப்பு அபாரம்.
கலை என்பது கழிவிறக்கம் தேடுவதாக இருந்து விடக்கூடாது, நமக்கு துயரத்தை தருபவர்கள் மீது கோபத்தை வரவழைப்பதாக இருக்க வேண்டும். அப்படி முதலாளி மீதான கோபம் பெரியளவில் நமக்கு வராமல் தடுக்கப்பட்டு அந்தச் சிறுவன் மீதான கழிவிறக்கத்தை நெஞ்சில் ஏற்றி துயரத்தோடு வெளியே வருவதெல்லாம் அது ஒரு வகை கலைப் படைப்பு என்ற வகையில் ஆதரிக்க முடியுமே தவிர, ஆகச்சிறந்த படமாக இருந்து விட முடியாது.
உங்கப்பன் செங்கொடி தூக்கினான், நடுரோட்டில் போராடினான் ஆற்றோடு செத்துப் போனான் என்பதெல்லாம் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு கடந்து போகிற விசயமா அது. அவருடைய போராட்டத்தை தியாகத்தை வரலாற்றை இன்னும் கூர்மைப்படுத்தி காட்டி இருக்க வேண்டாமா ?
உண்மையில் துயரப்பட்டது அந்த சிவனாணைந்தன் அல்ல அவன் அக்காதான். ஒரு பெண்ணாக சிவனாணைந்தனுக்கு கிடைத்த சுதந்திரம் கூட இல்லாமல் வீட்டு வேலையிலும் வயல் வேளையிலும் நாள் முழுக்க மூழ்கி கிடக்கும் அவன் அக்காவின் கதையை இன்னும் பேசியிருக்க வேண்டும். சிறு வயதிலேயே கணவனை இழந்து வறுமையில் வாடி இரண்டு குழந்தைகளை ஆளாக்கிய தாயின் கதையை இன்னும் பேசியிருக்க வேண்டும். அடுத்ததாக உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி கூலி உயர்வு கேட்டு போராடிய கனியை இன்னும் பேசியிருக்க வேண்டும்.