மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், காவல்துறைத் தலைவர் அவர்களுக்கும், தமிழ்நாடு (சென்னை) உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், இயக்கத் தோழர்களுக்கும், மனித உரிமைப் போராளிகளுக்கும், மக்கள் வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும்!
வணக்கம். தமிழ்நாட்டில் மதவாதத்தையும், சாதி வெறியையும், வெறுப்பரசியலையும், வன்மத்தையும், வன்முறையையும் பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு சமூக விரோதியின் எக்ஸ் தளப் பதிவுகளை உங்கள் அனைவரின் பார்வைக்கும், ஆழமானப் பரிசீலனைக்கும் சமர்ப்பிக்கிறேன்.
அரசியல் கோட்பாடுகளை, கருத்துக்களை, திட்டங்களை மாற்றுக் கோட்பாடுகளால், கருத்துக்களால், திட்டங்களால் எதிர்கொள்ளும் அறிவோ, ஆற்றலோ, பக்குவமோ, முதிர்ச்சியோ இல்லாத சமூக விரோதிகள் மற்றவர்களை தேசத்துரோகிகள், நாட்டின் எதிரிகள், நக்சல்கள், மாவோயிஸ்டுகள், விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள், வெளிநாட்டு கைக்கூலிகள் என்றெல்லாம் பட்டம்கட்டி ஒடுக்க முயல்கின்றனர். இப்படி துர்பிரச்சாரம் செய்யப்படுகிறவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
ஆதிக்கச் சக்திகளின் அடிவருடி, அவர்கள் இடதுகையால் தூக்கி எறியும் சன்மானங்களைத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு, தாங்களும் ஆளுமைகள் என்று வேடம் போட்டு, இழிவான வாழ்க்கை வாழும் வெறும் வீணர்கள் குறிப்பிடுவது போல, நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. இந்த நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்காலத்திற்காகவும் எந்தவிதப் பிரதிபலனும் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் சேவகர்கள்.
“உள்நாட்டு பயங்கரவாதிகளை”
“மர்மமான முறையில் வேரறுக்க வேண்டும்” என்றும், அதற்கு “மர்மமான நபர்களுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தரப்படும்” என்றும், ‘பல தேசவிரோதிகளை முடித்துவைக்க… மர்மநபர்களை தமிழகத்திலும் எதிர்நோக்குகிறோம்” என்றும் அர்ஜுன் சம்பத் என்கிற நபர் பொதுவெளியில் எழுதியிருக்கிறார்.
அரைகுறை ஆங்கிலத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, மற்றவர்களை மிரட்டும் தைரியம் இந்தச் சமூக விரோதிக்கு எப்படி வருகிறது? பொதுவெளியில் வன்முறையைக் கக்கும், பரப்பும், மற்றவர்களை மிரட்டும் ஒருவனை மாநில அரசும், காவல்துறையும் கண்டுகொள்ளாமல் விடுவது ஏன், எதனால்? தமிழ்நாட்டில் மர்மநபர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்களா? அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தருகிறேன் என்று ஒருவர் சொல்வது வன்முறையைத் தூண்டுவது ஆகாதா?
ஒருவர் இப்படி எழுதிவிட்டு எப்படிச் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு எள்ளளவும் புரியவில்லை. நானோ, இன்னொரு களப்பணியாளரோ, ஒரு சிறுபான்மைச் சகோதரரோ, சகோதரியோ இதைப் போல பட்டவர்த்தனமாக இல்லாமல், இலைமறை காய்மறையாகவேனும் ஒரு வன்முறைக் கருத்தைப் பதிவிட்டிருந்தால் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் இப்படி மவுனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்களா? ஒன்றிய அரசு NIA, CBI, IB, RAW என்று தன்னுடைய அனைத்துப் படை பரிவாரங்களையும் அனுப்பி இந்நேரம் ஆர்ப்பரித்திருக்க மாட்டார்களா?
இந்த வன்முறை மிரட்டலால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்படலாம் என்று கருதும் என்னைப் போன்றவர்கள் தமிழ்நாடெங்கும் ஏராளமானவர்கள் இருக்கிறோம்.
மேற்படி இழிபிறவிகளை தமிழ் மக்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்றாலும், இவர்களின் மிரட்டல்களை கண்டுகொள்ளாமல் விட முடியாது. திரு. நரேந்திர தபோல்கர் (ஆகத்து 2013), திரு. கோவிந்த் பன்சாரே (பிப்ரவரி 2015), திரு. எம். எம். கல்புர்கி (ஆகத்து 2015), திரு. கெளரி லங்கேஷ் (செப்டம்பர் 2017) என்று பலரை பச்சைப் படுகொலைகள் செய்து, அக்கொலைபாதகங்களை அங்கீகரித்து, அவற்றைக் கொண்டாடி மகிழும் வன்முறைவாதிகளை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
மேற்படி நபர் இழைத்திருக்கும் மாபெரும் குற்றம் கண்டுகொள்ளாமல் விடப்படுவது என்போன்ற ஏராளமான தனிநபர்களுக்கும், பொதுச் சமூகத்துக்கும் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். எனவே தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உடனடியாக அர்ஜுன் சம்பத் மீது தீவிரவாதப் பிரிவுகளில் வழக்குகள் பதிந்து, கைதுசெய்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
சுப. உதயகுமாரன்.