எண்ணற்ற தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த காலத்தில் கொன்று குவித்தது. தமிழ்நாட்டின் பாரம்பரிய நிலப்பரப்பை இலங்கைக்கு இந்தப் பிரச்சனையை துவக்கி வைத்தது இந்திய அரசு.
நீண்ட காலமாக இந்த பிரச்சனையை இந்திய அரசு ஏந்தவொரு விவாதமுமின்றி புறந்தள்ளி வருகிறது. இந்திய அரசு கச்சத்தீவை மறந்து விட்டதா? என்ற எண்ணமே தோன்றுகிறது. ஆனால் இதற்கு மேலும் இந்திய அரசும், தமிழக அரசும் கச்சத்தீவு விடயத்தில் மௌனம் சாதிப்பது இந்தியாவிற்கு மிக பெரிய பாதுகாப்பு அச்சுறுதல்களை ஏற்படுத்தி விடும். தற்போது இந்திய அரசிற்கு கச்சதீவை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கச்சத்தீவு விஷயத்தில் நிகழ்ந்த உலக அரசியல் :-
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சமஸ்தானங்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்படுகிறது. ராமநாதபுரம் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, கச்சத்தீவும் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுகிறது. ராமநாதபுர சேதுபதி கச்சத்தீவை குத்தகைக்கு விட்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசிடம் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் ஒப்படைத்தார் என்றும் கூறப்படுகிறது. அணைத்து ஆவணங்களையும் வைத்துக்கொண்டு, கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை. இரு நாட்டுக்கும் இடையே உள்ள ஒரு பொதுவான பகுதி. யாருக்கு சொந்தம் என்று தெரியாத “டிஸ்பியூட்டட் லேண்ட்” (Disputed territory – சர்ச்சைக்குரிய பகுதிகள்) என்று அறிவிக்கிறது மத்திய அரசு.
1920- ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.
1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.
இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவியபோது, அமெரிக்க ஆதிக்க சக்திகள் இலங்கையில் ஒரு பெரிய இராணுவ மற்றும் விமான படைத்தளத்தை உருவாக்க முயற்சி எடுத்தார்கள். அதை தடுப்பதற்கான சில சமாதான பேச்சுவார்த்தைகளை எடுக்க மத்திய அரசு தள்ளப்பட்டது. அதற்காக இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் கச்சத்தீவை விட்டுக்கொடுப்பது. மேலும் மீனவர்களுக்கு உரிமைகள் அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். தமிழக காங்கிரசின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக இருந்த பழ.நெடுமாறன்(1970 -1979) “கச்சத்தீவு தாரை வார்ப்பு” குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1983ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இந்திய வரைப்படத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பிக்கிறார். இந்த உத்தரவுக்குப் பின்னர் தான் கச்சத்தீவு இந்திய வரைப்படத்தில் இருந்து நீக்கப்படுகிறது. அதுவரை இந்திய அரசு வெளியிடும் வரைப்படங்களில் கச்சத்தீவு இருந்துள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கும்போது தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜெயலலிதா என்பது கவனிக்கத்தக்கது.
“கச்சத்தீவை மத்திய அரசு தாரை வார்த்தது தனக்குத் தெரியவே தெரியாது. பத்திரிக்கை வாயிலாகத்தான் நான் அதை தெரிந்து கொண்டேன்” என்றார் கருணாநிதி. டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, “கச்சத்தீவு விசயத்தில் “சரத்தில்” சில திருத்தங்களை செய்து பரிந்துரைத்தேன். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது” என்றார். இது முரண்பாடான ஒன்று ஆகும்.
“இந்திய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் கச்சத்தீவை மீட்பது குறித்து வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறாரே” என்று செய்தியாளர்கள் கேட்ட போது “இது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்கிறார் கருணாநிதி. வீராணம் ஊழலை மறைக்க கச்சத்தீவை கருணாநிதி காவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
கச்சத்தீவை மீட்க உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். 1974 ஆம் ஆண்டு நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் “கச்சத்தீவு வேண்டும்” என்கிற தீர்மானம் போடும்போது அதிமுக வெளிநடப்பு செய்கிறது. முதலமைச்சராக இருந்தபோது மாநில அரசின் அதிகாரத்திக்கு உட்பட்டு என்னால் என்ன செய்ய முடியுமோ நான் அதைச் செய்கிறேன் என்றார் ஜெயலலிதா. கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் என்று பிரதமாக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் எழுதியவர் ஜெயலலிதா. மேலும் கச்சத்தீவை பிரித்துக் கொடுத்தது இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்று பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு கடிதம் எழுதியவர் ஜெயலலிதா என்பது நினைவு கூறத்தக்கது.
அன்றிலிருந்து கச்சத்தீவு விஷயத்தில் அனைத்து கட்சிகளும் மாற்றி மாற்றிப் பேசி மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள்.
கச்சத்தீவை தற்போது மீட்க வேண்டிய அவசியம் :-
கச்சத்தீவு வரலாற்று ரீதியாக அதாவது ஏறக்குறைய 500,600 ஆண்டுகளுக்கு மேலாக கச்சத்தீவு இந்தியாவுடையாதுதான் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளது .அண்மைக்கால சாட்சியங்களாக 1974ஆம் ஆண்டு,29ஜூலை வரை பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள் இருக்கின்றன. வரலாற்று ரீதியாகவும்,நிலம் சார்ந்த சாட்சியங்கள் ரீதியாகவும் கச்சத்தீவு என்பது தமிழர்களின் நிலமும், தமிழகத்திற்கு உட்பட்ட நிலபரப்பிற்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும் உட்பட்ட பகுதியாகும். அத்தகைய நிலப்பரப்பை இந்திய அரசு 1974ஆம் ஆண்டு, இலங்கைக்கு ஒரு ஒப்பந்தத்தின் வழியாக கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது. இந்த ஒப்பந்தத்திற்கு அன்னாளில் இருந்து இந்நாள் வரை பாராளுமன்றத்தின் ஒப்புதலும், தமிழக சட்ட மன்றத்தின் ஒப்புதலும், வாய்மொழி சார்ந்த ஒப்புதலும் இது நாள் வரை கிடையாது. அதோடு மட்டுமல்லாமல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பது அரசியல் சாசனத்திற்கு புறம்பான செயல் ஆகும்.
கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்கு தற்போது முக்கிய காரணங்களாக இருப்பவை தமிழக மீனவர்களின் பாதுகாப்பற்ற சூழலும்,வாழ்வாதார இன்னல்களும், உயிரிழப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சூழல் கடந்த பத்து ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து விட்டது. அதோடு சீனாவின் ஊடுருவல் மற்றும் அவற்றின் இராணுவ கட்டுமானங்கள், அவர்களின் வியாபாரம், எண்ணெய் கிணறுகள் அதோடு இலங்கை இராணுவ மயமாக்கல் போன்றவை தலைமன்னாரில் இருந்து நெடுந்தீவு வரை இந்தியாவின் எல்லை பகுதியில் மிக மிக அருகாமையில் தொடங்கப்பட்டுள்ளன. இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் தமிழக மக்களின் பாதுகாப்பிற்கும்,இந்திய பாதுகாப்பிற்கு மிக பெரிய அச்சுறுத்தல்களாகவும், சவாலாகவும் அமையும். இத்தகைய சூழல்களில் இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என்பது மிக அவசியமாகிறது.
தமிழர்களின் நிலம், தமிழர்களின் பாதுகாப்பு, இந்திய இறையாண்மை, பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.மேலும் இதற்கான தீர்மானத்தை தற்போதுள்ள திமுக அரசு சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.
மாநில அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி அப்போதைய இந்திய அரசு (காங்கிரஸ் ) கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்பதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவர்களின் அன்றாட வாழ்விலும் மிகப் பெரிய அச்சுறுதலை ஏற்படுத்தியுள்ளது. மிக முக்கியமாக தற்போது இலங்கையில் இருக்கின்ற சிங்கள பேரினை வாதமும், சீனாவின் ஆதிக்கமும் ஒன்று சேர்ந்தால் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்தினை விளைவிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. கச்சத்தீவை மீட்டு இந்திய அரசு தனது கண்காணிப்பு நடவடிக்கையை அங்கிருந்து மேற்கொள்வது, நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமானதாகும்.
-யாழினி ரங்கநாதன்